ஹார்வர்டு தமிழ் இருக்கை

இராம்ஸ் முத்துக்குமரன்
0


 

நமது தமிழ் பெருமையை நாம் பேசி மகிழ்வதில் நமக்கு என்றுமே மட்டற்ற மகிழ்ச்சி தான். ஆனால், நாமே பேசிக்கொண்டிருப்பதை விட அப்பெருமையை உலகறிய செய்து, உலகம் பேச செய்யவேண்டும்.


அதற்கான ஒரு முயற்சி தான் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழுக்கென்று ஒரு தமிழ் இருக்கை அமைக்கச் செய்வது. இம்முயற்சி வெற்றி பெறுகையில், அது உலகளவில் நம் தாய் தமிழுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மட்டுமல்ல, சங்கத்தமிழினை ஆராய்ச்சி செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு இனிய அரிய வாய்ப்பாக அமையும்.

நம் தமிழ் மொழி, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட ஒரு தொன்மையான, வளமையான செம்மொழி. எண்ணிலடங்கா இலக்கியங்களும் காவியங்களும் இயற்றப்பட்டு பாடப்பட்ட ஒரு இனிய மொழி. ஆனால் இந்த பெருமைகள் நமக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது, அதை உலகறிய செய்யவேண்டும். ஏனென்றால், உலகளவில் தமிழுக்குப் போதிய அங்கீகாரம் இன்னும் முழுதாக கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

அப்படி ஒரு அங்கீகாரம் வேண்டுமென்றால், ஹார்வர்டு போன்ற புகழ்பெற்ற, பல நாட்டு ஆய்வாளர்கள் அணுகும் பல்கலைக்கழகத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கவேண்டும். தற்போதுள்ள செம்மொழிகளில் (தமிழ், கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, சீன மற்றும் பார்ஸி) தமிழைத்தவிர மற்ற மொழிகளுக்கு அந்த வாய்ப்பு பல பன்னாட்டு பல்கலைக்கழங்க்களில் இருக்கின்றது. அது தமிழுக்கும் கிடைக்கவேண்டும் என்ற முயற்சி தான் தற்போது நடந்துக்கொண்டிருக்கின்றது.

நம் தமிழில் உள்ள ஏராளமான இலக்கியங்களை, மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்களோடு ஒப்பிட்டு ஆய்வுசெய்வது மிக அவசியமாகும். அப்பொழுது தான் தமிழில் புதைந்திருக்கும் அந்த இலக்கிய வளங்கள் மற்றவர்களுக்கும் தெரியவரும். இந்தியாவில், ஏன் தமிழகத்திலேயே, ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பற்றி பேசுபவர்களை விட சிலப்பதிகாரத்தைப் பற்றி பேசுவோர் மிகக் குறைவுதான். இதுபோன்ற ஆராய்சிகள் நடைபெறும் பட்சத்தில், அவற்றை மற்றவர்களோடு பகிர்கையில், தமிழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். உலகளவில் முதன்மையான பல்கலைகழகத்தில், தமிழுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்பொழுது, ஆய்வு செய்ய நினைக்கும் பலரை ஊக்குவிக்கும். இங்கு வெளியிடப்படும் ஆய்வுகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதால், தமிழுக்கு மேலும் பெருமை சேரும். தமிழ் பெருமையறிந்து மற்றவர்களும் தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வம் கொள்வர். தமிழின் இலக்கிய இலக்கணங்களை ஆய்வு செய்யும்பொழுது, அத்தோடு, தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, வீரம், வாழ்க்கை முறை ஆகியவையும் பற்றியும் ஆய்வுகள் செய்யப்படலாம். அதன் மூலம் தமிழோடு சேர்ந்து தமிழர் வரலாறும் உலகறிய செய்யலாம்.

தமிழ் நாட்டிலேயே தமிழ் கற்க ஆர்வமில்லாத இத்தருணத்தில், அயல்நாட்டில் அதுவும் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று ஒரு தனி இருக்கையும், தமிழ் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறதென்றால், அதற்குபின் பலரது முயற்சி இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஹார்வர்டு பல்கலைகழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்) தேவைப்படுகிறது. இதற்காக ஹார்வர்டு தமிழ் இருக்கை என்ற ஒரு இலாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கடந்தசில வருடங்களாக நங்கொடை பெற பெரும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சில கொடை வள்ளல்கள் மனமுவந்து பெரும் தொகையை நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன், தமிழக அரசும், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, பத்து கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்திருக்கிறது. மீதமுள்ள தொகையை உலகமெங்கும் இருக்கும் தமிழர்களிடம் இருந்து நன்கொடையாகப் பெற முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.

jonathan ripley harvard

இராமருக்கு உதவிய அணிலைப்போல், இந்த பெருமுயற்சிக்கு, அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் அமைந்துள்ள, முழுவதும் தன்னார்வளர்களால் நடத்தப்பட்டு வரும் வள்ளுவன் தமிழ் மையமும், தன் பங்கிற்கு தன்னாலான முயற்சிகளை செய்துக்கொண்டிருக்கிறது. அதற்காக பொருளீட்டும் நிகழ்ச்சி ஒன்றை வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் திரு ஜொனாத்தன் ரிப்ளி (Mr. Jonathan D. Ripley). அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறும்மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட இணைப்புகளைப் பார்க்கவும் .....

திரு ஜொனாத்தன் ரிப்ளி அவர்களின் இந்த காணொளிகளை கண்டிப்பாக பாருங்கள்...

ஹார்வர்டு தமிழ் இருக்கை ஏன் வேண்டும்?

ஆங்கிலத்தில் (In English)



தமிழில்


அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top