சுந்தரத் தமிழும் சூப்பர் சிங்கரும்...

இராம்ஸ் முத்துக்குமரன்
0


 

நான் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்த் தொ(ல்)லைக்காட்சிகளைப் பார்ப்பது கிடையாது. அந்த நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியாக, பயனுள்ளதை செய்யலாம் என்று எண்ணுவேன். ஆனால் இசை சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளை மட்டும் அவ்வப்போது கண்டு இரசிப்பேன். அப்படி நான் விரும்பிப் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி, விஜய் டிவியில் வரும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பாடுபவர்களைப் பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். எப்படி இவ்வளவு அருமையாகப் பாடுகிறார்கள் என்று வியப்பேன். இப்படி பல திறமையானவர்களை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வருவதை மனதாரப் பாராட்டுகிறேன்.

அப்படி தான் இந்த வருடமும் திறமையானப் பாடகர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைத்துப் போட்டியாளர்களும், மிகவும் அருமையாகப் பாடுகிறார்கள். சிலர் சரியாகப் பாடவில்லை என்று நடுவர்கள் வெளியேற்றும் பொழுது, அந்த நடுவர்கள் மீது கோபம் கூட வரும். ஆனால் இது வெறும் இசை நிகழ்ச்சி மட்டும் அல்லாமல் வியாபார நோக்கம் கொண்ட நிகழ்ச்சி, என்பதால் வேறு ஒன்றும் சொல்ல முடியாது.

ஆனால் இந்தப் பதிவு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பற்றி அல்ல, நம் தாய்மொழி தமிழைப் பற்றியது.

பொதுவாகவே தொலைக்காட்சிகளில் தமிழைக் கொலை செய்வார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" போன்ற ஒரு சில நிகழ்ச்சிகள் தவிர எல்லா தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகள் இப்படித்தான் இருக்கின்றன.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் அதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் நிறைய தமிழ் பிழைகள்/கொலைகள் இருப்பது உண்டு. இருந்தாலும் இசை நிகழ்ச்சி என்பதாலும், பாடுபவர்கள் எல்லோரும் சிறப்பாகப் பாடுவதாலும், அந்தப் பிழைகளை நாம் அதிகம் கண்டுக்கொள்வதில்லை. ஆனால் கடந்த இரு வாரங்களாக, போட்டியில் நடந்த ஒரு செயல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அதனால் தான் இந்தப் பதிவை எழுத வேண்டும் என்று எண்ணினேன்.

கடந்த இரு வாரங்களாக, இந்த நிகழ்ச்சியில், பெற்ற தாயை சிறப்பிக்கும் வகையில், போட்டியாளர்களின் தாயை அழைத்து கௌரவித்து, அவர்கள் தாயிற்காகப், பிடித்தப் பாடல் ஒன்றைப் பாட வைத்தார்கள். அதற்காக விஜய் தொலைக்காட்சிக்கும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் பாராட்டுகள். அது மட்டுமல் அல்ல, எழுதுவது என்ற ஒன்று மறந்து போய்விட்ட இந்த "டிஜிட்டல்" (Digital) காலத்தில், கடிதம் என்றாலே என்னவென்று தெரியாத ஒரு தலைமுறையை, தங்கள் தாயிற்கு கடிதம் எழுத வைத்தார்கள். அதற்காகவே விஜய் தொலைக்காட்சியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

நல்ல விஷயம் தானே, இதில் என்ன தவறு, என்று தானே நினைக்கிறீர்கள். ஆனால் விஷயம் அதுவல்ல. கடிதம் எப்படி எழுதினார்கள் என்பதில் தான் இருக்கு.

நிகழ்ச்சியில் 15 நபர்கள் கலந்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் 15 பேரில் நான்கு பேர்கள் மட்டுமே கடிதத்தை தமிழில் எழுதி இருந்தார்கள். அவர்கள் நால்வரையும் மனதாரப் பாராட்டுகிறேன். அந்த நால்வரைத் தவிர மற்ற அனைவருமே, கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். சரி ஆங்கிலத்திலாவது ஒழுங்காக எழுதினார்கள் என்றால் இல்லை. தமிழையே ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். அது தான் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. தாய்மொழி என்கிறோம், அந்தத், தாய் என்ற சொல்லை, அம்மா என்ற சொல்லைக் கூட ஆங்கிலத்தில் எழுதுகிற நிலையை என்னவென்று சொல்வது?

அப்படி எழுதியவர்களில் மூன்று பேர், பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழ் தெரியாத அவர்கள் அப்படி எழுதினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் அவர்கள் தாய்மொழி தமிழ் கிடையாது. தமிழ் படித்தவர்கள் கிடையாது. இருப்பினும் தமிழ் நன்றாகப் பேசத் தெரிவதால், எப்படி பேசுவார்களோ அப்படியே அதை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். அதை பாராட்டலாம். ஆனால், தமிழகத்தில் பிறந்து, தமிழகத்தில் படித்த மற்றவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதியதைப் பார்த்தப் பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. (தமிழில் எழுதிய அந்த நான்கு பேரும் வறுமை நிலையில் உள்ளவர்கள், அதில் மூன்று பேர் கிராமத்துப் பள்ளியில் படித்தவர்கள்.)

இவர்கள் மட்டுமல்ல், இவர்களைப் போன்று தமிழகத்தில் இன்னும் எத்தனை இளைஞர்களும், பள்ளிக் கல்லூரி மாணவ-மாணவிகளும் இருப்பார்கள்? இத்தனை ஆண்டுகள், பள்ளியில் என்ன கற்றார்கள்? பள்ளியில் தமிழ் மொழியைப் படித்தார்களா இல்லை தமிழுக்குப் பதில் வேறு மொழி எடுத்துப் படித்தார்களா? ஆசிரியர்கள் எழுத கற்றுத் தரவில்லையா? பெற்றோர்களுக்குத் தெரியாதா? அரசாங்கத்திற்கு இது போல தமிழ் எழுதத் தெரியாத மாணவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியுமா?

தமிழ் எழுதத் தெரியவில்லை என்பதை, தெரிந்தோ தெரியாமலோ வெளிக்கொணர்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும். இந்த நிகழ்ச்சியை பார்த்தப் பின், தமிழ் எழுதத் தெரியாத நிலையை எடுத்துக்கூற வேண்டும் என்று நான் எண்ணியது போல், இன்னும் சிலர் வேறு ஏதாவது ஒரு நல்ல நடவடிக்கை எடுக்க நிச்சயம் தூண்டுமே என்று நம்புகிறேன்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இந்த டூ கே கிட்ஸ் (2K Kids) எனப்படும் இன்றைய இளைஞர்களின் தமிழ் மொழியறிவிற்கு இந்த ஒரு சான்றே போதும். இன்னும் இவர்களைப் போன்ற எத்தனை மாணவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களோ?

அன்று கல்லிலே தமிழை எழுதினான் தமிழன். ஆனால் இன்று காகிதத்தில் கூட எழுத தெரியாத தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

இவை மட்டுமல்ல. சமீபத்திய ஒரு ஆய்வின் படி, தமிழகத்தில் 20% மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குத் தான் தமிழ் படிக்கத் தெரிகிறது. தென்னிந்திய மொழிகளிலேயே இது தான் மிக குறைவாம். (விளக்கமான தகவல்களுக்கு இந்த இணைப்பைப் பாருங்கள்)

மேலும் 64.4% எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு தமிழ் பாடங்களைக் கூட படிக்க முடியவில்லையாம். (விளக்கமான தகவல்களுக்கு இந்த இணைப்பைப் பாருங்கள்))

அதே போல், 50,000 மேற்பட்ட 12ஆம் வகுப்பு மாணவர்கள், தமிழ்த் தேர்வை எழுதவில்லை என்ற ஒரு தகவலும் அதிர்ச்சி தருகிறது. (விளக்கமான தகவல்களுக்கு இந்த இணைப்பைப் பாருங்கள்))

முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் தமிழைக் கொலை செய்கிறார்கள் என்று சொல்வோம், ஆனால் இப்பொழுது சமூக ஊடகங்களில் வரும் தமிழ்க்கொலைகளைப் பார்த்தால் நெஞ்சம் வலிக்கிறது. எல்லோர் கைகளில் திறன்பேசி (Smartphone) இருக்கிறது. தமிழில் பதிவிடுகிறார்கள், பாராட்டலாம். ஆனால் அதில் பதிவிடும் போது நிறைய தவறு செய்கிறார்கள். தவறு என்று தெரியாமலேயே அதை செய்கிறார்கள். ஏனென்றால், அவர்களில் பலரும் தமிழ் மொழியை ஒழுங்காகக் கற்கவில்லை. இதற்கு யார் பொறுப்பு?

சிக்ஸ்த் சென்ஸ் (The Sixth Sense) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில், புகழ்பெற்ற ஒரு வசனம் வரும்.

"I see dead people."
"They don't know they're dead."
"They're everywhere."

அதை சற்று மாற்றி "I see stupid people but they don't know that they're stupid, they are everywhere" என்று மீம்ஸ்கள் (Memes) பல உண்டு.

அதைப் போன்று தான், நம் தமிழர்களில் பலர், தாங்கள் தவறாக தமிழில் எழுதுகிறோம் என்று தெரியாமலேயே அதை செய்கிறார்கள், அதை பலரும் அப்படியே மற்றவர்களுக்கும் பகிர்கிறார்கள். அதனால் அந்த தவறான சொற்களே பலருக்குச் சென்றடைகிறது. நாளடைவில் அதுவே சரி என்ற பலர் எண்ணிவிடுவார்கள். எவ்வளவு பெரிய ஆபத்து.

சமீபகாலமாக, "தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம்" என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.   தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டுப் பள்ளியில் படித்த, ஒரு தலைமுறையே தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கிறது, இதுவே ஒரு பெரிய தலைகுனிவு இல்லையா?. ஒருவருக்கு தலைகுனிவு என்பது பிறரால் ஏற்படுவது அல்ல, அவர்களாலேயே அவர்களின் செயல்களால் தான் ஏற்படும். ஒரு தந்தை தன் மகனைப் பார்த்து, "நம் குடும்பத்திற்கு தலைகுனிவு ஏற்படாதவாறு நடந்துக்கொள்" என்று சொல்லலாம், பக்கத்து வீட்டுப் பையனைப் பார்த்து சொல்லமுடியுமா?அது போல. தமிழகத்திற்கு தலைக்குனிவு என்றால் அது தமிழகத்தில் நடக்கும் செயல்களால் தான் ஏற்படுமே தவிர வேறு மாநிலத்தில் உள்ளவர்களாலோ அல்லது வேறு நாட்டவர்களாலோ ஏற்படாது. இதை அனைவரும் உணரவேண்டும்.

ஹிந்தியையோ அல்லது பிறமொழிகளை எதிர்க்குமுன் நம் தாய்மொழியை ஒழுங்காக கற்றுக்கொடுக்கிறோமா? கற்றுக்கொள்கிறோமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்து கடந்த அறுபது எழுபது ஆண்டுகளாக ஹிந்தியை எதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், சாதியை ஒழிப்பது போல. அதனால் என்ன சாதித்தார்கள் என்று தெரியவில்லை, மக்களை திசை திருப்புவதை விட வேறு எதுவும் அந்த எதிர்ப்பில் இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. முதலில் நம் தாய்மொழியை ஒழுங்காக எல்லோரும் பேசவும், படிக்கவும், எழுதவும் செய்வோம், பிறகு பிற மொழிகளை எதிர்க்கச் செல்லலாம்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, என் பிள்ளைகள் என்னிடம் கேட்ட கேள்விகள் இது:

இவ்வளவு வயதாகியும் தாய்மொழியில் எழுதத் தெரியவில்லையா? அவர்கள் பள்ளியில் எப்படி/என்னப் படித்தார்கள்? அந்தப் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரமாட்டார்களா?

தமிழ் நாட்டில் உள்ள மாணவர்களே தமிழில் எழுதுவதில்லை, எங்களை மட்டும் ஏன் தமிழில் அடிக்கடி எழுதச்சொல்கிறீர்கள்?

ஆனால் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

சொல்லப்போனால் தமிழ் நாட்டில் உள்ளவர்களை விட அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் தான் தமிழையும் அதன் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அதிகம் பேணுகிறார்கள் என நினைக்கிறேன்.

சனாதனத்தை ஒழிப்பதையும், சினிமா தயாரிப்பதையும், சாராய வியாபாரத்தில் கவனம் செலுத்துவதையும் விட்டுவிட்டுத தமிழைப் போற்றிப் பாதுகாக்க சீரிய முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் தமிழ் என்று வாய்கிழியப் பேசினால் மட்டும் போதாது, ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யவேண்டும்.

இனியாவது செய்வார்களா?

நன்றி.

அன்புடனும் ஆதங்கத்துடனும்
இராம்ஸ் முத்துக்குமரன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top