(தமிழோடு விளையாடு - 4)
தமிழோடு விளையாடுவது புலவர்களுக்கு கை வந்தக் கலை. அவர்கள் உரையாடும் பொழுது, மிக இயல்பாக, தங்களை அறியாமலேயே சொற்களோடு விளையாடுவார்கள். அதுவும் இரண்டு புலவர்கள் சந்தித்துக்கொண்டால் கேட்கவா வேண்டும்? அப்படி ஒரு சுவையான சொல் விளையாட்டை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒரு சமயம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை சந்திக்க, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் மதுரைக்கு வந்திருந்தார். (மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு "மகாவித்வான்" பட்டமும், யாழ்பாணம் ஆறுமுகம் அவர்களுக்கு "நாவலர்" என்ற பட்டமும், திருவாவடுதுறை ஆதினத்தால் வழங்கப்பட்டது, அந்தக் காலத்தில் தகுதியானவர்களுக்குத் தான் சிறப்பான பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கிறது)
அது ஒரு மார்கழி மாதம். அவர்கள் இருவரும் காலையில் நீராட வைகை ஆற்றிற்குச் சென்றார்கள்.(அப்பொழுதெல்லாம் வைகையில் நீர் கரைபுரண்டு ஓடி இருக்கிறது. இப்பொழுது, கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு கூட, குழாயில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டியிருக்கிறது) அவர்கள் நீராட சென்றது, குளிர்காலம் என்பதால் வைகை நீர் சில்லென்று பனிக்கட்டிப்போல் குளிரிந்திருக்கிறது.
வைகையாற்று நீரில் இறங்கிய ஆறுமுக நாவலர், அந்த குளிர்ந்த நீரில் முழுகி எழுந்தவுடன், உடல் நடுங்கிக்கொண்டே, "பனிக்காலம் கொடிது, பனிக்காலம் கொடிது" என்று கூறியிருக்கிறார்.
அதைக்கேட்ட மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், "ஆமாம் பனிக்காலம் நல்லது, பனிக்காலம் நல்லது" என்று பதில் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட நாவலர் அவர்கள் அதை ஆமோதித்து சிரித்திருக்கிறார்.
இதனைப் பார்த்த உடன் சென்றவர்கள், ஒன்றும் புரியாமல் திகைத்திருக்கிறார்கள். நாவலர் அவர்கள் "பனிக்காலம் கொடிது" என்று கூறுகிறார், அதற்கு மகாவித்வான் "பனிக்காலம் நல்லது" என்று பதில் கூறுகிறார், ஆனால், பனிக்காலம் கொடிது என்று கூறிய நாவலர் அதை சிரித்து ஆமோதிக்கின்றாரே என்று குழம்பினார்கள்.
இவர்களின் குழப்பத்தைக் கண்ட ஆறுமுக நாவலர் அவர்கள், நான் சொன்னக் கருத்தை தான், மகாவித்வான் அவர்களும் சொல்லியிருக்கிறார். நான், "பனிக்காலம் கொடிது" என்றேன், அதற்கு மகாவித்வான் அவர்கள் "பனிக்காலம் நல்லது" என்றார், அதாவது "பனிக்கு ஆலம் நல்லது" என்கிறார், ஆலம் என்பதற்கு நஞ்சு என்று ஒரு பொருள் இருக்கிறது, அதைக் குறிப்பிட்டு தான், "இந்தப் பனியில் நடுங்கி நீராடுவதற்கு பதில் நஞ்சையே அருந்திவிடலாம் போலிருக்கிறது" என்று கூறுகிறார் என விளக்கினார். என்ன ஒரு சொல் விளையாட்டு.
தமிழ் அறிஞர்களோடு உரையாடினால், இது போன்ற பல சிலேடை சொல் விளையாட்டுகளை இரசித்து சுவைக்கலாம்..
மீண்டும் இன்னொரு சொல் விளையாட்டோடு "தமிழோடு விளையாடு" பகுதியில் சந்திக்கலாம்.
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.



