கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்ப் பாடி பறைகொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
சங்கீத கலாநிதி வசந்தகுமாரி அவர்கள் பாடியது:
எனது எளிய வடிவம்:
கீழ்வானம் வெளுத்துவிட்டது எருமைப் பசுக்கூட்டமெல்லாம்
மேய்வதைப் பார்; தோழியர்பல சென்றுவிட மீதுமுள்ளோரைப்
போகவிடாமல் உனக்காக காக்கவைத்து உன்னை
எழுப்புவதற்காக வந்துநிற்கிறோம் குதூகலமுடைய அழகானப்
பெண்ணே எழுந்திரு! பெருமாளைப் பாடிபரிசு பெறலாம்!
குதிரைவடிவிலும் மல்லர்களாகவும் வந்த அசுரர்களைக் கொன்ற
தேவாதி தேவனானப் பெருமாளைச் சென்று வணங்கினால்
ஆஹா எனமகிழ்ந்து அருள்வானே! எழுந்திரு தோழியே!
பொருள்:
முதல் பாசுரத்திலிருந்து நாம் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். ஆண்டாள் அதிகாலையிலிருந்து நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், ஒவ்வொரு தோழிகளின் வீடுகளுக்கும் சென்று, தம் பாடல்களின் மூலம் சொல்வதைப் பார்க்கலாம். பறவைகள் எழுந்தவுடன் வரும் மெல்லிய சத்தம், பின்பு நிறைய பறவைகள் எழுந்துவுடன் கேட்கும் பெரும்சத்தம், தயிர்கடைகின்ற சத்தம் என்று வரிசையாகக் கூறுகிறாள், அதாவது அதிகாலையில் இருந்து ஒவ்வொரு தோழியாக எழுப்ப எழுப்ப நேரம் போய்க்கொண்டே இருக்கிறது என்பதை நாம் அறியலாம். அப்படி இந்தப் பாடலில், இன்னொரு தோழியின் வீட்டிற்குச் சென்று அவளை எழுப்புகிறாள்.
பாடலின் முதல் வரியில், 'கீழ்வானம் வெள்ளென்று' என தொடங்குகிறாள். அதாவது இதுவரை விடிந்தாலும் இருட்டாக இருந்தது, ஆனால், இப்போது கிழக்கு திசையில் மெலிதாக வெளிச்சம் கோடு போல் வர தொடங்கிவிட்டது. இவ்வூரில் எல்லோர் வீடுகளிலும் பசு, எருமைகள் உள்ளன. அதனால் வெளிச்சம் வரத் தொடங்கியதுமே, அவை எல்லாம் மேய்ச்சலுக்கு கிளம்பி விட்டன.
விடிந்ததும், அந்த எருமைகள் முதலில் வீட்டைச் சுற்றியுள்ள சிறு சிறு புற்களை மேயுமாம். அதன் பிறகு ஒவ்வொரு மாடுகள் வர வர, அவை எல்லாம், ஊர் எல்லையில் உள்ள பெரிய நிலப்பரப்புகளில், பரவி சென்று மேய்ந்திடுமாம். அதை தான் 'சிறுவீடு மேய்வான்' என்கிறாள் ஆண்டாள். இந்த மாடுகளை எல்லாம் பார், மேய்வதற்குச் சென்றுவிட்டன. ஆனால் நீ இன்னும் உறங்குகிறாயே எழுந்திரு என்று சொல்கிறாள் தோழியிடம்.
அப்படியும் எழுந்திருக்காத போது,. நான் முதலில் அழைத்தப் போதே பல தோழிகள் குளிப்பதற்கு கிளம்பிவிட்டார்கள். அவர்களில் சிலரை போகவிடாமல் தடுத்து உனக்காக காக்க வைத்துள்ளேன், அந்தக் கண்ணனைப் போன்றே எப்பொழுதும் கலகலவென்று குதூகலமாய் இருப்பவள் அல்லவா நீ? (கோது கலம் என்பது தான் பின்பு குதூகலம் என மருவிவிட்டது) ஏன் இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறாய்?. எழுந்திரு அழகானப் பெண்ணே என்று சற்று குழைவாகக் கூறுகிறாள் ஆண்டாள்.
இவ்வளவு சொல்லியும் எழுந்திருக்க மறுக்கும் தோழியிடம், கண்ணனின் இரண்டு லீலைகளை விளக்குகிறாள்.
கேசி என்ற அசுரனைக் கொன்றதால்தான் கண்ணனுக்கு கேசவன் என்ற பெயர் ஏற்பட்டது. கேசவன் என்ற பெயர் வரக் காரணமான கதையை இரண்டே சொற்களில் சொல்லிவிடுகிறாள் ஆண்டாள். இந்தக் கேசி என்பவன் கம்சனின் நண்பன். தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை எடுப்பவன். கம்சன் அவனை அழைத்து கோகுலத்துக்குச் சென்று கண்ணனை கொன்றுவிட்டு வருமாறு கட்டளை இடுகிறான். கேசியும் மிகப் பெரிய குதிரை வடிவத்தை எடுத்துக்கொண்டு, கோகுலத்துக்குச் சென்றான்.
பிடரிமுடி காற்றில் பறக்க, பயங்கரமாக கனைத்தபடி ஆகாயத்தில் தன் நீண்ட வாலை கருத்த மேகம் போல் சுழற்றியதைக் கண்ட கண்ணன், அவன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டார். அவன் தன் கால்களை நீட்டி கண்ணனைக் கொல்லப் பார்த்தான். ஆனால், கண்ணன் அந்தக் கால்களைப் பற்றி வேகமாகச் சுழற்றி தூர எறிந்தார். அப்படியும் அவன் அழியவில்லை. வாயைப் பிளந்தபடி கண்ணனை விழுங்குவதுபோல் ஆவேசமாக வந்தான். கண்ணன் கேசியின் திறந்த வாய்க்குள் தன் கையை செலுத்தி, செலுத்திய கையை பெரிய மரம் போல் பெரியதாக்கி, கேசியின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றார். இதனால்தான் பகவான் கண்ணனுக்கு கேசவன் என்று பெயர் வந்தது.இதை தான் 'மாவாய் பிளந்தானை' என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள், 'மா' என்றால் விலங்கு என்று ஒரு பொருள் உண்டு, இவ்விடத்தில் அது குதிரையைக் குறிக்கிறது.
பூதகி, சகடன், கேசி ஆகிய அரக்கர்களை அனுப்பியும் கண்ணனைக் கொல்ல முடியவில்லை என்றதால் கவலைப்பட்ட கம்சன், வேறு ஏதாவது தந்திரம் செய்து தான் கண்ணனைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து திட்டம் தீட்டுகிறான். கண்ணனை அவன் இடத்திற்குச் சென்று தான் நம்மால் கொல்லமுடியவில்லை. அதனால் அவனை தந்திரமாக நம் இடத்திற்கு வரவைத்து கொல்ல வேண்டும் என்று திட்டமிடுகிறான். அதன்படி, கண்ணன் மற்றும் பலராமனை தன் அரன்மணையில் நடைபெறும் யாகத்திற்கு அழைக்கிறான். அப்படி அவர்கள் வரும் பொழுது, மல்யுத்தத்தில் தேர்ச்சிப்பெற்ற இரண்டு மல்யுத்த வீரர்களைக் கொண்டு அவர்களை கொன்று விட வேண்டும் என்பது தான் அவனது திட்டம். ஆனால் பரமாத்மாவான கண்ணனிடம் அவன் திட்டம் பலிக்குமா? அவர்கள் இருவரையும் கண்ணன் கொன்று விடுகிறான். இது தான் 'மல்லரை மாட்டிய' என்ற வரியில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். இரண்டு கதைகளை ஒரே வரியில் சொல்லி விட ஆண்டாளால் தான் முடியும்.
இப்படி சிறப்பு வாய்ந்த தேவர்களுக்கெல்லாம் தேவராக விளங்கக்கூடிய நம் பெருமாளை சென்று நாம் வணங்கினால். அவன் நம் பக்தி கண்டு ஆஹா என்று மகிழ்ந்து நமக்கு அருள்தருவான். ஆதலால் சீக்கிரம் எழுந்திருப் பெண்ணே நாம் பாவை நோன்பிற்கு போகலாம் என்று தன் தோழியை இந்த பாசுரம் மூலம் அழைக்கிறாள் ஆண்டாள்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்
பாசுரம் 7 - கீசு கீசு என்றெங்கும் பாசுரம் 9 - தூமணி மாடத்து


