திருச்சிற்றம்பலம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
எங்கு நோக்கினும் சிவ மயமே
எங்கு மெதிலும் அவன் உருவே - சிவ
லிங்கம் காண்கிறேன் எவ் விடமும்
என்றும் காத்திடும் அவன் அருளே!
விடையதன் திமிலில் சிவ லிங்கம்
விளக்கின் ஒளியுனுள் சிவ லிங்கம்
விடையது கிடைத்திடும் பார் எங்கும்
விளக்கிடும் சிவனை ஒவ் வொன்றும்!
மலையைப் பார்த்தால் சிவ லிங்கம் - சிவன்
மேனி நிறமே வான் எங்கும்
கலையும் முகிலிலும் சிவ லிங்கம்
காணும் போதே சிலிர்க்கு மெனதங்கம்!
நாணி கவிழ்ந்தப்பூ வரச மலர்களில்
நான் இன்று கண்டேன் சிவலிங்கம்
நாணல் வளைந்து வணங்கும் பொழுதினில்
காண்கிறேன் அதிலுமோர் சிவலிங்கம்!
பலமரங்களைப் பார்க்கையில் சிவ லிங்கம்
சிலபழங்களைக் காண்கையில் சிவ லிங்கம்
மலருமுன் மொட்டுகள் சிவ லிங்கம் - பசும்
இலைகள் ஒவ்வொன்றும் சிறு லிங்கம்!
வீணையைத் திருப்பினால் சிவ லிங்கம்
ஏனம் கவிழ்த்தால் சிவ லிங்கம்
வானவில் காட்டிடும் சிவ லிங்கம்
வானமே பெரியதோர் சிவ லிங்கம்!
விழுந்திடும் அருவி சிவ லிங்கம் - பொங்கி
எழும்பிடும் ஊற்று சிவ லிங்கம்
எழுந்திடும் அலைகள் சிவ லிங்கம் - அவை
வரைந்திடும் கோலமும் சிவ லிங்கம்!
நெளிந்து ஊரும் நாகம் சிவலிங்கம்
வளைந்து ஓடும் ஆறும் சிவலிங்கம் - கடலில்
ஒளிந் தெழும் சூரியன் சிவலிங்கம் - துன்பம்
தொலைந்திடும் தொழுதிட சிவ லிங்கம்!
சாய்த்து வைத்த வில்லது சிவலிங்கம்
தூக்கிச் சுமக்கும் காவடி சிவலிங்கம்
அஞ்சல் பெட்டியும் எனக்கோர் சிவலிங்கம்
நெஞ்சம் கண்டிடும் எதிலும் சிவலிங்கம்!
கல்லெல்லாம் சுயம்புச் சிவ லிங்கம் - மைல்
கல்லிலும் காண்கிறேன் சிவ லிங்கம்
அல்லும் பகலும் சிவ லிங்கம் - ஆட்டுக்
கல்லிலும் தெரியுதே சிவ லிங்கம்!
வேரிலேப் பழுத்துத் தேனென இனிக்கும்
பார்பலா மரகதச் சிவ லிங்கம்
ஊரிலே உலகிலே காணும் அனைத்திலும்
பார்க்கிறேன் நான் இன்று சிவலிங்கம்!
"கிண்"ணென ஒலித்து மின்னிடும் அந்த
வெண்கல மணியோர் சிவ லிங்கம்
எண்ணிப் பார்க்கிறேன் எண்திசை யெங்கும்
என்விழி காண்பது எல்லாம் சிவலிங்கம்!
உடைத்தத் தேங்காய் இரண்டும் சிவலிங்கம்
முக்கண் உடைய நுங்கு சிவலிங்கம்
வெண் பூசணிக் காய்த்தால் சிவலிங்கம்
என் ஈசனைக் காட்டுமே ஒவ்வொன்றும்!
குகை வாயில் கூட சிவலிங்கம் - சிறு
குன்றின் நிழலும் சிவ லிங்கம்
வகை வகையாய் எத்தனை சிவலிங்கம் - மனதை
வென்றிடும் மொத்தமாய் சிவலிங்கம்!
நகரும் நத்தை யோர் சிவலிங்கம் - விரல்
நகங்கள் பத்துமே சிவலிங்கம்
அகரம் உகரம் மகரம் ஓம்என
பகரும் அட்சர மதிலும் சிவலிங்கம்!
யாவும் பாரிங்கு சிவ லிங்கம்
நாவும் கூடவோர் சிவ லிங்கம்
அமர்ந்தால் நாமும் சிவ லிங்கம்
உணர்ந்தால் எல்லாம் சிவ லிங்கம்!
காணும் இடமெல்லாம் சிவ லிங்கம்
காணும் பொருளெல்லாம் சிவ லிங்கம்
ஊனதை உருக்கிடும் சிவ லிங்கம்
"நான்" அதை அழித்திடும் சிவலிங்கம்!
அயன்மால் அலைந்து திரிந்து அன்று
அடி முடி காணா அதிசயத்தை
அனுதினம் காண்கிறேன் அவனி யெங்கும்
அகத்திலும் புறத்திலும் சிவ லிங்கமென!
அண்டத்தில் இருக்கும் அவ் வருவமே - இப்
பிண்டத்தில் இருப்பதை அறி வோமே
கண்டத்தில் நஞ்சதை நிறுத்திய சிவனை - லிங்கமாய்
கண்டதும் நெஞ்சத்தில் உணர்கிறேன் அவனை!
கண்ணைக் கொடுக்க வைத்தது அன்று
திண்ணன் கண்ட சிவ லிங்கம்
என்னிடம் என்ன இருக்குக் கொடுத்திட
என்னைத் தவிர ஏற்குமா சிவலிங்கம்?

சிவமயத்துடன்
சிறுவடியேன்,
இராம்ஸ் முத்துக்குமரன்.
















