ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளரத்
தரிக்கிலா நாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமிஞ் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
சங்கீத கலாநிதி வசந்தகுமாரி அவர்கள் பாடியது:
எனது எளிய வடிவம்:
தேவகி மகனாய்ப் பிறந்து அவ்விரவில்
யசோதை மகனாய் மறைந்து வளர்ந்ததை
பொறுத்துக் கொள்ள முடியாமல் வஞ்சத்தோடு
தீங்குநினைத்த கம்சன் வயிற்றில் நெருப்பென
அச்சம்பிறக்க நின்ற திருமாலே உன்னை
வணங்கிட வந்தோமுன் அருளை வேண்டி
திருமகள் விரும்பும் செல்வமே நின்கருணையைப்
பாடி மகிழ்வோம் கவலைத்தீர்ந்திட அருள்வாயாக!
பொருள்:
சிம்மாசனத்தில் வந்து அமர்ந்த கிருஷ்ணனின் வீரச் செயல்களை, சென்ற பாசுரத்தில் போற்றிப் பாடிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தக் கதையைக் கூறி, உன்னை எழுப்பி வணங்க வந்த எங்களுக்கு, எங்கள் கவலைத் தீர, நாங்கள் விரும்புவதை தர வேண்டும் என்று வேண்டுகிறாள்.
தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அறிந்த கம்சன், தேவகியையும் வாசுதேவரையும் சிறை வைத்துக் கொடுமைப்படுத்துகிறான். எட்டாவது குழந்தையால் தான் ஆபத்து என்று தெரிந்தாலும், தனக்கு வேறு எந்த விதத்திலும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பிறந்தவுடனேயே ஆறு குழந்தைகளையும் கொன்று விட்டான் கயவன் கம்சன். ஏழாவது குழந்தை தேவகியின் கர்பத்தில் தங்கவில்லை. அதனால் தேவகியைவிட எட்டாவது குழந்தை எப்போது பிறக்கும் என்று அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது கம்சன் தான். அதனால் தேவகி மிகுந்த கவலையிலும் அச்சத்திலும் இருந்தாள். ஆனால் பிறக்கப் போவது கிருஷ்ணர் என்று அவர்களுக்குத் தெரியாது.
எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணர், கம்சனின் கைக்கு எட்டாதவர் அல்லவா? அதனால் அவர் பிறந்ததும் வசுதேவருக்கு அசரீரி குரலொன்று கேட்கிறது, அதன் படி, பிறந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆயர்பாடிக்கு வந்து யசோதையிடம் ஒப்படைத்து விடுகிறார் வசுதேவர். அதனால் ஒருத்தி மகனாகப் பிறந்து இன்னொருத்தி மகனாக வளர்கிறார் கிருஷ்ணர் என்று பாடுகிறாள் ஆண்டாள். "ஒளித்து வளர" என்று ஆண்டாள் சொன்னதற்கு காரணம், கம்சனுக்குப் பயந்து ஒளிந்து வளர்ந்தான் என்று பொருளல்ல, தன் பெருமையை எல்லாம் மறைத்து சாதாரண ஆயர்பாடிச்சிறுவனாக வளர்ந்ததை சிறப்பிக்கும் விதமாக அப்படி சொல்கிறாள்
ஒருத்தி என்றால் ஆயிரத்தில், இலட்சத்தில், கோடியில் ஒருத்தி என்று பொருள். அதாவது, இவள் போல வேறு யாரும் இல்லை என்று உயர்வு படுத்துவதற்காக, ஆண்டாள் தேவகியையும், யசோதையையும் ஒருத்தி என்று பெயர் சொல்லாமல் புகழ்கிறாள். நாமும் அப்பொழுது தான், யார் அந்த ஒருத்தி, என்று தேவகி மற்றும் யசோதையின் புகழை ஆராய்ந்து அறிவோம் என்பதற்காக கூட இருக்கலாம். இல்லையென்றால் அறியாமலேயே இருந்துவிடுவோம் அல்லவா?
சில நாட்களுக்குப் பிறகு தான். எட்டாவதாகப் பிறந்த குழந்தை, வேறு இடத்தில் வளர்வது கம்சனுக்குத் தெரியவருகிறது. வேறு இடத்தில் கிருஷ்ணன் வளர்வதை, கம்சனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், கிருஷ்ணனைக் கொல்வதறகாக, பூதகி, சகடன் என வரிசையாக பல அரக்கர்களை ஏவினான். ஆனால் அவர்களை எல்லாம் கிருஷ்ணன் அழித்துவிடவே, கிருஷ்ணனை நினைத்து, கம்சன் வயிற்றில் பயம் பற்றிக்கொள்கிறது.
ஆண்டாள் கம்சனை "தரிக்கிலான் ஆகி" என்கிறாள். கண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான் என்ற செய்தி அறிந்தவுடன், பொறுக்க முடியாத கம்சன், தன் உடம்பையே தான் "தரிக்க முடியாமல்" உடலும் மனதும் தகிக்க, கண்ணனை அழிக்க வேண்டும், இல்லையேல் தாம் அழிந்துவிடுவோம் என்று பயந்தான். அந்த பயம் அவன் வயிற்றில் நெருப்பாய் எரிந்து அவனை துன்பப் படுத்தியது.
அப்படி கம்சன் வயிற்றில் நெருப்பாக எரியுமாறு நின்ற திருமாலே என்பதை தான், "கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே " என்று கிருஷ்ணன் பிறந்த வரலாற்றை கூறி போற்றிப் பாடுகிறாள் ஆண்டாள். "உன்னை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று தீங்கு நினைத்துக்கொண்டே இருந்தான் கம்சன். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே!" என்று போற்றுகிறாள் ஆண்டாள்.
கிருஷ்ணன் பிறந்த வரலாற்றைக் கூறிய ஆண்டாள், இறுதியாக, "செல்வத்தின் அதிபதியான அந்த திருமகளே விரும்பும் செல்வமான நாராயணனே, பக்தர்களுக்கு அருளும் உன் கருணையைப் புகழந்துப் பாடி, எங்களுக்கு வேண்டிய ஒன்றைப் பெற்றுக்கொள்ளவே வந்திருக்கிறோம்" என பாடுகிறாள்,
நாங்கள் கேட்டதை தந்தால், திருமகளுக்கு ஏற்ற, திருமகளே விரும்பத்தக்க உன் செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் சேவைகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம் என்கிறாள் ஆண்டாள்.
ஆனால் உண்மையில், கண்ணனின் புகழை பாடி, அவருக்காக சேவை செய்வதை தவிர வேறு எந்த செல்வமும் தங்களுக்கு வேண்டாம். அதனால் தான், "உன்னை அருத்தித்து வந்தோம்", அதாவது உன்னையே வேண்டி வந்தோம் என்று சொல்கிறாள் ஆண்டாள். எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. உன்னையே தந்துவிட்டால், உன்னைப் பிரியாமல் மகிழ்ந்திருப்போம் என்பது தான் ஆண்டாளின் விருப்பம், ஆண்டாள் விரும்பும் பறை. இறைவனின் அருளாகிய செல்வம் மட்டும் போதும். இறைவனை வழிபடக் கூட வேண்டாம். இறைவனை பற்றி பாடினாலே துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பங்கள் கிடைத்து விடும் என்கிறாள் ஆண்டாள்.
ஆண்டாள் ஏன் ஒருத்தி என்று சொல்கிறாள்?
தேவகியின் பக்தியும், பேரன்பும் போற்றுதலுக்குரியது! அண்ணனான கம்சனால் தேவகி அனுபவித்த துன்பங்கள் தான் எத்தனை? அத்தனையையும், கண்ணனுக்காகத் தாங்கிக் கொண்ட உத்தமத் தாய் அவள்! தனது ஆறு குழந்தைகளை தனது அண்ணன் கல்லில் அடித்து கொன்ற குரூரத்தை நேரில் காணும் கொடுமைக்கு ஆளானவள் தேவகி. (ஏழாவது குழந்தை கருவிலேயே கரைந்துவிட்டது என்று கம்சனிடம் பொய் சொல்லிவிடுவார்கள், அது கடவுள் சித்தத்தின் படி வேறு இடத்தில் பிறக்கும்) அவளைப்போல் இத்தனை துன்பங்கள் அனுபவித்தவள் இன்னொருத்தி இல்லை என்பதாலேயே, ஆண்டாள் தேவகியை "ஒருத்தி" என்று புகழ்கிறாள்!
யசோதை தேவகியைக் காட்டிலும் பெருமை மிக்கவள். கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தான். ஆனால் யசோதையோ, கண்ணனை தாலாட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கி, அவனது ரசிக்கத்தக்கக் குறும்புகள் மற்றும் தொல்லைகளையும், பால லீலைகளையும் பக்கத்தில் இருந்து அனுபவிக்கும் பெரும்பேறு பெற்றவள்! தேவகி கண்ணனைப் பெற்றேடுத்து சில மணித்துளிகள் தான் அவளால் கண்ணனோடு இருக்க முடிந்தது, ஆனால், யசோதையோ கண்ணன் வளரும் வரை உடனிருக்கும் பாக்கியம் பெற்றவள், தாய்க்கெல்லாம் தாயன்றோ அவள்! பரமனின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கப் பெற்ற புண்ணியவதி அவள்! மண்ணைத் தின்ற கண்ணனின் வாயில் வையம் ஏழும் கண்டவள் அவள்! கண்ணன் அவளை பாடாய் படுத்தியபோதும், யசோதையைப் போல் வளர்ப்புப் பிள்ளையை வாஞ்சையுடன் கவனித்துக் கொண்ட தாய் அவனியில் கிடையாது. அதனால் தான் அப்பேர்ப்பட்ட யசோதையையும் ஆண்டாள் "ஒருத்தி" என்று புகழ்ந்து அழைக்கிறாள்!
உட்பொருள்:
பல பாசுரங்களில் பறை வேண்டும் என்று பாடுகிறாளே ஆண்டாள், அந்தப் பறை என்றால் என்ன? பறைக்குப் பல பொருள் இருந்தாலும், ஆண்டாள் குறிப்பிடும் பறை என்பது 'விரும்பிய பொருள்' ஆகும். அப்படி ஆண்டாள் விரும்பும் பொருள் எது?
சிறையில் பிறந்து விடுதலைப் பெற்றக் கண்ணனின் கதையைக் கூறி, எங்களையும் இந்த பிறவி எனும் மாயச் சிறையில் இருந்து விடுவிக்கும்படி வேண்டிக்கொள்கிறாள். பிறவி எனும் பெருங்கடலில் சிக்கிக்கொள்ளாமல், உன்னை என்றும் பிரியாமல், உன்னருகிலேயே இருக்க இடமும் ஆசியும் கொடு என்று வேண்டிக்கொள்கிறாள் ஆண்டாள். அது தான் ஆண்டாள் வேண்டுகின்ற பறை. ஆனால் ஆண்டாள் என்ன அவளுக்காகவா வேண்டுகிறாள்?
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்
பாசுரம் 24 - அன்று இவ்வுலகம் பாசுரம் 26 - மாலே மணிவண்ணா


