கால் நூற்றாண்டு (2001 - 2025)

இராம்ஸ் முத்துக்குமரன்
0

 


நூறு ஆண்டுகள்!!!

ஒரு நூற்றாண்டு என்பது
எவ்வளவு நீண்ட காலம்,
இதோ
இன்றோடு இந்த 
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின்
இருபத்து ஐந்து ஆண்டுகள்
இனிதாக முடிந்துவிட்டது,
இது வரை இருந்த காலம்
இறந்த காலமாய் மாறிவிட்டது!

கண்சிமிட்டும் நேரத்தில்
காற்றைப் போல
கால் நூற்றாண்டு காலம்
கடந்துப் போய் விட்டது
கற்பூரமாய்
கரைந்துப் போய் விட்டது!

ஒன்றிலிருந்து இருபத்துஐந்து வரை
முழுவதுமாக நடந்து முடிந்த
முதன்மையான கால் நூற்றாண்டை
முழுமையாகப் பார்த்தது - இதுவே 
முதல் முறை!

இந்தக் கால் நூற்றாண்டில்
நடந்த நன் நிகழ்வுகளை
கடந்துப் போன காயங்களை
நன்மை தீமைகளை
நினைவுக் கூர்ந்துப் பார்க்கிறேன்,

நினைவில் நிற்பவை சில
நினைவை விட்டு அகன்றது
பல பல,
இன்பம் தந்த நிகழ்வுகள் எத்தனை?
இன்னலும் துன்பமும் தந்த
நிகழ்வுகள் எத்தனை யெத்தனை?

இந்தப் புவியைக் காண
புதிதாய்ப் பிறந்தவர்கள்
எத்தனைக் கோடி?
மண்ணை விட்டு
மறைந்துப் போனவர்கள் 
எத்தனைக் கோடி?
மனதில் நிற்பவர்கள் 
எத்தனை பேர்?
மனதை விட்டு
மறந்தே போனவர்கள்
எத்தனை எத்தனை பேர்?

என்னை 
தந்தையாக உயர வைத்து
இன்பத்தில் மூழ்க வைத்த
இரண்டு தேவதைகள் பிறந்தது
இந்த 
இருபத்துஐந்து ஆண்டுகளில் தான்,

என்னை
பேருவுப்புடன் பெற்றெடுத்து
பெருமையுடன் ஆளாக்கிய
இரண்டு தெய்வங்களை இழந்து
துன்பத்தில் மூழ்கியதும்
இதே
இருபத்துஐந்து ஆண்டுகளில் தான்!

ஒவ்வொருவருக்கும்
இதுபோல,
இன்பம் துன்பம்
இரண்டும் தந்திருக்கும்
இந்த
இருபத்துஐந்து ஆண்டுகள்!

என்னை
உவகைப் படுத்திய
உற்சாகம் ஊட்டிய,
காயப் படுத்திய
சோகம் கூட்டிய
நினைவில் நின்ற
சில நிகழ்வுகளை
பட்டியலிட்டு இருக்கிறேன்,

இங்கு நான்
எடுத்துக் காட்டுவது
சில மட்டுமே,
விடுபட்டுப் போனது
பல இலட்சமே,

இதோ,,,

2001 ஆம் ஆண்டு தொடக்கமே
பேரழிவுடன் தான் துவங்கியது,
குஜராத்தைப் புரட்டிப் போட்டு
பதிமூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட
உயிர்களை விழுங்கிய
பயங்கரமான பூகம்பம்
தன் பலத்தைக் காட்டியது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

ஆழிப்பேரலை ஆர்ப்பரித்து வந்து
ஆயிரமாயிரம் உயிர்களை தன்
அசூர அலைக்கரங்களால்
அபகரித்துச் சென்றதும்,
சுனாமி (Tsunami)
என்ற சொல்லை
உலகம் அறிந்து
அஞ்சத் தொடங்கியதும்
இந்த கால் நூற்றாண்டில் தான்,

கோர அரக்கர்களால்
ஈழத் தமிழினம்
ஈடுசெய்ய முடியாப்
பேரழிவைச் சந்தித்தது
இந்த கால் நூற்றாண்டில் தான்,
இரண்டு மணி நேர
உண்ணாவிரதம் இருந்ததும்
இரண்டு இலட்சம்
இன்னுயிர்களை இழந்ததும்
இந்த கால் நூற்றாண்டில் 
நிகழ்ந்தது தான்!

அறுபதிற்கும் மேற்பட்ட 
அப்பாவி பக்தர்களை,
ஈவு இரக்கமில்லா அரக்கர்கள்
குஜராத்தின் கோத்ராவில்,
இரயில் பெட்டிகளின் கதவுகளைப் பூட்டி
தீவைத்து எரித்துக் கொன்ற
நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும்
ஈனக் கொடுஞ் செயலை செய்தது
இந்த கால் நூற்றாண்டில் தான்!

தொன்னூற்று நான்கு 
சிறு குழந்தைகளின்
இன்னுயிரை இரக்கமின்றி
கண்ணுக்கு எதிரே பறித்த
நெருப்பு அரக்கனின்
மன்னிக்க முடியாத 
கொடுஞ்செயல் நடந்தது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

அசூர வளர்ச்சியடைந்த
அகண்ட உலகத்தை
அநாயாசமாக அலறவிட்ட
அணுவிலும் சிறிதான
கோவிட் (COVID-19) எனும்
அபாய நுண்கிருமி,
ஆட்டி வைத்ததும்
கோடி உயிர்களை
கொன்று குவித்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

முகமூடி அணிந்து
முகம் மூடி அஞ்ச வைத்ததும்
கையுறை அணிந்து
கைக்கூப்பி கெஞ்ச வைத்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் 
நடந்தது தான்,

நம்பிக்கையூட்டும் பல
நல்ல செயல்களும்
நடந்தன,

வெள்ளை மாளிகையில் (White House)
கருப்பு மனிதன்
அதிபராய்
உள்ளே நுழைந்த ஓர்
அதிசயம் நிகழ்ந்தது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

தாய் நாட்டை
உயிராய் நேசிக்கும்
பாரதத்தாய் பெற்றத்
தவப்புதல்வன்
பாரதம் ஆளும் 
வரம் பெற்றதும்
இந்த கால் நூற்றாண்டில் தான்,

 



அபார வளர்ச்சியும்
அபாய வளர்ச்சியும்
அடைந்த
அறிவியல் உலகத்தின்
அளவிட முடியா
அதிசயங்கள் நிகழந்தது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

இமயத்தைத் தாண்டும்
இணையப் (Internet) பயன்பாடு
இதயத்தை அடிமையாக்கியது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

ஆப்பிள் பழங்களை மட்டும் அறிந்த
அகிலத்தின் மக்கள் பலருக்கு
ஆப்பிள் (Apple) ஐபோனும்
ஆண்ட்ராய்டு (Android) செல்போனும்
அறிமுகமாகி
அனறாட வாழ்வின் அவசியமானது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

தொலைபேசி மறைந்து
கைபேசிகள் நிறைந்து
திறன்பேசியாய் (Smartphone) மாறி
உலகத்தையே
திருப்பிப் போட்டதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை
ஆங்கில மொழியே அறியாத
ஆங்கிலச் சொற்கள்
அதிகம் பிறந்தது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

Google, Yahoo, YouTube
Twitter, WhatsApp, Facebook
Skype, ChatGPT, Tiktok
என
அனுமன் வாலென நீளும்
ஆயிரம் அர்த்தம் இல்லாச் சொற்கள்
அர்த்தம் பெற்று அத்தியாவசியமானது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

இயற்கை அறிவை
செயலிழக்க வைக்கும்
செயற்கை அறிவு (Artificial Intelligence)
செயல்பாட்டுக்கு வந்தது
இந்த கால் நூற்றாண்டில் தான்,
ஏய் என்று அழைத்தவர்களைக் கூட
AI என்று அழைக்கவைத்த
அதிசயம் நிகழ்ந்ததும்
இந்த கால் நூற்றாண்டில் தான்,

செயற்கை அறிவின் ஆதிக்கத்தில்
இயற்கை அறிவு மழுங்கும் ஆபத்து
ஆரம்பம் ஆனது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

மனிதன் மொழி கற்க 
மல்லுக் கட்டி
சண்டையிடுகையில்
இயந்திரம் மொழி கற்கும்
(Machine Learning)
அதிசயம் தொடங்கியது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

ஆளில்லாத விமானம் (Unmanned Aircraft) 
ட்ரோன்கள் (Drone) முதல்
ஆட்கள் ஓட்டாமல் ஓடும் 
மின்சார வாகனம் (Electric vechicle) வரை,
ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகள்
ஆரவாரமாய் அணிவகுத்து வந்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

உலகப் பொருளாதாரம்
சில முறை
பொத்தென்று விழந்ததும்,
பங்குச்சந்தைகள்
பல முறை
பாதாளம் வரை சென்று மீண்டதும்
இந்த கால் நூற்றாண்டில் தான்,

அறிவியல் தாண்டி
ஆன்மிக நிகழ்வுகள்
அதிகம் நடந்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

ஐநூறு ஆண்டு
அராஜக அநீதிக்கு
அறவழியில் போராடி
அகம் மகிழ நீதி பெற்று
அயோத்தியில் (Ayodhya)
அழகான ஆலயம் அமைந்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

நூற்றிநாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு
ஒரு முறை நடக்கும்
மஹா கும்பமேளா (Kumbh mela),
நல்லபடியாய்
நடந்து முடிந்ததும்
அறுபத்து ஆறு கோடி பக்தர்கள் 
ஆனந்தமாக நீராடி மகிழ்ந்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

கங்கை பரிசுத்தமானதும்
காசி படுசுத்தமானதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

நீதியை நிலைநாட்டிய
தமிழக அரசர்களின்
ஆதி சின்னமான செங்கோல்,
பாரத பாராளுமன்றத்தில்
கம்பீரமாக நிறுவப்பட்டது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

சிதறுண்ட மாநிலங்களை
ஒன்றிணைத்த இரும்பு மனிதருக்கு
உலகின் உயரமான 
ஒற்றுமை சிலை (Statue Of Unity) அமைத்ததும்,
வான்புகழ் வள்ளுவருக்கு
வானுயர சிலை அமைந்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

சனாதனம் (Sanatan) எனும்
நிலைத்து நிற்கும்
அழிக்கமுடியாத ஒன்றை
அழிக்க வேண்டும் என்ற
அறிவிலியை
அடையாளம் காட்டியது
இந்தக் கால் நூற்றாண்டு தான்,

அடுத்தத் தலைமுறைக்கான
அறிவார்ந்த அரசியல் தலைவராக
கருணையும் கம்பீரமும் நிறைந்த
ஐ பி எஸ் அதிகாரியை
தமிழகம்
அடையாளம் காட்டியதும்
இந்தக் கால் நூற்றாண்டு தான்,

 



இந்த நூற்றாண்டின் 
ஆரம்பக் காலகட்டத்தில்
மேற்கத்திய நாடுகளின்
கட்டளைக்கு கீழ்படிந்து
கட்டுண்டு கைக்கட்டி கிடந்த இந்தியா,
மேற்கத்திய நாடுகளை மிரளவிட்டு
உலகத்தையே 
திரும்பிப் பார்க்க வைக்குமளவு
முன்னேறி இருப்பதும்
இந்த கால் நூற்றாண்டில் தான்,

உலக நாடுகளிடம்
கையேந்திய இந்தியா
உலக நாடுகளுக்கு
உதவி செய்யுமளவு
உயர்ந்து நிற்பதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

தங்க நாற்கரச் சாலைகள்
(Golden Quadrilateral Highway)
பாரதத்தின் நாற்திசையையும்
இணைத்து
இந்தியாவின் சாலைவசதிகளை
தரம் உயர்த்தி மேம்படுத்தியது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

வந்தே பாரத்
(Vande Bharat Express)
விரைவு இரயில்கள்
ஓடத் தொடங்கியதும்,
அந்நிய ஆட்சியை அகற்ற
வழிவகுத்த
வந்தே மாதரம் (Vande Mataram) பாடலின்
150 ஆவது ஆண்டு 
கொண்ட்டாட்டங்கள்
ஆரவாரமாய் நடை பெற்றதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

Depressed இந்தியாவிலிருந்து
Developed Digital இந்தியாவாக
உருமாறி உச்சம் தொட்டதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

நல்ல தலைமை இருந்தால்
நல்ல நிலைமை வரும்
என
நம்பிக்கை ஊட்டியதும்
இந்தக் கால் நூற்றாண்டு தான்!

விண்வெளியில்
வெந்நிலவின் தென்நிலவில்
தரையிறங்கிய சந்திரயான் (Chandrayaan)
சரித்திர நிகழ்வு...

சர்வதேச விண்வெளி நிலையத்தில்
வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்து
பத்திரமாக பூமி திரும்பிய
முதல் இந்தியரின் 
சாதனைப் பயணம்
இந்தக் கால் நூற்றாண்டில் 
நிகழ்ந்தது தான்,

சுடுகாட்டுக் கூரையிலிருந்து
காற்று அலைவரிசை வரை
ஊழல் மலிந்து
நாடு நாசமாகிக் கிடந்தது
இந்த கால் நூற்றாண்டில் தான்,
வறுமைக் கோடு அழிந்து
வளமை மிகுந்த பாரதம் என்ற
பெருமை வந்துச் சேர்ந்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்!

கள்ளப் பண அச்சடிப்பையும்
கள்ளப் பணத்தால்
தீவிரவாத செயல்கள்
உச்சம் தொட்டதையும்,
ஊழல்வாதிகளின் கருப்புப் பண
மொத்த இருப்பையும்,
பணமதிப்பிழப்பு (Demonetization) எனும்
ஒற்றை உத்தரவால்
ஒரே கல்லில் மூன்று மாங்காயென
பாரதம் பறித்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு
எல்லை தாண்டிச்சென்று
எச்சரிக்கை செய்ததும்,
ஆபரேசன் சிந்தூர் (Operation Sindoor) மூலம்
அநீதி இழைத்த
அந்நிய நாட்டிற்கு
அதிரடி காட்டி
அஞ்ச வைத்து
அடக்கி வைத்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

370 பிரிவு நீக்கப்பட்டதும்
தீவிரவாதிகளின் பிடியில் இருந்து
காஷ்மீர் மீட்கப்பட்டதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

கிரிக்கெட் (Cricket) விளையாட்டில்
உலகக் கோப்பையை
முதன் முறையாக
இந்தியப் பெண்கள் அணி வென்றதும்
இரண்டாம் முறையாக
இந்திய ஆண்கள் அணி வென்றதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

நல்லக் கலாச்சாரங்கள் பல
காலாவதியானதும்
கள்ளக் கலாச்சாரங்கள் பல
காலூன்றியதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,
ஒழுக்கம் இழுக்காக மாறியதும்
ஒழுக்கக்கேடுகள்
பழக்கவழக்கம் ஆகியதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

தலைநகர் டெல்லியில்
பேருந்தில் நடந்த
நிர்பயா கூட்டு வன்புணர்வு முதல்
சமீபத்தில்
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி
சென்னை அண்ணா பலகலைக் கழகம்
கோவை விமான நிலைய பின்புறம்
என இன்று வரை
எண்ணிலடங்கா பாலியல் 
வன்கொடுமைகளும்
படுகொலைகளும்
நடந்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்!

கடைவீதி தோறும்
கசாப்புக் கடைகளும்
கரு உற்பத்தி மையங்களும்
காளான் போல முளைத்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

மிகையான மின்வெட்டால்
மின்சாரமின்றி
இருண்ட மாநிலமாக
தமிழக இருந்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

அரசாங்கமே இலக்கு வைத்து
சாராயம் விற்கும்
அவலம் அரங்கேறியதும்
ஒரு தலைமுறையே
போதையில் தள்ளாடி
பாதை மாறியதும்
இந்த கால் நூற்றாண்டில் தான்,

ஊழலுக்காக
முதல் அமைச்சர் முதல்
பல அமைச்சர்கள் வரை
சிறை சென்றதும்,
இலாகா இல்லாமலேயே
சில அமைச்சர்கள் 
பதவி வகித்த வினோதம் 
நடந்ததும்
இந்த கால் நூற்றாண்டில் தான்,

வரலாறு காணாத வெள்ளத்தில்
வந்தாரை வாழவைக்கும்
தமிழகத்தின் தலைநகரம்
வெள்ளக்காடானது
இந்த கால் நூற்றாண்டில் தான்,

வரலாறு காணாத வெள்ளம்
என்பது மறைந்து
வருடந்தோறும் வெள்ளத்தில் 
மிதக்கும் அவலம் வழக்கமாகி
வரலாறாகிப் போனதும்
இந்த கால் நூற்றாண்டில் தான்,

கள்ளச்சாராயச் சாவுகளும்
வெள்ளம் சார்ந்த சாவுகளும்
அதிகம் நிகழ்ந்தது
இந்த கால் நூற்றாண்டில் தான்!

திருப்பரங்குன்றத்தில் 
தீபம் ஏற்றக் கூட தடைவிதிக்கும்
இந்துமத வெறுப்புக்கொண்ட
தீய எண்ணமுள்ளோரை
தமிழகம் கண்டுகொண்டதும்
இந்த கால் நூற்றாண்டில் தான்,

இந்துப் பண்டிகைகளைக் கொண்டாட
நீதி மன்றம் செல்லவேண்டிய
இழி நிலை உண்டானதும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

தமிழகம் தலைகுனிந்ததும்
இலவசத்திற்கு கையேந்தி
தமிழக மக்களின்
வாழ்க்கைத் தரம் குறைந்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

கிரிகெட் வீரர்களைப் பார்க்கப்போய்
சிலரும்
நடிகர் ஒருவரை பார்க்கப்போய்
பலரும்
உயிரிழந்த அதிர்ச்சியும்
அவலமும் நிகழ்ந்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்!

இரக்கமில்லா
இயற்கைப் பேரிடர்கள்
எத்தனை என்று கணக்கு வைக்கவில்லை,
அது நடத்திய பேரழிவில்
இழந்த உயிர்களும் உடைமைகளும்
எத்தனை என்று
கணக்கு வைக்க முடியவில்லை,
அத்தனை துயரங்கள் நடந்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்!

காடுகள் எரிந்து
காணாமல் போனதும்
நாடுகள் பல - வெள்ளக் 
காடுகள் ஆனதும்
நூற்றுக்கணக்கான முறை
இந்தக் கால்
நூற்றாண்டில் நடந்திருக்கும்,
பூகம்பம் புவியைப்
புரட்டிப்போட்டதும் 
பல முறை
இந்தக் கால் நூற்றாண்டில் தான்!

பருவ நிலை மாற்றமும்
உலக வெப்பமய மாதலால்
இயற்கைச் சீற்றமும்
அதிகம் நிக்ழந்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

சமீபத்திய
ஏர் இந்தியா (Air India) விமானவிபத்து
உட்பட
பல விமான விபத்துகளும்
சாலை இரயில் விபத்துகளும்
அதிகம் நிகழந்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

மலைக்க வைக்கும் 
விஞ்ஞான வளர்ச்சியிலும்
மாயமான மலேசிய விமானம்
(Malaysian Airlines Flight 370) 
என்ன ஆனது என்று இன்று வரை
கண்டுபிடிக்க முடியாத
மர்மம் நீடித்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்!

ஆயிரத்து இருநூற்றுக்கும் மேற்பட்ட 
அப்பாவி இஸ்ரேல் (Israel) மக்கள்
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட
பயங்கரவாத செயலும்,
பதிலுக்கு
பல ஆயிர அப்பாவி 
பாலஸ்தீனர்கள் (Palestine)
இஸ்ரேல் படைகளால்
உயிரழந்தப் பரிதாபமும் நிகழ்ந்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்!

உன் கையை எடுத்து 
உன் கண்களைக் குத்துவதைப் போல
அமெரிக்க விமானத்தைக் கடத்தி
அமெரிக்க கட்டிடங்களைத் (World Trade Center) 
தகர்த்தக் கொடுஞ்செயல்,
வானுயரக் கட்டடங்களை
வானூர்திக் கொண்டு மோதி
மானுட உலகின் ஒரு
மாபாதக செயல் நடந்தது
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

செப்டம்பர் 11  (September 9/11) 
நியூயார்க் தாக்குதல்
தொடங்கி
நவம்பர் 26 (November 26/11) 
மும்பை தாக்குதல்
என தொடர்ந்து
சமீபத்திய
காஷ்மீர் பகல்காம் (Kashmir Pahalgaam),
டில்லி செங்கோட்டை
ஆஸ்திரேலியா கடற்கரை
(Australia Bondi Beach)
தாக்குதல் வரை,
மதம் பிடித்த தீவிரவாதிகளின்
மனிதம் அழிக்கும் கொடூர செயல்கள்
அதிகம் நடந்ததும்
இந்தக் கால் நூற்றாண்டில் தான்,

இந்தக் கால் நூற்றாண்டு
அரை நூற்றாண்டாக மாறுகையில்,
இன்று இருப்பவர் எத்தனைபேர்
அன்று இருப்பர்?
இறப்பவர் எத்தனை பேர்
மீண்டும் மனிதனாகப் பிறப்பர்?

நிலையில்லா இவ்வாழ்வில்
நிலைத்து இருப்பது யார்?
பிழை செய்யாது வாழ்வதே உலகில்
விலைமதிப்பில்லாத மகிழ்ச்சி
என உணர்வது எப்போது?

நல்லது செய்து வாழ்வதை விட
நன்மை வேறு எதுவும் இல்லை
நல்லது செய்து மறைபவர் உலகில்
உண்மையில் இறப்பதும் இல்லை!

இனிவரும் ஆண்டுகளில் எல்லாம்
இதயம் சொன்னதைக் கேட்டு வாழ்வோம்
இயற்கைப் பேரிடர் தரும்துயர் தவிர்த்து வேறு
இன்னலகள் இன்றி வாழ்ந்து மகிழ்வோம்!

இன்று
இருபத்துஒன்றாம் நூற்றாண்டின்
இரண்டாவது கால் நூற்றாண்டில்
இனிதாக அடி எடுத்து வைக்கின்றோம்,
அடுத்து வரும் கால் நூற்றாண்டு
யுத்தம் இல்லாத உலகமாகவும்
அமைதி நிலவும் அகிலமாகவும்
இருக்கட்டும்,
இந்தப் புதிய கால் நூற்றாண்டின்
நல்ல நினைவுகளை அசைபோட
2051ல் மீண்டும் சந்திப்போம்,

நம்பிக்கையுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top