"நறுக்குன்னு நாலு வார்த்தை" என்பது நாம் அடிக்கடி கேட்டு இருக்கும் ஒரு சொற்றொடர். ஏன் நாமே கூட "சும்மா வளவளன்னு பேசாமல், எது சொல்றதா இருந்தாலும் நறுக்குன்னு நாலு வார்த்தையில சொல்லு" என பல முறை சொல்லியிருப்போம். அது ஏன் நாலு வார்த்தை? இப்படி ஒரு கேள்வி திடீரென்று எனக்குள் எழுந்தது. அதைப் பற்றி, சற்று சிந்தித்த பொழுது, எனக்கு அதற்கான ஒரு விடை கிடைத்தது. வாருங்கள் அது என்ன என்று பார்க்கலாம்.
அது ஏன் நாலு வார்த்தை?
(நான்கு என்ற எண்ணின் சிறப்பைப் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்)
அதிகம் பேசக் கூடாது என்பதற்காக உருவான ஒரு சொற்றொடராக இருக்கலாம். இதை தான் "வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு" என்றும் சொல்வார்கள். "காலம் பொன் போன்றது" என்பது பழமொழி. பேசிப்பேசி நேரத்தை வீணாகக் கழிக்கக்கூடாது. நேரத்தின் அருமைக் கருதி சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகவும் இந்த சொற்றொடர் உருவாகி இருக்கலாம். நீண்ட வாக்கியங்களுக்குப் பதில் சிறு வாக்கியம் என்றால், நமக்கு எளிதாகப் புரியும், மனதிலும் எளிதாக பதிந்து விடும், சீக்கிரம் மறக்காது, அதற்காவும் இருக்கலாம், அப்படியே வைத்துக்கொண்டாலும், இரண்டு அல்லது மூன்று வார்த்தை என்று சொல்லி இருக்கலாமே? ஏன் குறிப்பாக நாலு வார்த்தை?
தேவையற்ற சொற்களைப் பேசக்கூடாது என்பது பெரியவர்கள் வாக்கு. அதனால் தான் நம் வீடுகளில், "தேவையில்லாத பேச்செல்லாம் பேசவேண்டாம்" என்று பலர் சொல்வதை அடிக்கடி கேட்டிருப்போம். திருவள்ளுவரும், இதை வலியுறுத்த, "பயனில சொல்லாமை" என்ற ஓர் அதிகாரத்தையே வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் - 200)
என்ற குறளில், பயனுடையச் சொற்களை மட்டுமே பேசவேண்டும் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்.
பயனுள்ள சொற்களைப் பேசவேண்டும், அதுவும் குறைவாகப் பேசவேண்டும். அதை நம் ஔவைப்பாட்டி அழகாகச் செய்துள்ளார். ஓரிரு சொற்களிலேயே நிறையக் கருத்துகளை, ஆத்திசூடியில் சொல்லியிருக்கிறார் ஔவைப்பாட்டி, இரண்டு சொற்களிலும், மூன்று சொற்களிலும் நல்ல நல்லக் கருத்துகள் பலவற்றை சொல்லியுள்ளார், (எ.கா: அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல்)
ஒரு சொல்லில் கூட, கேள்வியும் பதிலும் சொல்லிவிட முடியும். ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? என்ன? எப்போது? யார்? என்று கேள்விகளும், ஆம், இல்லை, சரி, அங்கே, இங்கே, அது, இது என்று பதில்களும் கூறிவிட முடியும்.
ஆனால், இப்படிச் சுருங்கச் சொல்வது, பெரும் ஞானிகளால் மட்டுமே முடியும். சில ஞானிகள் வாய்திறந்துப் பேசக்கூட மாட்டார்கள், மௌனத்தாலேயே பேசிவிடுவார்கள். நாம் கேட்காமலேயே, நம் மனதை அறிந்து, நாம் கேட்க வந்த கேள்விகளுக்கு விடை அளித்துவிடுவார்கள். ஆனால் எல்லோராலேயும் அப்படி முடியாது. எல்லோரும் ஞானிகள் அல்லவே.
நம்மைப் போன்ற, இல்லை இல்லை, என்னைப் போன்ற சாமானியர்களால், இரண்டு மூன்று சொற்களில் கண்டிப்பாகச் சொல்லவந்தக் கருத்துகளைத் தெளிவாகச் சொல்லிவிட முடியாது.
அதனால், ஒரு வினாவையோ அல்லது அதற்கான விடையையோ தெளிவாகக் கேட்பதற்கும், பதில் சொல்வதற்கும் குறைந்தப் பட்சம் நாலு சொற்களாவது தேவைப்படும். அதனால் தான் நம் முன்னோர்கள், இச்சொற்றொடரைப் உருவாக்கி இருக்கவேண்டும் என்பது எனது எண்ணம்.
மற்றொரு காரணம்
இந்த "நாலு வார்த்தை" என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்று நினைக்கிறேன்.
தமிழில் எழுத்து வகைகள் எத்தனை என்று கேட்டால், உடனே அது மூன்று வகைப்படும், அவை உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள் என்று எல்லோரும் சொல்லிவிடுவார்கள். ஆனால் தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும். ஒன்று முதலெழுத்துகள் மற்றொன்று சார்பெழுத்துகள்.
இதே போல் தமிழ் மொழியில் உள்ள சொற்கள், நான்கு வகைப்படும். அவை
பெயர்ச்சொல்
வினைச்சொல்
உரிச்சொல்
இடைச்சொல்
நான்கு வகை தமிழ்ச்சொற்கள் இருப்பதனால் கூட, நாலு சொற்கள் என்பதைக் குறிப்பதற்காக "நறுக்குன்னு நாலு வார்த்தை" என்ற சொற்றொடர் வந்திருக்கலாம் என்பது இன்னொரு காரணமாகக் கருதுகிறேன்.
இப்படி சொல்வதனால் எல்லா வாக்கியங்களும், இந்த நாலு வகைச்சொற்களையும் கண்டிப்பாகக் கொண்டிருக்கும் என்று பொருள் கிடையாது, குறைந்தபட்சம் இரண்டு வகையான சொற்கள் இருந்தால் தான் அது முழுமையான வாக்கியம் ஆகும். எல்லா வாக்கியங்களிலும் இந்த நான்கு வகை சொற்களையும் வைத்தும் நம்மால் பேசமுடியாது. ஆனால் நம் ஔவைப்பாட்டி இந்த நாலு வகைச்சொற்களையும் வைத்து தம் பாட்டில் அழகாக ஒரு கருத்தைப் பாடியுள்ளார்.
ஔவைப்பாட்டியும் நாலு வார்த்தையும்
இப்படி "நறுக்குனு நாலு வார்த்தை"யில் சொல்வது ஔவைப்பாட்டிக்கும் மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் தான். தமது "கொன்றைவேந்தன்" எனும் பாடலில், நாலுச் சொற்களில், நல்ல நல்லக் கருத்துகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக,
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
என்ற வரி மிகவும் சிறப்பானது. ஆலயம் சென்று தொழவேண்டும் என்று சொன்னதால் மட்டும் சிறப்பில்லை.
நம் தமிழில் உள்ள நாலு வகைச்சொற்களையும் ஒரே வரியில் வைத்து சொல்ல வேண்டிய செய்தியை அழகாகக் கூறியுள்ளார். அது தான் இந்த வரியின் சிறப்பு.
ஆலயம் - பெயர்ச்சொல்
தொழு - வினைச்சொல்
சால - உரிச்சொல்
நன்று - இடைச்சொல்
நறுக்குனு நாலு வார்த்தை மட்டுமல்ல, தமிழில் உள்ள நாலு வகைச்சொற்களையும் பயன் படுத்தியுள்ள, ஔவைப்பாடியின் இந்த திறமையையும் புலமையையும் என்னவென்று சொல்வது.
ஔவையார் நாலு சொற்களில் ஓரடியில் சொன்னார், திருவள்ளுவர், ஏழு சொற்களில், ஒன்றரை அடியில் சொல்ல வந்தக் கருத்துகளைச் சொன்னார். சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்வதும், மிகப்பெரிய ஒரு கலை தான்.
இந்த இரு காரணங்களால் தான் எதை சொல்லவேண்டும் என்றாலும் நறுக்குனு நாலு வார்த்தையில் சொல்லு என்ற சொற்றொடர் உருவாகியிருக்க வேண்டும் என்பது எனது பணிவான எண்ணம்.
ஆங்கிலத்திலும் கூட, இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக ஒரு சொற்றொடர் இருக்கிறது, "If you can say it in four words, don't use five.", என நாலு வார்த்தையில் சொல்வது, சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
அது சரி, சொல்ல வந்தக் கருத்தை, நறுக்குனு நாலு வார்த்தையில் சொல்லாமல், ஏன் இப்படி பத்திப் பத்தியாய் எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. "செய்வன திருந்தச் செய்" என்றும் நம் ஔவைப்பாட்டி சொல்லியிருக்கிறார். அதனால் தான் சொல்ல வந்ததை என்னால் முடிந்த அளவிற்கு விரிவாகவும் தெளிவாகவும் சொல்ல முயன்று இருக்கிறேன்,
இந்தக் கட்டுரையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளையும் "நறுக்குனு நாலு வார்த்தையில்" சொல்லுங்கள்.
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.



