நீர் இன்றி அமையாது உலகு...

இராம்ஸ் முத்துக்குமரன்
0


 (மார்ச் 8 - மகளிர் தினம்)

பெண் இருந்தால் தான்
இல்லறம்
பெண் இன்றி இங்கு
இல்லை அறம்!

பெண் என்றால் முதலில்
நினைவில்
வருவது அன்னையே,
பெண் என்ற பெருமைக்கு
சிறப்பு
என்றென்றும் அன்னையே!

குடும்பமெனும் கோவிலின்
கோபுரம் பெண்கள்,
குன்றாத ஒளிவீசும்
தீபம்தான் பெண்கள்!

மின்னொளி அல்ல,
பெண்ணொளி வீசா வீடுகளே
இருண்ட வீடுகள்!

குடும்பத்திற்காக எதையும்
விட்டுக்கொடுப்பவள் பெண்
எதற்காவும் குடும்பத்தை
விட்டுக்கொடுக்காதவள் பெண்,
பெண்கள் புரியும்
யாகமே தியாகம்!

வஞ்சி
உறவுகள் இணைக்கும் சங்கிலி
கொஞ்சி
அழகிய மொழிபேசும் பைங்கிளி!

அன்பு தான்
அவர்களின் ஒரு மொழி
அன்பினால் காட்டுவர்
நமக்கும் நல் வழி!

நாணம் அவர்களின்
அணிகலன்
ஞானம் அவர்களின்
குணநலன்!

படிப்பினை தருதின்று பட்டத்தறிவு
படிப்பினை தந்தது அன்று பட்டறிவு
கொடுப்பினை இன்றியொரு பெண்ணாக
பிறப்பினை பெற்றிடவழியு முண்டோ?

"மங்கை யராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும்" என்று
மணி மணியாய் சொல்லிச் சென்றாரே - கவி
மணி தேசிகவிநாயகம் பிள்ளை அன்று!

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"
திட்டவட்டமாய் பாடிய தீர்க்கதரிசி
கூற்றின்று மெல்லமெல்ல மெய்யாகுதே!

போகப் பொருளாய் பெண்ணை வெறும்
மோகம் கொண்டு பார்க்கும் பார்வை
போகப் போக முற்றிலும் மாறுமே
தாக முண்டது நிச்சயம் தீருமே!

விஞ்ஞான உலகமிது
ஆண்பெண் பேதமில்லை
விண்வெளிக்கு செல்லும் பெண்
சாதிக்க ஏது எல்லை?

பதுமையாய்ப் பார்க்கப் பட்டவள்
பழமையை உடைக்கிறாள்
வரலாற்றில் ஒடுக்கப்பட்டவள்
வரலாறு படைக்கிறாள்!

தென்றலாய் வீசுவாள்
எரிமலையாகவும் பொங்குவாள்
அன்புக்கு அடிபணிவாள்.
அடக்க நினைத்தால்
வெகுண்டெழுவாள்!

கம்பனின் சீதைகள்
கண்ணகியாய் மாறும் காலமிது
வள்ளுவனின் வாசுகிகள்
இன்னும் உள்ள ஞாலமிது!

அன்னையாய் தமக்கையாய்
தங்கையாய் தாரமாய்
கண்ணின் இருபாவையாய்
மகளென்னும் பாவையாய்
பின்னி இருக்கும் உறவது
எண்ணி மனது மகிழுதே
மின்னிடும் தாரகை - என்றும்
மண்ணிலே பெண்களே!

நளினம் என்றாலும்
பெண் தான்
நடனம் என்றாலும்
பெண் தான்
மென்மை என்றாலும்
பெண் தான்
வலிமை எந்நாளும்
பெண் தான்!

காரிகைகள் வரையாமல்
முழுமை பெறுவதில்லை
எந்த ஓவியனின்
தூரிகைகளும்!

கன்னித் தமிழையும்
கன்னி எழிலையும்
பாடாமல்
கவினுறுவதில்லை
எந்த கவிஞனின் கவிதைகளும்!


பெண்ணின் பெருமை
பேசாத மனிதன் இல்லை
பெண்ணின் பெருமை
உணராவிட்டால் அவன்
மனிதனே இல்லை!

இறைவனின் சக்தி வடிவமே
பெண் தானே,
சக்தி இன்றி சிவமில்லை - பெண்
சக்தி இன்றி இச்சகமில்லை!

பெண்களே.
நீர் இன்றி அமையாது உலகு!

 

பெண்மையைப் போற்றுவோம்,

அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.

  





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top