விலை கிடைக்கவில்லை என்பதால், தங்கள் கடின உழைப்பில் உருவானப் பொருட்களை வீணாக்குவது சரியா?
சமீபத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, ஆவின் நிறுவனத்திற்கு எதிராகப் பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தது. அதன் படி பால் உற்பத்தியாளர்கள், பாலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சட்டி சட்டியாக, கேன் கேனாக, லிட்டர் லிட்டராக பாலை சாலையில் ஊற்றித் தங்கள் எதிர்ப்பைக் காட்டினாரகள்.
ஒரு நாள் இப்படி செய்யும் பொழுதே இவ்வளவு லிட்டர் பால் வீணாகும் என்றால், தொடர் போராட்டம் என்று இது இன்னும் தொடர்ந்தால் எவ்வளவு வீண் ஆகும். கன்றுக்குட்டியைக் கூட முழுமையாக பால் அருந்தவிடாமல் செய்து, பாலைக் கறந்துவிட்டு, இப்படி அதை கீழே கொட்டுவதைப் பார்க்கும் மாடுகளுக்கு கண்ணீர் வந்துவிடாதா? தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் தாயிற்குத் தான் அந்த பாலினுடைய அருமைத் தெரியும். ஆனால் சில தாய்மார்களே பாலைக் கீழே கொட்டுவதைப் பார்க்கையில் மனது வலிக்கிறது.
இதே போல் பல விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு உரிய விலைக் கிடைக்கவில்லை என்பதால் அந்தந்த பொருட்களை கீழே கொட்டியும் அல்லது எரித்தும் வீணாக்குவதை அடிக்கடி செய்திகளில் படிக்கிறோம், காண்கிறோம். அப்படி செய்வது முறையா? அது அவர்களின் உழைப்பை அவர்களே அவமதிப்பது போல் ஆகாதா?
எந்த பொருட்களை உருவாக்குபவர்களுக்கும், அந்தந்த பொருட்களுக்கான நியாயமான விலையை வைக்க, பெற உரிமை உண்டு. அரசாங்கத்திடம் விற்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்றால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அவர்களுக்கு அனைத்துவிதமான உரிமையும் உண்டு. ஆனால் நியாயமான விலை கிடைக்கப் போராடும் அந்த முறையிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் அல்லவா?
இவ்வாறு பாலைத் தரையில் கொட்டி விட எப்படி மனசு வருகிறது. அதுவும் மாட்டை பிள்ளைப்போல் வளர்த்து, பாலைக் கறந்து, பின் அதனை தரையில் கொட்டி வீணாக்குவதால், என்ன பலன்? நீங்கள் கேட்டது எல்லாம் இச்செயலினால் உடனே கிடைத்து விட்டதா?
இப்படி செய்வதற்குப் பதில், பாலில்லாமல் தவிக்கும் எத்தனையோ குழந்தைகளுக்கு அதை இலவசமாகக் கொடுத்தால், அந்த புண்ணியமாவது கிடைக்குமே. இலவசமாக இல்லையென்றாலும் குறைந்து விலைக்கு, எத்தனையோ ஏழைகள், பசிபோக்கும் தன்னார்வ நிறுவனங்கள் அல்லது அனாதை ஆசிரமங்கள் போன்ற ஏதாவது ஒன்றிற்கு கொடுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்ளலாமே, இப்படி ஒன்றும் இல்லாமல் அப்பொருட்களை வீணாக்குவதைப் பார்க்கையில் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது, அந்த பால், தரையில் ஓடுவதைப் பார்க்கையில், அது வெள்ளை நிறமாகத் தெரியவில்லை, மண்ணில் கலந்து ஓடும் அந்த பால், பசுவின் குருதியாகவே தெரிகிறது.
உடனே சிலர், கடவுளுக்குப் பாலால் அபிஷேகம் செய்கிறார்களே என்று கேள்விக் கேட்கலாம். அது தனிப்பட்ட ஒருவர் அல்லது ஆலயம் சார்பாக செய்யப்படும் சடங்கு. அது நம்பிக்கைச் சார்ந்தது, அதில் தலையிடத் தேவையில்லை. அது மட்டும் அல்ல, ஐம்பொன் மற்றும் மூலிகைகளால் சிலைகளில் அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பாலையே தீர்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். அது வீணாகுவதில்லை. ஆனால் இப்படித் தரையில் கொட்டி, யாருக்கும் பயனில்லாமல் செய்வது, என்னைக் கேட்டால், என்னைப் பொறுத்த வரையில் இதுவும் ஒரு குற்றமே, அந்த பசுக்களுக்கு செய்யும் துரோகமே.
இப்படி பாலை சாலையில் கொட்டி, பாலை வினியோகம் செய்யாமல் வீணாக்கி போராட்டத்தை தொடர்ந்தால் மக்கள் அல்லவா பாதிக்கப்படுவார்கள். எத்தனை குழந்தைகள் பாலுக்காகக் காத்திருக்கும்? ஒரு கவிஞர் சொன்னதுபோல, இன்று பல குழந்தைகள் பசும்பாலை அல்லவா தாய்பாலாகி நம்பி இருக்கின்றது. அவர்கள் பாவம் அல்லவா?
வீணாக்குவது என்று சொல்லும் பொழுது, அது வெறும் உற்பத்தியாளர்களை பற்றி மட்டும் சொல்வதாக எண்ணக் கூடாது. இச்செயலை அவர்கள் மட்டும் செய்வதில்லை. நாம் எல்லோருமே தினமும் பல பொருட்களை, ஏதாவதொரு வகையில் வீணாக்கிக்கொண்டு தான் இருக்கிறோம். இவர்களாவது பராவாயில்லை, என்றோ ஒரு நாள் இது போன்று செய்கிறார்கள். ஆனால், நம்மில் பலரோ, தினமும் அல்லவா வீணாக்குகிறோம்.
அதில் மிக மிக முக்கியமானது உணவு பொருட்கள் தான். எத்தனை பேர் எவ்வளவு உணவினை வீணாக்குகிறோம். என்றாவது ஒரு நாள், நாம் வீணாக்குகின்ற அளவு உணவு கூட கிடைக்காமல் வாழும் எத்தனை மக்கள், நம்மைச் சுற்றி இருக்கின்றார்கள் என்று எண்ணிப் பார்த்து, சிந்தித்து இருக்கின்றோமா? ஒரு வேளை உணவு கிடைக்காத பலர் இவ்வுலகில் இருக்கையில், ஒவ்வொரு வேளையும் உணவினை வீணாக்குவது எவ்வளவு பெரிய குற்றம்?
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் மற்ற விழாக்களிலும் நடக்கும் விருந்துகளில், பலர் தட்டில் அல்லது இலையில் வீணாக்கும் உணவு எவ்வளவு தெரியுமா? பல இடங்களில் விருந்தினர் வந்து அமரும் முன்னரே இலையில் எல்லா உணவுகளையும் வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அது உண்பவர்க்குப் பிடிக்குமா? பிடிக்காதா? என்று தெரியாமலேயே வைத்துவிட்டு செல்வதால், சில வகை உணவுகளை பிடிக்காதவர்கள், தொட்டுக்கூடப் பார்க்காமல், இலையில் அப்படியே வைத்து விடுகிறார்கள். அது நேரே குப்பைத் தொட்டிக்கு சென்று விடுகிறது. முன்பாவது சாலையில் திரியும் ஆடு மாடுகள் சில அதை உண்ணும். இப்பொழுது அதற்கு கூட வாய்ப்பில்லை, சாலையில் மரங்கள் இருந்தாலாவது பறவைகள் வரும், அதற்கும் வழியில்லை. சில காலம் முன்பு வரை, விருந்துகளில், விருந்தினர் வந்து அமர்ந்த பின் தான் பரிமாறவே தொடங்குவார்கள். அப்படி செய்கையில், அவர்களுக்கு எந்த உணவு வகை தேவையோ, அந்த உணவைத் தேவையான அளவு பெற்றுக்கொள்வார்கள். இப்பொழுது போல், இந்த அளவுக்கு வீணாவதில்லை.
சில திருமணங்களில், ஆடம்பரம் என்ற பெயரில், முப்பது வகை, நாற்பது வகை என்று பல உணவு வகைகளை பறிமாறுகிறார்கள். அதில் எத்தனை வகை உணவு, எத்தனைப் பேருக்கு பிடிக்கும் என்று கூட தெரியாமல் எல்லாவற்றையும் வைத்துவிடுகிறார்கள். அதில் பலர் எந்த உணவு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக சிறிது ருசி பார்த்துவிட்டு உண்ணாமல் அப்படியே வைத்துவிடுகிறார்கள். இப்படி ஆடம்பர ஆசைக்கு செலவழிப்பவர்கள், வீணாக்கும் தொகையில், ஒரு சதவிகிதம் சில ஏழை எளிய மக்களுக்கும் பகிர்ந்தளித்தால் சிறப்பல்லவா? நிச்சயம் ஒரு மனநிறைவுக் கிடைக்கும்.
தற்போது இது போன்ற விருந்துகளில் வீணாகும் உணவு பற்றி சிறிது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பலர் மிச்சப்படும் உணவுகளை ஏதாவது ஒன்றிரண்டு தன்னார்வ சேவை நிறுவனங்களுக்கு கொண்டு சென்று அளித்துவிடுகிறார்கள். அவர்கள் அந்த உணவினை தேவைப்படுவோர்களுக்கு கொண்டு சேர்த்துவிடுகின்றனர். இது வரவேற்கபட வேண்டிய ஒரு நல்ல மாற்றம்.
அதே போல், சில விருந்துகளில் தற்பொழுது, புதிதாக 'பஃபே" (Buffet) முறை என்று ஒன்று வந்தபின் உணவு இன்னும் அதிகமாக வீணாகிறது. பிடிக்கிறதோ இல்லையோ எல்லாவற்றையும் எடுத்து வந்து, பின் பிடிக்கவில்லை, சுவையாய் இல்லை என்று அப்படியே கொட்டிவிடுகிறார்கள். அது எவ்வளவு பெரிய கொடுமை? உண்மையாகப் பார்த்தால், இம்முறையில் தான் உணவு வீணாவது குறைய வேண்டும். ஏனென்றால் நீங்களாகவே உங்களுக்குப் பிடித்த உணவை பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். உங்களுக்கு தேவையானதை தான் பெறப்போகிறீர்கள். அப்படி பெறும் பொழுதும், அதை வீணாக்குவது சரியல்ல.
இதே போன்று தான் பஃபே பரிமாறப்படும் உணவகங்களிலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதற்காக, எல்லாவற்றையும் தட்டில் அள்ளிப் போட்டுக்கொண்டு வந்து, பிறகு பிடிக்கவில்லை என்று தட்டில் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். அப்படி செய்வது, என்னைப் பெறுத்தவரையில் மிகப்பெரியக் குற்றம். அதில் வீணாவது உணவு மட்டுமல்ல, அந்த உணவை உறபத்தி செய்யக் காரணாமாயிருந்த அத்தனை பேர்களுடைய உழைப்பும் நேரமும் தான்.
இப்படி வீணாவதை குறைப்பதற்காக சில உணவங்களில் "Take whatever you want; Eat whatever you take". (வேண்டிய உணவை எடுத்துக்கொள்ளுங்கள், எடுத்த உணவையெல்லாம் சாப்பிட்டு விடுங்கள்) என்று எழுதி வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். உணவை வீணாக்காதீர்கள் என்று உணவகத்தார் சொன்னால், "நான் காசு கொடுத்து வாங்கியிருக்கிறேன்" என்று தெனாவட்டாகப் பதில் சொல்பவர்களும் உண்டு. காசு கொடுத்து வாங்கியது நான், அதனால் நான் வீணாக்குவேன் என்று சொல்வது மிகப் பெரிய திமிர் மற்றும் கொடுமை மட்டும் அல்ல. அவர்கள் எல்லாம் உணவின் மதிப்பு தெரியாத அறிவிலிகள். அவர்களை எல்லாம் இரண்டு நாள் பட்டினிப்போட்டால், அந்த உணவின் மதிப்புத் தெரிந்துவிடும். பிறகு சிறிது கூட வீணாக்க நிச்சயம் மனது வராது.
நாம் உண்ணும் ஒரு கைப்பிடி உணவு நம் கைக்கு வருமுன், அது எத்தனை இடங்களை கடந்து, அதில் எத்தனை பேர்களுடைய உழைப்பைச் சுமந்து வந்து இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தால் நிச்சயம் வீணாக்க மனது வராது. நம்முடைய முன்னோர்கள், உண்ணும் போது ஒரு பருக்கைக் கூட சிந்தாமல் உண்ணவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு உணவின் மதிப்புத் தெரிந்து இருந்தது. சிலர் ஒரிரு சிறு பருக்கைகள் தானே என்று நினைக்கலாம், ஆனால் அந்த ஒரு சில பருக்கைகளை எறும்புகளுக்குக் கொடுத்தால் ஒரு நாள் உணவாகவே மாறிவிடும். வீணாகும் உணவை அப்படி செய்தாலாவது அதில் ஒரு பயன் உண்டு.
இதைப் பற்றிய ஒரு கதை கூட கேட்டிருக்கிறேன். நம் வள்ளுவர் சாப்பிட அமரும் பொழுதெல்லாம் ஒரு சிறு ஊசி ஒன்றைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தான் சாப்பிடுவாராம். இதை தினமும் கவனித்து வந்த அவரது மனைவி வாசுகிக்கு ஒரே குழப்பம். எதற்காக அந்த ஊசி? அதை ஏன் தினமும் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார்? அதை அவர் பயன்படுத்தி இதுவரைப் பார்த்ததேயில்லையே? என்று பல வினாக்கள் எழும். ஆனால் அதை அவரிடம் நேரடியாக கேட்கவும் தயக்கம். இப்படியே நாட்கள் வருடங்களாக ஓடி விட்டன. ஒரு நாள் வாசுகி அம்மையார் உடல் நலிவுற்று இறக்கும் தருவாயில் இருந்தபொழுது, வள்ளுவர் தன் மனைவியிடம், "நீ என்னிடம் இதுவரை ஒன்று கூட கேட்டதே இல்லையே. உனக்கு ஏதாவது கடைசி ஆசை இருந்தால் தயங்காமல் கேள்" என்று கூறினார். வாசுகியும், தன் மனதில் நீண்ட நாள் விடை தெரியாமல் இருந்த கேள்வியான, "சாப்பிடும் பொழுது எப்பொழுதும் ஒரு ஊசியை வைத்திருக்கிறீர்களே, அது ஏன்? அந்த ஊசியை இதுவரை நீங்கள் பயன்படுத்திப் பார்த்ததேயிலை, அந்த ஊசி எதற்காக?" என்று கேட்டார். வள்ளுவரும் சிரித்துக்கொண்டே, "அதுவா? நீ உணவு பறிமாறும் போது சோறு சிந்தினால் அதை ஊசியால் குத்தி எடுத்து, நீரில் கழுவி விட்டு உண்பதற்காகத்தான். ஆனால் நீ ஒரு முறை கூட ஒரு சோற்றுப் பருக்கையைக் கூட சிந்தியதே இல்லை. அதனால் எனக்கும் அதை பயன்படுத்த வாய்ப்பும் வரவில்லை என்று கூறினார்.
உடனே வள்ளுவர் சாப்பிடும் பொழுது பக்கத்தில் இருந்து பார்த்தீர்களா? அவர் சோறுதான் சாப்பிட்டாரா? என்று எல்லாம் குதர்க்கமாக கேட்கக்கூடாது. வள்ளுவர் வாக்கைப் படித்து வளர்ந்தவர்கள் நாம், அதனால் உணவை வீணாக்கக்கூடாது என்ற கருத்தை உணர்த்துவதற்காக வள்ளுவரை வைத்து சொல்லப்பட்ட கதையாகவும் இருக்கலாம். இந்த கதை உண்மையா பொய்யா என்பது முக்கியமல்ல. சொல்லவந்த கருத்து தான் முக்கியம். உண்ணும் போது மட்டுமல்ல, உணவைப் பறிமாறும் போதும் கூட கவனம் தேவை, உணவை வீணாக்கக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட ஒரு நல்ல கதை இது.
உணவை வீணாக்குவதைப் பற்றி நிறைய பார்த்தோம். ஆனல் வீணடிப்பது என்பது உணவுக்கு மட்டுமல்ல. நீர், ஆடை, எரிபொருள், மின்சாரம் என இயற்கையாக கிடைத்தாலும், செயற்கையாக உற்பத்தி செய்தாலும், எந்தப்பொருளையும் வீணாக்குவது தவறுதான். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
சரி முதலில் சொன்ன கருத்துக்கு மீண்டும் வருகிறேன். எதிர்ப்பை தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதிலேயும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். ஒரு ஒழுங்கு அல்லது முறை இருக்கவேண்டும். இப்படி மற்றவர்களுக்கு பயன்படும் அத்தியாவசிய பொருட்களை வீணாக்கி எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிவிக்க வீணாக்குவது கூட ஒரு வகை குற்றம் தான். அரசாங்கமும் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஒரு சுமூகமான நிலையை எட்ட வேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் விருப்பமும்.
உணவை வீணாக்கமாட்டோம் என்று உறுதி ஏற்போம்.
நன்றி
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.