நான் சிறுவயதில் கேட்ட கதை இது. தமிழறிஞர் ஒருவர் வாழ்வில் நடந்த சம்பவம். அந்த தமிழறிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்று நினைக்கிறேன். ஆனால் சரியாக நினைவில் இல்லை, அதனால் தமிழறிஞர் என்றே குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்திருந்தால், கீழே பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
நூறு ரூபாய்
ஒரு முறை தமிழறிஞர் ஒருவர், தன் நண்பரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியிருந்தார். சில நாட்கள் கழித்து தமிழறிஞர் வீடு இருக்கும் வழியாக நடந்து சென்ற நண்பர், வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த தமிழறிஞரைக் கண்டவுடன், தாம் கொடுத்தப் பணத்தை திருப்பிப் பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணி, தமிழறிஞர் அமர்ந்திருந்த திண்ணையில் வந்து அமர்ந்து, தம்மிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருமாறு கேட்டார்.
தமிழறிஞரும், அடடா மறந்தே போய் விட்டேன், இருநூறு ரூபாய் தருகிறேன் என்றார். நண்பருக்கோ நாம் 100 ரூபாய் தானே கொடுத்தோம், ஆனால் தமிழறிஞரோ 200 ரூபாய் தருவதாக சொல்கிறாரே, பெற்ற தொகையை மறந்துவிட்டார் போல், அதனால் இன்னும் கூடுதலாக கேட்டுப் பார்ப்போமே என நினைத்து, 300 என்றார்.
தமிழறிஞர், சரி 300 தருகிறேன் என்றார்.
மகிழ்ந்த நண்பர், இன்னும் கூடுதலாக கேட்கலாம் போல் இருக்கிறதே என்று நினைத்து.. 400 என்றார்.
தமிழறிஞர் தயக்கமே இல்லாமல், சரி 400 தருகிறேன் என்றார்.
அடடா இன்று நமக்கு நல்ல வரவு தான் என்று எண்ணிய நண்பர், இல்லை 500 என்றார்.
தமிழறிஞரும் சற்றும் தாமதிக்காமல் 500 தருகிறேன் என்றார்.
தமிழறிஞர் இவ்வளவு ஏமாளியாக இருக்கிறாரே, இன்னும் அதிகமாகக் கேட்டுப்பார்க்கலாம் என்று எண்ணிய நண்பர், 600 என்றார்.
தமிழறிஞரும் உடனே, 600 தருகிறேன் என்றார்.
நமக்கு இன்று நல்ல அதிர்ஷ்டம் தான் அடிக்கிறது, இன்னும் அதிகமாக கேட்கலாம் என்று பேராசைக் கொண்ட நண்பர், 700 என்றார்.
நண்பரைப் பார்த்து நகைத்துக்கொண்டே, 700 தருகிறேன் என்றார் தமிழறிஞர்.
நண்பருக்கு தலைகால் புரியவில்லை, இன்னும் அதிகம் கேட்டுப்பார்க்கலாம் என்று எண்ணி, 800 என்றார்.
தமிழறிஞரும். பேராசைப் பிடித்த தன் நண்பனை சற்று வருத்தமாக பார்த்துக்கொண்டு, 800 தருகிறேன் என்று கூறினார்.
இப்பொழுது, நண்பர் யோசிக்கத் தொடங்கினார், 800 க்கு மேல் போனால், தொள்ளாயிரம் என்று வந்துவிடும், அதை சொன்னால். தமிழறிஞர் சுதாரித்துக் கொள்ளக்கூடும், 100 கிடைக்க வேண்டிய இடத்தில் 800 கிடைக்கப்போகிறது. ஒருவேளை தமிழறிஞர் சுதாரித்துக்கொண்டால், இந்த 800 கிடைக்காமல் போய்விடும். அதனால் இத்தோடு நிறுத்திக்கொள்வோம் என்று அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் தமிழறிஞரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
இதற்கு மேல் நண்பர் ஒன்றும் கேட்காததால், பணத்தை எடுத்துவருவதற்காக வீட்டுக்குள் சென்றார் தமிழறிஞர், 800 கிடைக்கப்போகிற மகிழ்ச்சியில் தமிழறிஞரை எதிர்பார்த்து காத்திருந்தார் நண்பர். சிறிது நேரம் கழித்து திரும்பிவந்த, தமிழறிஞர், தன் நண்பனிடம் 100 ரூபாய் பணத்தைக் கொடுத்தார்,
அதிர்ந்து போன நண்பர், 800 ரூபாய் தருகிறேன் என்று அல்லவா சொன்னீர்கள், இப்பொழுது வெறும் 100 ரூபாயைத் தருகிறீர்களே என்று கேடார்.
அதற்கு தமிழறிஞர், "ஆமாம் என் நூறு ரூபாயை தருகிறேன் என்று தான் சொன்னேன்" என்றார். (எண்ணூறு அல்ல என் நூறு என்ற பொருளில்)
ஏமாந்து போன நண்பர், 800 போனால் பராவியில்லை 700 தருகிறேன் என்று சொன்னார் அல்லவா, அதை கேட்கலாம் என்று எண்ணி, "700 தருகிறேன என்றீர்களே" என்றார்.
அதற்கு தமிழறிஞர், "ஆம், எழு, நூறு தருகிறேன் என்று சொன்னேன்" என்றார். (அமர்ந்திருப்பவரை எழு, நூறு தருகிறேன் என்ற பொருளில்)
இப்படி ஏமாந்துவிட்டோமே, சரி 600 தருகிறேன் என்றீர்களே...
ஆமாம், "அறு நூறு தருகிறேன் என்றேன்" என்றார். (அறு என்றால், ஆறு தவிர முடிக்க, தீர்க்க என்று பல பொருள் உள்ளது. இங்கு கடனைத் தீர்க்க நூறு தருகிறேன் என்ற பொருளில் தமிழறிஞர் கூறியுள்ளார்)
500 தருகிறேன் என்று சொன்னீர்களே?
ஆமாம், "ஐ... நூறு தருகிறேன்" என்று சொன்னேன். (வாங்கிய கடனைத் தீர்க்கப்போகிற மகிழ்ச்சியில் "ஐ" என்று ஆனந்தப்பட்டு நூறு தருகிறேன் என்ற பொருளில் சொன்னது)
400 தருகிறேன் என்று சொன்னது?
நான் நூறு ரூபாய் தருகிறேன் என்று தான் சொன்னேன்.
அப்ப 300 என்று சொன்னது?
முன் உம்மிடம் வாங்கிய நூறு என்பதை குறிப்பதற்காக, முன் நூறு வாங்கியதை தருகிறேன் என்று சொன்னேன்.
இப்படி இந்த தமிழறிஞரிடம் அநியாயமாக (?!) ஏமாந்து விட்டோமே, 200 கிடைத்தாலும் நமக்கு இலாபம் தான், அதனால்,
"200 தருகிறேன் என்று சொன்னீர்களே, அதையாவது தாருங்கள்" என்று சோர்ந்து போய் கேட்டார் நண்பர்.
அசராத தமிழறிஞர், "இரு நூறு தருகிறேன்" என்று தான் சொன்னேன்" என்றார். (அதாவது, இங்கே அமர்ந்து இரு, நூறு ரூபாய் தருகிறேன் என்ற பொருளில்)
பேராசை பட்டது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்த நண்பர். தன் தவற்றை மன்னிக்க சொல்லி, தயவு செய்து, தம்மிடம் வாங்கிய 100 ரூபாயை மட்டும் தாருங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டு சென்றார்.
இக்கதை உணர்த்தும் கருத்துகள்:
1) பேராசை கொள்ளக்கூடாது
2) ஏமாற்ற நினைக்கக் கூடாது
3) அறிஞர்களோடு கவனமாக/அளவோடு வாதாடவேண்டும். இல்லையென்றால் நாம் அவமானப் பட நேரிடும்.
பல நூலகளைக் கற்று அறியாத ஒருவர், கற்றறிந்த அறிஞர்கள் முன் பேசும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால், அவர்களின் பெருமை குறைந்து விடும். திருவள்ளுவர் இதனை:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். (குறள் : 405)
என்ற குறளில் அழகாகக் கூறியுள்ளார்.
மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.