பாரில், பழம்பெரும் பாரதத்திற்கு அடுத்து மிகப்பெரிய ஜனநாயக நாடு அமெரிக்கா தான். தற்போது அமெரிக்காவில் தேர்தல் காலம், விறுவிறுப்பாகத் தேர்தல் பிரச்சாரங்கள் நடைப்பெற்று வருகிறது. அந்த அமெரிக்கத் தேர்தல் எப்படி நடைபெறுகிறது, அதிபர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார், அந்த தேர்தல் பற்றிய சில சுவையானச் செய்திகள் ஆகியவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
தேர்தல் நாள்
அமெரிக்காவில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம், முதல் செவ்வாய்க் கிழமையன்று தான் தேர்தல் நடக்கும். இந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் என்று எப்போது தேர்தல் வரும் என்று எவரும் குழப்பமடைய மாட்டார்கள். தேர்தல் தேதி எது என்று முன் கூட்டியே தெரிவதால், எந்தவொருக் குழப்பமும் இல்லாமல் தேர்தல் வேலைகளைப் பார்க்கலாம். எந்த மாகாணத்தில், எந்த பதவிக்கு என்றாலும் நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமை தான் தேர்தல். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிபர் தேர்தலும் அதே நாளில் நடைபெறும். இதுவும் கிட்டத்தட்ட ஒரு, "ஒரே நாடு ஒரே தேர்தல்" நடைமுறை தான், ஒரு வேறுபாடு என்னவென்றால், எல்லா மாநிலத்திற்கும் தேர்தல் நடப்பதில்லை, எந்தெந்த மாநிலத்தின் பதவி முடிவடைகிறதோ, அவற்றிற்கு மட்டும், அந்த ஆண்டு நவம்பர் மாத முதல் செவ்வாய்க் கிழமையன்று தேர்தல் நடைபெறும்.
முன்கூட்டிய வாக்குப்பதிவு
அமெரிக்காவின் மத்திய அரசாங்கம் 'ஃபெடரல் கவர்மெண்ட்' (Federal Government) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில், ஃபெடரல் சட்டங்கள் (Federal LAws) தவிர்த்து, ஒவ்வொரு மாகாணத்திற்கு சில, தனித்தனி சட்ட விதிகள் (State and Local Laws), நடைமுறைகள் இருக்கின்றது. அதன்படி, சில மாகாணங்களில், முன் கூட்டியே வாக்களிக்கலாம். அதாவது நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமைக்கு, ஒரு மாதத்திற்கு முன் இருந்தே பல மாகாணங்களில் குறிப்பிட்ட நாட்களில், வாக்களிக்கலாம். அதே போன்று தபால் முறையிலும் (Mail in Votes) வாக்களிக்கலாம்.
அதிபர் தேர்தல்
.தற்பொழுது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருப்பதால், அந்தத் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது, அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும், அதிபர் தேர்தலில் போட்டியிட, குறைந்த்பட்ச வயது 35. அவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும்.. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை அதிபராக பதவியேற்கலாம்.
அதிபர் தேர்தல் ஒரே நாளில் நடந்தாலும், தேர்தல் நடவடிக்கைகள், அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கிவிடும்.
அமெரிக்கத் தேர்தலில் எப்பொழுதும் இரண்டேயிரண்டு முக்கிய கட்சிகளுக்குள் தான் போட்டியே, ஒன்று ஜனநாயகக் கட்சி (Democratic Party). மற்றொன்று குடியரசுக் கட்சி (Republican Party). இதைத் தவிர ஒன்றிரண்டு சிறு கட்சிகள் உள்ளன ஆனால் அவர்களால் இதுவரை பெரிதாக சாதிக்கமுடியவில்லை. அதனால் எந்தத் தேர்தல் என்றாலும் இவர்களிருவருக்கும் இடையில் தான் போட்டி. காலம் காலமாக இப்படித்தான் நடந்திருக்கிறது, நடந்துக் கொண்டு இருக்கிறது. இனிமேலும் அப்படித் தான் இருக்கும். இந்தியா போன்று ஆயிரக்கணக்கான கட்சிகள் இங்கு கிடையாது. அதனால் தேவையில்லாத அரசியல் கட்சிகள் சார்ந்த சண்டைகள் மற்றும் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் வேலைகள் போன்றவை கிடையாது. ஆனால் இங்கும் 'அரசியல்' உண்டு.
அதிபர் வேட்பாளார்களைத் தேர்ந்தெடுக்கும் முறை
இங்கு அதிபர் தேர்தலில் போடியிடக் கூடிய வேட்பாளர்கள் கூட தேர்தல் வைத்து தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிபர் தேர்தல் நடக்கும் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாகாணத்திலும், அக்கட்சிகள் சார்பாக யார் யார் எல்லாம் வேட்பாளர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் அக்கட்சிகள் நடத்தும் 'பிரைமரி' (Primary) மற்றும் 'காக்கஸ்' (Caucus) என்ற தேர்தல்களில் போட்டியிட வேண்டும். சில மாகாணங்களில் காக்கஸும், பெரும்பாலான மாகாணங்களில் ப்ரைமரியும் நடைபெறும்.
காக்கஸ் என்பது அந்தக்கால நடைமுறை, எந்த மாகாணத்தில் காக்கஸ் நடைபெறுகிறதோ, அங்கு, ஒவ்வொரு ஊரிலும், ஓரிடத்தில் அக்கட்சித் தொண்டர்கள் ஒன்று கூடி, எந்த வேட்பாளருக்கு தங்கள் ஆதரவு என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து, தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளாராக யார் வரவேண்டும் என்று தீர்மானிப்பார்கள்.
பிரைமரி என்பது வாக்குச்சீட்டு முறைப்படி நடத்தப்படும் தேர்தல். இது அந்த மாகாண மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகளால் நடத்தப்படும். இந்த பிரைமரித் தேர்தல்களில் பெரும்பாலும் அக்கட்சி சார்ந்த தொண்டர்கள் தான் வாக்களிப்பார்கள், ஆனால் எந்தக்கட்சியையும் சாராத பொதுமக்களும் வாக்களிக்கலாம்.
இந்த இரண்டு கட்சிகளும், ஒவ்வொரு மாநிலத்திற்கும், தங்கள் கட்சி சார்பாக, இத்தனை பிரதிநிதிகள் (Delegates - டெலிகேட்ஸ்) என்று வகுத்திருப்பார்கள். அந்ததந்த மாநிலத்தில் நடைபெறும் காக்கஸ் அல்லது பிரைமரியில், வேட்பாளர்கள் பெறும் வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில், அவர்களுக்கான் பிரதிநிதிகள் கிடைப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு மாநிலத்தில் 100 பிரதிநிதிகள், அங்கு 8 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், ஒவ்வொரு வேட்பாளரும் பெறும் சதவிகிதத்தின் அடிப்படையில் அந்த 100 பிரதிநிதிகளும் பிரித்துக்கொடுக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட இத்தனைப் பிரதிநிதிகள் பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணிக்கை இருக்கிறது. இப்படி ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை நடைபெறும் தேர்தல்களில், எந்த வேட்பாளார் அந்த எண்ணிக்கையில் பிரதிநிதிகளைப் பெற்றிருக்கிறாரோ, அவரே அக்கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆகஸ்ட் மாதம் நடைபெறும், அக்கட்சிகளின் தேசிய மாநாட்டில் (National Convention), தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்த வேட்பாளரை, நாங்கள் மனப்பூரவமாக் ஆதரிக்கிறோம் என்று அறிவிப்பார்கள். அதற்கு பின் தான் அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மாறுவார்.
அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முறை
அமெரிக்க அதிபர் தேர்தலில், 'எலெக்டோரல் காலேஜ்' (Electoral College) என்ற முறை பயன்படுத்தப் படுகிறது. அது என்ன எலெக்டோரல் காலேஜ்? அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன் அமெரிக்க பாராளுமன்றத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அமெரிக்கப் பாராளுமன்றம் 'United States Congress' என்று அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு சபைகள் உண்டு. ஒன்று 'United States Senate.' (Senate - செனட்) எனப்படும் மேல்சபை. இரண்டாவது, 'United States House of Representatives' *ஹௌஸ் ஆப் ரெப்ரெசெண்டேட்டிவிஸ்) எனப்படும் கீழ்சபை.
செனட் சபை 100 உறுப்பினர்களைக் கொண்டது. அதாவது, அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் மற்றும் தலைநகரான வாஷிங்டன் டி.சி (Washington D.C). உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட் உறுப்பினர்கள் உண்டு, ஆக, மொத்தம் 100 உறுப்பினர்கள். வாஷிங்டன் டி.சி தனி மாகாணம் கிடையாது, அதனால் அவர்களுக்கு செனட் உறுப்பினர் கிடையாது. செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
அடுத்து, ஹௌஸ் ஆப் ரெப்ரெசெண்டேட்டிவிஸ்) எனப்படும் கீழ்சபை, இங்கு மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர், ஒவ்வொரு மாகாணத்திற்கும், அந்த மாகாணத்தின் மக்கள்தொகை அடிப்படையில் குறிப்பிட்ட உறுப்பினரகள் ஒதுக்கப்படுவார்கள். கலிபோர்னியா, நியூயார்க் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள மாகாணங்களில் அதிகளவு உறுப்பினர்களும் நார்த் டகோட்டா, சௌத் டகோட்டா, ஐடஹோ போன்ற மாகாணங்களில் குறைந்த அளவு உறுப்பினர்களும் இருப்பார்கள். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள்.
வாஷிங்டன் டி.சி க்கு என்று தனியாக மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். (இவர்கள் செனட் அல்லது ஹௌஸ் ஆப் ரெப்ரசெண்டேட்டிவிஸ் ஆகிய இரண்டிலும் சேராதவர்கள்)
சரி இப்பொழுது, எலெக்டோரல் காலேஜிற்கு வருவோம். இந்த எலெக்டோரல் காலேஜின் மொத்த உறுப்பினரகள் எண்ணிக்கை 538. அதாவது 100 செனட் உறுப்பினரக்ள் + 435 ஹௌஸ் ஆப் ரெப்ரசெண்டேட்டிவிஸ் உறுப்பினர்கள் + 3 வாஷிங்டன் டி.சி உறுப்பினர்கள் சேர்ந்து வரும் எண்ணிக்கை. ஒவ்வொரு மாகாணத்திற்கு குறிப்பிட்ட எலெக்டோரல் உறுப்பினர்கள் இருப்பார்கள். எத்தனை உறுப்பினர்கள் என்பது அந்த மாகாணத்தின் செனட் மற்றும் ஹௌஸ் ஆப் ரெப்ரசெண்டேட்டிவிஸ் உறுப்பினர்களின் கூட்டுத்தொகையாகும். உதாரணத்திற்கு, கலிபோர்னியாவை எடுத்துக்கொண்டால், 2 செனட் உறுப்பினர்கள் மற்றும் 53 ஹௌஸ் ஆப் ரெப்ரசெண்டேட்டிவிஸ் உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், கலிபோர்னியாவிற்கு 55 எலெக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் உண்டு. கலிபோர்னியாவில் தான் அதிகபட்சமான எலெக்டோரல் வாக்குகள் உள்ளன. இதே போல் ஒவ்வொரு மாகாணத்திற்கும் உள்ள மொத்த எலெக்டோரல் வாக்குகளைக் கூட்டினால் 535 வரும். அத்துடன் வாஷிண்டன் டிசியின் 3 உறுப்பினர்கள் சேர்த்து 538 ஆகும்.
இந்த எலெக்டோரல் காலேஜ் உறுப்பினரகள், ஒவ்வொரு மாகாணத்திலும் அந்த மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
ஏனென்றால், அதிபர் தேர்தலில், இவர்கள் தான் அதிபரை தேர்ந்தெடுப்பார்கள். குழப்பமாக இருக்கிறதா? இதோ விளக்குகிறேன், மொத்தமுள்ள 538 ல், சரிபாதிக்கு மேல், அதாவது 270 என்ற மேஜிக் எண்ணை (Magic Number) யார் எட்டுகிறார்களோ அவர்கள் தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், மக்கள் நேரடியாக அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாக்களித்தாலும், அந்த வாக்கு உண்மையில் அவர்களுக்கு இல்லை. அதற்குப்பதிலாக, எந்த மாகாணமோ, அந்த மாகாணத்தின் எலெக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு அந்த வாக்குகள் செல்லும். இந்த எலெக்டோரல் உறுப்பினர்கள் தான் அதிபரை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பார்கள். அதாவது, அந்த மாகாணத்தில் எந்த வேட்பாளருக்கு அதிக வாக்குக் கிடைத்ததோ, அந்த மாகாணத்தில் உள்ள அனைத்து எலெக்டோரல் காலேஜ் உறுப்பினர்களும் அந்த வேட்பாளருக்கு அந்த வாக்கை செலுத்துவார்கள். நம் உதாரணப்படி, கலிபோர்னியா மாகாணத்தில் எந்த வேட்பாளருக்கு அதிக வாக்கு கிடைக்கிறதோ, அவருக்கு 55 எலெக்டோரல் வாக்குகள் கிடைத்துவிடும். இந்த எலெக்டோரல் உறுப்பினர்கள், அந்த மாகாணத்தில் எந்த வேட்பாளருக்கு அதிக வாக்கு கிடைத்ததோ, அவருக்கு தான் வாக்களிக்கவேண்டும், மாற்றி போட்டுவிடக்கூடாது, எனக்குத் தெரிந்து இது வரையில் யாரும் மாற்றிப் போட்டது கிடையாது. இந்த நடைமுறை சற்றுக் குழப்பமாக இருந்தாலும், இத்தனைக் காலமாக, எந்த தவறும் இல்லாமல் சுமூகமா தேர்தல்கள் நடந்து வந்துள்ளன.
இப்படி எல்லா மாகாணத்திலும் யாருக்கு அதிக வாக்கு கிடைக்கிறதோ, அவர்களுக்கு அந்த மாகாணத்தின் எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் கிடைக்கும். யார் 270 என்ற அந்த மந்திர எண்ணை எட்டுக்கிறார்களோ, அவர் தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி.
வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்கள்
உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்லட்டா? அமெரிக்காவில் 50 மாகாணங்கள் இருந்தாலும், பெரும்பாலானத் தேர்தல்களின் முடிவை நிர்ணயிப்பது வெறும் 7 மாகாணங்கள் தான். ஆச்சர்யமாக இருக்கிறதா, ஆனால் அது தான் உண்மை. இந்த் 50 மாகாணங்களில், கிட்டத்தட்ட 30 மாகாணங்கள் எப்பொழுதும் அல்லது 99% குடியரசு கட்சிக்குத் தான் வாக்களிக்கும், ஆகையினால் அவை குடியரசுக் கட்சியின் நிறமான சிவப்பைக் குறியீடாகக் கொண்டு சிவப்பு மாகாணங்கள் (Red States) என்று அழைக்கப்படுகின்றன, அதே போல், 13 மாகாணங்கள், ஜனநாயகக் கட்சிக்குத்தான் வாக்களிக்கும், அதனால் அவை அக்கட்சியின் நிறமான நீல நிறத்தைக்கொண்டு நீல மாகாணங்கள் (Blue States) என்று அழைக்கபடுகின்றது.
மீதமுள்ள, அந்த 7 மாகாணங்கள் தான் பெரும்பாலும் வெற்றித் தோல்வியைத் தீமானிக்கின்றன, இந்த மாகாணங்களில், எந்த மாகாணமும், எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயும் வாய்ப்புள்ளது, அதனால் இவை 'பூனை மேல் மதில்' மன்னிக்கவும் 'மதில் மேல் பூனை' மாகாணங்கள் ஆகும். இவற்றை 'ஸ்விங்க் ஸ்டேட்ஸ்' (Swing States) என்று அழைப்பார்கள். இந்த மாகாணங்கள் எந்தப்பக்கம் சாய்கிறதோ, அவர்கள் கண்டிப்பாக வெற்றிப்பெற்றுவிடுவார்கள். அந்த 7 மாநிலங்கள், பென்ஸில்வேனியா, விஸ்கான்ஸின், மிசிகன், நெவேடா, அரிஜோனா, நார்த் கரோலினா மற்றும் ஜியார்ஜியா. இதில் ஒரு காலத்தில் ப்ளொரிடா இருந்தது, ஆனால் கடந்த நான்கைந்து தேர்தல்களாய் அது சிவப்பு மாகாணமாக மாறிவிட்டது.
இந்த ஏழு மாகானங்களில், பென்ஸில்வேனியா, விஸ்கான்ஸின், மிசிகன் ஆகிய மூன்று மாகாணங்கள் 'நீல மதில்' (Blue Wall) என்று அழைக்கப்படும். இவை மூன்றையும் ஜனநாயக கட்சி வென்று விட்டால், அவர்கள் ஆட்சியைப் பிடித்து விடுவார்கள். இதில் ஒன்றில் தோற்றாலும், அவர்கள் அந்த மேஜிக் எண்ணை எட்டுவது சற்று சிரமமான காரியமாகும்.
அதனால், தேர்தலுக்கு முன் உள்ள கடைசி 4 வாரங்கள், இந்த மாகாணங்களில் தான் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெறும். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் காலமிது.
அதிக வாக்குகள் பெற்றவர் தான் அதிபரா?
இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால், சில தேர்தல்களில், பெரும்பாலான மக்கள் வாக்குகளைப் பெற்றவரை (Popular பாப்புல வோட் ) விட குறைந்த அளவு வாக்குகள் பெற்றவர் அதிபராகி உள்ளார்கள். எப்படி என்றால், அதிக மக்கள் தொகை உள்ள சில பெரிய மாகாணங்களில், அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், ஆனால் குறைந்த அளவு மக்கள் தொகை உள்ள மாநிலங்கள் பல உள்ளன, அங்கு பதியப்பட்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருக்கும். ஆனால் எலெக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் அதிகம் கிடைத்துவிடுவார்கள். அதனால் அவர் எளிதாக வென்றுவிடுவார். மிக சமீபத்தில், 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், வென்ற டொனால்ட் ட்ரம்பை விட ஹிலாரி கிளிண்டன் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார், ஆனால் எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் அவருக்கு எதிர்பார்த்ததுபோல் கிடைக்கவில்லை,
டொனால்ட் ட்ரம்பு - 304 (எலெக்டோரல் வாக்குகள்) 6,29,84,828 மொத்த வாக்குகள்
ஹிலாரி கிளிண்டன் - 227 (எலெக்டோரல் வாக்குகள்) 6,58,,53,514 மொத்த வாக்குகள்
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை தேர்தல் நாளன்று மாலை ஏழுமணியளவில் தொடங்கும், முடிவுகள் முழுவதும் வருவதற்கு முன்னரே யார் அதிபராக வருவார் என்பது பெரும்பாலும் தெரிந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு போல், போட்டி கடுமையாக இருக்கும் சில தேர்தல்களில், எல்லா மாநிலத்தின் வாக்குகளும், முழுமையாக எண்ணி முடிக்கும் வரை, யார் வெற்றிபெறுவார் என்பதை கணிக்கமுடியாது. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ப்ளோரிடா என்ற ஒரு மாகாணத்தின், கிட்டத்தட்ட 500 வாக்குகள் தான், அல் கோர் அதிபராவதை தடுத்து ஜியார்ஜ் புஷை அதிபர் ஆக்கியது. அதுவும் நீண்ட இழுபறிக்கும், பல கட்ட மறு வாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு தான். அதிக சர்சைக்குள்ளான தேர்தல் அது.
அவ்வளவு ஏன், கடந்த தேர்தல், அதாவது 2020 நடந்த தேர்தலில், முடிவுகள் தெரிய கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆனது. ஜனவரி 7, 2021 ல் தான் ஜோ பைடன் அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஜோ பைடன் 306 எலெக்டோரல் வாக்குகளும், டொனால்டு ட்ரம்ப் 232 வாக்குகளும் பெற்றனர். ஆனால், இன்று வரையில் டொனால்டு ட்ரம்ப், தான் தோற்கவில்லை, தேர்தல் வெற்றியைத் திருடிவிட்டனர் என்று தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவரின் தீவிர ஆதரவாளர்கள் அதை இன்னும் நம்புகிறார்கள்.
தேர்தல், பதவி என்றால், எல்லா நாட்டிலும் குழப்பங்கள், சச்சரவுகள் இருக்கத்தான் செய்கிறது. எல்லாம் பதவி, அதிகாரம், ஆசை படுத்தும் பாடு தான், வேறென்ன சொல்வது.
இந்த ஆண்டு யார் வெல்லுவார்?
இந்த ஆண்டு, நவம்பர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கு தேர்தலில் யார் 270 என்ற மேஜிக் எண்ணை தொடப்போகிறார் என்பதைக் காண உலகமே ஆவலாக இருக்கிறது. யார் வெற்றிப் பெறுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் கருத்தை, 'கருத்துப் பகுதியில்' தெரிவியுங்கள் அல்லது பின்வரும் இந்த கணிப்பில் யார் வெற்றிபெறுவார் என்று உங்கள் கணிப்பைச் சொல்லுங்கள்:
பதவி ஏற்பு
தேர்தல் அன்றே முடிவுகள் தெரிந்தாலும், அல்லது சில நாட்கள் ஆனாலும், புதிய அதிபர், அடுத்து வரும் புத்தாண்டின் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி தான் பதவியேற்பார். பதவிக்காலம், அந்த ஆண்டு ஜனவரி 20 லிருந்து, நான்கு ஆண்டுகள் ஆகும், அதிபர், துணையதிபரைத் தவிர மற்ற அமைச்சர்கள் (Secretary - செக்ரெக்டரி ) யாரும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதிபர் நியம்பிப்பவர் தான் அமைச்சர் ஆகிறார். எதிர் கட்சியைச் சேர்ந்தவர், எந்த அரசியில் கட்சியையும் சாராதவர்கள் என யார் வேண்டுமானாலும் அமைச்சராகும் வாய்ப்பு உண்டு. அந்தந்த துறைகளில் பணியாற்றிய வல்லுனர்கள், அனுபவம் மிக்கவர்கள் அந்த பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். இது வரவேற்கபட வேண்டிய ஒன்று.
சிக்கல் நிறைந்த ஆனால் சிறந்த முறை
அமெரிக்க தேர்தல் முறை குழப்பமாகவும், சிக்கலாகவும் இருந்தாலும் கூட, இதை வடிவமைத்த அமெரிக்காவின் பவுண்டிங் பாதரஸ் (Founding Fathers) எனப்படும் அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களுக்கு, கண்டிப்பாக ஒரு காரணம் இருந்திருக்கும். அதாவது, எல்லா மாகாணத்திற்கும் தகுந்த பிரதிநித்துவம் இருக்க வேண்டும், அந்த மாகாணத்தின் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பது தான் அது.
என்ன உங்களுக்கு அமெரிக்க தேர்தல் நடைமுறை பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி.
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.