வானம் வளைந்து வணங்கி நிற்கும்
வாசத் தென்றல் வாஞ்சையாய் வருடிவிடும்
கானம் பாடிப் பறவைக் குழாமெல்லாம்
வாசல் வந்து நேசமாய் வரவேற்கும்!
வண்ண மலர்கள் பூத்து எழில்கூட்டும்
வண்ணத்துப் பூச்சிகள் வந்து வழிக்காட்டும்
எண்ணத்தில் எழுந்திடும் கற்பனைப் போல்
எங்கள் இல்லமும் இருக்குமே அற்புதமாய்!
அதிகாலை நேரம் எனைப் போலே
கதிரவன் கூட கண் விழிக்கும்
கடிகாரம் பார்க்கத் தேவை யில்லை
விடிகாலை அழகில் மயங்கி நின்றால்!
தென்றல் மெதுவாய் இரகசியம் பேசும்
மலர்கள் புதிதாய் நறுமணம் வீசும் - கீழ்
வானம் சிவந்துபல வண்ணத்தைப் பூசும் - விடி
காலைக் கதிரொளிநம் கண்களைக் கூசும்!
விசும்பின் துளியது இறங்கிப் புவிவந்து
பசும்புல் நுனியினில் மயங்கிக் கிடந்திடும்
அசந்து உறங்கிய ஆதவன் விழித்திட
வசந்தக் காலமாய வைகறை ஒளிபெறும்!
அரும்பிடும் மொட்டுகள் தேன் வடிக்கும் - சுவை
விரும்பிடும் சிட்டுகள் தேன் குடிக்கும்
திரும்பிட மறுத்து அடம் பிடிக்கும் - அதை
திரும்பிடும் மேகங்கள் படம் பிடிக்கும்!
காலைக் கதிரின் இளஞ் சூடு
காற்றையும் ஆக்கிடும் இத மாக
தூரத்தில் மேயும் பசு மாடு
ஓய்வெடுக்கும் உண்டபின் சுக மாக!
இரைச்சல் இல்லாத ஒரு சூழல்
இயற்கையின் இரம்மிய அறைகூவல்
இரைதேடும் பறவையின் உரையாடல்
இசைதேடும் செவிக்கு அரும் பாடல்!
மழைச்சாரல் பொழிவில் மனம் நனையும்
மலைச்சாரல் பொலிவில் தினம் மயங்கும் - அருங்
கலையாக மின்னும் இவை அணைத்தும்
கலையாது நின்றதை முகில் இரசிக்கும்!
சட்டென,
மேகம் திரண்டு மாறிடும் வானிலை
காகமாய் கருத்து தூறிடும் ஓர்மழை
கண்ணுக்கு குளிர்ச்சியாய் ஆகிடும்
சூழ்நிலை
விண்ணுக்கு நன்றியாய்த்
தலைஆட்டிடும் பார்இலை!
சூரிய வெளிச்சம் மீண்டும் படர்ந்திடும்
மறைந்துப் போனதைப் போலவே
தோன(ன்ற)வில்லை
தூரிகைக் கொண்டு வானிலே அழகாய்
வரைந்துக் காட்டிடும் பாரொரு
வானவில்லை!
அந்தி சாயும் நேரம் வந்துவிட்டால்
அந்த வானம் நாணம் கொண்டுவிடும்
முந்தி வந்து காத்திடும் காதலனை
சந்திக்கச் செல்லும் ஒரு காதலிபோல்!
மேற்கில் ஆதவன் மறைந்திடும் பொழுது
மேகம் பொன்னிற மாகி மின்னும் - அதை
மேதினி பார்த்திடும் வியந்து நின்று - வண்ண
மேகலை அணிந்ததோ வானம் என்று?
பறந்து திரிந்துப் பாடி மகிழ்ந்தப்
பறவைக் கூட்டம் ஏதும் இல்லை
பரந்து விரிந்த வானத்தின் வண்ணம்
இரவு வந்தபின் எங்கே காணவில்லை?
இருளது கவிழ்ந்தபின் இத்தனை அழகும்
இருக்கும் இடத்திலே இல்லாமல் போகும்
கருமை நிறமே காணும் இடமெல்லாம்
கருக்கல் வரையினில் சொல்லாமல் ஆளும்!
விண்மீன்கள் வானில் மின்னிச் சிரிக்கும்
கண்மீன்கள் வியந்ததை எண்ணி இரசிக்கும்
மின்மினிப் போல மின்னிடும் தாரகை - உனை
கண்சிமிட்டிக் கூப்பிடும் கூர்ந்துப் பாரதை!
பௌர்ணமி நிலவின் பேரொளி அழகில்
பனிவிழும் இரவின் காரிருள் விலகும்
மௌனமும் மகிழ்ந்து மெல்லிசைப் பாடும்
விண்வெளித் திரையில் புதுகாட்சிகள் தோன்றும்!
இரவு நேரத்தின் இணையில்லா நிசப்தம்
இடையிடையே மட்டும் வண்டுகள் சப்தம்,
தாலாட்டும்
இசைஞானியின் மயக்கும் இன்னிசைப் பாட்டு,
எனைப்போல்
இமைமூடி இரசிக்குமே வெந்நிலவும் கேட்டு!
இயற்கை அன்னையின் காலடியில்
இசைபாடும் புள்ளினம் தாய்மொழியில்
இரசித்திடும் புலன்களும் பேரெழிலை - நல்
இல்லமும் விஞ்சிடும் பூம்பொழிலை!
தொலைதூரம் தெரியும் இயற்கையின் அழகில்
தொலைந்துப் போகும் இயந்திர உலகும்
அலைபாயும் மன மெல்லாம் அமைதியுறும்
இளைப்பாறும் இயற்கையின் தாய் மடியில்!
இயற்கையை நேசிக்கும்
இராம்ஸ் முத்துக்குமரன்.








