ஒரு புல்லாங்குழல் ஊதுகுழலானது...

இராம்ஸ் முத்துக்குமரன்
0

 


நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு மாணவன் திடீரென்று தவறான சேர்க்கையின் காரணமாக பாதை மாறியதால், அவனால் முன்பு போல படிப்பில் வெற்றி பெற முடியவில்லை. பெற்றோர்கள் அவன் வீழ்ச்சி கண்டு, காரணம் கேட்டதும், உண்மையை மறைத்து, பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்துள்ள தலைமையாசிரியர் தான் காரணம். அவருடைய அச்சுறுத்தல் காரணமாக மற்ற ஆசிரியர்களும் எனக்கு முன்பு போல ஒழுங்காகப் பாடங்களைக் கற்றுத்தருவதில்லை. அதனால் தான் என்னால் கடந்த சில மாதங்களாகப் படிப்பில் பிரகாசிக்க முடியவில்லை என்று சொன்னால் எப்படி இருக்குமோ, அது போலத்தான் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு இருக்கிறது.

இது ஒரு இசை ரசிகனின் விமர்சனம்.

பிரபல இசையமைப்பாளரும், ஆஸ்கார் நாயகனுமான திரு. ஏ.ஆர், ரகுமான் அவர்கள், சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில், "கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன, திரைத்துறை மதம் சார்ந்ததாக மாறிவிட்டது, படைப்பாற்றல் இல்லாதவர்களே அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது மதம் தொடர்பாகவும் இருக்கலாம்" என்று பேட்டியளித்திருந்தார். "மேலும், அதிகார மாற்றமானது படைப்பு ரீதியாக ஊக்கமளிப்பதாக இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். அதாவது, தான் சிறுபான்மை மதத்ததைச் சார்ந்தவன் என்பதால் தான் தமக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது, அதனால் தான் நான் ஓரங்கட்டப் படுகிறேன் என்ற பொருளில் வெளிப்படையாகக் குற்றம் கூறியிருக்கிறார். இது தான் இப்பொழுது பெரும் பேசுபொருளாகிவிட்டது.  பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார்கள். 

இது எப்படிப்பட்ட ஒரு சிந்தனை? வாய்ப்புகள் இல்லை என்பதற்காக, மதத்திற்குப் பின் போய் தானா ஒளிந்துக்கொள்வது இசைப்புயல் அவர்களே?

தமிழகத் திரை இசையை தன் இனிமையான இசையால் கட்டிப்போட்டு, இசை ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த இசைஞானி  இளையராஜா, புகழின் உச்சியில், சிகரம் தொட்டக் காலக்கட்டத்தில், "சின்ன சின்ன ஆசை" என்று இசைப் பாடி, பறந்து வந்த ஒரு வானம்பாடியாய் சிறகடித்துப், புதிய ஓர் இசைப் பயணத்தை தொடங்கிய அந்த இளைஞன் ஏ.ஆர்.ரகுமானை, நாங்கள் யாருமே அன்று ஓர் இஸ்லாமியராகப் பார்க்கவில்லை.  ஒரு தமிழனாக, ஓர் இந்தியனாகத் தானே பார்த்தோம்.  

அன்று முதல் உங்கள் காட்டில் தானே விடாது அடைமழைப் பெய்தது, தமிழகம் தாண்டி, இந்தியா முழுவதும் உங்கள் இசை கொடிக்கட்டிப் பறந்ததே. அப்பொழுதெல்லாம் நீங்கள் இஸ்லாமியர் என்பதை மறந்துவிட்டீர்களா? அப்பொழுதும் உங்களை நாங்கள் சிறந்த இசை அமைப்பாளராகத் தானே பார்த்தோம், இஸ்லாமியராகப் பார்க்கவில்லையே?

இசைப்புயலாக நீங்கள் வீசிக்கொண்டிருக்கும் பொழுது, இசைஞானிக்கும் வாய்ப்புகள் குறைந்தது, ஒரு காலக்கட்டத்தில் இல்லாமலே கூட போனது, ஆனால் அவர் ஒரு முறை கூட இப்படி ஒரு காரணத்தை கூறியதாக நினைவில் இல்லை.  ஒரு காலத்தில் இளையராஜா அவர்களின் பாட்டுக்காகவே படங்கள் ஓடியது.  அவ்வளவு ஏன் பட தலைப்புகள் கூட "ராசா" என்று தாங்கி வந்தன. இன்றும் அவர் பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை,  அப்படிப்பட்ட இளையராஜா அவர்கள் மீது எத்தனை பேர் சேற்றை அள்ளி வீசியிருக்கிறார்கள், அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து சென்று, இன்றும் இசைஞானியாக ஜொலிக்கிறார்.  ஆனால் உங்கள் மீது, இது வரை யாருமே எந்த ஒரு தவறான விமர்சனமும் வைத்தது போல தெரியவில்லை, இருப்பினும் உங்கள் வாயில் இருந்து இப்படி ஒரு கேவலமான குற்றச்சாட்டு வந்ததை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.  

இதே போல் தான் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-இராமமூர்த்தி அவர்களும். ஒரு காலத்தில் திரையுலகில் முடிசூடா மன்னர்களாக இருந்தவர்கள், இசைஞானி இளையராஜாவின் வரவுக்குப் பின் வாய்ப்புகள் குறைந்துப் போனாலும் மதத்தையோ சாதியையோ அவர்கள் குற்றம் கூறவில்லையே.

ஆஸ்கார் விருதை நீங்கள் வென்று, அந்த விருதினை கைகளில் ஏந்தியப் பொழுது இந்தியாவே மகிழ்ந்தது. அன்று யாரும் உங்களை மதக்ண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்பதாவது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?  "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று அன்று நீங்கள் கூறியப்பொழுது மெய்சிலிர்த்துப் போனோம்.  அந்த அடக்கமும் பணிவும் இன்று எங்கே போனது? இல்லை அது வெறும் நடிப்பா?  அன்று அந்தப் புகழுக்கு இறைவன் காரணம் என்றால், இன்று இந்த வீழ்ச்சிக்கும் அவன் தானே காரணமாக இருக்கவேண்டும்?  ஏன் அந்த பக்குவமும் தெளிவும் இன்று வரவில்லை.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானாகிய நீங்கள் தேசிய விருதுகள், பத்ம விருது, ஆஸ்கார் விருது என பல விருதுகளை வென்றபோதும்,  இந்தியா தாண்டி உலகம் முழுவது பல இசைக்கச்சேரிகளை நடத்தியப்பொழுதும், யாரும் உங்களது இஸ்லாமிய நம்பிக்கையைக் கேள்விகேட்கவில்லையே. உங்கள் இசையைத்தானே இரசித்தார்கள்.  நீங்கள் இஸ்லாம் மதத்ததை சார்ந்தவர் என்பதால் யாரும் உங்களது இசையைக் கேட்காமல் நிறுத்தவில்லையே, அல்லது இகழவில்லையே. இப்படிப்பட்ட நீங்கள் இன்று மதத்தின் பின் சென்று ஒளிந்துக்கொண்டு பேசுவது விந்தையாக இருக்கிறது.  நீங்கள் உச்சத்தில் இருந்தப்பொழுது எத்தனை  மற்ற மதத்தைச்சார்ந்த இசை அமைப்பாளர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய் இருக்கும்.  என்றாவது அதை எண்ணிப்பார்த்து இருக்கிறீர்களா?  இல்லை அவர்கள் தான் உங்களைப் போன்று இப்படி குறை கூறியிருக்கிறார்களா?

நீங்கள் வென்ற ஏழு தேசிய விருதுகளில், ஐந்து விருதுகள், நீங்கள் யாரை மனதில் வைத்து குறை சொன்னீர்களோ அவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் கிடைத்தது என்பதை அறிவீரா?  அதிலும் மூன்று விருதுகள், நீங்கள் சொன்ன, கடந்த எட்டு ஆண்டுகளில் தான் கிடைத்தது.  இதை எப்படி மறந்துப் போய் விட்டீர்கள்.  எப்படி இப்படி வாய்கூசாமல் பேசமுடிகிறது?

நான் பள்ளிப் படிக்கின்ற காலத்தில், எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் மொகமது அசாருதீன் தான். ஆனால் அவர் பிற்காலத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி சின்னாபின்னம் ஆனபோது, "தான் சிறுபான்மை இனத்தை சார்ந்தவன் என்பதால் தான் தன் மீது குற்றம் சுமத்தப்பட்டது" என்று வாய்கூசாமல் சொன்னபோது அவர் மீது இருந்த மதிப்பு மரியாதை எல்லாம் பறந்தோடி விட்டது.  இன்று உங்கள் நிலையும் கிட்டத்தட்ட அதே நிலை தான்.

அன்று திரைத்துறையில் ஐந்தாறு பிரபலமான இசையமைப்பாளர்கள் தான் இருந்தார்கள்.  ஆனால் இன்று அப்படியா?  ஐம்பதிற்கும் மேற்பட்ட இசை அமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.  புதிதுபுதிதாக இசை அமைப்பாளர்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.  தயாரிப்பாளர்களுக்கு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. பிரபலமானவர்களுக்குக் கோடிகோடியாய் செல்வழிப்பதற்குப் பதில் புதிதாக வந்து உள்ளவர்களுக்கு வாய்பபளிக்கையில், புதியதாக இசையும் கிடைக்கும், செலவு குறைந்து இலாபமும் இருக்கும். அதனால் உங்களைப் போன்ற சில பெரிய இசை அமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் குறையலாம்.

காலம் எல்லோருக்கும் தக்க நேரத்தில் வாய்ப்புகள் தரும். ஒருவரே புகழின் உச்சியில் இருந்தால் மற்றவர்கள் எப்பொழுது அதை அடைவது?  வாழ்கையே சுழற்சி தானே?  மேலே இருப்பவரகள் கீழே வருவார்கள், கீழே இருப்பவர்கள் மேலே செல்வார்கள். ஆயுள் முழுவதும் ஒருவருக்கே வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்று நினைப்பது சுயநலமல்லவா? மாற்றங்களை ஏற்றுக்கொள்வது தானே வாழ்வில் ஏற்றம் தரும். இப்படி குறை கூறி உங்களை நீங்களே ஏன் தாழ்த்திக்கொள்கிறீர்கள்?

எனக்குத் தெரிந்து, இந்தி திரை உலகத்தில், பல காலமாக,  பல "கான்"கள் தான் கோலோச்சிக் கொண்டி இருக்கிறார்கள்.  எந்தவொரு பிற மத திரைக்கலைஞர்களும், இது வரை இந்தி திரைஉலகம் ஒரு மதம் சார்ந்ததாக இருக்கிறது அதனால் தான் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொன்னதாக தெரியவில்லையே.  அவர்களுக்கு எல்லாம் பாதிப்பு இல்லாத பொழுது உங்கள் ஒருவருக்கு மட்டும் எப்படி பாதிப்பு வருகிறது?  இது நம்பும் படியாகவா இருக்கிறது?

"வந்தே மாதரம், தாய்மண்ணே வணக்கம்" என்ற தேசிய உணர்வூட்டியப் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடிய ஏ.ஆர்.ரகுமானுக்கு எப்படி இப்படிப் பேசத்தோன்றியது? அந்தப் பாடல் பாரதமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் பரவியபோது, யாருமே உங்களை வேறு மதத்தவர் என்று பார்க்கவில்லை, இந்தியர் என்று தானே பார்த்தார்கள், புகழ்ந்தார்கள்.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் நீங்க்கள் அறிமுகமான போது இருந்த இசைக்கும், இரண்டாயிரத்து ஆண்டுகளின் தொடக்கத்தில் அமைத்த இசைக்கும் இருந்த அந்த இனிமை, புதுமை இன்றைய உங்களின் இசைக்கு இல்லை என்பது கசப்பான உண்மை தான். எல்லா இசை அமைப்பாளர்களுக்கு இது நிகழ்ந்தது.  இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.  அதற்காக இப்படி கீழ்த்தர அரசியல்வாதிகள் மாதிரி மாறி, மதம் சார்ந்த காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தாதீர்கள். 

ஆரம்பத்தில் நீங்கள் அதிகம் பேசமாட்டீர்கள், உங்கள் இசை தான் உரக்கப் பேசியது,  இன்று நீங்கள் அதிகம் பேசகிறீர்கள், ஆனால் உங்களின் இசையில் தான் சுருதி குறைந்துவிட்டது. என்று கண்ணியமான தமிழ் அன்னை ஓவியத்தை, கலைநயம் என்ற பெயரில் தலைவிரிக் கோலமாகக் காட்டினீர்களோ அன்றிலிருந்தே பலருக்கும் உங்கள் மீது மதிப்புக் குறையத்தொடங்கி விட்டது. பல சிறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை நீங்கள் உச்சத்தில் இருந்தப்பொழுது மதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதைப் போல, வேறு எங்கு என்னென்ன தவறு நடந்தது என்று ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து அதை திருத்திக்கொண்டு, மறுபடியும் அந்த பழைய ஏ.ஆர்.ரகுமானாக வாருங்கள். எங்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்.

இசை என்பது அனைவருக்கும் பொதுவானது. இசை அமைப்பாளரான நீங்களும் அப்படி தான், ஒரு சார்பாக மாறிவிடாதீர்கள். இது ஒரு இசை ரசிகனின் அன்பான வேண்டுகோள்.


அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top