குறிப்பு: கட்டுரை எழுதுவது எப்படி என்பதை, எப்படி ஒரு கட்டுரை இருக்கவேண்டுமோ, அதே வடிவத்திலேயே, மாணவர்களுக்கு எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் எழுதியிருக்கிறேன். எந்த ஒரு கட்டுரைக்கும், முன்னுரை, பொருளுரை மற்றும் முடிவுரை ஆகிய மூன்று பகுதிகள் இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் இந்தக் கட்டுரையும் எழுதப்பட்டு இருக்கிறது. இந்தக் கட்டுரை, பள்ளி மாணவர்களுக்கு, ஒரு நல்ல கட்டுரை எழுத உதவும் வழிகாட்டியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
முன்னுரை
கட்டுரை என்றால் என்ன? ஒரு நல்ல கட்டுரை எழுதுவது எப்படி? படிப்பவர்கள் மகிழும்வண்ணம், ஒரு நல்ல கட்டுரை எழுதுவதற்கு சில கருத்துகளை, இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப் போகிறேன். இந்த கட்டுரை, அமெரிக்காவின், விர்ஜினியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் 'வள்ளுவன் தமிழ் மைய' மாணவர்களுக்காக எழுதப்பட்டது. ஆனால் இது, ஆர்வமுடன் தமிழ் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கண்டிப்பாக பயன்படும் என்று என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். வாருங்கள் ஒரு நல்ல கட்டுரை எழுதுவது எப்படி என்று பார்க்கலாம்.
கட்டுரை என்றால் என்ன?
ஒரு பொருளையோ, ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு நிகழ்வு/நிகழ்ச்சிப் பற்றியோ, அல்லது எந்த ஒரு விஷயத்தைப் பற்றியோ உங்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களை, முறையாக ஓர் உரையாக எழுதுவதே கட்டுரையாகும். உரை என்பது பேசுவது, அதாவது உரைத்தல். கட்டு என்ற சொல்லுக்கு அமைத்தல் என்று ஒரு பொருள் உண்டு. சொல்ல வந்த கருத்தை (உரையை) அழகாக அமைத்துக் (கட்டி) கொடுப்பது கட்டுரையாகும். ஒவ்வொரு செங்கலாக வைத்துக் வீடு கட்டுவதைப் போல், பொருத்தமான சொற்களை வைத்துக் கட்டப்படும் உரை தான் கட்டுரை.
எந்தக் கட்டுரை எழுதும் பொழுதும், "என்ன, ஏன், எதற்கு, எப்படி, எப்போது, எங்கே, எந்த, எவ்வாறு, எது/எதனால், யார்/யாரால்" போன்ற கேள்விகளைக் உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு பல கருத்துகள் விடையாகக் கிடைக்கும். அவற்றைக் கொண்டு
கட்டுரையை எழுதத் தொடங்கலாம்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், மாணவர்களுக்கு, ஒரு தலைப்பைக் கொடுத்து, கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். அந்த தலைப்புப் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொண்டும், மேலும் அது பற்றி சிந்தித்தும், மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளைக் கேட்டும், அருமையானக் கட்டுரைகளை எழுதலாம். சில தலைப்புகளுக்கு, உங்கள் கற்பனையையும் கலந்து எழுதலாம்.
கட்டுரையின் அமைப்பு
எந்தக் கட்டுரை எழுதினாலும், அந்தக் கட்டுரை, முன்னுரை, பொருளுரை மற்றும் முடிவுரை ஆகிய பகுதிகளைக் கொண்டு இருக்கவேண்டும். முன்னுரையும், முடிவுரையும் ஒரு பத்திக்குள் இருக்குமாறு அமையவேண்டும். முன்னுரை என்பது, எழுதப்போகும் தலைப்பைப் பற்றிய ஓர் அறிமுகம். அது உங்கள் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு, கட்டுரையை முழுவதுமாகப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்கவேண்டும். அதே போல், முடிவுரை என்பது இது வரை சொன்னக் கருத்துகளை ஓரிரு வரிகளில் தொகுத்துக் கூறுவதாகும். அது அந்தக் கட்டுரையைப் படித்தவர்கள் எளிதில் மறக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்த உதவும்.
பொருளுரை என்பது, எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு ஏற்ப, சொல்ல வந்த கருத்துக்களை, படிப்பவர்கள் நன்றாகப் புரிந்துக்கொள்ளும் வகையில் விளக்கிக் கூறும் பகுதியாகும். அதனால் அதனை பல பத்திகளாகப் பிரித்து எழுதுவது நலம். அப்படி எழுதப்படும் சிறுசிறு பத்திகளுக்கு, பொருத்தமான உள் தலைப்புகள் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அது படிப்பவர்களுக்கு, கட்டுரையை மேலும் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஒரு பத்திக்கும் அடுத்தப் பத்திக்கும் ஒரு தொடர்பு இருக்கவேண்டும்.
கட்டுரைக்கானப் பொதுவிதிகள்
கட்டுரை எழுதுபவர்கள், கீழ்க்கண்ட விதிகளைப் பின்பற்றி எழுதினால், நீங்கள் எழுதும் எந்தக் கட்டுரையும் நிச்சயம் சிறப்பாக அமையும்.
- செய்திகளைத் திரட்டுதல் (Gathering Information)
- முறைப்படுத்துதல் (Arranging in order)
- தலைப்புக் கொடுத்துப் பத்தி அமைத்தல் (Paragraph headings)
- பொருத்தமான மேற்கோள், பழமொழிகள், திருக்குறள் அல்லது செய்யுட்களைப் பயன்படுத்துதல் (Suitable proverbs, quotes etc.,)
- வாக்கியங்கள் முழுமையாக இருக்கவேண்டும் (Complete Sentence)
- நடையழகு மற்றும் எடுத்தாளும் திறன் (Flow and Presentation)
- எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருக்கவேண்டும்
- நிறுத்தற் குறிகளை இடுதல் (Proper punctuations)
- மீள் பார்வையிடுதல் (Review)
- கையெழுத்து தெளிவாக இருக்கவேண்டும் (Handwriting)
- தேவையின்றி பிறமொழிச் சொற்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல்
இவை பொதுவான சில விதிகள் தான். உங்கள் எண்ணத்திற்கும் சிந்தனைக்கும் ஏற்ப, கட்டுரைகளைப் படிப்பவர்கள் மகிழும் வண்ணம், உங்களுக்குத் தோன்றும் வேறு உத்திகளும் பயன்படுத்தி எழுதலாம்.
சிறந்த கட்டுரை
கட்டுரைகள், படைப்பாளரின் அறிவாற்றலை, திறமையை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்தக் கட்டுரையைப் படிப்பவர்களின் சிந்தனையையும் தூண்டும் விதமாக அமைய வேண்டும். சொல்ல வந்த கருத்தைவிட்டு விலகாமல், அதே நேரத்தில் ஒரே கருத்தை மறுபடி மறுபடி சொல்லாமல், படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாமல் இருக்கவேண்டும். மொழி வளத்தோடும், கற்பனை நயத்தோடும் அமையும் கட்டுரைகள் படிப்பவர்களின் மனதை கவரும். எழுத்து, கருத்து மற்றும் இலக்கணப் பிழைகள் இல்லாமல் இருக்கவேண்டும். இப்படி எழுதப்படும் கட்டுரைகளை அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். ஒரு முறைக்கு இரு முறை எழுதியக் கட்டுரையைப் படித்துப் பார்த்தால், கட்டுரையில் இருக்கும் தவறுகள் புலப்படும்.
நல்ல கட்டுரைகள் எழுதுவதற்கு நல்ல நூல்களை அதிகம் படிக்கவேண்டும். செய்தித்தாள்கள், வார/மாதப் பத்திரிகைகளைப் படித்து மற்றும் தொலைக்காட்சி செய்திகளைக் கேட்டு, அன்றாடம் நடக்கும் ஊர்/நாட்டு/உலக நடப்புகளைத் தெரிந்துக்கொள்ளவேண்டும். இவை எல்லாம் உங்களுக்கு நிறையத் தகவல்களை அள்ளித் தரும்.
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"
என்று திருவள்ளுவர் கூறியது போல், பல நூல்களை கற்க கற்க உங்கள் சிந்தனையும் அறிவும் பெருகும். அவை உங்களுக்கு நல்ல கட்டுரைகள் எழுத உதவிகரமாக இருக்கும்.
முடிவுரை
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல், உங்கள் கட்டுரைகளையும் எழுதிப் பழகுவது உங்களுக்கு நல்ல பலன் தரும். எந்தச் செயலுக்கும் பயிற்சி அவசியம். "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற ஔவைப்பாட்டியின் வாக்குக்கேற்ப நிறைய எழுதிப் பழகுங்கள். உங்கள் எண்ணத்தை அழகாக வெளிப்படுத்துங்கள். உங்கள் கட்டுரைகளும் நல்ல சிறப்பானக் கட்டுரைகளாக நிச்சயம் அமையும். என்ன மாணவர்களே, கட்டுரை எழுத தயாராகிவிட்டீர்களா?
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.