நாலு கோடி பெறும், பெரும் பாடல் தெரியுமா? வாருங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
ஔவைப் பாட்டியின் புலமையை அரசர்கள் போற்றினர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று (அதியமான் - ஔவைக்கு நெல்லிக்கனி தந்த கதை எல்லாம் நாம் படித்திருக்கின்றோம்) அது போல ஒரு கதை தான் இது,
அந்தச் சோழ மன்னனின் அரசவையில் பல புலவர்கள் இருந்தனர். இருப்பினும் மன்னனுக்கு ஔவைப்பாட்டியின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஔவையாரின் புலமையை மெச்சிப் பல பரிசில்கள் கொடுப்பான், இருப்பினும் ஔவையாருக்கு அவற்றின் மீது எந்தவொரு பற்றோ ஈடுபாடோ கிடையாது. அதனால் மன்னனுக்கு ஔவையாரின் மீது இன்னும் அதிக மதிப்பும் மரியாதையும் கூடியது. ஆனால் இது மற்றப் புலவர்களுக்கு துளியும் பிடிக்கவில்லை. அவர்கள் ஔவையாரின் மீது மிகுந்தப் பொறாமைக் கொண்டனர். எப்படியாவது ஔவையாரை அவமானப் படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால் மன்னரிடம் ஔவையாரைப் பற்றி, இல்லாததும், பொல்லாததுமாகப் பல பழிசொற்களைக் கூறினர். ஆனால் மன்னருக்கு, ஔவையார் பற்றியும் தெரியும், அரசவையில் உள்ள மற்றப் புலவர்களுக்கு ஔவையாரின் மீது உள்ளப் பொறாமையும் தெரியும். அதனால், அந்தப் புலவர்களுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினான் மன்னன்.
ஒரு நாள், மாலை நேரத்தில், ஔவையார் தவிர்த்து எல்லா புலவர்களையும் தன் அரண்மனைக்கு அழைத்தான் மன்னன். அவர்களிடம், நீங்கள் அனைவரும், சேர்ந்து நாளை காலை அரசவை கூடும்பொழுது, நான்கு கோடிப் பாடல்கள் பாடவேண்டும் என்று கட்டளையிட்டான். உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான், ஒவையிடம் இதைக் கொடுக்காமல் உங்களிடம் கொடுக்கின்றேன். நாலுகோடிப் பாடல்களை நீங்கள் பாடினால், நீங்கள் கேட்கும் பரிசுகள எதுவென்றாலும் கொடுக்கின்றேன் என்றான் மன்னன். அதே நேரம், உங்களால் பாட முடியவில்லை என்றால், உங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தான்.
புலவர்கள் அனைவருக்கும் நடுநடுங்கிப் போயினர். எப்படி நாளைக் காலைக்குள் நாலு கோடிப் பாடல்கள் பாடமுடியும்? மன்னனுக்கு ஏதாவது புத்தி பேதலித்து விட்டதா? இப்படி ஒரு கட்டளை இட்டிருக்கிறானே என்று மனம் வருந்தினர். மன்னனை எதிர்க்கவும் அவர்களால் முடியவில்லை. எல்லோரும் கவலையுடன் கோவிலுக்குச் சென்றனர். இறைவனிடம் முறையிடலாம், தங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வார் என்று நம்பினர். அங்கு ஔவையாரும் இருந்தார். அவர்களின் முகச்சோர்வைக் கண்டதுமே ஔவையார்க்குப் புரிந்துவிட்டது. ஏதோ பெரும் பிரச்சனையில் இருக்கிறார்கள் என்று. அவர்களிடம் சென்று என்ன காரணம் என்று கேட்டார். என்னால் உதவ முடிந்தால் உதவுகிறேன் என்றும் வாக்களித்தார். அவர்கள் நடந்தைக் கூறினர். அதைக் கேட்ட ஔவையாருக்கும் அதிர்ச்சி.
ஆனால் அறிவிற் சிறந்த ஔவைப்பாட்டி சற்று சிந்தித்தார். தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் மதிக்கும் மன்னன், இப்படி ஒரு கட்டளையை இட்டிருக்கிறான் என்றால் கண்டிப்பாக, அதில் ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்று ஊகித்தார். பிறகு, கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு அந்த நாலு கோடி பாடல்களைத் தருகிறேன் என்றார்.
அப்பொழுது தான் பின் வரும் இந்தப் பாடலைப் பாடினார். பாடலைக் கேட்ட புலவர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி, ஔவையாருக்கு நன்றி கூறிவிட்டு, தாங்கள் இது வரை ஔவையார் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியைக் எண்ணி நாணினர். தங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர்.
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"
பாடலைக் கேட்டு புலவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நாலு கோடிப் பாடல்களுக்குப் பதில், ஒரு பாடலில் நாலு கோடியை வைத்த ஔவையாரின் புலமையை வியந்துப் பாராட்டி, ஔவைக்கு நன்றி கூறி நிம்மதியுடன் விடைப்பெற்றனர்.
மறுநாள் காலை அரசவையில், மன்னரிடம் இப்பாடல்களைப் பாடினர். பாடலைக் கேட்டதுமே மன்னருக்குப் புரிந்துவிட்டது. இது கண்டிப்பாக இவர்கள் எழுதவில்லை என்று. மன்னர், "இந்தப் பாடல் நிச்சயம் நீங்கள் எழுதியிருக்க வாய்ப்பில்லை, யார் உங்களுக்கு உதவியது?" என்று கேட்டதும் அவர்கள் கோவிலில் நடந்ததை சொல்லி, தாங்கள் ஔவையார் மீது கொண்டிருந்த பொறாமைக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் மன்னனிடம் மன்னிப்புக்கோரினர்.
மன்னரும் அவர்களை மன்னித்து, எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழுக்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாடலுக்கு விளக்கம்
ஔவையார் (தனிப்பாடல் - 42)
முதல் கோடி
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"
நம்மால் தவிர்க்க முடியாத சூழலிலும் கூட, நம்மை மதிக்காதவர்களின் வீட்டு வாசலில் கால் வைக்காமல் இருப்பது ஒரு கோடி பெறும், அதாவது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும். அன்புடன் அழைக்காதவர் வீடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் எடுத்துக்கொள்ளலாம். சுயமரியாதையை இழந்து கோடி பெறுவதை விட தன்மானத்துடன் வாழ்ந்து பெறும் வெறும் நூறு ரூபாய் மதிப்பு வாய்ந்தது.
இதை தான் "மதியாதார் தலை வாசல் மிதியாதே" என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றனர்.
இரண்டாம் கோடி
"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்"
நல்ல மனதுடன், வயிறார சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என்று உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பெறும்.
சில வீடுகளில், அவர்கள் பரிமாறுவதைப் பார்த்தாலே பசியெல்லாம் பயந்துப் பறந்துப் போய்விடும். வேண்டா வெறுப்பாக பரிமாறுவர்கள் வீட்டில் உணவு உண்ணாமல் இருப்பது கோடி மதிப்புப் பெறும் என்கிறார் ஔவைப்பாட்டி.
விருந்தோம்பல் பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரமே வைத்துள்ளார். அதிலும்
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து"
என்ற குறள் விருந்தினரை உபசரிக்கும் முறையை அழகாக விளக்குகிறது.
மூன்றாம் கோடி
"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"
கோடிப் பொன் கொடுத்தாவது, நல்ல குடியில் பிறந்தவர்களுடனும், நல்லவர்களுடனும் கூடியிருப்பது, நட்புக்கொள்வது, பல கோடி பெறும் என்கிறார் ஔவைப்பாட்டி.
திருவள்ளுவரும் நட்பைப் பற்றி பல குறட்பாக்கள் வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக எப்படி ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும் என்பதற்கு என்று தனியாக ஒரு அதிகாரமே வைத்துள்ளார். நல்ல நட்பை தேர்ந்தெடுப்பதில் அந்த அளவு கவனமாக இருக்கவேண்டும்.
நான்காம் கோடி
"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"
எத்தனை கோடி தந்தாலும் கொடுத்த வாக்கை மீறாமல் காப்பாற்றுவதும், தன்னுடைய நாக்கு பிறழாமல் இருப்பதும் (உண்மை பேசுதல் மற்றும் புறம் கூறாமல் இருப்பது) கோடி பெறும். எவ்வளவு சத்தியமான வாக்கு.
(நம்மூர் அரசியல் வாதிகளுக்கு "கொடுத்த வாக்கை/வாக்குறுதியை" காப்பாற்றுவது என்பதன் பொருள் என்னவென்று தெரியுமா? கோடிக் கோடியாய்க் கொள்ளையடிப்பவர்கள், ஔவைப்பாட்டியின் இந்த ஒரு கோடிப் பாட்டையாவது படித்திருந்தால், நல்லது நடந்திருக்கும், தமிழகமும் தலை நிமிர்ந்திருக்கும்)
நரம்பில்லாத நாக்கு என்பதற்காக எது வேண்டுமானாலும் சொல்லக்கூடாது. சிந்தித்துப் பேச வேண்டும். பிறர் புண்படும்படி எதுவும் சொல்லக்கூடாது சொன்னதை செய்யவேண்டும்.
இதற்கும் திருவள்ளுவர் பல குறட்பாக்கள் வைத்துள்ளார்.
இப்படி நாலு குறட்பாக்களில் நாலு கோடி மதிப்புள்ளக் கருத்தை சொன்ன ஔவையாருக்கு எத்தனைக் கோடி நன்றி சொன்னாலும் தகும்.
நம் முன்னோர்கள், நமக்காக, நம் வாழ்க்கை நல்ல நெறியில் செல்வதற்காகப் பல நல்லக் கருத்துகளை பாடி வைத்து சென்றுள்ளனர். நாம் தான் அவற்றையெல்லாம் மதிக்காமல், படிக்காமல் இருக்கின்றோம்.
மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.
நாலு கோடி பெறும் பாடல்
ஜனவரி 23, 2026
0
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க


