பத்தினியின் கால்

இராம்ஸ் முத்துக்குமரன்
0

தமிழோடு விளையாடு - 5   (சிலேடைகள் - 1)

 

இரு புலவர்களுக்கு இடையில் நடந்த, சுவையான, சிலேடை நயம் மிகுந்த ஓர் உரையாடலை இந்தப் பதிவில் காண்போம்:

புலவர் ஒருவர், வைத்தியரிடம் செல்கிறார், தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நேரடியாகச் சொல்லாமல், தாம் ஒரு புலவர் என்பதால், பாடல் மூலமாக ஒரு புதிர் போலச் சொல்கிறார், அந்தப் பாடல் இதோ...


முக்காலைக் கையில் எடுத்து
    மூவிரண்டுக் கேகையிலே
அக்காலை ஐந்துதலை நாகம்
    ஆழ்ந்து கடித்தது காண்!


அந்த வைத்தியரும் சாதாரண ஆள் கிடையாது, மதிநுட்பமும் தமிழ் புலமையும் மிக்கவர், அதனால் அவரும், செய்யவேண்டிய சிகிச்சையை, புலவரின் பாணியிலேயே, ஒரு புதிர்ப்பாடல் வழியாகவே சொல்கிறார். வைத்தியரின் பதில் பாடல் இதோ...

பத்துரதன் புத்திரனின் 
மித்திரனின் சத்துருவின் 
பத்தினியின் காலெடுத்து தேய்!


என்னடா இது ஒன்றுமே புரியவில்லை என்று குழம்புகிறீர்களா?  நானும் அப்படித்தான் குழம்பினேன், பிறகு இரண்டுப் புதிர்களுக்குமான விடையை, தானாக அல்ல, நானாகத் தேடி அறிந்துக்கொண்டேன்.  இந்தப் பாடலில் தான் என்னவொரு சந்த நயம்!



விளக்கம்

கைத்தடி எடுத்துக் கொண்டு ஆற்றுக்குப் போகையில், காலில் நெருஞ்சி முள் குத்திவிட்டது என்பது தான் முதல் புலவர் சொன்னப் புதிர்ப் பாடலின் பொருள். ஆனால், புலவரான அவர் அதை மிகைப்படுத்தி ஊர் மருத்துவரிடம் சென்று பாம்புக்கடிக்கு மருத்துவம் நாடி வந்ததைப்போலத் தன் புலமையை நுழைத்து, முள் தைத்ததைப் பாடல்வழியே புலப்படுத்தினார்.

முக்கால்                       -    கைத்தடி (அவருக்கு இரண்டுகால் + ஒரு ஊன்றுகோல் = மூன்றுகால்)
மூவிரண்டு                   -      3 × 2 = 6, ஆறு  

(ஆறு என்பதற்கு இன்னொரு பொருள் வழி.  அது பற்றியப் பதிவை இங்கே பார்க்கலாம்)

ஏகு                                     -      போ (ஏகையிலே - போகையிலே)
ஐந்து தலை நாகம்      -    ஐந்து தலை போல ஐந்து முட்களை உடைய நெருஞ்சிமுள்
அக்காலை                      -    அந்தக் காலை

(அல்லது அந்தக் காலை வேளை     என்றும் பொருள் கொள்ளலாம், பெரும்பாலும் நடக்கையில் முள் காலில் தான்  குத்தும், அதனால் கால் என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்க மாட்டார் அந்தப் புலவர் என்பது என் எண்ணம்)


ஆழ்ந்து கடித்ததுவே     -    ஆழமாக குத்தியது.
காண்                                    -   பார் 

அதற்குப் புதிராக மருத்துவர் சொன்ன பதில்:

"நெருஞ்சி முள் குத்தினக் காலை தரையில் தேய்" என்பது தான்.
 
பத்துரதன்                          - தசரதன் (பத்து இரதம் கொண்டவன்)
பத்துரதன் புத்திரன்       - தசரதனின் மகன் இராமன்
புத்திரனின் மித்திரன்    - இராமனின் நண்பன் சுக்ரீவன்
மித்திரனின் சத்துரு      - சுக்ரீவனின் பகைவன் வாலி
சத்ருவின் பத்தினி         - வாலியின் மனைவி தாரை 

தாரை என்பதில் ஒரு காலை எடுத்து விட்டால் தரை என்று ஆகிவிடும்.  காலில் நெருஞ்சி முள் குத்தினால், அந்த முள்ளை எடுப்பதற்குத் தரையிலே முள் குத்தியக் காலைத் தேய், அதாவது முள் குத்திவிட்டால், தரையில் தேய்க்கவேண்டியது தானே, அதற்கு எதற்கு பாம்பு கடித்ததைப் போல் இப்படி மிகைப்படுத்திச் சொல்கிறாய் என்றாராம் அந்தப் புத்திசாலி மருத்துவர்  

நெருஞ்சி முள்

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், வயதாகி, கைத்தடியை ஊன்றி நடந்துப் போகும்போது நெருஞ்சி முள் காலில் குத்திவிட்டால் தரையில தேய்ச்சுட்டு, போய்க்கிட்டே இருங்கன்னு பொருள் :-)

கிராமத்தில நடக்கும்போது நெருஞ்சி முள் காலில் குத்தவது என்பது சாதாரணமாக நடைபெறும் ஒரு விஷயம். அதை குனிஞ்சுக் கூட எடுக்க மாட்டாங்க, தரையில் தேய்ச்சு விட்டுட்டு போய்டுவாங்க. ஆனால் அந்த செயலைப் புலவர்கள் எவ்வளவு சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்.  சில கருத்துகளை நம்மைப் போன்றோர் சொல்வதற்கும், புலவர்கள் சொல்வதற்க்கும் உள்ள வேறுபாடு வியப்பாக இருக்கிறது அல்லவா. 

(சிலர் இதில் பாதி சொற்கள் தமிழ்ச்சொற்களே இல்லையென்று வாதிட வருவார்கள்.  அவர்களுக்கானப் பதிலை, மையத்தில் நின்று மல்லாக்க விழுந்த ஒரு மாபெரும் ஞானி சொல்லியிருக்கிறார் - "பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது" என்று :😀 ) 

இதை போலவே  இன்னும் நிறையப் பாடல்கள் தமிழில் இருக்கின்றன, அவற்றை அடுத்தடுத்தப் பதிவுகளில் பார்க்கலாம்,


நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top