Chidhambaram Natarajar Temple

Sep 11 2001 Terrorist Attack 20th Anniversary

செப் 11, 2001 - தீவிரவாதத் தாக்குதல்

 செப்டெம்பர் 11, 2021 - இருபதாம் ஆண்டு நினைவு நாள்.

செப்டெம்பர் 11, அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அகில உலகத்திற்கும் தீவிரவாதத்தின் கோர முகத்தை படம்பிடித்து காட்டிய ஒரு துக்க நாள்.

sep11 6
அன்றையப் பொழுது, எப்பொழுதும் போல, மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் தொடங்கியது.  இன்னும் சில மணி நேரங்களில் நேரப்போகின்ற பயங்கரத்தை, இப்படிக்கூட நடக்குமா என்று எவரும் கற்பனைக்கூட செய்துப் பார்த்திராத படு பாதக செயல்கள் நடக்கப்போகின்றன என்பதை அறியாத அமெரிக்கா, தன் வழக்கமான நிகழ்வுகளில் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.

கடமைத் தவறாத, காலைக் கதிரவன் தன் பொன் மஞ்சள் கதிர்களால், இரவுப் போர்த்தியிருந்துப் பனிப்போர்வையை விலக்க முய்ற்சி செய்துக்கொண்டிருந்தது. வானத்து வெண் மேகங்கள், உயிர் எரிந்தப் புகையினால் நிறம் கருக்கப் போகிறோம் எனப்தை தெரியாமல், பஞ்சுப்பொதியாய் தவழ்ந்துக்கொண்டிருந்தது.  கருகிய காந்தல் நெடி வீசப்போகிறது என்றுத் தெரியாமல், அந்த காலை நேரத் தென்றல், மலர்களின் நறுமணத்தை சுமந்து சுகமாக வீசிக்கொண்டிருந்தது. அதிகாலைப் பறவைகள் நேரப் போகும் பயங்கரம் அறியாமல் சிறகடித்துப் பறந்துக்கொண்டிருந்தன.  வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு துயரம் நேரப் போவது தெரியாத மக்கள், தங்கள் அன்றாட கடமையைச் செய்ய விரைந்துக் கொண்டிருந்தனர்.

நான் அப்போது, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள, ஆர்லிங்க்டன் நகரில் வசித்துக்கொண்டிருந்தேன்.  இங்கு தான் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளான அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பெண்டகன் கட்டிடமும் இருக்கிறது. நான் வசிக்கும் இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவு தான்.  நான் வேலைப் பார்க்கும் அலுவலகமும் வீட்டிற்குப் பக்கத்தில் தான் இருக்கிறது.

அந்தச் சமயம், எனது குடும்பம் விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்தது. நான் மட்டும் தான் இங்கு இருந்தேன்.  அதனால், வழக்கமாக ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்லும் நான் அன்று, வழக்கத்திற்கு மாறாக சற்று சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு சென்று விட்டேன். நடந்தது எதுவும் அறியாமல், எட்டாவது மாடியில், எப்பொழுதும் போல் அலுவலகத்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தோம். 

ஒன்பது மணியிருக்கும், எங்கள் தளத்தில் திடீரென்று ஒரு சலசலப்புத் தோன்றியது. எல்லோரும் அங்கங்கு நின்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். என்னவென்று தெரியவில்லை. அந்தச் சமயத்தில் இன்றைக்கு இருப்பது போல், வாட்ஸாப், ட்விட்டர் எல்லாம் கிடையாது.  தொலைக்காட்சி/வானொலி மூலம் அல்லது இணையத்தில் பதிவேற்றப்படிருந்தால் தான் உடனடியாக் அறிந்துக்கொள்ள முடியும்.  அதனால் என்ன நடந்தது என்று முழுவதும் தெரியாமல், ஆளாளுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  அப்பொழுது தான் டிவியில், நியூயார்க் நகரத்தில் உள்ள, நூறு மாடிகள் கொண்ட உலக வர்த்தக மைய (வேர்ல்ட் ட்ரேட் செண்டர்), இரட்டைக் கோபுர கட்டங்களில் ஒன்றில், ஒரு விமானம் மோதி விட்டதாக செய்தி ஒளிப்பரப்பானது.  அப்பொழுது அது எதிர்பாராமல் நேர்ந்த விபத்து என்று தான் நாங்கள் எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தோம். அமெரிக்க அரசாங்கமே அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தது. அந்த விபத்து நடந்து அப்பொழுது பத்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது.

sep11 2
நாங்கள் எல்லோரும் அந்த விபத்தைப் பற்றி, கவலையோடு பேசிக்கொண்டிருந்தோம்.  அந்தக் கட்டிடத்தில், எக்கச்சக்கமான அலுவலகங்கள் இருக்கின்றன.  அது மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்ற இடங்களில் அதுவும் ஒன்று.  அதிலும் காலை நேரங்களில் ஜே ஜே என்று திருவிழாப் போல் கூட்டம் அலைமோதும். அந்த இரட்டை கட்டிடங்களின் அடியில், மெட்ரோ இரயில் நிலையமும் இருந்தது. கிட்டத்தட்ட அந்த கட்டிடமே ஒரு சிறு நகரம் போல் இருக்கும். அந்தக் கட்டிடத்தின் உச்சியில் உள்ள, பார்வையாளர் கண்ணாடி அறை(), மற்றும் பால்கனியில் இருந்து நியூயார்க் நகரை இரசிப்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். விழிகள் விரிந்து அத்தனை காட்சியையும் ஒரு சேர கவர எண்ணி விழுங்கிடும். புள்ளிப்புள்ளியாய்த் தெரியும் சிறு கட்டிடங்களும், எறும்பு ஊறுவதைப் போல், கடுகிலும் சிறிதாய்த் தெரியும் வாகனங்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரைத் தெரியும் நியூயார்க் நகரமும், பாம்பு போல் வளைந்து செல்லும் நதிகளும், இன்னும் எண்ணற்றக் காட்சிகளைக் கண்டு விழிகள் வியக்கும். மனது மயங்கும்.

அப்படிப்பட்ட ஒரு இடத்தில், ஒரு விமானம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கு தென்றால் எவ்வளவு உயிர்ச் சேதம் ஏற்படும் என்று நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம்.  ஆனால், அப்பொழுது எங்களுக்குத் தெரியவில்லை, நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், தீவிரவாதிகள் இன்னொரு விமானத்தையும், தன் உடன் பிறந்த சகோதரன் உயிருடன் எரிந்துக்கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் பார்த்து தவித்துக்கொண்டிருக்கும் சகோதரன் போல், தனக்கும் இந்த நிலை நேரப்போவது தெரியாமல், பக்கத்தில் நின்று கொண்டிருக்கும், அடுத்த கட்டிடத்திலும் மோதியிருக்கிறார்கள் என்று.

மணி 9.11 இருக்கும் அப்பொழுது தான் அமெரிக்கா உணர்ந்தது, நடந்தது விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று.  அமெரிக்காவில் 911 என்ற எண் அனைவருக்கும் பரிச்சயமானது.  ஆபத்து என்றால் உடனே உதவிக்கு அழைக்கும் எண் 911.  தீவிரவாதிகள், அந்த எண்ணைக்கொண்டே தங்கள் தீவிரவாத செயலை அமெரிக்காவில் நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்தார்களோ என்னவோ, செப்டம்பர் மாதம் பதினோறாம் தேதி அதாவது 9/11 அன்று,(அமெரிக்காவில் மாதத்தை முதலிலும், தேதியை அடுத்தும் உபயோகிப்பார்கள்), 9.11 மணிக்கு, செயல்படுத்தத் திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள்.  ஆனால் அவர்களால் அப்படி செய்ய முடியவில்லை, ஆனால் 9/11 தேதியன்று தாங்கள் நினைத்த, மனிதாபிமானமற்ற அழிவுச்செயலை செய்துவிட்டார்கள் அந்த வீணர்கள். எத்தனை ஆயிரம் உயிர்களை அந்த தீவிர தீவிரவாதிகள் கொன்றிருக்கிறாரக்ள் என்பது, எண்ணிப் பார்க்காமலேயே மனதில் ஓங்கி அடித்து வலிக்கச்செயதது.

ஏற்கனவே 911 என்ற எண்ணை அமெரிக்கர்கள் மறப்பதில்லை, இந்தத் தாக்குதலுக்குப் பின் அது அவர்கள் மனதில் பதிந்து விட்டது என்றே சொல்லலாம்.


sep11 1
முதல் விமானம் மோதியதால் நிலைக்குலைந்திருந்த அமெரிக்க அரசாங்கம், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இரண்டாவது விமானம் ஒன்று மோதியதும் தான், சுதாரித்து எழுந்தது.  இது விபத்தல்ல, திட்டமிட்டு நடைப்பெற்ற சதிச்செயல் என்று உண்மைப் புரிந்தது.  அது வரை விபத்து என்றக் கோணத்தில் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளை மாற்றி, இது அமெரிக்கா மேல் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்பதை அறிந்து அதிர்ந்தது. அமெரிக்காவை தாக்கும் தீவிரவாத செயல் என்பதை உணர்ந்து, கோட் ரெட் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன. அமெரிக்க விமானப் படையும் இராணுவமும் செயலில் இறங்கியது.  இந்தத் தாக்குதலுக்குக் காரணம், அல்-கொய்தா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என்பதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

அமெரிக்க விமானக் கட்டுப்பாடு அறை நேர்ந்த விபரீதத்தை உணர ஆரம்பித்தது. அப்பொழுது தான் அவர்களுக்குத் தெரிய வந்தது, இந்த இரண்டு விமானங்கள் மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு விமானங்கள் என மொத்தம் நான்கு விமானங்கள் கடத்தப்பட்டு, நான்கு இலக்குகளைக் குறிவைத்து தாக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பது.  உடனே அந்த இரண்டு விமானங்கள் எது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.  குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய இரண்டு விமானங்கள் வேறு திசை நோக்கி செல்வதை அறிந்து, அமெரிக்க விமானப் படை விமானங்கள் () அந்த இரண்டு விமானங்களை நோக்கி விரைந்தன.

ஆனால், அமெரிக்கா சுதாரிக்க எடுத்தக்கொண்ட அந்த சில நிமிட இடைவெளிக்குள், மூன்றாவது விமானம், எங்கள் ஊரில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையக கட்டிடமான பெண்டகனை நோக்கி வந்துவிட்டது.  விமானப் படை விமானங்கள் அந்த விமானத்தை வழிமறிக்குமுன், பெண்டகன் கட்டிடத்தில் பயங்கரமாக மோதி மூன்றாவது சதிச்செயலையும் நிறைவேற்றி விட்டது. 

உலக வர்த்தக கட்டிடங்களாவது, நூறுமாடி கொண்ட மிக உயரமான கட்டிடங்கள்.  விமானம் கொண்டு இடிப்பதற்கு சுலபமான ஒன்று.  ஆனால், இந்த பெண்டகன் கட்டிடமோ, ஐந்து மாடிகள் மட்டுமே கொண்டது, ஆனால் மிக விசாலமானது. ஐங்கோண அமைப்பில் உள்ள ஒன்று.  அதனால், இதனை இடிக்க வேண்டும், என்று எப்படி வெறியுடன் திட்டமிட்டு நிறைவேற்றி உள்ளார்கள், என்பதை நினைக்கும் போது, அதிர்ச்சியாக இருக்கிறது.  நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அதில் கொல்லப்பட்டார்கள். பெண்டகன் கட்டிடத்தின் வித்தயாசமானக் கட்டமைப்பு, பெருத்த உயிர் சேதம் ஏற்படாமல் காப்பாற்றி விட்டது.

அதே நேரத்தில், உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடங்களும், இரண்டு விமானங்களின் எரிபொருளாலும், பயங்கரமாய்த் தீப்பற்றிக் காட்டுத்தீயாக எல்லா தளங்களுக்கும் பரவிவிட்டது.  அதில் ஏற்பட்ட கடும் சூட்டினால், இரும்புத் தூண்கள் எல்லாம் உருகி உருக்குலைந்து, முற்றிலுமாக இடிந்து விழுந்துவிட்டது.  அந்தக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் கண்டு உலகமே கோகத்தில் ஆழ்ந்தது. எத்தனைப் பெரிய கட்டிடம், எத்தனை ஆயிர பணியாளர்களால், எத்தனை ஆண்டுகள் திட்டமிட்டு, கஷ்டப்பட்டு, கட்டப்பட்ட ஒரு உலக அதிசயம், ஒரு சில மணி நேரங்களில், மண்ணோடு மண்ணாக ஆகிவிட்டது. ஆக்கத்தின் அருமையறியாத அயோக்கியர்களால், ஒரு பெரும் உலக அதிசயம் அழிந்துக்கொண்டிருந்தது. நியூயார்க் நகரமே புகை மண்டலத்தில் சூழ்ந்து, என்ன நடந்தது என்பதை முற்றிலும் நம்பமுடியாமல் விக்கித்து நின்றது.

அமெரிக்காவிற்குத் தெரிந்துவிட்டது அடுத்த இலக்கு எது என்று. வெள்ளை மாளிகையைத் தாக்கத்தான் அது வருகிறது என்று எல்லோராலும் நம்பப்பட்டது. ஆனால் எப்பாடுபட்டாலும், அதை நிகழ விடமாட்டோம் என்று சூளுரைத்த விமானப் படை விமானங்கள், அந்த நான்காவது, விமானத்தை நோக்கி விரைந்து நெருங்கியது.  அந்த விமானத்தைத் துரத்திப் பிடித்து, தரையிறக்குமாறு கட்டளையிட்டது. இல்லையென்றால் சுட்டுவீழ்த்த்ப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.  அதனால் தீவிரவாதிகளால், அவர்கள் நினைத்த இலக்கை அடையமுடியாமல், வழிமாற நேரிட்டது. இறுதியில், பென்சில்வேனியா மாகானத்தில், சேங்க்ஸ்வில் என்ற இடத்தில் தரையில் மோதி வெடித்தது. இதில் அந்த விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துபோனார்கள்.

sep11 3
ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்தத் தீவிரவாத தாக்குதல்களால், அமெரிக்கா நிலைகுலைந்துப் போனது.  அவர்கள் கனவில் கூட நினைத்துப்பார்க்காது ஒரு மிகப்பெரிய விபரீதம் நடந்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்களால் மட்டுமல்ல, உலகத்தால் கூட நம்பமுடியவில்லை. அமெரிக்கா ஸ்தம்பித்துப் போய் நின்று, இறந்த அப்பாவி மக்களுக்காக கண்ணீர் விட்டது. பொருட் சேதங்களை மீண்டும், எப்பாடுபட்டாவது மறுபடியும் சரி செய்துவிடலாம், ஆனால் பல ஆசைகளையும், கனவுகளையும், தலைமுறைகளயும் சுமந்த அந்த உயிர்கள்?

இது போன்ற நேரங்களில் பல விதமான வதந்திகள் தீயாய் பரவும்.  அந்த நான்காவது விமானம், ஆர்லிங்கடனில் உள்ள ஒரு கட்டிடத்தை நோக்கி வருகிறது என்று ஒரு வதந்திக் கிளம்பியது.  இந்த அசாதாரண சூழ்நிலையால், அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் வீடுகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டார்கள். கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டது.  நானும் என் நண்பர்கள் சிலரும், மற்றொரு நண்பர் வீட்டிற்குச்சென்று, அங்கிருந்து அன்றையத் துயர நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்து சோகத்தில் மூழ்கிக்கிடந்தோம்.

அந்நேரத்தில், பலரும் தங்கள் குடும்பத்தினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அறிய முயன்றதால், தொலைத்தொடர்பு சேவையும்  பாதிக்கப்பட்டது. இந்த செய்தி அறிந்து, இந்தியாவிலிருந்து எங்கள் குடும்பத்தினர் எங்களைத் தொடர்புக்கொள்ள முயற்சித்து, கிடைக்காமல், எங்களுக்கு என்ன நேர்ந்ததோ என்றுத் தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள்.  ஒருவழியாக அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியப்பிறகு தான் அவர்களுக்கும் உயிர் வந்தது. 

இந்தத் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவின் போக்கே மாறிவிட்டது. விமான நிலையங்களில், தீவிர கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டன.  இதுபோன்ற இன்னொரு தீவிரவாத நிகழ்வு இனி எப்போதும் நேர விடக்கூடாது என்பதற்காக ஏகப்பட்ட கடும் பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்தியது. எல்லோரும் மிகத் தீவிர சோதனைக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் தான் விமான நிலையத்திற்குள் செல்லவே அனுமதிக்கப்பட்டார்கள்.  அதற்கு முன்னர், பயணிகளை வழி அனுப்ப வருகிறவர்கள் கூட விமானம் கிளம்பும் இடம் வரை செல்லலாம். ஆனால் எல்லாவற்றையும் தலைகீழாக மாறிவிட்டது அந்தத் துயர சம்பவம்.  அமெரிக்கா மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் இந்த துயர சம்பவம் ஒரு பாடமாக அமைந்து, எல்லா நாடுகளிலுமே தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தன் கையை எடுத்து தன் கண்ணையே குத்தியதைப் போன்ற நம்பிக்கைத் துரோகத்தை, பயணிகள் போல் அமெரிக்காவில் நுழைந்து, அமெரிக்க விமானங்களைக் கொண்டே அமெரிக்காவை தாக்கியதை அவரகளால் ஜீரணிக்கமுடியவில்லை.  அதுவரை எல்லோரையும் நட்பாகப் பார்த்த அமெரிக்கர்கள், வெளிநாட்டவர்களை எல்லாம், ஒரு சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். வெளிநாட்டவர்கள் மேல் வெறுப்பு அதிகமாக ஆரம்பித்தது. குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது,  இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் வேறுபாடு தெரியாததால், சீக்கியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.  ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளால், அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இயல்பு நிலைக்குத் திரும்ப சில, பல காலம் ஆகியது. ஆனால் இந்தத் தாக்குதல், அமெரிக்கர்களுடைய தேசப்பற்றை அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

அதற்குப் பின், தீவிரவாதிகளைப் பழி வாங்க, யுத்தம் தொடங்கி, அல்-கொய்தா கூட்டமே அழிக்கப்பட்டது. அந்த யுத்தத்திலும், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானவர்கள் உயிர் இழந்தார்கள்.

sep11 7
மறக்க முடியாத அந்த கருப்பு நாள் நடந்து, இதோ இன்றோடு இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது.  ஆனால் அது ஏற்படுத்தப்பட்ட காயம் இன்னும் ஆறாமல் அப்படியே இருக்கிறது. அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையே திசை மாறிவிட்டது.   அந்த இடத்தில், அமெரிக்கா இன்னுமொரு நூறு மாடி கட்டிடத்தைக் கட்டிவிட்டது. இரட்டைக் கோபுரத்திற்குப் பதிலாக, ஒரு நூறுமாடி கோபுரமும், பக்கதில் இந்த துயர சம்பவத்தின் வடுவாக, எரிந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட பல பொருட்களுடனும், தாக்குதல் நடந்தச் சமயத்தில் காப்பாற்ற சென்று உயிர் நீத்த காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் உட்பட உயிர் இழந்தவர்கள் அனைவரின் பெயர் மற்றும் புகைப்ப்டங்களுடன் ஒரு நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது, இந்தப் புதிய கட்டிடம், எந்தச் சூழ்நிலையிலுமிருந்தும் அமெரிக்கா மீண்டு, தலை நிமிர்ந்து நிற்கும் என்பதைக் கம்பீரமாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆயிரமாயிர உயிர்களின் ஆத்மா அந்த இடத்தில் இன்னும் சுற்றிக்கொண்டு, கண்ணீர் விட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

நூறுமாடி கட்டிடங்களிலும், பெண்டகன் கட்டிடத்திலும் இருந்தவர்களுக்கு, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறியும் முன்னரே, அறிந்துக்கொள்ள முடியாமலேயே, திடீரென்று உயிர் இழந்திருப்பார்கள்.  ஆனால் அந்த நான்கு, விமானங்களில் இருந்தப் பயணிகளின் நிலை, எண்ணிப்பார்க்கவே உடல் நடுங்குகிறது.  இன்னும் சற்று நேரத்தில் உயிரழக்கப்போகிறோம், அதுவும், கொடூரமான நிலையில், உயிரோடு எரிந்துச் சாம்பாலாகபோகிறோம் என்று தெரிந்தே, அந்த விமானத்தில் இருந்த அவர்களின் நிலைமை, இனி எவருக்கும், எக்காலத்திலும் நேரக்கூடாது.  மனித குல அழிவுக்குத் தன் புத்தியைப் பயன்படுத்தும் மனிதர்கள், அதை ஆக்கத்திற்கு பயன்படுத்த இறைவன் அருள் புரியட்டும்.

உயிரிழந்த அனைவருக்கும் நாம் நம் அஞ்சலியைச் செலுத்துவோம்.

தீவிரவாதத்தை வேரோடு அழிப்போம். தீவிரவாதம் இல்லாமல் உலகம் அமைதியாகத் திகழகட்டும்.

நீங்கா நினைவுகளுடன்

இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Spring and Fall time change

வெளிச்சத்தை சேமிக்க முடியுமா?

தமிழ்நாடா? தமிழகமா?

தமிழ்நாடா? தமிழகமா?

ஹார்வர்டு தமிழ் இருக்கை

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net