பாம்பின் கால் பாம்பறியும்!

இராம்ஸ் முத்துக்குமரன்
0


"பாம்பின் கால் பாம்பறியும்" அல்லது "பாம்பறியும் பாம்பின் கால்" என்ற பழமொழியை நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம், ஏன் சில நேரங்களில் பயன்படுத்தியிருப்போம். ஆனால் என்றாவது பாம்பிற்கு கால் உண்டா என்று சிந்தித்ததுண்டா?

"பழமொழி சொன்னால் அதை அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னு" யாரோ ஒரு அதிமேதாவி சொல்லியிருக்கார் என்று  சிலர்  சொன்னார்கள்.. யார் அது என்று கேட்டேன், நான் மையத்தில் தான் நிற்பேன் என்று சொல்லிக்கொண்டே, தலைக்குப்புற சாக்கடையில் விழுந்தவர்ன்னு சொன்னாங்க. ஆனால் அது யாரு என்று என்னாலே நிஜமாகவே கண்டுபிடிக்க முடியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்க.  ஆனால் எந்தப் பழமொழியை அனுபவிக்க வேண்டும் என்றாலும் அதன் பொருளை உணர்ந்தால் தானே இரசித்து அனுபவிக்க முடியும்?


சரி விஷயத்திற்கு வருவோம், பாம்பிற்கு கால்கள் உண்டா?

இல்லை, பாம்பிற்கு கால்கள் கிடையாது, அப்படியிருக்க, இல்லாத பாம்பின் கால்களை எப்படி இன்னொரு பாம்பினால் அறிய முடியும்?  இந்தப் பழமொழியில் குறிப்பிடப்படும் கால் என்பது கால்களைக் குறிக்காது, பாம்பு செல்லும் தடத்தை, வழியைக் குறிக்கிறது.  அதனால் ஒரு பாம்பு சென்ற தடத்தை இன்னொரு பாம்பினால் உணரமுடியும். இது தான் இந்தப் பழமொழியின் நேரடிப் பொருள். 

இன்னொரு பொருளும் உண்டு.  பாம்புகள், காடுகள், புதர்கள், மலைப்பகுதிகள் என எல்லா இடங்களுக்கும் இரை தேடி ஊர்ந்து செல்லும். இப்படி நெடுந்தொலைவு செல்லும் பாம்புகள் மீண்டும் தன் இருப்பிடத்திற்குச் சரியாக வந்து சேருகிறது. எப்படி அதனால் தன் இருப்பிடத்திற்கு சரியாக வர முடிகிறது?  அது தான் பாம்புகளுக்கே உரித்தான தனித்திறமை. அதன் கால், அதாவது அதன் வழித்தடத்தை, எத்தனை தொலைவு என்றாலும், அந்த பாம்பினால் அறிய முடிகிறது. தொழில்நுட்ப உதவியின்றி நம்மால் இப்படி அறிந்துக்கொள்ள முடியாது. ஆனால் பாம்பினால் அறிய முடியும்.  ஒரு பாம்பு சென்று வரும் வழியை அந்தப் பாம்பு அல்லது இன்னொரு பாம்பு தான் அறியும்.  அது தான் பாம்பின் கால் பாம்பறியும்,  

பாம்புகளுக்கு கால்கள் இல்லையென்றாலும் ஒரு இடத்தைக் கடக்க, அப்பாம்புகளுக்கு அவற்றின் உடலில் ஏதோ ஒன்று உதவுகிறது.  அதை அதே போல் நகரும் இன்னொரு பாம்பால் தான் உணர முடியும் என்பதை தான் நம் முன்னோர்கள் அழகாகச் சொல்லி சென்றிருக்கின்றனர்.  (Only a snake will know the tracks left by another snake.)  


பழமொழி விளக்கம்

ஆனால் இந்தப் பழமொழிக்கான உண்மையான விளக்கம், குறிப்பிட்டக் குணங்கள் உடையவர்களை, அதே போன்ற குணங்கள் உடையவர்களால் தான் எளிதில் உணர்ந்துக்கொள்ள முடியும். குறிப்பிட்ட துறையில் திறமையானவர்களை, அதே துறையில் திறமையுடைய இன்னொரு திறமைசாலிகளால் தான் நன்றாக அறிந்துக்கொள்ள முடியும் என்பது தான்.

இதனை இரண்டு விதங்களில் சொல்லலாம்.

1) அறிவில் சிறந்தவர்களை, கற்றோரை அல்லது நல்லவர்களை, இன்னொரு அறிவில் சிறந்தவர், கற்றவர் அல்லது பிற நல்லவர்களால் மட்டுமே அறியமுடியும் என்பதாகும்.

2) அதே போல், தீயவர்கள், வஞ்சகர்கள் அல்லது ஏமாற்றுப் பேர்வழிகளை அதே போன்ற குணமுடைய மற்ற தீயவர்கள், வஞ்சகர்கள் அல்லது ஏமாற்றுப் பேர்வழிகளால் எளிதில் அறிந்துக்கொள்ள முடியும்.

இந்த இரண்டு விளக்கங்கள் இருந்தாலும், இது பெரும்பாலும் தீய செயல்கள் செய்வோரைக் குறிக்கத்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.  ஒரு வேளை பாம்புகள் நச்சு தன்மை உடையவை என்பதால், அப்பாம்பைப் போலவே, நெஞ்சம் முழுவதும் வஞ்சம் எனும் நஞ்சு நிறைந்து இருக்கும் வஞ்சகர்களைக் குறிக்க அதிகம் பயன்படுத்தப் படுகிறது என எண்ணுகிறேன். 

ஒரு தீயவன் அல்லது அயோக்கியனின் திட்டங்களை, நம்மைப் போன்ற சாதாரண, கெடுதல் செய்ய அஞ்சும் நேர்மையான மனிதர்களால் அவ்வளவு எளிதில் உணர்ந்துக்கொள்ள முடியாது.  அந்தத் தீயவன் அல்லது அயோக்கியன் போன்ற இன்னொரு தீயவன் அல்லது அயோக்கியனால் தான் அதை சுலபமாக அறிந்துக் கொள்ள முடியும்.  

தற்போதைய சூழலுக்கு ஏற்றவாரு சொல்லவேண்டும் என்றால் ஊழல் செய்யும் அரசியல்வாதியை இன்னொரு ஊழல் அரசியல்வாதி நன்கு அறிவார். இலஞ்சம் வாங்கும் ஒரு அதிகாரியை, இலஞ்சம் வாங்கும் இன்னொரு அதிகாரி சுலபமாக கண்டுபிடித்து விடுவார். எதிர்கட்சியாக இருக்கும் போது சிபிஐ விசாரனைக் கேட்பார்கள், அதுவே அவர்கள் ஆளுங்கட்சியாக ஆனால் சிபிஐ வேண்டாம் என்பார்கள், ஏனென்றால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும் எந்த விசாரணை எப்படி இருக்கும் என்று. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.  அவ்வளவு ஏன்,  கணினிகளில் இருந்து  தகவல்களை திருடும் () கணினித் திருடர்களின் () திட்டங்களைத் தடுக்க, அவர்களைப் போலவே சிந்திக்கின்ற, ஆனால் தங்கள் அறிவை நன்மைக்குப் பயன்படுத்தும் அதே துறையில் உள்ள மற்றவர்களால் தான் முடியும்.

அதனால் தான் ஒரு திருடனை, ஒரு குற்றவாளியை அல்லது குற்றத்தைக் கண்டுபிடிக்க, இன்னொரு திருடனை, குற்றவாளியை காவல் துறையினர் பயன்படுத்துவதை நாம் செய்திகளில் படித்திருப்போம், ஏனென்றால் ஒரு திருடனுக்குத் தான் இன்னொரு திருடனின் செயல்பாடுகள் நன்றாகத் தெரியும். அதுவும் இப்பழமொழிக்கு நன்றாகப் பொருந்துகிறது
இதற்கு இணையான ஆங்கிலப் பழமொழி "A thief knows a thief".

திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி - நக்கீரர் காட்சிகள் கூட இப்பழமொழியை விளக்குகிறது.  தருமி கொண்டு வந்தப் பாடல் கண்டிப்பாக தன்னைப் போல் தமிழில் புலமைப் பெற்ற ஒரு புலவரால் மட்டும் தான் எழுதமுடியும் என்பதை உணர்ந்த நக்கீரர், தருமி அந்தப் பாடல் எழுதவில்லை என்பதை எளிதில் கண்டுக்கொண்டார்.  ஒரு புலவரால் தான் இன்னொரு புலவரின் கருத்தை எளிதாகப் புரிந்துக்கொள்ள முடியும்.

இதே போல், பழக்ககப்பட்ட யானையை வைத்து இன்னொரு புது யானையைப் பழக்கப்படுத்துவதை பற்றி செய்திகளில் நாம் படித்திருப்போம்.  அது கூட கிட்டத்தட்ட இந்தப் பழமொழியை ஒத்து இருக்கிறது.


கம்பராமாயணத்தில் இந்தப் பழமொழி

இந்தப் பழமொழி கம்பர் காலத்திலேயே உபயோகத்தில் இருந்திருக்கிறது, கவிச்சக்கரவர்த்தி கம்பரே பயன்படுத்தியிருக்கார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

சூர்ப்பணகையின் மூக்கை அறுத்தபின்னரும், சூர்ப்பணகை இராமரை நோக்கி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கும்போது, இவ்வாறு பாடுகிறாள்...

'காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர் எனினும் ,
        யான் மிகையோ? கள்வர்
ஆம், பொறி இல் அடல் அரக்கர் அவரோடே
        செருச் செய்வான் அமைந்தீராயின்,
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள்
        அறிந்து, அவற்றைத் தடுப்பென் அன்றே?
''பாம்பு அறியும் பாம்பின்கால்'' என மொழியும்
        பழமொழியும் பார்க்கிலீரோ?

 
காம்பு                   - பூவின் தாள், மலர்க்கொம்பு, இள மூங்கில்
கள்வர்                 - வஞ்சகர், திருடர்
பொறி இல்        - நல்லறிவு இல்லாத
அடல் அரக்கர் - வலிய அரக்கர்
செரு                    - போர்
பொறி                  - ஐம்பொறி
பொறி                  - தந்திரம்

பூக்களின் தாள் போன்ற மெல்லிய தோள்களை உடைய சீதையைக் கைவிடமாட்டீர் எனினும், என்னை ஏற்றுக்கொண்டால், அது உமக்கு மிகையாகுமா?  வஞ்சகர்களாகிய, நல்லறிவு இல்லாத, வலிய அரக்கர்களுடன் போர் செய்வதற்கு நீங்கள்  தயாரானால், ஐம்பொறிகளால் ஏற்படும் பல மாயங்களை,  பல விதமான வஞ்சனைகளை செய்யவல்ல அந்த அரக்கர்களின் தந்திரங்களை,  நான் அறிந்து,  அவற்றைத்தடுத்து உங்களுக்கு உதவுவேன் அல்லவா? பாம்பின் தடத்தை பாம்பு அறியும் என்னும் பழமொழியை நீங்கள் அறிந்ததில்லையா? என்று இராமனைப் பார்த்துக் கேட்கிறாள் சூர்ப்பணகை.

எப்படி பாம்பின் தடத்தை பாம்பு அறியுமோ அது போல் அரக்கர்களின் தந்திரங்களை சூழ்ச்சிகளை, அரக்கியான நானும் அறிவேன், அதனால் உங்களுக்கு பயனுள்ளவளாக இருப்பேன் என கூறுகிறாள் சூர்ப்பணகை.

இந்தப்பாடலில் மூன்று "பொறி"களை வைத்திருக்கிறார் கம்பர். ஒவ்வொரு பொறிக்கும் ஒரு பொருள்.

பொறி்  இல் அடர் அரக்கர் -  அறிவு. நல்லறிவு இல்லாத அரக்கர்

பொறியின் பல மாயம்       - .பஞ்சேந்திரயங்கள் எனப்படும் ஐம்பொறிகள், மனதை நிலைப்படுத்தவிடாமல் செய்யும் மாயம்

பொறிகள் அறிந்து                - .தந்திரங்களை அறிந்து.

கம்பர் பயன்படுத்திய பழமொழியை நாமும் பயன்படுத்துகிறோம் என்பதை நினைத்தாலே மனதிற்குள் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.


பழமொழி நானூறு

முன்றுறை அரையனார் என்ற புலவர் இயற்றிய "பழமொழி நானூறு" என்ற பாடலில் இந்தப் பழமொழி பற்றியும் பாடியுள்ளார்.

'புலமிக் கவரைப் புலமை தெரிதல் 
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே 
பாம்பறியும் பாம்பின கால்!


(பழமொழி நானூறு 301) 

நன்மைகள் மிகுதியாக உடைய, அழகிய நீர்வளம் மிகுந்த ஊருக்கு உரியவனே! பாம்பின் கால்களை அதற்கு இனமான பாம்புகளே நன்றாக அறியும் திறம் உடையன. அதுபோலவே, அறிஞரின் சிறப்பை அறிஞர்களே அறிந்து உணர்ந்து பாராட்டுவர். அறிவில் சிறந்தவர்களை, அவர்களுடைய அறிவின் செழுமையை அறிந்து கொள்ளும் திறன் படைத்த, அவர்களைப் போன்ற அறிவில் சிறந்தவர்களாளேயே அறிந்துக் கொள்ள முடியும், அறிவில் சிறந்து விளங்காத சாதாரண மக்களுக்கு அவர்களின் சிறப்பை உணர்ந்துக் கொள்ள முடியாது, என்று பாடுகிறார் புலவர்.

நாம் மேலே பார்த்த நக்கீரர்-தருமி உதாரணம் சரி என்பதை இந்தப் பாடல் சொல்கிறது :-)


தொடர்புடைய பிற பழமொழிகள்

இதே போல இன்னொரு பாடலில், இதே பொருள் வேறு வகையில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.  ஆனால் முழுப் பாடலும் கிடைக்கவில்லை.

'அரவுக் குறியி னயலவரறியா' (பெருங். 4.13.149) 

அரவுக் குறியினை அயலவர் அறியா

அரவம் என்றால் பாம்பு.  குறி என்பது இவ்விடத்தில் பாம்பின் உறைவிடம் அல்லது பாம்பின் வழித்தடம் என்பதைக் குறிக்கிறது.

ஒரு பாம்பின் உறைவிடத்தை அல்லது அதன் தடத்தை அந்நியர்களால் அறிய முடியாது என்பது இந்தப் பாடல் வரியின் பொருளாகும்..

'குறவன் ஜாடை குறத்திக்குத் தெரியும்' என்ற பழமொழியும் இதைப் போன்றதுதான்.  

"ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் தான் உணர முடியும்" என்று நம் திரைப்படங்களில் அதிகம் கேட்ட வசனம் கூட இச்சொற்றொடருக்கு இணையானது தான், ஆனால் அது நேர்மறையான பொருளில் சொல்லப்படுகிறது.

திருக்குறளில் கிட்டத்தட்ட இதே பொருள் படும்படி ஒரு குறள் இருக்கிறது. 

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் 
யானையால் யானையாத் தற்று 
(குறள் 678):

ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போல, ஒரு செயலின் அறிவைக் கொண்டு மற்றொரு செயலையும் செய்து முடித்தல் வேண்டும் என்பதை விளக்குகிறது.

மீண்டும் இன்னொரு பதிவில் இன்னொரு சுவையானப் பழமொழியைப் பற்றி அறிந்துக்கொள்வோம்.


நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.

                       

                        

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top