Chidhambaram Natarajar Temple

Spring and Fall time change

வெளிச்சத்தை சேமிக்க முடியுமா?

அமெரிக்கா உட்பட உலகில் பல நாடுகளில், வெளிச்சத்தை சேமிக்கும் நேரம் என்ற ஒன்று நடைமுறைப் படுத்தப் படுகிறது. அதற்கு "Daylight Savings Time (DST)" என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். அதாவது 'பகலொளி சேமிப்பு நேரம் அல்லது காலம்" என்று சொல்லலாம். இது பெரும்பாலும், "Northern Hemisphere" என்று சொல்லப்படும், வடக்கு அரைகோளம் அல்லது வட துருவத்திற்கு அருகே உள்ள நாடுகளில் தான் அதிகம் கடைப்பிடிக்கப் படுகிறது. அது எப்படி வெளிச்சத்தை சேமிக்க முடியும்? அதை பற்றி சற்று விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.

வெளிசத்தை யாராலுமே சேமிக்க முடியாது. அதுவும் சூரிய வெளிச்சத்தை எப்படி சேமித்து அதிகப்படுத்த முடியும்? முடியவே முடியாத காரியம் அல்லவா. கடமை தவறாத சூரியன் தன் பணியைச் செவ்வனே செய்து கொண்டு இருக்கிறது. அப்படி என்றால், "Daylight Savings Time" என்று இவர்கள் தங்களை தாங்களாகவே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணுவதா? அப்படியல்ல, இது சூரிய வெளிச்சம் விழுகின்ற நேரத்தை அதிகப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறை. நீங்கள் சில நபர்களைப் பார்த்திருக்கலாம், அவர்கள், தங்கள் கடிகாரத்தின் நேரத்தை ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் அதிகமாக வைத்திருப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு இடத்திற்கோ அல்லது நிகழ்ச்சிக்கோ சரியான நேரத்திற்கு அல்லது சற்று முன்னதாகவோ சென்று அடைவதற்கு உதவுகிறது. அதே போன்ற நடைமுறையை தான் இந்த நாடுகளும் கடைபிடிக்கின்றன. ஆக இது அவர்கள் மனதை, அவர்களே நம்பவைக்க செய்யப்பட்ட ஒரு தந்திரம் தான். ஏன் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது என்பதை பார்ப்போம்.

முதலில் "Daylight Savings Time" அல்லது பகலொளி சேமிப்பு நேரம் என்றால் என்ன?

அது வருடத்தின் குறிப்பிட ஒரு நாளில், குறிப்பிட்ட ஒரு நேரத்தில், கடிகாரத்தின் நேரத்தை, ஒரு மணி நேரம் முன்னோக்கி அல்லது அதிகப்படுத்தி வைத்துக்கொள்வது. அதாவது 1 மணி என்பதை 2 மணி என்று மாற்றிக்கொள்வது. அதே போல், அந்த வருடத்தின் இன்னொரு குறிப்பிட்ட நாளின் அதே நேரத்தில், கடிகாரத்தின் நேரத்தை 1 மணி நேரம் பின்னோக்கி அல்லது குறைத்து, மாற்றி வைத்துக்கொள்வது. பொதுவாக இப்படி மாற்றுவது இளவேனிற் காலம் எனப்படும் வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலங்களில் நடைபெறும். நீங்கள் "Spring forward", "fall back" என்ற ஆங்கில சொற்றொடர்களைக் Daylight Savings Time
கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதாவது Spring எனப்படும் வசந்த காலத்தின் தொடக்கத்தில், ஒரு மணி நேரம், கடிகாரத்தின் நேரத்தை முன்னோக்கி வைப்பது (forward). அதே போல இலையுதிர் காலத்தில் (ஆங்கிலத்தில் இலையுதிர் காலத்தில் இலைகள் கீழே விழுவதால் அதை Fall season என்று சொல்வார்கள்) கடிகாரத்தின் நேரத்தை ஒரு மணி நேரம் பின்னோக்கி (back) வைப்பார்கள். ஆக "Spring forward", "fall back" என்ற இந்த சொற்றொடர்கள் உருவானது இப்படித்தான்.

வார நாட்களில் இடையூறு ஏற்படாவண்ணம், இந்த நேரமாற்றங்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை தான் செயல்படுத்தப் படுகிறது. பொதுவாக வசந்த காலத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணி, மூன்று மணி என்று மாற்றப்படும். அதே போல், இலையுதிர் காலத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அதிகாலை இரண்டு மணி, ஒரு மணியாக மாற்றப்படும், இப்படி மாற்றும் பொழுது, வருடத்தின் வசந்த கால தொடக்கதில், ஒரு ஞாயிற்றுக்கிழமை, 23 மணி நேரமும், இலையுதிர் காலத்தின் இறுதியில் வரும் மற்றொரு ஞாயிற்றுக்கிழமை 25 மணி நேரமாகவும் இருக்கும்.

ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இருந்த இந்த நேர மாற்றம், 2005 ஆம் ஆண்டிலிருந்து மார்ச்சு முதல் நவம்பர் வரை அதிகபடுத்தப்பட்டது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச்சு மாதம், இரண்டாவது ஞாயிறு தொடங்கி நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடைபிடிக்கப் படுகின்றது.

இந்த நடைமுறை ஏன் செயல்படுத்தப் பட்டது? இப்படி மாற்றுவதால் என்ன பயன்?

இதற்கு நாம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும். மின்சாரம் கண்டு பிடிப்பதற்கு முன்பு வரை, எண்ணெய் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் தான் இருட்டை விரட்டி வெளிச்சம் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். அப்படி எண்ணெய் மற்றும் மெழுகு வர்த்திகளின் தேவையைக் குறைப்பதற்காக முதன் முதலில் இந்த யோசனை கொண்டு வரப்பட்டதாக தெரிய வருகிறது. பூமியின் சுழற்சியைப் பொறுத்து, புவியின் சில பகுதிகளில், பகல் நேரம் அதிகமாகவும், இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். அப்படி பகல் நேரம் அதிகமாக இருக்கும் நாடுகளில், பகல் நேரம் முடிவுறும் நேரத்தில், வெளிச்சம் இருந்தால் கூட மாலை 6 அல்லது 7 மணி ஆகிவிட்டால் விளக்கு ஏற்றி வெளிச்சம் பெற ஆரம்பித்துவிடுவார்கள். அது போன்ற நேரத்தில் ஒரு மணி நேரத்தைக் கூட்டும் பொழுது, அந்த ஒரு மணி நேரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி, உபயோகப்படுத்தபடும் எண்ணெய் ஆகியவற்றின் தேவை சற்று குறையும், செலவு மிச்சப்படும். இயற்கையாக கிடைக்கும் வெளிச்சத்தை முடிந்த மட்டும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்டது. ஒரு மணி நேரம் அதிகம் இயற்கை ஒளியில் வெளியில் இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக கோடைக்காலங்களில். மெழுகுவர்த்திக்குப் பின், எரிபொருள், மின்சாரம் என்ற வளர்ந்த பின்னும், அவற்றின் பயன்பாட்டு செலவுகளை மிச்சப்படுத்த. அப்பழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு, தற்போது வரை தொடர்கிறது.

பெரும்பாலும் இது கோடை காலத்தில் இருப்பதால், மாலை நேரத்தில் கூடுதல் வெளிச்சமும், குழந்தைகள் அதிக நேரம் விளையாடவும், மக்கள் சோலைகள், பூங்காக்கள், இயற்கை கொஞ்சும் இடங்களில் அதிக நேரம் செலவழிக்கவும் வழிவகுக்கிறது. ஆனால் இந்த நடைமுறையினால் பல அசௌகர்யங்களும் இருக்கின்றன. பல எதிர்ப்புக்குரல்களும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. முதல் உலக்ப்போர் நடந்த காலத்தில் (1918) தான் அமெரிக்காவில், இது முழுவதுமாக நடைமுறைக்கு வந்தது.

இந்த நடைமுறையினால் ஏற்படும் இன்னல்கள் என்ன?

இதனால் ஏற்படும் முக்கியமான பிரச்சினை, நம் உடலுக்குத்தான். சிலருக்கு மனதளவிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நம் எல்லோருக்கும், நம் உடலில், "human circadian rhythm" என ஆங்கிலத்தில் அழைக்கப்படும், "Bilogical Clock" எனப்படும் இயற்கை கடிகாரம் ஒன்று இருக்கிறது. அது சரியான முறையில் இயங்குவதால் தான் நமக்கு, பசி, தூக்கம், விழிப்பு என ஒவ்வொன்றும் சரியான நேரத்தில் நடைபெறுகிறது. இந்த திடீர் நேர மாற்றத்தால், உடலில் இயங்கும் இந்த கடிகாரம் சற்று குழம்பிவிடுகிறது. அதனால் பலருக்கு பல சிக்கல்கள் நேருகிறது. இது பள்ளி செல்லும் குழந்தைகளிடம் இருந்து அலுவலகம் செல்வோர், முதியோர் வரை அனைவருக்கும் ஏதாவதொரு வகையில் ஒரு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக வருட ஆரம்பத்தில் செய்யப்படும் மாற்றத்தால் ஒரு மணி நேரம் தூக்கம் குறைகிறது. தூக்கம் தடைபடுவதால், பல பள்ளி மாணவர்களுக்கு கவன குறைபாடு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அதே போல், தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டுவதால் பல சாலை விபத்துகளும் அந்த காலகட்டத்தில் அதிகரிப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. குளிர்காலத்தில் காலை நேரங்களில் அதிக இருட்டு இருப்பதால், சாலையைக் கடப்பவர்கள் மீது வாகனம் மோதி ஏற்படும் விபத்துகளும் அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல், சிலருக்கு மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட கோளாறுகளும் இச்சமயத்தில் அதிகம் நேர்வதாக இன்னொரு ஆய்வும் குறிப்பிடுகிறது. பல மருத்துவ நிபுணர்கள், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நேர மாற்றத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள், உடலின் இயற்கை கடிகாரத்தை வருடத்திற்கு இரண்டு முறை மாற்றுவது தொல்லை மட்டுமல்ல, ஆபத்தும் என்பது அவர்கள் கருத்து.DST 2 small

சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில், இந்த நேர மாற்றத்தால், குழந்தைகளின் உறக்கத்தில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அதனால் அந்த நாள் முழுவதும் அவர்கள் சுறுசுறுப்பின்றி சோர்ந்துபோய் இருபதாகவும், தினசரி நடைமுறைகளை மாற்றி அமைக்க நேருவதாகவும், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், இரண்டு முறை மறக்காமல் கடிகார நேரத்தை முந்தைய இரவே மாற்றி வைக்கவேண்டும். இல்லையென்றால் அடுத்த நாள் ஆரம்பமே அவசரகதியில் தொடங்கி அந்த நாள் முழுவதும் பரபரப்பாக இருந்து முடிந்துவிடும். சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள ஒரு ஆய்வில், 55% சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர், நேரம் மாற்றப்படும் அந்த வாரத்தில் மிகுந்த சோர்வுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அதே போல் விவசாயிகளும், பண்ணைகளில் இருக்கும் கால் நடைகளுக்கு  உணவளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

ஒன்றிரண்டு வாரங்கள் சென்றபிறகு தான் உடல், இந்த புதிய நேர மாற்றத்திற்குத் தன்னை முற்றிலும் தயார் செய்கிறது. மறுபடியும் இலையுதிர் காலம் வந்தவுடன், மீண்டும் இதே பிரச்சினைகள் முளைத்துவிடும். குளிர் காலத்தில், இதில் ஏற்படும் ஒரு நன்மை என்னவென்றால், சில குற்றச்செயல்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. குளிர் காலத்தில், ஒரு மணி நேரம் பின்னோக்கி இருப்பதால், சீக்கிரம் இருட்டி விடும். அதனால் வெளியில் சுற்றுபவர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். ஆகையினால் அந்த நேரங்களில் நடைபெறும் வழிப்பறி, திருட்டு போன்ற சில குற்றச்செயல்கள் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதே போல், பெரும்பாலான மக்கள் குடும்பத்தோடு, கூடுதல் நேரத்தை செலவழிக்க முடிகிறது.

இரயில், விமானம் போன்றவற்றில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், இது போன்ற நேரத்தில், பயண அட்டவணைகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், பயணம் தடைபட்டு இடையூறு நேரவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

இந்த நடைமுறைக்கு தீர்வு என்ன?

நிலப்பரப்பில் பெரியதாக இருப்பதால் அமெரிக்காவில், சாதாரணமாகவே, பல பகுதிகளில் நேரம் வேறுபடுகிறது. கிழக்கில் வாஷிங்டன்னில் தொடங்கி மேற்கில் ஹவாய் தீவுகள் வரை மொத்தம் ஐந்து இடங்களில் வெவ்வேறு நேரம் மாறுபடுகிறது. அது மட்டும் அல்லாமல், தனியாக இருக்கும் அலாஸ்காவில் வேறு ஒரு நேரம். வாஷிங்டன்னில் காலை 10 மணி என்றால், மத்திய அமெரிக்காவில், அது 9 மணியாகவும், அதற்கடுத்து உள்ள மலைப்பாங்கான மாகாணங்களில் 8 மணியாகவும், கலிபோர்னியாவில் 7 மணியாகவும், அலாஸ்காவில் 6 மணியாகவும் கடைசியாக ஹவாயில் அதிகாலை 5 மணியாகவும் இருக்கிறது. இப்படி இருக்கையில், வருடத்திற்கு இரண்டு முறை நேரம் மாறுபடும் போது இன்னும் குழப்பங்கள் அதிகரிக்கிறது. (ஹவாய் தீவுகள் மற்றும் அரிசோனா மாகாணங்களில் இந்த பகலொளி சேமிப்பு நேரம் கடைபிடிக்கப் படுவதில்லை)

 எல்லா செயலுக்குமே ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் நிச்சயம் இருக்கும். அதேபோல் இதற்கும் வரவேற்பும் எதிர்ப்பும் ஆரம்பகாலம் தொட்டே இருந்து வருகிறது. பலர் இந்த நடைமுறையை முற்றிலும் ஒழித்துவிட வேண்டும் என்கிறார்கள். சிலர் இது தொடரவேண்டும் என்கிறாரகள். வேறு சிலரோ, ஒவ்வொரு ஆண்டும் கடிகார நேரத்தை மாற்றாமல், கோடை கால நேரத்தையே தொடரவேண்டும் என்கிறார்கள். 2021ல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், பெரும்பாலான மக்கள், எந்த நேர மாற்றமும் செய்யாமல், எல்லா நாட்டிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரே நேர முறையை பயன்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துவுள்ளார்கள். பல மாகாணங்களும் இது தொடர்பாக "US Congress" எனப்படும் அமெரிக்க பாராளுமன்றத்தில், இதற்கான சட்டத்திருத்தைக் கொண்டு வர முயற்சிகள் எடுத்துக்கொண்டு இருக்கின்றன. அனேகமாக இந்த வருடம் இது தொடர்பாக ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப்படும் அல்லது எட்டப்படும் என தெரிகிறது.

 ஆரம்பத்தில் இயற்கை எரிபொருட்களை சேமிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த நடைமுறை, பெட்ரோலிய எரிபொருட்கள், மின்சார உபயோகம் பன்மடங்காக அதிகரிக்கத் தொடங்கியப்பிறகு, இது தொடங்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் அடிபட்டுப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம், 24 மணி நேரமும் விளக்கு எரிந்துக்கொண்டிருக்கும் பல இடங்களைப் பார்க்கிறோம். விஞ்ஞானத்தின் அசூர வளர்ச்சியில், இரவைப் பகலாக்கி மகிழ்கிறார்கள். பகலை இரவாக்கி கேளிக்கைகள் நடைபெறுகிறது. அதனால் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட இந்த நடைமுறை அவசியமா? இல்லையா? என்பதை பற்றி முடிவு செய்யும் நேரமிது என்பதே பலரின் எண்ணம் ஆக இருக்கிறது.

இயற்கை தன் கடமையை ஒழுங்காக செய்கிறது. இயற்கையோடு ஒன்றி வாழும் பறவைகளும் மிருகங்களுக்கும் எந்த தொல்லையும் இல்லை. அதிகாலை பறவைகள் அலாரம் இல்லாமல் எழுந்து தங்கள் பணியை செய்யத்தொடங்கிவிடுகின்றன. எத்தனை முறை, எவ்வளவு நேரம் மாற்றினாலும், காலையில் சரியான நேரத்திற்கு சேவல் கூவி (நம்மூரில்) நம்மை எழுப்பிவிடும். சிந்திக்க தெரிந்த மனிதனால் தான் இது போன்ற சிக்கல்கள் எல்லாம் ஏற்படுகின்றன.

உங்கள் கருத்து என்ன? கீழே 'கமெண்ட்' பகுதியில் பதிவிடுங்கள்.

 நன்றி
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

Washington Monument in Spring

இளவேனில்

Fall Colors

இலை உதிர் கலை

Pollen Allergies

மலர்ச்சி... கிளர்ச்சி... அழற்சி... Allergy

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net