(ஜூலை 9, 2026)
எங்களை எல்லாம்
மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு - கண்
காணா தொலைவிற்கு
சென்று விட்டவனே,
உன் தூய்மையான ஆத்மா
அந்த
அருட்பெருஞ்சோதியாம்
ஆண்டவன் மலரடியில்
அமைதியாய்
இளைப்பாறட்டும்!
ஒரு
நண்பனாய் அறிமுகமானாய்,
இளைய சகோதரனாய்
வளைய வந்தாய்,
இன்று எல்லையில்லா
பெருவெளியில் உனை ஏன்
தொலைய விட்டாய்?
பெரும்வலி தந்து
எங்களை ஏன் - நிலை
குலைய வைத்தாய்?
இறை எனும் பேரொளியில்
கலந்துவிட்ட நீ,
எங்களை - கொடும்
இருள் எனும் ஓர்வெளியில்
தள்ளிவிட்டது ஏன்?
யாரும் கேளாமல்
ஓடோடி வந்து
உதவி செய்யும்
உத்தம குணம் படைத்தவனே,
இன்று யாருக்கு உதவிட
எங்களை எல்லாம் விட்டுவிட்டு
ஒரேயடியாக
ஓடோடி விட்டாய்?
வாழ்வை முழுமையாய்
வாழ விடாமல்,
சேவையை முழுமையாய்
தொடர விடாமல்,
இடையில் பறித்துக்கொண்ட
அந்த இறைவன்
இரக்கமில்லாதவன் தானோ?
பாதியில் பறித்துக்கொள்வதற்கு
படைப்பது ஏன்?
பாவியாய் மாறிவிட்டானோ
படைத்தவனும்?
வாழ்க்கை
சில சமயம் சிலரிடம்
வன்மையாக நடந்துக்கொள்கிறது,
பல சமயம் பலருக்கு
வஞ்சனை செய்துவிடுகிறது,
நிலையற்ற இவ்வாழ்க்கை
ஏன் பல நேரங்களில்
நியாயமற்று இருந்துவிடுகிறது?
இன்னிசைப் பாடிய
இளங்குயில் - இனி
எவ்விசை பாடும்
நீயின்றி?
தோகைவிரித்தாடிய
இளமயில்கள் - இனி
எத்திசை தேடும்
உனை இங்கு?
இணைபிரியாத
இணையாய் இருந்தவனே,
இனி பிரியாத
துணையாய் மாறிவிடு,
இழந்து தவிக்கும்
தளிர்களுக்கு,
இரும்பு அரணாக
நீயும் ஆகிவிடு!
வள்ளுவன் தமிழ் மையத்தின்
வாயில் கதவுகள்
அகல திறந்துக் காத்திருக்குமே
உன்
அகால மரணம் அறியாது
நீ வருவாய் என,
வள்ளுவன் பள்ளியின்
வரவேற்பறையோ - உனது
உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும்
புன்னகை இல்லாமல்
பொலிவிழந்து நிற்குமே
நிலவிழந்த வானமாய்!
ஒவ்வொரு வகுப்பறையிலும்
உன் குரல் எதிரொலிக்கும் - அது
எங்கள் செவிப்பறையில் பட்டு
உளம் மிக வலிக்கும்!
இனி
பள்ளியின்
ஒவ்வொரு நிகழ்வுகளும்
உன் பெயரை
கத்திச் சொல்லும்,
ஒவ்வொரு நினைவுகளாக
அணிவகுத்து வந்து,
நெஞ்சை நெருஞ்சி முள்ளாய்
குத்திச் செல்லும்!
பொருளாளராய்ப் பள்ளிக்கு
பெருமை சேர்த்தாய்,
தன்னலமற்ற சேவைக்கு
பொருளாக அல்லவா நீ
மாறிப் போனாய்,
நீ விட்டுச் சென்ற
வெற்றிடத்தை
எங்களால் நிரப்ப முடியாது,
இருப்பினும்
நீ விட்டுச் சென்ற பணிதனை
வெற்றி பெற
எந்நாளும் உழைத்திடுவோம்!
இனி
ஒரு குருவாக இருந்து
எங்களுக்கு வழிகாட்டு,
சத்குருவாக இருந்து
எங்களுக்கு ஒளிகாட்டு!
உன் உடல் தான்
மண்ணை விட்டு மறைந்திருக்கிறது,
உன் நினைவுகள்
எம் நெஞ்சம் விட்டு
என்றும் மறைந்திடாது!
கண்ணீருடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.


