வெண்டைக்காய் நுனியை ஏன் உடைக்கிறோம் என்று பார்ப்பதற்கு முன், மனிதர்களுக்கு நோய் வருவதற்கு முக்கிய காரணம் என்ன என்று முதலில் பார்ப்போம்.
நம் உடல் சம நிலையை இழப்பது தான், நமக்கு நோய் வர முக்கிய காரணம். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது என எல்லோரும் அறிவோம். அதிலும் நீர், வாயு மற்றும் நெருப்பு ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. அவற்றினுடைய விளைவுகள் தான் சிலேத்துமம் (கபம் அல்லது சீதம்), வாதம், பித்தம் என்பார்கள். அதாவது, சிலேத்துமம் என்றால் குளிர்ச்சி, வாதம் என்றால் வாய்வு/காற்று, பித்தம் என்றால் சூடு. இதையே சித்த மருத்துவத்தில், ஐயம் (சீதம்), வளி (வாதம்), அழற் (பித்தம்) என்று சொல்வார்கள். இம்மூன்றும் சம நிலையில் இருக்கும் பொழுது உடம்பிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இம்மூன்றில் ஏதேனும் ஒன்று மாறினாலும், அது உடலில் உடனே பிரதிபலிக்கும், அதை தான் ஏதாவதொரு நோய் என்று நாம் பெயரிட்டு அழைக்கிறோம்.
இதை தான் நம் தெய்வப்புலவரும் அழகாக குறிப்பிட்டுள்ளார்:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள் : 941)
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நூல்கள் சொல்லும் வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் இம்மூன்றும், ஒருவன் உட்கொள்ளும் உணவு அல்லது செய்கின்ற செயல்களால், கூடி அல்லது குறைந்து போனால் நோய் உண்டாகும் என்று அன்றே அறிந்து கூறியிருக்கிறார் அய்யன் திருவள்ளுவர்.
இங்கு மூன்று என்பது வாதம், பித்தம், சிலேத்துமம் என்பதைக் குறிக்கிறது. அது எப்படி இதை தான் வள்ளுவர் குறிப்பிட்டார் என்று அவ்வளவு உறுதியாக சொல்கிறோம் என்று கேட்கிறீர்களா? அதற்காகத் தான் திருவள்ளுவர், நமக்கு ஒரு நேரடிக்குறிப்பும் ஒரு மறைமுக குறிப்பும் கொடுத்து சென்றிருக்கிறார். எல்லாவாற்றையும் நானே சொல்ல மாட்டேன், நீங்களும் சற்று முயற்சி செய்து கண்டுபிடியுங்கள் என்று நினத்திருப்பார் போல. இந்த குறளில் நேரடி குறிப்பு 'வளி' என்று சொல்லியிருப்பது, அது காற்றைக் குறிக்கும், மறைமுக குறிப்பு, 'மூன்று' என்பது. வளி முதலான மூன்று என்பதால், இது வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்றை தான் குறிக்கிறது.
நம் உடலில் உள்ள சம நிலை மாறுவதற்கு முதல் மற்றும் முக்கியமான காரணம், நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் தான். நாம் உண்ணும் உணவில், இம்மூன்றும் சமன் இழக்காத வகையில் இருக்கவேண்டும். அதை எப்படி நாம் அறியமுடியும்?
எந்த நோயிற்கு மருத்துவமனை சென்றாலும், மருத்துவர்கள் மருந்துகள் கொடுத்து, பின், இந்த இந்த உணவை சாப்பிடுங்கள், இவற்றையெல்லாம் சாப்பிடாதீர்கள் என்று அறிவுறுத்துவார்கள். ஏனென்றால் ஒவ்வொரு உணவு வகைகளிலும், இந்த மூன்றில் ஏதாவதொன்றை அதிகரிக்கும் குணம் உள்ளது. ஆனால் சாமானிய மக்களாகிய நாம் எப்படி அதை எளிதாக அறிந்து புரிந்துகொள்ள முடியும்?
நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகள் பலவற்றில், இவற்றை நாம் சுலபமாக அறிந்துகொள்ள ஒரு எளிய வழி உண்டு.
சிலேத்துமம் (நீர்) - பொதுவாக எந்த காய் கீழ் நோக்கி வளர்கிறதோ அவை நீர்ச்சத்து மிகுந்தது. நீர் எப்பொழுதும் கீழ் நோக்கி பாயும், அது போல, இக்காய்கள் கீழ் நோக்கி வளரும். உதாரணமாக, புடலங்காயை சொல்லலாம்.
வாதம் (வாயு) - இவை பெரும்பாலும் பக்கவாட்டில் வளரும். காற்று எப்படி அகண்டு பரவுமோ அது போல் இக்காய்களும் அகலமாய் வளரும். உதாரணமாக பூசணிக்காயை சொல்லலாம்.
பித்தம் (அக்னி) - இவை பெரும்பாலும் மேல் நோக்கி வளரும். நெருப்பு எப்படி மேல் நோக்கி எரிகிறதோ, அப்படி இக்காய்களும் மேல் நோக்கி வளரும். உதாரணம் மிளகாய்.
அட, நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளைக் கொண்டு இதை எல்லாம் அறியமுடியுமா என்று தானே எண்ணுகிறீர்கள்? நானும் முதலில் கேட்டபொழுது அப்படித்தான் நினைத்தேன். இத்தனை நாட்கள் இதை அறியாமல் இருந்திருக்கிறேன்.
சரிப்பா... வெண்டைக்காயை ஏன் நுனியில் உடைக்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டாய், அதற்கான பதிலை இன்னும் சொல்லவில்லையே என்கிறீர்களா? இதோ வந்துவிட்டேன்....
வெண்டைக்காய் எப்படி வளர்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா?
மிக சரி. அது மேல் நோக்கி வளரும். அதாவது பித்தம் நிறைந்தது, அதிலும் குறிப்பாக, அதன் நுனி இருக்கிறதல்லவா, அங்கு தான் அது அதிகமாக இருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள், அதன் நுனியை உடைத்துவிட்டு உணவில் பயன்படுத்த அறிவுறுத்தினார்கள். என்ன ஒரு அறிவு, இது தான் அனுபவத்தில் வருவது. இது நாள் வரையில், வெண்டைக்காய் முற்றலாக இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துக்கொள்வதற்காக மட்டும் தான் நுனியை உடைக்கின்றோம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். (எங்க ஊரில் சில கடைகளில், வெண்டைக்காய் நுனியை உடைக்க கூடாது, அப்படி உடைத்தால், இருமடங்கு விலை கொடுக்கவேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்)
பொதுவாகவே நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஒவ்வொரு செயலுக்கும், நிச்சயமாக ஒரு காரணம் இருந்திருக்கிறது. அவர்கள் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டார்கள். ஆனால் அது சரியான முறையில் தொகுத்து பாதுகாக்கப்படாமல், வாய்மொழியாக பகிரப்பட்டு பகிரப்பட்டு, காலப்போக்கில் பல செயலுக்கான காரணங்கள் நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது.
அதனால் சில விஷயங்களை, காரணம் தெரியாததால், மூட நம்பிக்கை என்று மறுக்க ஆரம்பித்துவிட்டோம். அதற்கு இன்னொரு முக்கிய காரணம், நம்மை சுரண்ட வந்தவர்கள் செய்த சூழ்ச்சியும் ஆகும். ஆங்கிலேய மோகத்தில் மயங்கியப் பிறகு, நம் முன்னோர்கள் அறிவை மதிக்க முற்றிலும் மறந்துவிட்டோம். மேல் நாட்டவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள பழக்கப்பட்ட நாம், நம் முன்னோர்கள் காலம் காலமாக செய்ததை மட்டும் கேள்விகேட்கிறோம். ஆனால் எல்லா கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. என்ன ஒன்று, என்னைப் போல் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது அது தான் சிக்கல்.
இனி எந்தெந்த செயலுக்கு காரணம் தெரிகிறதோ, அதை உடனே மற்றவர்கள் அறிய செய்யவேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு.
சரி, ஆங்கிலத்தில் வெண்டைக்காயை. "Ladies finger" என்று சொல்கிறார்களே, பெண்கள் விரல் என்ன அவ்வளவு கூர்மையாகவா இருக்கிறது? அல்லது அவர்கள் விரல்களில் அவ்வளவு சூடு இருக்கிறதா? ஏன் அப்படி சொல்லியிருப்பார்கள் என்ற காரணம் தெரிந்தவர்கள் விளக்குங்களேன்.... என்னது? "வெள்ளையா இருகிறவன் (வெள்ளைக்காரன்) பொய் சொல்லமாட்டான்" என்று யாரோ சொல்வது காதில் கேட்கிறது.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.
நன்றி: இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு. ஐயா அவர்கள் சொற்பொழிவில் கேட்ட செய்தியின் அடிப்படையில் தான் இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்.