பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே

இராம்ஸ் முத்துக்குமரன்
0

 


அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதா யறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

ஆண்டாள்.

 

சங்கீத கலாநிதி வசந்தகுமாரி அவர்கள் பாடியது:

 


எனது எளிய வடிவம்:

 

ஆடைநீர் உணவெனக் கேட்டது கொடுக்கும்
    எம்பெருமான் நந்த கோபாலரே எழுக!
மெல்லிடைப் பெண்டிர்களின் குலவிளக்கான
    பெண்ணரசி யசோதையே இன்னும் உறக்கமா?
வானைக் கிழித்து மூன்றுல களந்த
    தேவர் தேவனான பெருமாளே எழுக!
செம்பொன் சிலம்புகள் அணிந்த பலராமனே
    நீயும் உன்தம்பி கிருஷ்ணனும் எழுந்திருங்கள்!

 

பொருள்:

 

சென்ற பாசுரத்தில், ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் நந்தகோபனின் மாளிகை காவலர்களிடம் அனுமதி கேட்டு மாளிகைக்குள் நுழைந்த ஆண்டாளும் தோழிகளும், அம்மாளிகையில் உறங்கிக்கொண்டிருக்கும் கிருஷ்ணரின் தந்தை நந்தகோபன், தாய் யசோதை, அண்ணான் பலரமன் மற்றும் கிருஷ்ணன் என ஒவ்வொருவராக எழுப்புகிறார்கள். அந்த மாளிகை, நான்கு அடுக்குகள் அல்லது அறைகள் கொண்ட மாளிகை, முதல் அடுக்கில், நந்தகோபன் உறங்கிக்கொண்டு இருக்கிறார். அடுத்த அறையில் கிருஷ்ணரின் தாய் யசோதையும், அடுத்த இரண்டு அடுக்குகளில் ஒன்றில் கிருஷ்ணனும், மற்றொன்றில் பலராமனும் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்,

 

முதல் அறையில் நுழையும் ஆண்டாள், அங்கு உறங்கிக் கொண்டு இருக்கும் நந்தகோபனை எழுப்பிட, அவரின் அறம் மிகுந்த செயலகளை புகழ்ந்து கூறுகிறாள். ஆடை, தண்ணீர், உணவு என கேட்டதை எல்லாம் இல்லை என்று சொல்லாது வாரி வழங்குபவரே எழுந்திருங்கள். நாங்கள் கிருஷ்ணரை எழுப்ப வந்திருக்கிறோம் என்று கூறுகிறாள், கிருஷ்ணரை எப்பொழுதும் கண்ணைக் காக்கும் இமை போல் பாதுகாப்பதால், பெருமானின் தந்தையை எம்பெருமான் என்று உரிமையாய் அழைக்கிறாள் ஆண்டாள்.  முதல் பாசுரத்திலேயே ஆண்டாள் நந்தகோபனை சிறப்பித்திருப்பாள் "கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்" என. அதனால் முதலில் அவரை எழுப்புகிறாள்.


"அம்பரமே தண்ணீரே சோறே" என்று ஆண்டாள் சொல்வதில் இன்னொரு கருத்தும் மறைந்து இருக்கிறது.  அதாவது தனது தந்தையான நந்தகோபாரைப் போலவே, கிருஷ்ணனும் திரௌபதிக்கு (அவள் மானத்தைக் காக்க) ஒரு தடவை புடவை (உடை) வழங்கியது, குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்து குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கியது மற்றும், கோகுலத்தில் சிறுவனாக வாழ்ந்தபோது, தனது நண்பர்களுக்கு வெண்ணெய் (உணவு) தந்ததையும் நினைவு படுத்துவதற்காக இப்படி உடை, தண்ணீர், உணவு ஆகியவற்றை கொடுப்பவனே என்று புகழ்கிறாள் ஆண்டாள்.
 

இதே வரியில் இன்னொரு கருத்தும் இருக்கிறது.  அதாவது, உணவு, தண்ணீர், உடை ஆகிய மூன்றையும் தருபவர் என்றால், இலக்கணப்படி, "அம்பரமும் தண்ணீரும் சோறும்" என்று தானே ஆண்டாள் பாடியிருக்க வேண்டும்! ஆனால், "அம்பரமே தண்ணீரே சோறே" என்று ஒவ்வொன்றாய் தனித்தனியாய் விளித்துப் பாடுவதன் காரணம் என்னவாக இருக்கும்?  நாம் ஏற்கனவே பலமுறை பார்த்தது போல், ஆண்டாளைப் போன்று ஞானம் பெற்ற புலவர்கள், ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அதற்கான ஒரு அறிப்பூர்வமானக் காரணம் இருக்கும். அதே போல் இந்த வரியிலும் அதை ஆண்டாள் உணர்த்துகிறார்.

இம்மூன்றில் ஏதாவது ஒன்றைக் கேட்டால் கூட, மற்ற இரண்டையும் சேர்த்தே நந்தகோபர் வழங்குவார் என்பதை உணர்த்தவே இப்படி பாடியிருக்கிறார்.

 

அடுத்து, அடுத்த அறையில் உறங்கிக்கொண்டு இருக்கும் யசோதையை எழுப்பச் செல்கிறார்கள். மலர் கொடியைப் போல மெல்லிய இடையுடைய வஞ்சிக்கொடி போன்ற பெண்களின் குல விளக்காகத் திகழ்கின்ற யசோதை அவர்களே, பெண்களின் அரசியாக விளங்கும் எங்கள் பெருமாட்டியே, நீங்களே இப்படி உறங்கிக்கொண்டு இருக்கலாமா? நீங்கள் எழுந்தால் தானே, நாங்கள் சென்று கிருஷ்ணனை எழுப்ப முடியும், எழுந்திருங்கள் என்று பாடி எழுப்புகிறார்கள்,

 

இங்கு 'கொழுந்து' என்று சொல்லை ஆண்டாள் ஏன் பயன்படுத்தினாள் என்று சிந்தித்தால், ஒரு மரத்தில், வேர், தண்டு, கிளை என பல பகுதிகள் இருந்தாலும், அந்த மரத்தில் எங்கு பாதிப்பு நேர்ந்தாலும், முதலில் காய்ந்து சுருங்குவது அதன் கொழுந்து தான்.  அது போல ஆயர்பாடியில் யாருக்கு என்ன துன்பம் நேர்ந்தாலும், முதலில் வருந்தி அவர்களுக்கு உதவிட வருபவள், நந்தகோபனின் மனைவியான யசோதை என சிறப்பிப்பதற்காக "கொழுந்து" என்று குறிப்பிட்டு இருக்கிறாள் ஆண்டாள்.

 

அதற்கு அடுத்த இரு அறைகளில் ஒன்றில் கிருஷ்ணரும், அடுத்த அறையில் பலராமனும் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அண்ணனான பலராமனை எழுப்பிவிட்டு கிருஷ்ணரை எழுப்ப நினைத்தவர்கள், கிருஷ்ணனைக் கண்டதும் மனம் மயங்கி முதலில் அவனையே எழுப்ப முயல்கிறார்கள். வாமன அவதாரம் எடுத்து, வானத்தை கிழித்து மூன்று உலகங்களையும் ஓங்கி அளந்து கடந்த விஸ்வரூப தரிசனம் தந்த கண்ணனின் பெருமைகளைக் கூறி, தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனான பெருமாளே. இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறீர்களே, எழுந்திருங்கள் என்று எழுப்புகிறாள் ஆண்டாள்.  

 

எவ்வளவு தூரம், உயரம் உடைய உலகை உன் கால்களால் அளந்தப் பெருமானே, உன் காலடிக்கு இவ்வளவு பக்கத்தில் இருக்கிறோமே, எங்களை காணாமல் இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறாயே எழுந்திரு என்று கண்ணனை எழுப்புகிறாள் ஆண்டாள்.ஆனால் கிருஷ்ணர் படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் இருக்க, கண்ணன் தன் அண்ணன் பலராமனை எப்போதும் பிரியமாட்டான் என்பதால், அடுத்த அறையில் இருக்கும் பலராமனையும் எழுப்புகிறார்கள்.

 

நந்தகோபரையும் யசோதையும் எழுப்பிய பின், அடுத்து பலராமனை எழுப்பாமல், கோபியர் கண்ணனை எழுப்பச் சென்று, கண்ணன் கண் விழிக்காதபோது, பலராமருக்கு முன் கண்ணனை எழுப்ப முனைந்தது  தங்கள் தவறு என்று உணர்ந்து, இருவரையும் சேர்த்து துயிலெழுப்புவதாக ஆண்டாள் நாச்சியார் பாடியிருப்பது இரசிக்கும் படியாக இருக்கிறது அல்லவா.
 

பலராமன் தன் கால்களில் செம்பொன்னால் ஆன சிலம்புகள் அணிந்திருக்கிறான். அதைக் குறிப்பிட்டு வீரக்கழல்களை காலில் அணிந்த பலராமனே, எழுந்திரு, நீ சொன்னால் தான் கண்ணன் எழுந்திருப்பான். நீயும் உன் தம்பியும் இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கலாமா? இருவரும் எழுந்து எங்களுக்கு தரிசனம் கொடுங்கள் என்று எழுப்புகிறாள் ஆண்டாள்.

 

இந்தப் பாடலில்,  நந்தகோபன்  மாளிகையின் அமைப்பைப் பார்த்தால் ஒன்று நமக்கு நன்றாகப் புரியும்.  அதாவது நந்தகோபன் கிருஷ்ணனை எவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்கிறார் என்று.  முன்பக்கம் முதல் இரு அறையில் தானும், யசோதையும் இருக்கிறார்கள்.  அதுபோல பின்பக்க அறையில், பலராமன் இருக்கிறார்.  நடுவில் பாதுகாப்பாக உள்ள அறையில் கண்ணன் இருக்கிறான்.  ஏனென்றால் கிருஷ்ணனை கம்சனிடம் இருந்து பாதுக்காக்கவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தான் காரணம்.

 

உட்பொருள்

திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி" என்று மூன்றாவது பாடலிலும், "அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த" என இந்தப் பாடலிலும், அடுத்து வரும் 24வது பாடலில், "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். தானதர்மம் செய்வதில் தன்னைவிட யாரும் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தான்.  என்ன கேட்டாலும் என்னால் கொடுக்கமுடியும் என்ற அகந்தை கொண்டிருந்தான்.  இந்த கர்வம்,  அகந்தை, ஆணவம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதை உணர்த்தவே  நாராயணன், வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். கண்ணன் பகைவர்களை முதலில் அழிப்பதில்லை, அவர்களின் பகைமையையும் தீய எண்ணத்தையும் தான் முதலில் அழித்து அவர்களைத் திருத்தப் பார்ப்பான் என்பதை 15 பாசுரத்தில் "மாற்றாரை மாற்றழிக்க வல்லானை" என்று ஆண்டாள் சொன்னதைப் பார்த்தோம், அதை தான் வாமன அவதாரத்தில் கண்ணன் செய்தான்.

நாம் அனைவரும் "நான்" "தான்" என்ற கர்வத்தையும், அகந்தையையும் ஆணவத்தையும் அடக்க வேண்டும் என்பதை தான் இப்பாடல்கள் உணர்த்துகின்றன‌.

 

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

 

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற                                                                       பாசுரம் 18 - உந்து மதகளிற்று

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top