Chidhambaram Natarajar Temple

தமிழ்நாடா? தமிழகமா?

தமிழ்நாடா? தமிழகமா?

கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும், செய்திதாள்களிலும் இது தான் விவாதப் பொருள்.
இதையே பார்த்துக்கொண்டிருந்து, படித்துவிட்டு இதைப் பற்றியே சிந்திப்பவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒருவர் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என்று ஒரு சிறு கற்பனை....

அறிவழகன், கதிர்வேல் மற்றும் தமிழரசு மூவரும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் அறிவழகன் தமிழரசைத் தேடி அவன் வீட்டிற்குச் செல்கிறான். ஆனால் தமிழரசு அங்கு இல்லை. ஒருவேளை விளையாட்டு திடலில் இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணி, அங்கே போய்ப் பார்க்கலாம் என்று விளையாட்டு திடல் நோக்கி செல்லுகையில், எதிரே கதிர்வேல் மற்றும் தமிழரசு இருவரும் வருவதைப் பார்க்கிறான்.

ஏண்டா கதிர், தமிழ் எங்கேடா போனீங்க இரண்டுபேரும்? உங்களை எங்கே எல்லாம் தேடுறது?

அதை ஏண்டா கேக்குறே அறிவழகா... இந்தா இருக்கானே நம்ம தமிழரசு, அவனை டிவி ரொம்ப பார்க்காதேடா, அதிலேயும் இந்த வேலையில்லாம வெட்டியா விவாதம் பண்ணுகிற நிகழ்ச்சியெல்லாம் பார்க்காதேடான்னு சொன்னா கேட்டாதானே. இப்ப பாரு அவனை.

ஏண்டா கதிர்? தமிழரசுக்கு என்ன ஆச்சு?

நீயே அவனை கேளு.

டேய் தமிழரசு, காலையிலிருந்து எங்கேடா போனாய்? உங்க வீட்டில் போய் கேட்டேன். நீ எங்கேயோ அவசரமாக சென்றாய், ஆனால் எங்கே என்று தெரியவில்லை என்றார்கள். அப்படி எங்கேடா போனாய்?

ஓ.. அதுவா? ரொம்ப நாளா ஒரு புத்தநாடு தேவைப்பட்டது, அதனால ஒன்றிய நூல்நாட்டுக்குப் போயிட்டு வர்றேன்.

டேய் கதிர், என்னடா ஆச்சு இவனுக்கு? நேற்று வரை நல்லா தானே இருந்தான். இவன் என்ன சொல்கிறான்? ஒன்னுமே புரியலையே?

நான் தான் சொன்னேனே, டிவி மற்றும் யூடூயூபில் பேசுவதையெல்லாம் கேட்டு ரொம்ப குழம்பி போய்விட்டான். இனிமேல் 'அகம்' என்ற சொல்லைச் சொல்லவே மாட்டேன் என்று உளற ஆரம்பிச்சுட்டான். புத்தகம் வாங்க மத்திய நூலகத்துக்குப் போனதை தான் அப்படி சொல்றான்.

தமிழரசை வினோதமாகப் பார்த்துக்கொண்டே, "என்ன புத்தகம் அது?" என்று கேட்க்கிறான் அறிவழகன்.

"நாடுநானூறு புத்தகம் தாண்டா" என்கிறான்.

நாடுநானூறா? கேள்விப்பட்டதில்லையே... யார் எழுதின புத்தகம்? சரித்திரக் கதையா இல்ல சமூக சீர்திருத்த நூலா?

டேய்.. இது சங்க இலக்கியம்டா.

உடனே கதிர் குறுக்கிட்டு, அகநானூறைத் தாண்டா அப்படி சொல்றான்.

"டேய் தமிழரசு, இதெல்லாம் ரொம்ப ஓவர்டா..." என்று சொன்ன அறிவழகன், "சரி வாங்க சாப்பிடப் போகலாம். எனக்குப் பசிக்குது... காலையில் இருந்து ஒரே அலைச்சல், ஏதாவது நல்ல கடையிருந்தால் சொல்லு, போய் சாப்பிடலாம்".

உடனே தமிழரசு. "வாங்க பக்கத்தில் தான் நல்ல ஒரு உணவுநாடு இருக்குது, அங்கே போய் சாப்பிடலாம்." என்கிறான்.

"அறிவழகா டென்சன் ஆகாதே, உணவகத்தை தான் அப்படி சொல்றான். இன்னும் என்னென்ன சொல்லப்போறானோ" என்று கதிர் பயப்படுகிறான்.

மூவரும் உணவகத்திற்கு சென்று சாப்பிடுகிறார்கள்.

அபோது தமிழரசு, "பிரியாணி நல்லா இருக்குது, ஆனால், இதையே சீர்நாடு சம்பா அரிசியில் செய்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்" என்கிறான்.

தலையில் அடித்துக்கொண்ட கதிர்வேல், சீரகச்சம்பா அரிசியைத் தாண்டா அப்படி சொல்றான். இவன் பேசுகிற தமிழுக்கு, மொழி பெயர்ப்பு வேற நான் பண்ணவேண்டியதாக இருக்குது. என் நேரம் என்று அலுத்துக்கொள்கிறான்.

சாப்பிட்டு முடித்து மூவரும் வெளியே வருகிறார்கள். சாலையில் மெதுவாக நடந்து செல்லும் வழியில் ஒரு பள்ளியில், தேசிய கீதம் இசைக்கும் ஓசை கேட்கிறது. அதை கேட்ட தமிழரசு ஏதோ ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பிக்கிறான்.

உடனே அறிவிழகன், தமிழரசைப் பார்த்து, "என்னடா வாயிற்குள்ளேயே ஏதோ பாட்டு பாடிக்கிட்டு இருக்கே? சத்தமாகப் பாடினால் நாங்களும் கேட்டு இரசிப்போமில்ல" என்கிறான்.

அது ஒன்னும் இல்லே, இந்த பள்ளியைப் பார்த்தவுடன், எனக்கு நாம படிச்ச காலங்கள் நினைவில் வந்தது. அதனால்
" ஞாபநாடு வருதே... ஞாபநாடு வருதே..." என்று இராகமாக "ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..." என்ற பாடலை பாட ஆரம்பிக்கிறான்.

டேய்... போதும் இதோட நிறுத்திக்க.. என்னால முடியல என்ற அறிவழகன், நூலகம் என்பதை நூல்நாடுன்னு சொன்னே, சரி அது இரண்டு சொற்களை சேர்த்து சொல்வது, அதனால் பராவாயில்லை என்று பொறுத்துக்கலாம், ஆனால், ஞாபகம் என்பது ஒரு சொல் தானடா தமிழரசு, அதை போய் மாற்றி சொல்கிறாயே, உன்னோட பற்றுக்கு ஒரு நியாயம் வேண்டாமாடா?

உடனே, கதிர்வேல், வடிவேலு பாணியில் "இப்பவே கண்ணக் கட்டுதே" என்று கூறி சிரிக்கிறான்.

"சரி தமிழரசு, உன்னோட விசா விண்ணப்பம் எந்த நிலையில இருக்குது." என்று அறிவழகன் கேட்க,,,

"ஓ.. அதுவா, அடுத்த வாரம் அமெரிக்க தூதர்நாட்டுக்கு வரச்சொல்லி கடிதம் வந்து இருக்கிறது." என்கிறான்.

டேய்... அமெரிக்கத் தூதரோட நாடு அமெரிக்கா தானடா? அமெரிக்கான்னு சொல்லாம ஏன் இப்படி சுத்தி வளைச்சு கொல்லுறே?

"அத தாண்டா சொல்றேன், அமெரிக்கா போக அமெரிக்க தூதர்நாட்டுக்கு நேர்காணல் வரச்சொல்லி அஞ்சல்நாட்டிலிருந்து கடிதம் என் அலுவல்நாட்டுக்கு அனுப்பியிருக்காங்கடா" என்கிறான்.

ஒரு நாட்டுக்குள்ள எத்தனை நாடுடா என்று கேட்டு தலைமுடியைப் பியித்துக் கொள்கிறான் கதிர்வேல்.

அப்பொழுது தான், அறிவழகனுக்கு, தூதரகத்தையும் அஞ்சலகத்தையும் தான் தமிழரசு அப்படி சொல்கிறான் என்று புரிந்தது. அவனை மிகவும் கவலையோடு பார்க்கிறான்.

கதிர்வேல், தமிழரசைப் பார்த்து, "டேய் இனிமேலாவது... இந்த தொலைக்காட்சிகளில் கண்ட கண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து மனதைக் குழப்பிக்கொள்ளாதே" என்கிறான் பரிவோடு.

அதற்கு பதிலளித்த தமிழரசு "நான் தொலைக்காட்சிகளில் விவாதம் எல்லாம் அதிகம் பார்க்கமாட்டேன். நாடுநாடு தான் அதிகம் பார்ப்பேன்" என்கிறான்.

"ஓ.. கோல்டன் குளோப் விருது வாங்கின, ஆர் ஆர் ஆர் படத்துல வர்ற 'நாட்டு நாட்டு' பாட்டு தான் உனக்கு ரொம்ப பிடிக்குமோ?"

"டேய் அது தெலுங்கு பாட்டுடா. அதை ஏன் நான் பார்க்கப் போகிறேன். நான் சொன்னது மெகா சீரியல்டா" என்கிறான்.

நாடகத்தை தான் நாடுநாடு என்று சொன்னான் என்பதை அறிந்தபின் அவனைப் பார்த்து முறைக்கிறான் கதிர்வேல்,

அதை சிறிதும் கண்டுக்கொள்ளாத தமிழரசு, "தொலைக்காட்சிகளில் நாடுநாடு மட்டும் தான் பார்ப்பேன், மற்ற செய்திகள் எல்லாம், சமூக ஊடநாடு மூலம் தான்" என்று சொல்லிச் சிரிக்கிறான்.

அதை கேட்ட கதிர்வேல், "இவனோட பேசிப் பேசி எனக்கே தலை வலிக்க ஆரம்பிச்சுருச்சுடா. ஏதாவது தலைவலி மாத்திரை போட்டால் தான் சரியாகும்" என்று கூறுகிறான்.

உடனே தமிழரசு, 'பக்கத்தில் ஒரு மருந்துநாடு இருக்கு" என்று சொன்னவுடன், மருந்தகத்தைக் கூட இப்படி சொல்கிறானே. இவனை என்ன செய்யலாம் என்று மற்ற இருவரும் யோசிக்கிறார்கள்.

சரி பேச்சை மாற்றலாம் என்று எண்ணிய, அறிவழகன், "தமிழரசு, உன் வேலை எல்லாம் எப்படி இருக்குது? உன்னுடைய புது
ஆபிஸ் எங்கே இருக்குது?" என்று கேட்கிறான்.

"அதை ஏன் கேக்குறே... கொஞ்ச நாளாகவே, என் அலுவல்நாட்டில் எனக்கு வேலை அதிகம். ஓய்வு கூட சரியா எடுக்க முடியலை. அது மட்டுமல்ல, என் வீட்டில் இருந்து புது அலுவல்நாடு மிக தொலைவில் இருப்பதால், வந்து போவதற்கே இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது" என்று அலுத்துக்கொள்கிறான்.

அவன் பேசுவதை மாற்றலாம் என்று நினைத்தால், அலுவலகத்தை அலுவல்நாடு என்கிறானே... இவனை எப்படி திருத்தப் போகிறோம் என்று அதிகமாகவே பயப்படுகிறான் அறிவழகன்.

"சரி... புது அலுவல... இல்லை இல்ல.. புது ஆபிஸுக்கு உன் வீட்டிலிருந்து எப்படி போவது?" என்று தன்னை சுதாரித்துக்கொண்டு கேட்கிறான் அறிவழகன்.

"வீட்டில் இருந்து கிளம்பி, மெரினா கடற்கரை வழியாக, தலைவர்களுடைய நினைவுநாட்டை எல்லாம் கடந்து, தலைமைச் செயல்நாட்டையும் தாண்டி போனால், ஒரு பெரிய ஆய்வுநாடு கட்டடம் ஒன்று வரும், அதற்கு பக்கத்தில் தான் என் புது அலுவல்நாட்டோட தலைமைநாடு இருக்கிறது" என்கிறான்.

ஆஹா,,, இப்படியே விட்டா, நமக்கும் இந்த நோய் ஒட்டிடும் போலிருக்கே... என்ன செய்யலாம் என்று நினைக்குபொழுது, "குறளகம்" கட்டடத்தை கடந்து செல்கிறார்கள்.

உடனே தமிழரசு, "டேய் இந்த குறள்நாடு கட்டடத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு குறள் ஞாபகநாட்டுக்கு வருது. அதை சொல்லவா?"

"வேண்டாம்னா விடவா போறே... சொல்லித் தொலை, கேட்டு வைக்கிறோம்" என்கிறார்கள் இருவரும்.

உடனே தமிழரசு,

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
நாடுநக நட்பது நட்பு."

என்று சொல்லவும் அவனை அடிக்க பாய்கிறான் அறிவழகன்.

"டேய் நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தேன்னு வை, பேசாம உன்னை ஒரு மனநல காப்பநாட்டுல கொண்டு போய் சேர்த்திடுவேன்" என்று அறிவழகன் சொன்னதும்,

கதிர்வேல், "டேய் அறிவழகா நீயுமா?" என்று சொல்லி சிரிக்கிறான்.

"ஐய்யய்யோ" என்று சத்தம் போட்ட அறிவழகனை அவன் அம்மா தட்டியெழுப்பி, "ஏண்டா இப்படி கத்துனே, ஏதாவது கெட்ட கனவு கினவு ஏதும் கண்டாயா?" என்று கேட்கவும் தான், அவனுக்கு தான் இது வரை கண்டது எல்லாம் ஒரு கனவு என்பது நினைவுக்கு வருகிறது.

நல்லவேளை இது கனவாகப் போச்சு. இல்லைன்னா நம்ம நிலைமை என்ன ஆகியிருக்கும். இனிமேல் இந்த தொலைக்காட்சி, சமூக ஊடக பக்கமெல்லாம் கொஞ்ச நாளைக்குப் போகவே கூடாது என்று முடிவு செய்து தன் கடமையைப் பார்க்க கிளம்புகிறான்.

 

அக்கறையுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

Three languages

மும்மொழி

Spring and Fall time change

வெளிச்சத்தை சேமிக்க முடியுமா?

Sep 11 2001 Terrorist Attack 20th Anniversary

செப் 11, 2001 - தீவிரவாதத் தாக்குதல்

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net