Chidhambaram Natarajar Temple

Ilayaraja S Janaki SPB

இசைக்கு மொழி இல்லை

இசைக்கு மொழி கிடையாது என்பதை நாம் அனைவருமே அறிவோம். அப்படி மொழிக்கப்பாற்பட்ட ஒரு அருமையான இசையைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பல மொழிகளில், பல வித காட்சி அமைப்பில் வெளிவந்து வெற்றிப் பெற்ற ஒரு திரைப்படப் பாடல் தான் அது. அப்படி ஒரு பாடல் இல்லை இல்லை, அப்படி ஒரு இசை மெட்டு, ஆறு திரைப்படங்களில், நாலு மொழிகளில் வந்திருக்கிறது என்று கூறினால் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை, அப்படிப்பட்ட ஒரு பாடல் உண்டு என்பது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

அந்த ஒரு குறிப்பிட்ட பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். கவிதை என்று எதையாவது எழுதி மகிழும் எனக்கு, அற்புதமான. அழகான கவிதை வரிகளால் எழுதிய அந்தப் பாடல் எப்படி பிடிக்கமால் போகும். எனக்கு மட்டுமல்ல, அந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்குமே நிச்சயம் பிடிக்கும்.ilaiyaraaja

42 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 'சங்கத்தில் பாடாத கவிதை..." என்று தொடங்கும் ஓர் அருமையான பாடல் தான் அது. உங்களில் பலர் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்திருக்கலாம். ஆனால் காலப் போக்கில், நீண்ட நாட்கள் கேட்காமல் இருந்து மறந்தும் போயிருக்கலாம், (இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்

தமிழக அரசவைக் கவிஞராக இருந்த, சமீபத்தில் மறைந்த, புலவர் புலமைப்பித்தன் அவர்கள், இசைஞானி இளையராஜா அவர்களின் இசையை அனுபவித்து, உள்வாங்கி எழுதிய ஒரு அற்புதமான பாடல். 'மயிலிறகால் வருடுவது போல்' என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் அனுபவித்து இருக்க மாட்டீர்கள், இந்தப் பாடலைக் கேளுங்கள், கண்டிப்பாக அந்த அனுபவம் கிடைக்கும். அந்தப் பாடலைப் பற்றி என் எண்ணங்களை தான் இந்தக் கட்டுரையில் பகிர்ந்திருக்கிறேன்,

அதற்கு முன் இதே மெட்டில் வெளிவந்த மற்ற பாடல்களைப் பார்த்துவிட்டு நம்முடைய பாடலுக்குள் செல்வோம்.

பொதுவாக பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள், தங்களுக்குப் பிடித்த அல்லது ஒரு மொழியில், அம்மொழி மக்களுக்கு மிகவும் பிடித்து, 'ஹிட்டாகி' வெற்றிப்பெற்றப் பாடலை வேறொரு மொழி திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஒரு இசை/மெட்டு/இராகம் இளையராஜாவிற்கு மிகவும் பிடிக்குமோ என்னவோ, இதே மெட்டைப் பல மொழிகளில் பயன்படுத்தி இருக்கிறார். அதுவும் தமிழிலேயே இன்னொரு திரைப்படத்திலும் உபயோகப் படுத்தியிருக்கிறார்.

வெவ்வேறு திரைப்படங்களில் வெவ்வேறு சூழ்நிலைக்குப் பயன்படுத்தப் பட்டுள்ள இந்த மெட்டு, எல்லா காட்சிகளுக்கும் மிக அழகாகப் பொருந்துகிறது. எல்லா மொழிகளிலும் வெற்றிப் பெற்றிருக்கிறது. அனைத்துப் பாடல்களின் இணைப்புகளையும், இப்பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன். கேட்டுப் பார்த்து இரசித்து மகிழுங்கள்.

மலையாளம்

முதன் முதலில் இந்த மெட்டை "ஓலங்கள்" (அலைகள் என்று பொருள் - 1982 ஆம் ஆண்டு) என்ற மலையாளத் திரைப்படத்தில் "தும்பி வா தும்பக்குடத்தின்" என்ற பாடலிற்கு தான் பயன்படுத்தியிருக்கிறார் இசைஞானி அவர்கள், இசைக்குயில் எஸ். ஜானகி அம்மா அவர்கள் இனிமையானக் குரலில் பாடி அசத்தியுள்ளார்கள்..

ஆனால் அந்த மெட்டு, நம்மைப் போலவே இளையராஜவையும் கண்டிப்பாக, மிகவும் மயக்கியிருக்க வேண்டும். அதனால் தான் அதை பல படங்களிம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்.

அந்த மலையாள படத்தை நான் பார்த்ததில்லை, பாடல் கட்சிகளைப் பார்த்திருக்கிறேன், மகிழ்ச்சியான ஒரு சின்ன குடும்பத்தை கண் முன் காட்டுகிறது. எல்லோருக்கும் அவர்களின் சிறுவயது நினைவைக் கொண்டுவரலாம், பாடலுக்கான இணைப்பை பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்.

தெலுங்கு

"நிரீக்ஷனா" (காத்திருப்பு" என்று பொருள் - 1986 ஆம் ஆண்டு) என்ற தெலுங்குப் படத்தில் "ஆகாஸம் ஏனாதிதோ..." என்ற பாடல், மறுபடியும் எஸ். ஜானகி அவர்கள் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். சில திரைப்பட விருதுகள் பெற்றிருக்கிறது இத்திரைப்படம். இந்தப் பாடலைப் பார்க்கும் பொழுது, காதலனை நினைத்துக் காதலி ஏங்கிப் பாடும் ஒரு காதல் பாடலாகத் தெரிகிறது.s janaki

இதே தெலுங்கு படம், தமிழில் அதே ஆண்டில் "கண்ணே கலைமானே" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (Dubbing) வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தில் தான் தமிழில் மீண்டும் அதே மெட்டை இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார்.

"நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே... தீக் கூட குளிர்க்காயுதே" என்ற பாடல், கவிஞர் அறிவுமதி எழுதியது. இதுவும் ஜானகி அம்மா பாடியது தான். இந்தப் பாடல் வரிகளும் நன்றாக இருக்கிறது, காதலையும் இயற்கையும் இணைத்து அழகாக படைத்திருக்கிறார் கவிஞர். பாடலுக்கான இணைப்பை பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்.

ஹிந்தி

ஹிந்தியில் இரண்டு திரைப் படங்களில் இந்த மெட்டு சிறு சிறு மாற்றங்களுடன் வந்திருக்கிறது

முதலில், 1996 ஆம் ஆண்டு வெளிவந்த "அவுர் ஏக் பிரேம் கஹானி" (இன்னுமொரு காதல் கதை) - "மண்டே தோ உத்கர்..." என்ற பாடல். மறைந்த இளைய நிலா எஸ் பி பி அவர்களும் ஆஷா போன்ஸ்லேயும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இது கல்லூரி மாணவர்கள் பாடும் பாட்டு.

இந்தப் பாடல்களில் உள்ள ஓர் ஒற்றுமை என்னவென்றால், இந்த மூன்று படங்களுமே (மலையாளம், தெலுங்கு), ஹிந்தி) பாலுமகேந்திரா அவர்கள் இயக்கியது தான்.

இறுதியாக 2009ல் வெளி வந்த "பா" என்ற ஹிந்திப் படத்திலும் இந்த பாடல் வருகிறது. அதில் "கும் சும் கும்" என்ற தொடங்கும் பாடல். தான் அது. இதில் சில நவீன இசைக்கருவிகளைப் பயன்படுத்தி சற்று வித்தியாசம் காட்டியிருப்பார் இசைஞானி, ஆனால் அதே மயக்கும் மெட்டு தான்,

இளையராஜாவின் புதல்வி மறைந்த பவதாரிணி அவர்கள் தம்முடைய இனிய குரலால் இந்த ஹிந்திப் பாடலை அருமையாகப் பாடியிருக்கிறார். பாடலுக்கான இணைப்பை பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்.

எனக்குப் பிடித்த பாடல்

ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது மறைந்த கேப்டன் விஜய்காந்த அவர்கள் நடித்த 'ஆட்டோ ராஜா" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "சங்கத்தில் பாடாத கவிதை" என்ற பாடல் தான். இந்த மெட்டு இளையராஜாவிற்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என்றால், இதை ஒரு டூயட்டாக மாற்றி அவரே மிக அருமையாக ஜானகி அம்மாவோடு இணைந்து பாடி பரவசமூட்டி இருக்கிறார்.

புலமைப் பித்தன், காதல் பித்தனாய், தமிழ்ப் பித்தனாய் மாறி, கன்னியின் அழகை, கன்னித் தமிழில் ஓவியமாய்த் தீட்டிக் கொடுத்திருக்கிறார். தமிழ்த் தேனில் குழைத்துக் கவிச்சுவைப் படைத்திருக்கிறார். நிறைய காதலையும், கொஞ்சமாய் காமத்தையும் கிள்ளிக் கொடுத்திருக்கிறார், வரம்பு மீறாமல் தமிழழகை ஆனந்தமாய் அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

"சங்கத்தில் பாடாத கவிதை" என்ற முதல் வரியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து இரசிக்க ஆயத்தம் செய்துவிடுகிறார் கவிஞர். தமிழ்ச்சங்கத்தில் எத்தனையோ புலவர்கள் எண்ணிலடங்கா கவிதைகளைப் படைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்ச்சங்கத்தில் இது வரை பாடாத, ஒரு புது வித கவிதையை இவள் அங்கத்தில் யார் எழுதியது என

"சங்கத்தில் பாடாத கவிதை (உன்)
அங்கத்தில் யார் தந்தது"

என்று கேட்டு வியப்புக் கொள்கிறார்.

ஆனால் அந்த வரிகளுக்குப் பிறகு ஜானகி அம்மாவின் 'தா ரா ர ர ர ர....:" என்ற அந்த ஆலாபனை இருக்கிறதே, அடடா நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறது. வெறும் ஆலாபனையையே கேட்டுக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இதே போல் மூன்று சரணங்களிலும் இடையில் வரும் "ஆஆஆஅ" என்ற ஆலாபனையையும் சேர்த்துக்கொள்ளலாம். நம்மை அப்படியே மெய்மறக்கச் செய்துவிடும்.

"சந்தத்தில் மாறாத நடையோடு" என்று வரும் அடுத்த வரியில், பெண்ணின் நடைக்குப் புதிய உவமைக் கண்டிருக்கிறார் புலவர். பொதுவாக கவிஞர்கள், பெண்களின் நடைக்கு, "அன்ன நடை' என்று தான் சொல்வார்கள். ஆனால் புலமைப்பித்தன், புதுமைப்பித்தனாக மாறி, அன்னத்தின் நடை, காலம் மாற மாற, மாறுபட வாய்ப்புண்டு, ஆனால் தமிழ்க்கவிதையின் சந்த நடை என்றும் மாறாது அதே அழகுடன் அதே தாளலயத்துடன் இருக்கும். இந்த கன்னியின் நடையும் அப்படித்தான் இருக்கிறது என்று எண்ணி சந்தத்தை உவமைப்படுத்தி உவப்பூட்டுகிறார்.

கவிஞர்களுக்கே உரிய கற்பனை குதிரையில் பயணித்து, எந்தப் பெண்ணை வர்ணிக்கின்றாரோ, அந்தப் பெண்ணே இது கை, கால் என்று சொன்னாலும் நம்பமறுத்து, கையை செங்காந்தள் மலரென்றும் கால்களை செவ்வாழைத் தண்டென்றும் சத்தியம் செய்கிறார்

"கை என்றே செங்காந்தள் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ"

என்ற வரிகளில்.

ஆனால் அடுத்து வரும் வரியில், நானும் அவ்வப்போது மற்ற கவிஞர்களைப் போலத்தான் என்று தெளிவுபடுத்துகிறார். கவிமனம் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் சிந்திக்குமோ? என்று எண்ணும் வகையில் அந்த வரியில் மற்ற கவிஞர்களோடு ஒத்துப்போகிறார்.

"மை கொஞ்சம்... பொய் கொஞ்சம்,,,
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்"

அது என்னவோ தெரியவில்லை, மைத் தீட்டிய கண்கள் எல்லாம் பொய்பேசும் என்றே பெரும்பாலான கவிஞர்களும் நம்புகிறார்கள். பாவையின் பார்வையின் பொருளை புரிந்துக்கொள்ள முடியாமல் அந்தப் பாவையை குறை சொல்லிவிடுகிறார்களோ? அல்லது மெய்யாகவே பாதிக்கப்பட்டு சொல்லியிருக்கிறார்களோ? அக்கவிஞர்களுக்கே வெளிச்சம்.pulamaipiththan

"அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்"

என்று ஒரு இடத்தில் மோகம் கொள்கிறார்.

"ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது"

என்று இன்னொரு இடத்தில் கோபம் கொள்கிறார். அனால் அடுத்த வரியில் அந்த கேள்விக்கு விடையும் தந்துவிடுகிறார். அதை நீங்களே பாடலைக் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்:.

காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வதுண்டு. ஆனால் காதல் கொண்ட கண்களுக்குத்தான் அழகை இரசிக்கின்ற பார்வையுண்டு என்று அடுத்து வரும் இருவரிகளில் தெளிவுபடுத்துகிறார்.

"சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயம்"

இவ்வரிகளில் தான் என்னென்ன நயம்? தூங்காது துன்ப படும் விழிகள் எரிச்சல் அல்லவா கொள்ளும்? ஆனால் காதல் கொண்டவர்கள் விழிகள் மட்டும் ஆர்ப்பரித்து துள்ளும், தூங்காது இரசித்து மகிழும் இரகசியத்தை அந்த விழிகள் யாரிடம் சொல்லும்.

கவிஞர், இந்தப் பாடலில் பெண்ணின் அழகை மட்டும் புகழ்ந்து பாடவில்லை. பெண்ணின் அழகோடு தமிழையும் புகழ்ந்துப் போற்றுகிறார்.

"காலத்தால் மூவாத உயர் தமிழ்"

என்று பாடி தமிழ் என்றும் கன்னித் தமிழ் தான் என்று, ஒன்றுக்கு இரண்டு முறை கட்டியம் கூறுகிறார். அது மட்டுமல்ல, அந்த கன்னித் தமிழ் மற்ற மொழிகளை விட உயர்ந்தது என்ற உணமையை உரக்கச் சொல்கிறார். எத்தனை காலமானாலும் தமிழ் இளமையாகத் தானிருக்கும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழ் கவிஞர்கள் அந்த கன்னித் தமிழை இரசிக்கத்தான் செய்வார்கள் என்று உறுதிப்படுத்துகிறார். இந்த இடத்தில் 'மூ' என்றால் மூன்று அல்ல, மூப்பு என்ற பொருளில் மூப்படையாத உயர்ந்த தமிழ் என்று புகழ்ந்து கூறுகிறார். இந்தப் புவிக்கு வந்து போகும் மக்களுக்கு வயது கூடலாம், ஆனால் என்றும் வாழும் தமிழுக்கு மட்டும் மூப்பில்லை என்று கர்வம் கொள்கிறார்.

நான் ஏற்கனேவே சொன்னது போல், புலமைப்பித்தன் இசையை இரசித்து வரிகளை வடித்திருக்கிறார். இசையரசனோ இன்னிசை அமைத்து, இராகதேவனாய் கவிதை வரிகளில் மயங்கிப் பாடியிருக்கிறார். இருவருகளுக்கிடையில் ஜானகி அம்மா, தம் பங்கிற்கு, தன் வசீகர குரலில் மயக்கி, இருவரையும் தூக்கி சாப்பிட்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக... "சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்... சிந்தித் தேன் பாய்கின்ற உறவை" என்ற ஒரு இடம் போதும். இந்த வரிகளை இரசித்து, நிறுத்தி, அனுபவித்து மெய்மறந்து அமைதியாகி பின் மீண்டும் தன் உணர்வு வந்து அற்புதமாகப் பாடியிருப்பார். காதல் கொண்ட உள்ளம் அனைத்தும் தம்மை மறந்து இரசிக்கும் ஓரிடம் அது. தம் இளமைக் காலங்களை கண்டிப்பாக அசைப்போடும். அந்த வரிகளை முதலில் இசைஞானி வசன நடையில் இரசனையோடு சொல்லிப்பார்ப்பார். அதை இராக தேவதை மீண்டும் அதே வரிகளை மெதுவாகச் சொல்லி, அதன் சுவை புரிந்து, நாணம் கொண்டு அடடா... இதுவல்லவா இசை மழை. நடித்த நடிகையும் அதை உணர்ந்து நடித்திருப்பார்.

கொஞ்சும் தமிழ் வரிகள், மயக்கும் இசை, இசைஞானியின் இனிக்கும் குரல், ஜானகி அம்மாளின் காந்தமாய் இழுக்கும் காந்தர்வக் குரல் வளம், மற்றும் அந்தப் பாடலுக்கு நயமாகவும் நளினமாகவும் ஆடி நடித்த, இறந்தும் நம் இதயங்களில் வாழும் இளவயது விஜய்காந்த் & தமிழைப் புரிந்து நடித்த வட இந்திய நடிகை காயத்திரி. (அவரைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை) என எல்லாமே பொருத்தமாக அமைந்திருப்பது தான் இந்தப் பாடல் நம்மை மயக்கியதற்கு காரணம் என்று நான் எண்ணுகிறேன்.. இந்தத் திரைப்படத்தில் ஒரு சுவாரசியமான செய்தி என்னவென்றால், இந்தப் பாடலைத் தவிர மற்ற பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ்.)auto raja

இந்தப் பாடலை இப்பொழுது பல இளம் பாடகர்கள் பாடுகிறார்கள். நான் கேட்ட வரையில் எல்லோருமே "செவ்வாழை இலைகள்" என்றே பாடுகிறார்கள். ஆனால் புலவர் "செவ்வாழை இணைகள்" என்று தான் எழுதியிருக்கிறார். இலையை எப்படி கால்களுக்கு உவமை சொல்வார்கள்? என்று கூட உணராமல். வரிகளைப் புரிந்துக்கொள்ளாமல் பாடுகிறார்கள். தமிழ் கவிதை வரிகளை உணர்ந்துப் பாடினாலே அது ஒரு தனி சுவை தரும். அதே போல் "லிரிக்கள் வீடியோ போடுபவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைய இளைய தலைமுறை தமிழ்க்கற்ற அழகை அதில் பார்க்கலாம்.. நமக்கு தான் வருத்தமாக இருக்கிறது. இவர்களாவது பராவாயில்லை, தமிழ்த் தொலைக்காட்சிகள், அதற்கும் மேலே. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட, பல சொற்களை தவறாகத் தான் போட்டிருந்தார்கள். எவ்வளவோ செலவு செய்பவர்கள், ஒரு தமிழாசிரியரை வைத்து இவற்றையெல்லாம் சரி பார்க்கக் கூடாதா? தமிழகத் தொலைக்காட்சிகள், தமிழை வளர்க்காவிட்டாலும் பராவாயில்லை தமிழைச் சிதைக்காமல் இருந்தால் நல்லது.

எது எப்படியோ, இந்தப் பாடலை நான் மிகவும் இரசித்து மகிழ்ந்தேன். சில பாடல்களை ஓரிரு முறை கேட்கலாம். சில பாடல்களை மட்டும் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும், என்னைப் பொறுத்த வரையில் அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இது. இப்பாடல்களைப் பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவிக்கவும். அதே போல் இந்த ஆறு பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்று கமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள்.

இன்னொரு நல்ல பாடலைப் பற்றி இன்னொரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.

நன்றி.

அன்புடன் என்றும்
இசையிலும் கவிதையிலும் மயங்கி
இராம்ஸ் முத்துக்குமரன்.

 

இந்த பாடல்களின் யூ ட்யூப் இணைப்புகள் (YouTube Links) இதோ...

1982 Tamil          Auto Raja - சங்கத்தில் பாடாத கவிதை....  Sangaththil paadatha kavithai

1982 Malayalam  Olangal- தும்பி வா தும்பக்குடத்தின்... Thumbi vaa thumbakudathin

1986 Telugu        Nireekshana - ஆகாஸம் ஏனாதிதோ... Aagasam yenathido

1986 Tamil          Kanne Kalaimane - நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே... Neer veelchi thee mootuthe

1996 Hindi          Our Ek Prem Kahahi - மண்டே தோ உத்கர்... Monday tho uthkar

2009 Hindi          Pa - கும் சும் கும்... Gum Sum Gum

 

தொடர்புடைய கட்டுரைகள்

Three languages

மும்மொழி

Arunagirinathar

ஓரெழுத்துப் பா....

International Mother Language Day

என் மொழி

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net