அறம் என்ற இந்த மூன்றெழுத்துச் சொல்லை அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்.
திருவள்ளுவர் திருக்குறளில், அறத்துப்பால் என்று ஒரு பிரிவே வைத்து 38 அதிகாரங்களில், 380 குறட்பாக்களை பாடியுள்ளார். முப்பால்களில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்துள்ளார்.
அறம் செய்ய விரும்பு என்று ஔவைப் பாட்டியும் ஆத்திச்சூடியில் அழகாகப் பாடியுள்ளார். அதாவது அறத்தை விரும்பு என்று சொல்லாமல் அதை செய்ய விரும்பு என்கிறார், அறச்செயல்களைச் செய்யவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார், எதையும் பேச்சோடு விட்டுவிடாமல், செயலிலும் காட்டவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளார்.
இப்படி இலக்கியம் தொட்டு நம் முன்னோர்கள் அனைவரும் 'அறம்' பற்றி ஆயிரமாயிரம் கருத்துகளைச் சொன்னதோடு நில்லாமல், அனுதினமும் அறத்தை செய்து காட்டினார்கள், அறம் என்பது தொன்றுத் தொட்டுத் தொடர வேண்டிய ஒன்று என்பதால், நம்மையும் அறச்செயல்களில் ஈடுபட அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.
அப்படிப்பட்ட அறத்தைப் பற்றி சற்று விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம். இது சற்று நீண்டப் பதிவு என்பதால் பொறுமையாகவும், முழுமையாகவும் படிக்குமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.
சரி, முதலில் அறம் என்றால் என்ன?
அறம் என்றால் என்ன?
இந்தக் கேள்விக்கு விடை மிக மிக எளிது.
பொதுவாகவே அறம் என்றால் உதவி செய்வது என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றோம். உண்மை தான், உதவி செய்வது தான் அறம், ஆனால் உதவி செய்வது மட்டுமே அறம் அல்ல.
நமக்கும் பிறருக்கும் தீங்கு ஏற்படுத்தாமல், செய்கின்ற எல்லா செயல்களுமே அறம் தான். அதாவது, உடலால் மட்டும் அல்ல, மனதாலும் தீங்கு விளைவிக்காத எல்லா செயல்களும் அறம் தான். அறம் ஆங்கிலத்தில் Virtue, Ethics, Righteousness, Morality என பல சொற்களில் அறியப்படுகிறது.
மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்கங்களின் தொகுப்பு தான் அறம் என்று பெரியவர்கள் கூறுவர். ஒரு செயலைச் செய்யும் முன், உங்கள் மனச்சாட்சியை உண்மையாகக் கேட்டுப்பாருங்கள். அது சொல்லிவிடும், நீங்கள் செய்யப்போகும் செயல் அறமா? இல்லையா? என்று. மனிதனை மனிதனாக்குவது அறம் தான், மனிதன் மிருகம் ஆகிவிடாமல் காப்பதும் அறம் தான்.
அறத்தை வடமொழி தர்மம் என்கிறது. அறம் செய்வதால் மற்றவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் அது நன்மை தரும். அதனால் தான் "தர்மம் தலை காக்கும்" என்றார்கள் நம் முன்னோர்கள். அறத்தையே போதிக்கும் நம் ஹிந்து மதம், சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது. நீதி தவறாதது அறம், அதனால் தான் உயர்ந்தவனா, தாழ்ந்தவனா? ஏழையா, பணக்காரனா? நல்லவனா, கெட்டவனா? என எந்த பேதமும் பார்க்காது, நீதியை நிலைநாட்டி கடமையாற்றும் எமனை, எமதர்மராஜா என்று சொல்கிறோம்.
நம் பாரம்பரியத்தின் நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு என்பதாகும், நாற்பொருளின் முதற்பொருள் அறம் தான். . அறத்தின் படி செயல்களைச் செய்து, அதன் மூலம் பொருள் ஈட்டி, இன்பமாக வாழ்ந்தால் தான் வீடு பேறு அடையலாம் என்றார்கள் நம் முன்னோர்கள். இந்தக் கருத்தை ஔவையார், தனிப்பாடல் திரட்டில் மிக அழக்காகச் சொல்லியுள்ளார்:
ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
அறம் என்பது உவப்போடு பிறருக்குக் கொடுத்தல். பொருள் என்பது தீயவழிகளில் இல்லாமல், நன்னெறியால், தன் முயற்சிகளால் தேடிக் கொள்ளுதல். காதல் கொண்ட இருவர் எந்நாளும் தம்முடைய கருத்துகளிலே இணைந்தவராக, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஆதரவுடன் வாழ்ந்து வருதலே இன்பம். பரம்பொருளான சிவபெருமானை நினைவிற்கொண்டு, அறம் பொருள் இன்பமாகிய இவற்றின் பால் கொள்ளும் பற்றினை சிறிதுசிறிதாக விட்டுவிடுவதே வீடு பேறு அடையும் வழி ஆகும். அதுவே நிலையான பேரின்பம் தருவதும் ஆகும் என்று அறிவுத்துகிறார் ஔவைப்பாட்டி.
அறம் என்பது சொல்லிக்கொடுத்து வருவதில்லை, நாம் பிறக்கும் பொழுதே எது அறம் என்று தெரிந்துக்கொண்டு தான் பிறக்கிறோம். அது நம் இரத்தத்திலேயே ஊறி இருக்கின்றது. அதனால் தான் எந்தச் செயல்களை செய்யும் பொழுதும், இது சரியா இல்லையா என்று ஒரு முறையாவது நம்மை அறியாமலேயே எண்ணிப்பார்த்திருப்போம்.
எல்லாவற்றிலும் நல்லது கெட்டது என்று இருக்கலாம். ஆனால் அறத்தில் அப்படி கிடையாது, அறம் என்றாலே நல்லது தான். அதனால் தான் அதனை நல்லறம் என்று சொல்வார்கள். இந்த அறம் என்ற சொல்லில் இருந்து தான், அறிவு, அறிவியல் எல்லாமே பிறந்திருக்க வேண்டும்.
திருவள்ளுவர் அறத்திற்கு இன்னொரு விளக்கம் கொடுக்கிறார், அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கு குணங்களும் இல்லாமல் இருப்பதே அறம் எனப்படும் என்கின்றார் திருவள்ளுவர்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் - (குறள்:35)
இந்த நான்கு குணங்களும் இல்லாதவன் நல்லதை தான் செய்வான் இல்லையா? இது கடினமாக இருந்தால், இதை விட எளிதான வழியை இன்னொரு குறளில் கூறுகிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற. (34)
மனதை தூய்மையாக வைத்துக்கொள் அது தான் அறம் என்று மிகவும் எளிமையான வழியைக் கூறுகிறார் திருவள்ளுவர். மற்றதெல்லாம் வெறும் ஆராவாரமும் ஆடம்பரமும் ஆகும், மனம், வாக்கு, செயல் மூன்றும் தூய்மையாக இருந்துவிட்டால், நாம் செய்யும் எல்லா செயல்களுமே அறம் தான். மனம் தூய்மையாக இருந்தால், சொல்லும் செயலும் தூய்மையாகத் தானே இருக்கும், அதை தான் திருவள்ளுவர் இக்குறளில் வலியுறுத்தியுள்ளார்.
சீத்தலைச் சாத்தனார் இயற்றிய 'மணிமேகலை'யும் அறத்திற்கு இதே போல ஒரு விளக்கம் கொடுக்கின்றது:
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்”.
இந்த மண்ணில் உள்ள உயிர்களுக்கெல்லாம் அடிப்படைத் தேவையான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம். இந்த மூன்று கிடைக்கச் செய்வது தான் அறம் என்கிறது
இவை மட்டுமல்ல, இயற்கையில் காணும் நியதி, ஒழுங்குகளும் அறம் என அறிந்திடவேண்டும். ஆகாய வெளியில் நியதி மாறாமல் கிரகங்கள்,, சூரியமண்டலம் சுழல்கின்றன. பூமியில், வளி (காற்று), தன் இயல்பை மீறுவதில்லை, நெருப்பு தனது சுடும் செயலைச் செய்யத் தவறியதில்லை; நிலமும், நீரும், தத்தம் இயல்பு கெடாமல் ஒழுக்க நியதியில் இருக்கின்றன. விலங்குகள் செடி கொடிகள் என யாவற்றிலும் இயற்கையின் நியதி காணப்படுகிறது. இந்த இயற்கை நியதியும் அறமாகும்.
அதனால் மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையும் அறத்தை தான் கடைப்பிடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மனிதனை விட, இயற்கை தான் அறத்தை முழுமையாக நிலை நாட்டுகிறது, வெட்டியவனுக்கும் நிழல் கொடுக்கிறது மரம். தோண்டியவனையும் விழாமல் தாங்குகிறது நிலம். மாசுப்படுத்தினாலும் சுவாசிக்க வைக்கிறது காற்று, சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தினாலும், தேவை ஏற்படும் பொழுதெல்லாம், வாரி வழங்குகிறது மாரி. இப்படி மனிதன் கெடுதல் செய்தாலும் நன்மை மட்டுமே செய்கிறது இயற்கை.
ஆனால், அறக்குணத்துடன் பிறந்த மனிதர்களில், சிலர் மட்டும் ஏனோ அரக்கக்குணத்திற்கு மாறிவிடுகிறார்கள். ஒன்று மட்டும் உண்மை, எப்படி எல்லாம் உலகம் 'சீரழிந்து’ கொண்டிருந்தாலும், யுக யுகமாக, காலம் காலமாக, உலகை அன்றும், இன்றும், என்றும் தாங்கிப் பிடித்து நிற்பது அறம் மட்டும் தான்.
நியமம்! இயமம்!
சைவத்தில் நியமம் இயமம் என்று இரண்டு உண்டு. செய்யவேண்டியதை செய்தல், செய்யக்கூடாததை செய்யாமலிருத்தல். அவ்வளவு தான் அறம். அதாவது நல்லதை செய்வதும், அல்லதை செய்யாமலிருப்பதும் அறமாகும்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் அவர்கள், அறத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்:
"அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்."
இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள், தமது சொற்பொழிவுகளில் அறத்தைப் பற்றிப் பேசும் பொழுது ஒன்றை அடிக்கடிச் சொல்வார்கள்,
மனிதர்கள், வாழ்க்கையை நல்லபடியாக வாழ்வதற்கு 100 புள்ளிகள் தேவை என்று வைத்துக்கொண்டால், அதில் நியமத்திற்கு 50 புள்ளிகள், இயமத்திற்கு 50 புள்ளிகள்.
நல்லவற்றை செய்தால் 50 புள்ளிகள் கிடைத்து விடும், தீயவற்றை செய்யாமலிருந்தால் 50 புள்ளிகள் கிடைத்துவிடும்.
ஒன்றை செய்ய வேண்டும், ஒன்றை செய்யாமலிருக்க வேண்டும். 100 புள்ளி எடுப்பது எவ்வளவு எளிது பாருங்கள், அறம் மட்டும் செய்தால் போதும், மற்றதை செய்யாமலிருப்பதற்கு 50 புள்ளிகள் கிடைத்துவிடும். அதாவது தீய செயல்களை ஒன்றையும் செய்யாமல், சும்மா இருந்தாலே 50 புள்ளிகள் கிடைத்துவிடும், ஆகமொத்தம் 100 புள்ளிகள் முழுமையாகக் கிடைத்துவிடும். தீயச் செயல்கள் ஒன்றையும் செய்யாவிட்டால், அதற்கு பின் நாம் செய்வதெல்லாமே அறம் மட்டும் தானே.
அற நூல்கள், தீமையிலிருந்து காக்கும் தடுப்பூசிகள். எப்படி சிறுவயதிலேயே தடுப்பூசி போடுகிறோமோ, அதைப் போல் அறத்தையும் சிறுவயதிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்.
அறச்செயல்களை செய்வதற்கு என்று தனியாக எந்த நேரமும் இல்லை, அறம் செய்வதற்கு என்று தனியாக இடமும் இல்லை. நம்மால் இயன்றவறை எப்பொழுதெல்லாம் முடிகின்றதோ அப்பொழுதெல்லாம் தவறாமல் அறம் செய்ய வேண்டும். இதை தான் திருவள்ளுவரும்:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல் (33)
என்று சொல்கிறார்.
அறம் எத்தனை வகை?
இப்படி சிறப்பு வாய்ந்த அறம் எத்தனை வகைப்படும்?
அறம் 32 வகைப்படும் என நம் பண்டையத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
கடுவெளிச் சித்தரின் பாடல் ஒன்றில்
நல்லவர் தம்மைத் தள்ளாதே -அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங் கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.
என்று பாடுகிறார்.
இதில் "நாலெட்டு" என்று அவர் குறிப்பிடுவது 4 X 8 = 32 அறங்களை.
அதாவது, நல்லவர்களை ஒதுக்காதே, நல்ல பெரியோர்களின் உறவைக் காத்துக் கொள்ள வேண்டும், .32 அறங்களில் ஒன்றையேனும் செய்யாமல் இருந்துவிடாதே, தீய செயல்கள் ஒன்றையும் செய்து விடாதே, தவறான கருத்துக்களை, பிறர் மனம் வருந்துபடி எதுவும் கூறிவிடாதே. பொய் பேசுதல், கோள் சொல்லுதல் போன்றவற்றை நீக்க வேண்டும். என்று அறிவுறுத்துகிறார்.
இதே போல் அறம்வளர்த்தநாயகி பதிகத்தில் (அறம்வளர்த்த நாயகி கதை கீழே இருக்கிறது)
உய்யாத நெறிதன்னை ஊர் எங்கும் ஓலமிடும்
பொய் ஆரும் புல்லருக்குப் புரியாத பொற்கொடியே;
கையால் உன் அடி தொழுதேன்; கண்ணுதல் ஓர் கூறு உடையாய்;
ஐஆறோடு ஒன்றொடுஒன்றுஆம் அறம்வளர்த்த நாயகியே.
இங்கே ஐ ஆறோடு ஒன்றொடு ஒன்று என்பது (5x6) + 1 + 1 = 32. இந்த முப்பத்திரண்டு என்பது, 32 அறங்களைக் குறிக்கிறது.
இந்தப் பாடலுக்கானப் பொருள், உய்வு (வாழ்வு) தராத நெறியை (வழி) ஊர் எல்லாம் சத்தமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கும் பொய்மை மிகுந்த ஈனர்களால் உணர்ந்து அறிய முடியாதவளே, பொற்கொடி போன்றவளே! நெற்றிக்கண்ணைக் காட்டும் ஈசனின் ஓர் பங்கு உடையவளே! முப்பத்திரண்டு அறங்களை செய்த நாயகியே! உன் திருவடியைத் தொழுகின்ற, என்னைக் காத்தருள்வாய்! என்பதாகும்.
அதே போல் பெரியபுராணத்தில், (71 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்) 32 அறங்கள் பற்றி சேக்கிழார் குறிப்பிடுகிறார்:
எண்ணரும் பெருவரங்கள் முன் பெற்றங்
கெம்பிராட்டி தம் பிரான் மகிழ்ந்தருள
மண்ணின் மேல் வழிபாடு செய்தருளி
மனையறம் பெருக்குங் கருணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணியத் திருக்காமக்கோட்டத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்
இந்தப் பாடலுக்கான விளக்கம் இதோ... இவ்வாறு எண்ணற்ற பெரு வரங்களைப் பெற்று, அங்கு எம்பெருமாட்டியார் தம் பெருமான் மகிழ்ந்து அருளிட, இம் மண்ணின் மேல் அவரை அங்கு வழிபாடு செய்தருளி, இல்லறம் இனிது பெருக, கருணையினால் உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் பெருக, உற்ற காதலினால், நீடி நிலைத்திருக்கும் தம் வாழ்க்கையைப் புண்ணியம் நிறைந்த திருக்காமக்கோட்டம் (காஞ்சிபுரம்) என்னும் கோயிலில் மேற்கொண்டருளிப் பொலிவுடன், அங்கிருந்து தம் முப்பத்திரண்டு அறங்களையும் நிகழ்த்தி அருளியவள்,.
32 அறங்கள் எவை?
முப்பத்திரண்டு அறங்கள் பற்றி அறப்பளீசுர சதகம் என்ற நூலில் கீழ்காணுமாறு குறிப்பிட்டுள்ளது
பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்
பிள்ளைகள் அருந்திடும் பால், பேசரிய சத்திரம், மடம், ஆவுரிஞ்சுகல்
பெண்போகம், நாவிதன், வணான், மறைமொழிகண் ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு
வாயின்உறை, பிணம்அடக்கல், வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்
வழங்கல், சுண்ணாம்பு தவுதல், சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்
செய்தல், முன்னூலின் மணம், திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமயருக்குண்டி,
தேவராலாயம், அவுடதம்; அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட்டறங்களும்முன்
அன்னைசெயல்; அருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதே போல் முப்பத்திரண்டு அறங்கள் எவை எவை என திவாகர நிகண்டு கூறும் பட்டியல்.
"ஆதுலர் சாலை, ஓதுவார்க்கு உணவு, அறு சமயத்தோர்க்கு உணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச்சோறு, ஐயம், தின்பண்டம், மகச்சோறு, மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகப்பால், அறவைப் பிணஞ்சுடுதல், அறவைத் தூரியம்; வண்ணார், நாவிதர், வதுவை, பூணூல், நோய் மருந்து, கண்ணாடி, காதோலை, கண்மருந்து, தலைக்கெண்ணெய், பெண்போகம், சுண்ணம், பிறர்துயர் காத்தல், தண்ணீ ர்ப் பந்தர், மடம், தடாகம், கா, ஆவுரிஞ்சி நடுதறி, ஏறு விடுத்தல், விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல், இச்செயல் முப்பத்திரண்டு அறம் என்ப."
உவமான சங்ரகம் என்ற நூலில் 32 அறங்கள் செய்யுள் வடிவில் உள்ளன.
வண்ணான் புன் நாவிதன் காதோலை சோலை மடம் தடம் வெண்
சுண்ணாம்பு அறவை பிணம் சுடல் தூரியம் சோறு அளித்தல்
கண்ணாடி ஆவிற்கு உரிஞ்சு கல் வயுறைகள் மருந்து
தண்ணீர்ப் பந்தல் தலைக்கு எண்ணெய் போகம் தரல் ஐயமே -- 48
மேதகும் ஆதுலர்க்குச் சாலை ஏறுவித்தல் மறை
ஓதுவார்க்கு உண்டி விலங்கிற்கு உணவோடு உயர் பிணிநோய்க்கு
ஈதல் மருந்து சிறைச்சோறு அளித்தல் இயல் பிறரின்
மாது உயிர் காத்தல் நல் அந்நியர் தானம் வழங்கலுமே -- 49
கற்ற அறு சமயத்தார்க்கு உணவு கருதும் விலை
உற்றது அளித்து உயிர் மீட்டல் சிறார்க்கு உதவல் பால்
மற்று மகப் பெறுவித்தல் சிறாரை வளர்த்தல் எனப்
பெற்ற இவற்றினை எண் நான்கு அறம் எனப் பேசுவரே -- 50
இலக்கிய நூல்களுக்கிடையே இந்தப் பட்டியலில் சிறு சிறு மாறுபாடுகளும் காணப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை தான். எல்லா உதவியும் அறம் தானே.
32 வகை அறங்கள்
இந்த 32 அறங்கள் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.
1) ஆதுலர்க்குச் சாலை - ஏழைகளும் ஆதரவற்றவர்களும் தங்கி வாழ்வதற்கு விடுதி அமைத்துக் கொடுத்தல். நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு கட்டி தந்து அன்பாகக் கவனித்தல். ஆதுலர் என்றால் உணவின்றி வறுமையில் வாடும் வறியவர்கள் மற்றும் நோயுற்றுவர்கள். அவர்கள் பசியாறும்படி அன்னச்சத்திரம் கட்டிப் பராமரித்தல்.. முப்பத்திரண்டு அறங்களில் இதுவே முதல் அறமாகக் கூறப்பட்டுள்ளது.
உணவுகொடுப்பவர்கள் உயிர் கொடுப்பவர்கள் என்று மணிமேகலை பாராட்டுகிறது:
மண் திணி ஞாலத்து
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே
அதே போல் புறநானூறு 18ஆம் பாடலில், புலவர் குடபுலவியனாரும்,
'நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
என்று பாடியுள்ளார். பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பது தலையாய அறம் ஆகும்.
2) ஓதுவார்க்கு உணவு - நன்னெறிகளைப் போதிப்பவர்களின் பசியாற்றுதல். மனிதர்களை நல் வழிப்படுத்த, மறைகளை கற்று தருபவர்களுக்கு உணவு அளித்தல்.
3) அறுசமயத்தோர்க்கு உண்டி - சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்குதல். (ஆறு சமயங்களாவன - சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்). அந்தக் காலத்தில் நம் பாரத தேசத்தில் இருந்த சமயங்கள் ஆறு. இவை அனைத்துமே சனாதன தர்மத்தை சார்ந்தவை, இவையாறும் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று ஒரே சமயமாக இருக்கிறது. ஆனால் தற்காலத்தில், பல மதங்கள் இருக்கின்றன. அதனால் அனைவருக்கும் உணவு என்று தான் இதை நாம் பொருள் கொள்ள வேண்டும்.
4) பசுவிற்கு வாயுரை - தாய்ப்பாலுக்குப் பிறகு மனிதனுக்குப் பால் அதிகம் தருவது பசு தான். பசுக்களைத் தெய்வமாகப் பாவித்துப், பசுவிற்கு உணவு (புல், வைக்கோல், பழங்கள், கீரைகள், புண்ணாக்கு போன்ற தீவனம்) அளித்தல். திருமந்திரத்தில் திருமூலரும் இதைப் பாடியுள்ளார். அந்தப் பாடல் கீழே இருக்கிறது.
5) சிறைச்சோறு - சிறைக் கைதிகளுக்கு உணவளித்தல்.
6) ஐயம் - இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் இயன்ற உதவிகளைச் செய்தல். வீடு தேடி வரும் ஏழைகளுக்குப் பிச்சை இடுதல், தான தர்மங்கள் செய்தல்.
7) தின்பண்டம் நல்கல் - விழாக் காலங்களில் இனிப்பு வகை உணவுகள், சிற்றுண்டிகள் வழங்குதல். பயணம் செய்யும் வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசி தீர்த்தல். அந்தக் காலத்தில், இப்பொழுது போல தெருவெங்கும் உணவகங்கள் கிடையாது. அதனால் பயணம் செய்பவர்கள் தங்கி இளைப்பாற அனைத்து வீடுகளிலும், திண்ணைகள் இருக்கும். வீட்டுத் திண்ணைகளில் தங்குபவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.
8) அறவைச் சோறு/மகச் சோறு - அறவை என்றால் ஆதரவற்ற நிலை. ஆதரவற்றோருக்கு உணவளித்தல். திக்கற்ற சிறு குழந்தைகளுக்குச் சோறு ஊட்டிப் பசியாற்றுதல்.
இந்த 32 அறங்களில் நான்கில் ஒரு பங்கு உணவு கொடுப்பதை தான் சொல்கிறது. அறங்களிலே இது தான் பெரிய அறமாகக் கருதப்படுகிறது. இதனால் தான் மகாகவி பாரதியார், தனிமனிதன் ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சீறினார்.
9) மகப்பெறுவித்தல் - பெண்களின் பிரசவக் காலத்தில், பிரசவம் பார்த்தல், உடனிருந்து தேவையான உதவிகளைச் செய்தல்.
10) மகவு வளர்த்தல் - குழந்தைகளைப் பராமரித்து அவர்களை வளர்க்க உதவுதல். அனாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்தல்
11) மகப்பால் வார்த்தல் - தாயையோ, தாய்ப் பாலையோ இழந்துவிட்ட குழந்தைக்கு மற்றொரு தாயின் மூலம் தாய்ப்பாலை ஊட்டச்செய்வது இவ்வறம். தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கும் உணவுக்கு வழியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கும் பாலளித்தல்.
ஏழ்மை காரணமாகத் தாய்க்குப் போதிய உணவு உண்ணக் கிடைக்காததால் தாயிடம் தாய்ப்பால் வற்றி, பால் கொடுக்கும் மார்பங்களின் துவாரம் அடைபட்டுப் போனதை அறியாத குழந்தைகள், பாலுக்காக ஏங்கித் தாயின் முகம் பார்த்து அழுகிறது. அத்தாயும் தன் சேயின் முகம் பார்த்து அழுகின்றாள். இத்துயரக் காட்சியை
“இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை”
(இல்லி-ஓட்டை, துவாரம்) என்ற ஒரு வரியின் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது சங்க இலக்கியம். இது புறநானூறு 164-வது பாடலில் இடம்பெற்றுள்ள வரியாகும். பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். பால்சுரக்கும் துளைகள் அடைபட்டுப் போய், பால் இல்லாமல், வண்டு சுருண்டது போலத் தளர்ந்து வற்றிய தாயின் முலையை, குழந்தை மீண்டும் மீண்டும் பால் எதிர்பார்த்துச் சுவைத்துக் கதறி அழுவதைக் குறிக்கிறது. அதைக் கண்டு மனம் உருகிய நிலையை வள்ளல் குமணனுக்கு சொல்வது இந்தப் பாடல்.
12) .அறவைப் பிணஞ்சுடல் - வாரிசற்றோர், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்டோரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம்/அடக்கம் செய்தல். இந்த செயல், செய்பவர்களுக்கு, அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும் என நம்பப்படுகிறது.
13) .அறவைத் தூரியம்/அழிந்தோரை நிறுத்துதல் - ஆதரவற்றோர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல். புயல், பூகம்பம், ஆழிப் பேரலை போன்ற இயற்கைச்சீற்றங்களின் போது உற்றாரையும் உடைமைகளையும் முற்றும் இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆடைக் கொடுத்து உதவுதல்.
14) .சுண்ணம் - கோயில்களில் கோலம் போடுவதற்காக பச்சரிசி மாவு கொடுத்தல், கோயில் மதில் சுவர்களில் அடிக்க சுண்ணாம்பு, காவி அளித்தல், தாம்பூலம் போடுவதற்கு சுண்ணாம்பு கொடுத்தல்.
15) நோய்மருந்து - நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுதல்.
16) வண்ணார் - ஏழை எளியோர்கள், ஆதரவற்றோர்கள், பிணியாளர்களின் துணி துவைக்க உதவுதல். அவர்கள்
ஆடைகளை வெளுத்துக் கொடுத்து உதவுதல். அதே போல் வறுமை நிலையில் இருக்கும் துணி வெளுப்பவர்களுக்கு உதவுதல். அவர்களுக்கு தரவேண்டிய கூலியை உடனே தருதல்.
பெரும்பாலும் ஒருவரின் துணிகளில்தான், அவர்களின் கர்ம வினைகள் அதிகமாகப் படிகின்றன. எனவே, அதைத் துவைத்துச் சலவை செய்யும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் காலம் தாழ்த்தாமல் உடனே கொடுத்துவிட வேண்டும். மற்றும் துணி துவைப்பவர்களுக்குத் துணி துவைப்பதற்கான கல்லினை அமைத்துக் கொடுத்தல், தண்ணீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவையும் அடங்கும்.
17) நாவிதர் - ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுதல், அதே போல் வறுமை நிலையிலிருக்கும் முடிதிருத்துபவர்களுக்கு உதவுதல். அவர்களின் கூலியையும் உடனே கொடுத்தல். சில இடங்களில் ஏழ்மையான நிலையில் நாவிதர்கள் இருப்பார்கள். அவர்கள் வேலை செய்வதற்குத் தேவையான பொருட்களை அளித்தலும் இதில் அடங்கும்.
18) கண்ணாடி - ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்திச் சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல்.
19) காதோலை - பெண்கள் காதணி இல்லாது இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல். ஏழைப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு, வளையல், கண் மை, தாலிச் சரடு, திருநீறு போன்ற மங்கலப் பொருட்களைக் கொடுத்து உதவுதல்.
20) கண்மருந்து - கண் சிகிச்சை அளித்தல். இலவசக் கண் மருத்துவ முகாம்களை நடத்துதல் அல்லது அவற்றை நடத்தத் தேவையான உதவிகளைச் செய்தல்.
21) தலைக்கு எண்ணெய் - எண்ணெய் பூசாது காய்ந்த தலையோடும், பரட்டைத் தலையோடும் இருக்கும் ஏழை எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும் தலைக்கு எண்ணெய் வாங்கித் தந்து உதவுதல்.
22) பெண் போகம் - தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லாத ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்துத் தந்து அவர்களது காம நோய்த் தணிக்க உதவுதல்.
23) பிறர் துயர் தீர்த்தல் - காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு, வாழ்க்கையில் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்து உதவுதல். அவர்களின் குறைகளைக் கேட்டு ஆலோசனை வழங்குதல்.
24) தண்ணீர் பந்தல் - வெயிலில் வாடி, தாகத்தால் தவிப்பவர்களுக்குத் தண்ணீர் அளித்து உதவுதல். இப்போது கூட பல இடங்களில் கோடைக்காலத்தில், தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை சில நல்ல உள்ளங்கள் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
25) மடம் - வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைத்தல். வழிப்போக்கர்கள், வறியோர்கள் இலவசமாகத் தங்கிச்செல்ல விடுதி அமைத்தல்.
ஆன்மீகத்தை நாடும் மக்களுக்கு, ஆன்மீகத்தைப் போதிக்கவும், அவர்களின் பசியை ஆற்றவும் மடங்களை நிறுவுதல். கோயில்களில் நந்தவனம் அமைத்துக் கொடுத்தல். மற்றும் அதைச் சுத்தம் செய்தல். நிழல் தரும் மரங்கள் அமைத்துத் தங்கி இளைப்பாற உதவுதல். இதை உழவாரப்பணி என்றும் சொல்வார்கள். பல கோவில்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. அவற்றை மீண்டும் பொலிவுடன் கொண்டு வரச் செய்தல். சிதிலம் அடைந்த நிலையில் இருக்கும் மடங்களைச் சீரமைத்தல்.
26) தடம் - சாலையின் இருமருங்கிலும் நிழல் மற்றும் கனி தரும் மரங்கள் அமைத்தல். குடிநீர்க் குளங்களுடனும் கூடிய சாலைகளை அமைத்தல். வழிப்போக்கர்கள், வறியோர்கள் நீர் அருந்தி இளைப்பாறக் குளம் வெட்டுதல், அவற்றைப் பராமரித்தல்.
அந்தக் காலத்தில், சாலை மார்க்கமாக நடந்து செல்பவர்கள், தங்கள் சுமைகளை இறக்கி வைக்க சுமைதாங்கி கல் வைத்திருப்பார்கள். தலையில் பாரத்தை சுமந்து செல்பவர்கள், அதை இறக்கி வைக்க, பல சமயங்களில், இன்னொருவரின் உதவி தேவைப்படும். அப்படி யாரும் இல்லாத நேரத்தில், அவர்கள், தங்கள் தலையிலிருந்து சுமைதாங்கி கற்களில் இறக்கி வைத்து இளைப்பாறிச் செல்வார்கள். நாகரிக வளர்ச்சியினால், இன்று அத்தகைய அறச்சின்னங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.
27) சோலை - நிழல் தரும் மரங்கள், சோலைகள் அமைத்து பயணம் செய்யும் மக்கள் தங்கி இளைப்பாறிச் செல்ல உதவுதல்.
28) ஆவுறுஞ்சு தறி - பசுக்கள் மேயும் இடங்களிலும், பசுக் கொட்டில்களிலும் அவை தங்கள் உடலைத் தேய்த்துக்கொள்ள உராய்ந்து கொள்ளும் கல் தூண்களை நிறுவுதல். கல் அல்லது மரக்கட்டை நடுதல். பசுக்களுக்கும் நம்மைப் போலவே அவற்றின் உடம்பில் தினவு ஏற்படும். ஊர்தல் என்னும் அத்துன்பத்தைச் சொறிந்துவிட்டு ஆற்றிக்கொள்ள அவற்றுக்குக் கைகள் இல்லை. அதனால் அவை அத்துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகத் தம் உடம்பை உரசியும் தேய்த்தும் தீர்த்துக் கொள்ளும் வகையில் மேய்ச்சல் வெளிகளிலும், கிராமச்சாலை ஓரங்களிலும், ஆங்காங்கே நடப்படும் ஒற்றைக் கருங்கல் தூண் அல்லது மரக்குற்றியை (குற்றி- மரக்கட்டை) நடுதல்.
29) ஏறு விடுத்தல் - பசுக்களைச் சினைப்படுத்த தரமான காளைகளைக் கொடுத்து உதவுதல். பசு வம்ச விருத்திக்காக ஆலயங்களுக்குக் காளை மாடு தானம் அளித்தல். உழவர்களின் எருதுகளுக்குக் காளை பூஜை செய்தல்.
30) விலங்கிற்கு உணவு - பல்வேறு விலங்கினங்களும் பசியாற உணவளித்தல்.
31) கன்னிகா தானம் - ஏழைப் பெண்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் திருமணம் நடக்க உதவுதல்; திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்குத் திருமணம் செய்து வைத்து உதவுதல்.
32) விலை கொடுத்து உயிர் காத்தல் - கொலை செய்யப்படுவதற்காகவும், பலியிடப்படுவதற்காகவும் அழைத்துச் செல்லப்படும் உயிர்களை விலைக்கு வாங்கி அவற்றை இறுதிவரை பாதுகாத்தல். பால் வற்றிய பசு மாடுகளைக் கொல்லாமல் பசு வதையைத் தடுக்க கோசாலைகளில் சேர்த்தல்.
கொல்லுவதற்குக் கொண்டுசெல்லப்படும் சிற்றுயிர்களை விலை கொடுத்து வாங்கி அவற்றைச் சுதந்திரமாக வாழ் அல்லது பறக்கவிடுதலான அறம். இதனைச் செய்யுமுன் ஒன்றை யோசித்துச்செய்ய வேண்டும். ஒருவன் கொல்வதற்காகக் கொண்டுசெல்லும் ஆடு, மாடு, கோழிகளை விலை கொடுத்து வாங்கிச் சுதந்திரமாய்ப் போக விட்டாலும் அவற்றை மற்றொருவன் மீண்டும் பிடித்துக் கொல்வதற்காகக் கொண்டு செல்லக்கூடும். அதனால், அதனை நம்மால் பராமரிக்க முடியாது என்றால், பல ஊர்களிலும், கோவில்களிலும் விலங்குகளை பராமரிக்க வைத்திருக்கின்ற கோசாலைகளில் கொண்டு விட்டு விடலாம். அதே போல், நிறையக் குருவிகள், கிளிகள், புறாக்கள், காடை கௌதாரிகள் என பலவகைப் பறவைகளைப் பிடித்துக் கொண்டு வருபவர்களிமிருந்து விலை கொடுத்து வாங்கி அவற்றைச் சுதந்திரமாகப் பறக்க விடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரவல்லதான அறச்செயல் ஆகும். இதுவே முப்பத்திரண்டாவது அறமாகக் குறிப்பிடப்படுகிறது.
இப்படியாகப்பட்ட 32 அறங்களில், எதுவுமே செய்ய இயலவில்லை என்றாலும் பராவாயில்லை, பிறரிடம் பேசும் பொழுதுதாவது, இனிய சொற்களையே பேசுங்கள். அதுவும் கூட ஒரு அறம் தான் என்கிறார் திருமூல நாயனார்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
- திருமந்திரம்
கடவுளுக்கு பூசை செய்ய பெரிதாக மெனக்கெட வேண்டாம், மரத்தில் கிடைக்கும் இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யலாம். பசுவிற்கு உணவு கொடுக்கலாம். நாம் உண்ணும் பொழுது உணவில்லாமல் வாடுபவர்களுக்கு ஒரு கைப்பிடி உணவு வழங்கலாம், இதில் எதுவும் முடியவில்லையா, இனிய சொற்களையாவது கூறுங்கள். அது எல்லோராலும் செய்யக்கூடிய எளிமையான அறம் என்கிறார் திருமூலர்.
அதே போல் அறம் செய்வதை தள்ளிப் போடக்கூடாது. நம் முன்னோர்கள், "வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது" என்று சொல்லியிருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கு விளக்கம், அறம் செய்வதை விளம்பரப் படுத்தக்கூடாது என்பது தான். ஆனால் அதற்கு இன்னொரு விளக்கமும் இருக்கிறது.
அதாவது, வலது கையில் உள்ளதை இடது கைக்கு மாற்றலாம் என்று எண்ணும் நேரத்தில் கூட மனமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் நல்லது செய்ய எண்ணியவுடன் அதை உடனே செய்துவிட வேண்டும்.
திருவள்ளுவரும் இதையே தான் வலியுறுத்துகிறார்.
"அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாதத் துணை" (36)
முதுமை வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று நினைக்காமல் இளமைக் காலத்திலேயே நாம் அறங்கள் செய்துவிடவேண்டும்; அப்படி இளமையிலேயே செய்கிற அறச் செயல்கள் தான் நமக்கு முதுமையில் உற்ற துணையாக வந்து காக்கும். நாம் மறைந்தப் பின்னும் மறையாது நின்று புகழ் தரும்..
அறம் தண்டிக்கும்
அறம் ஒரு கண்ணாடி போல. நாம் எதை செய்கிறோமோ, அதை தான் அறமும் செய்யும், நல்லது செய்தவர்களுக்கு அறம் நன்மை செய்யும், தீமை செய்தவர்களுக்கு அறம் தண்டனை கொடுக்கும். இதை தான் நம் முன்னோர்கள் "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்று கூறினார்கள். இங்கு வினை என்பது நல்வினை அதாவது அறச்செயல்களையும், தினை என்பது தீய வினைகளையும் குறிக்கிறது.
திருவள்ளுவரும்,
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (319)
என்கிறார். செய்த தவறுக்கு, தீயச்செயல்களுக்கு, நிச்சயம் தண்டனை கிடைத்தே தீரும். திருவள்ளுவர் சொன்னது போல், அன்றே கிடைக்காமால் போனாலும், கண்டிப்பாக ஒரு நாள் அந்த தீவினைக்கான தண்டனை கிடைத்தே தீரும். அதை தான் நம் பெரியோர்கள், "அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்" என்று சொன்னார்கள். அறத்திற்கு இன்னொரு பெயர் எமன், அதாவது தெய்வம் ஆகும்.
"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்" என்கிறது சிலப்பதிகாரம். தவறு செய்யும் ஆட்சியாளர்களை கொன்று போடும் வல்லமை உடையது அறம், என்கிறார் இளங்கோவடிகள்.
அரைசியல்: அரசியல், ஆட்சி செய்தல் அல்லது நாட்டை முறைப்படி வழிநடத்துதல்.
பிழைத்தோர்க்கு: தவறு இழைத்தவர்களுக்கு, நீதி தவறியவர்களுக்கு.
அறம்: தர்மம், நேர்மை மற்றும் நீதி.
கூற்றாகும்: எமனாகித் தண்டனையைத் தரும்.
மன்னராட்சியில் மட்டுமல்ல, மக்களாட்சியிலும், முறையற்ற ஆட்சி செய்பவர்களை அறம் தண்டிக்கும். நாம் இப்படிக்கூட இதைப் புரிந்துக்கொள்ளலாம், அரசியலில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி ஊழல் செய்து பிழைப்பவர்களுக்கு, அவர்கள் மறந்துவிட்ட அறம், தக்க நேரத்தில் எமனாக வந்து தண்டித்து தன்னை யாரென்று காட்டிவிடும்.
அறம் வளர்த்த நாயகி
அறம் பற்றிய புராணக் கதை -
ஒருமுறை, சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பார்வதி தேவி தன் கரங்களால் மூடியதால் உலகம் இருண்டது. சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்தை வழக்கம் போல் செயல்பட வைத்தார். விளையாட்டாகச் செய்தாலும் அது வினையானதால், பார்வதி தேவி பூவுலகில் பிறந்து தான் செய்த வினைக்காகப் பரிகாரம் செய்ய நேரிட்டது. புவியில் பிறந்து, யாகம், தவம் செய்து, இரு நாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களைச் செய்து பின் தன்னை அடையுமாறு சிவன் அருளினார்.
அவ்வாறே பார்வதி தேவியும், பூவுலகில் பிறந்து திருவண்ணாமலை, மாங்காடு, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் தங்கி தவம் செய்து, யாகங்கள் செய்து, முப்பத்திரண்டு அறங்களை மேற்கொண்டு பின் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. 32 அறங்களை செய்ததனால் 'அறம் வளர்த்த நாயகி' என்று பார்வதி தேவி போற்றப்பட்டார்.
திருவையாறு மற்றும் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தாமரங்கோட்டை தலங்களில், அம்பிகையின் திருப்பெயர் அறம் வளர்த்த நாயகி ஆகும்.
அபிராமி பட்டரின் பாடல் ஒன்றில்:
ஐஆறோடு ஒன்றொடுஒன்றுஆம் அறம்வளர்த்த நாயகியே
மைஆறும் கண்டத்தன் மாதவத்தோன் நெஞ்சில் வாழ்பவளே
கைஆறும் ஏந்திக் கடப்பஞ்சேர் காடவத்தே திரிவாய்
வையாறும் ஏந்தி வராதவமே என்னை வாட்டுவதே
ஐஆறோடு ஒன்றொடுஒன்று (32 அறங்கள்): ஐந்தும் ஆறும் முப்பது (5 × 6 = 30). அதனுடன் ஒன்று, மீண்டும் ஒன்று கூட்டினால் முப்பத்திரண்டு ஆகும். இறைவன் கொடுத்த இரண்டு நாழி நெல்லைக் கொண்டு, உலக உயிர்கள் உய்ய 32 வகையான அறங்களை (தர்மங்களை) வளர்த்த நாயகி அபிராமி அம்மை ஆவாள்.. மைஆறும் கண்டத்தன் - நீலகண்டனான சிவபெருமானின் தவம் பொருந்திய நெஞ்சில் வாழ்பவள் அவள், .முப்பத்திரண்டு அறங்களையும் செய்த உலகத் தாயான நீ, கைகளில் மண்டையோட்டை ஏந்தி காடுகளில் திரியும் சிவபெருமானுடன் இருக்கிறாய். அப்படிப்பட்ட நீ, என்னை இந்த உலகியல் துன்பங்களில் வீழ்ந்து, வீணாக வாடவிடக் கூடாது என்று அபிராமி பட்டர் அன்னையிடம் உருகி வேண்டுகிறார்.
அறம் புரிவோம்
நம் தமிழ் இலக்கியங்கள் வீரத்தை மட்டும் பாடவில்லை, அறத்தையும் பாடியிருக்கிறது, நமது முன்னோர்கள் வீர்த்தில் மட்டும் சிறந்தவர்கள் இல்லை, அறத்திலும் சிறந்தவர்கள். அறப்படி வாழ்ந்தும் காட்டியவர்கள்.
மறத்தமிழர் என்று நம்மைப்பற்றி பெருமையாகக் கூறிக்கொள்கிறோம். நாம் மறத்தமிழர்கள் மட்டுமல்ல, அறத்தமிழர்களும் கூட. அதனால் இனி அறத்தமிழர்கள் என்றும் நம்மை நாம் பெருமையாகக் கூறிக்கொண்டு, தவறாது அறம் செய்வோம்,
இந்த முப்பத்திரண்டு அறங்களையும் செய்ய முடியவில்லை என்றாலும், முடிந்த அளவு அறங்களை செய்வோம்.
அறம் என்பது ஓர் அற்புதம். இனி நாமும் பல அற்புதங்கள் செய்வோம்.
“அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு” - (32)
அறம் பற்றிய கருத்துகளைப் பிறர் அறிய செய்வதும் அறம் என்று எண்ணியே இந்த அறப் பதிவு.
அறம்,
அது பாரத மக்களின் வாழ்க்கைத் திறம்.
உதவு வேண்டும் என்ற நெஞ்சின் உரம்
கருணையுள்ள மனித மனங்களின் வெண்மை நிறம்.
பிறருக்கு உதவ வாழ்க்கை கொடுத்த உண்மை வரம்.
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.






