Chidhambaram Natarajar Temple

Kavingar Kannadasan

கண்ணதாசனின் நகைச்சுவை

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களையும் கவிதைகளையும் கேட்டு, படித்து, இரசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் அவர் மிக எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர் என்பது பலருக்குத் தெரியாது. அப்படி அவர் நகைச்சுவையாகப் பேசிய ஒரு சொற்பொழிவில் கேட்ட ஓரிரு சுவாரசியமான சிலேடைச் செய்திகளை மட்டும், இந்த 'தமிழோடு விளையாடு" பகுதியில் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். (ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை எனப்படும்.)

 

சிலேடைகள் - 1

 

புலவர்களோடு பேசும்பொழுது கவனமாக இருக்கவேண்டும்

ஒரு முறை ஒரு பெரிய மடத்தில், நூறு புலவர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பார்வையாளர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். விழாவில் கலந்துகொள்ள வேண்டிய புலவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே வந்துவிட்டார்கள். விழா தொடங்க வேண்டிய நேரமும் நெருங்கிவிட்டது. ஆனால் அந்த ஒரு புலவருக்காக மற்ற அனைவரும் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. குறித்த நேரத்தில் விழாவைத் தொடங்க முடியாமல் போய்விடுமோ என்று விழாவைத் தலைமையேற்று நடத்தும் அந்த மடத்தின் தலைவருக்கும் சற்று ஐயம் தோன்றிவிட்டது.

ஆனால் ஒருவழியாக சிறிது நேரம் கழித்து அந்த புலவர் வந்துவிட்டார். அந்த தலைவருக்கு, தாமதமாக வந்த புலவர் மீது நல்ல கோபம். ஆனால் அந்த கோபத்தை நேரடியாக காட்டாமல், அந்த புலவரைப் பார்த்து "வாருங்கள் கடைமடையரே" என்று வரவேற்றார்.

அந்த புலவர் கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவர். பொதுவாக, ஒரு ஊரில் உள்ளவர்களை அந்த ஊர் பெயர் சொல்லி அழைப்பது நம் வழக்கம். அந்த வகையில் பார்த்தால் அந்த தலைவர் அழைத்தது சரி தான், ஆனால் அதில் இன்னொரு பொருளும் இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல், தாமதமாக வந்ததைக் குறிக்கும் விதத்தில் "கடைசியாய் வந்த மடையரே" என்று திட்டியது போலவும் ஆகிவிட்டது.

இதைக் கேட்டவுடன், அதிர்ச்சியடைந்த மேடையில் இருந்தவர்கள் எல்லாம், புலவர் என்ன சொல்லப்போகிறாரோ என சற்றுப் பதட்டத்துடன் அவரை நோக்கினார்கள். வந்தவரும் தமிழ்ப்புலவர் அல்லவா? சும்மா இருப்பாரா. உடனே அந்த தலைவரைப் பார்த்துக் கை கூப்பி, "வணக்கம் மடத்தலைவரே" என்றார்.

மடத்தின் தலைவர் என்று சொல்வது போல் சொல்லி, மட தலைவரே என்று கூறி தன் புலமையால் பழி வாங்கிவிட்டார்.

புலவர்கள் உரையாடுவது இரசிக்கத்தக்கதாக இருக்கும். அதே சமயம், தமிழ் புலவர்களோடு உரையாடும் பொழுது நாம் சற்று கவனமாகவும் இருக்கவேண்டும்.

 

உளுந்து வடை

ஒரு மனைவி தன் கணவனுக்கு உளுந்து வடை கொடுத்தாள். அந்த வடை சில நாட்களுக்கு முன்னர் செய்தது. (அந்த காலத்தில் எல்லாம் மிச்சமான உணவை வைக்க பிரிட்ஜ் எல்லாம் கிடையாது)

அந்த கணவன், வடையை எடுத்து, சிறிது கிள்ளிப்பார்த்து, அதை சாப்பிடாமல் தன் மனைவியைக் கூப்பிட்டு அவளிடமே கொடுத்துவிட்டான். "ஏன் கொடுத்துவிட்டீர்கள், வடை ஊசியிருக்கா? என்று கேட்டாள்.

அதற்கு அந்த கணவன், "ஊசி மட்டுமில்லை, நூலும் இருக்கிறது, தையலுக்கு உதவுமே என்பதால் கொடுத்தேன்" என்றான்.

ஊசியிருக்கிறது என்றால் கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தம். ஊசிப்போன வடையில், மாவு நூல் நூலாக திரிந்துவிடும். தையல் என்றால் பெண் என்ற ஒரு பொருளும் உண்டு. அந்த கணவன், "ஊசி மட்டுமல்ல நூலும் இருக்கிறது தையலுக்கு உதவும் அதாவது தைக்கவும் உதவும் என்ற ஒரு பொருளிலும், கெட்டுப்போன வடையை கொடுத்தாய் அல்லவா, அது உனக்குத் தான் உதவும் என்று கேலியாக கூறுவது போல் இன்னொரு பொருள் வரும்படி சிலேடையாக இரசிக்கும்படி கூறினான்,

 

நோய்வாய்ப்பட்ட புலவர்

பல காலம் முன்பு, ஒரு புலவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அந்த நேரத்தில் கூட புலவர்களுக்கு தமிழில் விளையாடுவது அலுக்காது. அவரை வந்து பார்த்த வைத்தியர், நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. பால் வேண்டுமென்றல் சிறிது கொடுங்கள். ஒரு துணியில் நனைத்து, சொட்டு சொட்டாக நாக்கில் விடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்,

வீட்டில் உள்ளவர்களும், அதே போல் ஒரு துணியை எடுத்து பாலில் நனைத்து சொட்டு சொட்டாக அவர் நாக்கில் விட்டார்கள். பால் நாக்கில் பட்டதும் அந்த புலவர் முகம் சுளித்தார். அருகில் இருந்தவர்கள், "ஏன் ஐயா, பால் கசக்கிறதா?" என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் புலவர், "பால் கசக்கவில்லை, ஆனால் அந்த துணியும் கசக்கவில்லை" என்று கூறினார். அதாவது, அந்த துணி அவ்வளவு அழுக்காகக் இருக்கிறது அதை துவைக்கவில்லை என்ற பொருளில் கூறினார்.

"கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்று சிறு வயதில் நாம் படித்த முதுமொழி நினைவுக்கு வருகிறது.

 

யார் அழகு?

ஒரு முறை ஸ்ரீதேவிக்கும், மூதேவிக்கும் தங்கள் இருவரில் யார் அழகு என்று போட்டி ஏற்பட்டதாம். அவர்களுக்குள் ஒரு முடிவு எட்டமுடியாததனால், திருமாலிடம் சென்றார்கள். திருமாலுக்கு தர்மசங்கடமாகி விட்டது. சற்று யோசித்தவர், அவர்கள் இருவரையும் பார்த்து, "சற்று தூரம் நடந்து செல்லுங்கள்" என்று கூறினார். அவர்களும் அவ்வாறே சென்றனர். பிறகு, அவர்களை மீண்டும் தன்னிடம் வரச்சொன்னார்,

அவர்கள் இருவரும் வந்தபின், மூதேவியைப் பார்த்து "நீ போகும் பொழுது நல்லா இருக்கிறது" என்றும், ஸ்ரீதேவியைப் பார்த்து "நீ வரும் பொழுது நன்றாக இருக்கிறது" என்றும் கூறினார். இருவருமே ஒரு வகையில் அழகு தான் என்பது ஒரு பொருள்.

மூதேவி என்றால் தரித்திரம், வறுமை, அதிர்ஷ்டம் இல்லாமை என்று பல பொருள் தரும் ஒரு சொல். அதனால் மூதேவி நம்மை விட்டு சென்றால் நன்றாக இருக்கும் என்றும், ஸ்ரீதேவி என்றால் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் என்ற பல பொருள் தரும் சொல். அதனால் ஸ்ரீதேவி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் இன்னொரு பொருளிலும் இவற்றை புரிந்துக் கொள்ளலாம்.

யாரையும் வருத்தப்பட வைக்காத புத்திசாலித்தனமான தீர்ப்பு. இருவருக்கும் மகிழ்ச்சி. திருமால் தப்பித்துக்கொண்டார். மாமியார் மருமகள் சண்டையில் கணவன்மார்கள் இப்படித்தான் புத்திசாலித்தனமாக முடிவு எடுக்கவேண்டும்.

மீண்டும் இன்னொரு தமிழ் விளையாட்டில் சந்திப்போம்,

 

நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

River

ஆறு

Old 100 Rupee

நூறு ரூபாய்

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net