கழிமுகம் என்பது ஆறு கடலோடு கலக்கும் இடம். இதற்கு முகத்துவாரம், சங்கமுகம், சங்கமுகத்துறை என வேறு பெயர்களும் உண்டு. ஆங்கிலத்தில் Estuary என்று பெயர். ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சங்கமுகம் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நன்னீரும், உவர் நீரும் ஒன்றாகக் கலக்கும் இடம் இது. இப்படி நன்னீரும் உப்பு நீரும் ஒன்றாகக் கலப்பதால், நல்ல வளமான, இந்த இடத்தில் நிறைய சத்துகளும் (nutrients), பிற தாதுப் பொருட்களும், நீரிலும், ஆற்றினால் அடித்துவரப்பட்டு தேங்கும் அந்த வண்டல் மண்ணிலும் அதிகமாகக் கிடைக்கிறது. ஆற்றின் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வண்டல் மண்ணானது, ஆறு கடலோடு கலக்கும் இடத்தில், அதன் வேகம் குறைந்து படிந்து விடுவதால், மேடு போல ஒரு நிலவமைப்பை உருவாக்குகிறது. இயற்கையாக அமையும் இந்த அமைப்பானது, கடல் நீர் உள்ளே புகாதபடி தடுக்கும் அரணாகவும் மாறுகிறது.
எங்கோ ஒரு மலையில் இருந்துப் புறப்படும் ஆறு, சில சமயம் அமைதியாகவும், பல சமயம் ஆர்ப்பரித்தும், பல இடங்களையும் ஊர்களையும் கடந்து, பல மேடு பள்ளங்களைத் தாண்டி, கோடிக்கணக்கான மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நீரெனும் அமுதத்தை வாரி வழங்கி, இறுதியாக தன் நீண்ட நெடியப் பயணத்தை, கடலில் வந்து முடிக்கிறது. அப்படி கடலில் வந்து சேரும் பொழுது ஆக்ரோஷமாக வந்து கலக்கும்,
ஆனால் காவிரி ஆறு, கடலோடு கலக்கும் பொழுது மிகவும் மெல்லிய நீரோடைப் போல் சென்று கலக்கிறது. கடல் போல அகண்ட காவிரி ஆறானது, கடலில் கலக்கையில், சிறு கயிறு போல் சுருங்கி ஓடி கலக்கிறது.
காவிரி ஆறு, இப்படிச் சுருங்கிப் போய், கடலில் கடப்பதற்கானக் காரணத்தை, தெய்வப்புலவர் சேக்கிழார் அவர்கள், தமக்கே உரியச் சிறப்பான கற்பனை நயத்தோடு விளக்கி இருக்கிறார், பெரியபுராணத்தில், திருமூல நாயானரைப் பற்றியப் புராணத்தில், தெய்வச்சேக்கிழார் ஓர் அருமையான உதாரணத்தை பயன்படுத்துகிறார். வாருங்கள், அது என்ன என்று பார்ப்போம்.
திருமூலர், ஒரு முறை, கயிலாயத்தில் இருந்து, தென்பகுதியில், பொதிகை மலையில் தங்கி இருக்கும் தன் நண்பரான அகத்தியரைக் காண வருகிறார். வரும் வழியில் நேபாளம் தொடங்கி, கேதாரம் என்று வரிசையாகப் பல சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்து வருகிறார். அப்படி வரும்பொழுது, காவிரியின் வடகரையில், இருக்கும் தில்லைக்கு சென்று ஆனந்த நடனமாடும் நடராஜப் பெருமானை வணங்கி, காவிரியின் தென் கரையில் இருக்கும் திருவாவடுதுறைக்கு செல்ல முற்படுகிறார். அப்போது வற்றாத வளம் கொடுக்கும், காவிரித் தாயைப் போற்றி பாடுகிறார்.
காவிரியின் சிறப்பை பற்றி பாடும் தெய்வச்சேக்கிழார்
காவிரி ஆறு, மற்ற ஆறுகளைப் போல, கடலில் கலப்பதில்லை. வளமான காவிரி, கடலை சென்று சேரும் பொழுது மெலிதாகப் போகிறது, அதற்கு, அவரு கையாண்ட உவமை மிக அற்புதமாக இருக்கிறது, அதாவது, கரையெங்கும் வளங்களை வாரி வாரிக் கொடுக்கும் காவிரித்தாய், கடலுக்கு தன் நன் நீரைத் தர விருப்பமில்லாமல் மிகக் குறைவாக சென்று சேர்க்கிறதாம். காவிரி ஆறு, கிளை கிளையாக பிரிந்து, வரும் வழியில் உள்ள வயல்களை எல்லாம் வளம் செய்து, தன்னிடம் உள்ள நீரை எல்லாம் வாரி வழங்கி கடைசியில் கடலுக்கு வரும் போது ஒன்றும் இல்லாமல் வந்து சேர்கிறது, ஏன் தெரியுமா?
ஏன் என்றால், ஒரு முறை, தேவர்கள், திருப்பாற்கடலில் இருந்து அமிர்தம் எடுக்க கடைந்தபொழுது, அமிர்தத்திற்குப் பதில், முதலில் நஞ்சு தான் வந்தது, அப்பொழுது தேவர்களுக்குகாக மனமிரங்கிய சிவபெருமான், அந்த நஞ்சினை தாமே உட்கொண்டார். அதை சக்தியான பார்வதி தேவி, சிவனின் கழுத்தோடு நிறுத்திவிட்டார். அதனால் சிவனின் கழுத்தில் நஞ்சு பெருகி நீல நிறமாகி விட்டது. ஆகையினால் தான் சிவபெருமான், நீலகண்டன் (கண்டம் - கழுத்து) என்றும் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமானுக்கு இந்த கடல் தான், நஞ்சுக்கொடுத்தது என்பதால், காவிரி தன்னுடைய நல்ல நீரை, நிலத்தில் வரும் வழியில் உள்ள அனைவருக்கும் வாரி கொடுத்தது போல் கொடுக்காமல், போனால் போகிறது என கொஞ்சமாகக் கடலுக்குக் கொடுக்கிறதாம், என்ன ஒரு ஆழ்ந்த அறிவுப்பூவமானக் கற்பனை.
அதாவது, சிவ அபராதம் செய்பவர்களோடு இணக்கம் கூடாது என்பதற்காக, சிவனுக்கு நஞ்சுக்கொடுத்தக் கடலுக்கு, தன் நன்னீரை முழுவதுமாகக் கொடுக்கக்கூடாது என்பதற்காக, மிக சொற்பமான நீரைக் கடலில் கலக்கிறதாம் காவிரி.
அந்தப் பாடல் இதோ...
தடநிலைமா ளிகைப்புலியூர்
தன்னிலுறைந் திறைஞ்சிப்போய்
அடல்விடையின் மேல்வருவா
ரமுதுசெய வஞ்சாதே
விடமளித்த தெனக்கருதி
மேதினிக்கு வளநிறைத்தே
கடல்வயிறு நிறையாத
காவிரியின் கரையணைந்தார்
சொற்பிரித்து எழுதினால்
தட நிலை மாளிகைப் புலியூர்
தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய்
அடல் விடையின் மேல் வருவார்
அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது எனக் கருதி
மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல் வயிறு நிறையாத
காவிரியின் கரை அணைந்தார்.
பதவுரை:
தட நிலை - பெரிய நிலைகளை கொண்ட
மாளிகை - மாளிகைகளை கொண்ட
புலியூர் தன்னில் - புலியூர் என்னும் ஊரில்
உறைந்து - வாழ்ந்து
இறைஞ்சி - வணங்கி
போய் - சென்று
அடல் - வலிமையான
விடை - எருது
மேல் வருவார் - மீது அமர்ந்து வரும் சிவன்
அமுது செய - அமுது கொடுக்காமல்
அஞ்சாதே - சிறிதும் அஞ்சாமல்
விடம் - நஞ்சு, விஷம்
அளித்தது - ஆலகால விஷத்தைக் கொடுத்தது
எனக் கருதி - என்று நினைத்து
மேதினி - உலகு
வளம் நிறைத்தே - வளம் பெருகும்படி செய்து
கடல் வயிறு - கடலுக்கு
நிறையாத - பற்றாமல், நிறைக்காமல்
காவிரியின் - காவிரி ஆற்றின்
கரை - காவிரிக்கரையில் உள்ள காவிரிபூம்பட்டினம்
அணைந்தார் - வந்து சேர்ந்தார்
![]() |
| காவிரி ஆறு ஒகேனக்கல் அருவி (Hogenakkal Falls) |
பாடலின் பொருள்
பெரிய நிலைகள் கொண்ட மாளிகைகளை உடைய புலியூர் என்னும் ஊரில் (புலியூர் என்பது பொன்னம்பலம் வேய்ந்த தில்லையம்பலமான சிதம்பரம் என்ற ஊரின் அன்றையப் பெயர். மற்றப் பற்றுகளைத் துறந்த முனிவர்கள் கூட இறைவன் மீது பெரும் பற்று வைக்க செய்கின்ற ஊர் என்பதால் அதற்கு பெரும்பற்றப்புலியூர் என்ற பெயர் இருந்துள்ளது) இருக்கும் நடராஜ பெருமானை தரிசித்து விட்டு, மேலே செல்கையில் காவிரி ஆறு வருகிறது. அதனை கடந்து செல்ல வேண்டும். ஆனால் காவிரியோ கடலில் கலக்கபோவதால் மெலிதாக வருகிறதாம். ஏனென்றால், எருதின் மேல் வரும் சிவனுக்கு அமுது அளிக்காமல் விஷம் தந்ததால், எவ்வளவு போட்டாலும் வயிறு நிறையாதக் கடலுக்கு ஒன்றும் தரக்கூடாது என்று நினைத்து, காவிரி தன்னிடம் உள்ளவற்றை எல்லாம் உலகுக்கு வழங்கி விட்டது என்று பாடுகிறார் தெய்வச்சேக்கிழார்.
இந்தப் பாடலில் உள்ள இன்னொரு அழகான சொல்லாடல், "கடல்வயிறு நிறையாத" என்பதாகும். என்ன ஓர் அழகானக் கற்பனை. யானைப்பசிக்கு சோளப்பொரி என்பார்களே, அது போல, அகோரப் பசியில் இருக்கும் கடலின் வயிறு நிரம்பாத அளவிற்கு, மிக சொற்பமாக நீர் அளித்ததாம் காவிரி.
தற்குறிப் பேற்ற அணி
சேக்கிழார் இப்படி பாடியதை, தமிழ் இலக்கணம் 'தற்குறிப்பேற்ற அணி' என்று சொல்கிறது.
தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது, கவிஞர் தம் குறிப்பை ஏற்றுவதாகும்.
ஆறு கடலில் கலப்பது இயற்கையாக நடைபெறும் நிகழ்வு, இயல்பாக நடைபெறும் அந்நிகழ்ச்சிக்கு, தெய்வப்புலவர் சேக்கிழார், தம் கற்பனையைக் கலந்து அழகானவொரு காரணம் கற்பிக்கின்றார். இதனால் தாம் கூறும் நிகழ்ச்சிக்கும் கருத்திற்கும் புதிய சுவையைத் தருகிறார். பாடலைப் படிக்கும் நமக்கும் அந்த சுவையையும், புது உணர்வையும் ஊட்டுகிறார்.
தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ள 'தற்குறிப்பேற்ற அணி' குறித்து இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.




