மாதம் மும்மாரி பொழிய வேண்டும் என்ற சொற்றொடரை பல முறை இலக்கியங்களிலும், அந்தக் காலத் திரைப்படங்களிலும் படித்தும், கேட்டும் இருப்பீர்கள். ஓர் அரசன், அமைச்சரைப் பார்த்து, 'மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே?' என்று கேட்பார். அமைச்சரும் 'ஆம் அரசே!' என்று பதில் சொல்வார்.
இதனால் அரசருக்கு மழை பெய்வது தெரியாது என்று பொருளல்ல. அரசருக்கு ஆயிரம் வேலை இருக்கும், எல்லாவற்றையும் ஒருவரே கவனிக்க முடியாது என்பதால் தான், ஒவ்வொரு துறைக்கென்று அமைச்சர்கள் இருக்கின்றார்கள். தம் கீழ் பணிபுரிவர்கள் எல்லாம் ஒழுங்காக தமது வேலைகளை செய்கிறார்களா? நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் அறிந்துக் கொள்வற்காக தான் இது போன்ற கேள்விகளைக் கேட்டிருப்பார்கள்,
சரி நாம் விஷயத்திற்கு வருவோம். அது என்ன மும்மாரி?
மும்மாரி
மாரி என்றால் மழை என்று நமக்குத் தெரியும். அதுவும் எப்படிபட்ட மழை, இதமாகவும் மிதகமாகவும் பெய்கின்ற மழை தான் மாரி. வானம் வழங்கும் தாய்பால் மழை, தாய்ப்பால் போல சீராகப் பெய்வது மாரி. அதனால் தான் மாரியாய்ப் பொழிய வைக்கும் கடவுளை கிராமங்களில் மாரியம்மன் என போற்றி வணங்கி வருகிறார்கள்.
மும்மாரி என்றால் மூன்று மழை என்று பொருள். அது சரி மூன்று மழை ஏன்? நான்கு அல்லது ஐந்து மழை என்று ஏன் சொல்லவில்லை? நம் முன்னோர்கள் சொன்ன எல்லாவற்றிற்கும் காரணங்கள் இருக்கிறது. அதை அறிய முற்படாமல், மூடப்பழக்கங்கள் என்று சொல்லி நகைத்தோ அல்லது நகர்ந்தோ சென்று விடுகிறோம்.
மும்மாரி என்றால் என்ன? ஏன் மூன்று மட்டும் என்பதை எல்லாம் இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.
மாதம் மூன்று மழை
மூன்று மழை என்றால் என்ன?
இதற்கான விளக்கம், 'விவேக சிந்தாமணி' என்ற நீதி நூலில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் வாழ்த்திற்கு அடுத்தப்படியாக, மழையின் சிறப்பைப் பற்றி பாடும் புலவர், மூன்று மழைகளையும் அதற்கானக் காரணத்தையும் அழகாகக் குறிப்பிடுகிறார்.
வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
காதல் கற்புடை கன்னியர்க் கோர்மழை*
மாத மூன்று மழையெனப் பெய்யுமே
என்று பாடுகிறார்.
*(சில பதிப்புகளில் 'மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை' என்று இருக்கிறது, ஆனால் ஒரே வரியில் மாதர் என்றும் மங்கை என்றும் இருக்காது என்பது என் எண்ணம். பெரும்பாலும் புலவர்கள், தேவையின்றி ஒரே பொருள் தரும் சொல்லை அடுத்தடுத்துப் பயன்படுத்த மாட்டார்கள்)
வேதத்திலும் அறிவிலும் சிறந்த அந்தணர்கள், அவற்றைத் தினமும் ஓதி, அதை மற்றவர்களுக்கு உபதேசித்தும், வேதம் சொன்னபடி நடந்து அதைக் கடைப்பிடித்தும் வந்தால், அவர்களின் அருஞ்செயலைக் கண்டு மகிழ்ந்து வருண பகவான் ஒரு மழை பொழிவார். அதனால் தான் அந்தணர்களுக்கு நாம் என்றும் மதிப்பும் மரியாதையும் தருகிறோம்.
அடுத்து, நாட்டை ஆளும் அரசன், நீதி வழுவாமல், அறநெறி தவறாமல் நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து வந்தால், அவனது பணியைச் சிறப்பிக்கும் விதமாக இரண்டாவது மழையைப் பொழிவார்.
மூன்றாவதாக, கற்பு நெறி தவறாத நற்பெண்டிர்கள், கடமை மறவாது தங்கள் குடும்பத்தை பேணிக் காத்து இருப்பதால், அவர்களைப் போற்றும் விதமாகவும், அவர்களின் தியாகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் மூன்றாவது மழையைப் பொழிவாராம் வருண பகவான்.
இந்தப் பாடலைப் படித்தவுடனே நமக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும், இக்காலத்தில் ஏன் அப்படி மழைப் பெய்வதில்லை என்று.
இப்போது காலம் மாறிவிட்டது, இயற்கைக்கு மாறாக பல செயல்களை செய்து இயற்கை வளங்களை அழித்துக்கொண்டு இருக்கின்றோம், எப்படி மாதம் மூன்று மழை பெய்யும்? ஆனால் மாதம் மும்மாரி இல்லையென்றாலும், அவ்வப்போது மழை பெய்கிறதே? ஏன் தெரியுமா?
அதற்கும் நம் ஔவைப்பாட்டி அருமையான ஒரு காரணத்தை மூதுரையில் சொல்லியிருக்கிறார்:
நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை. - மூதுரை 10.
நெல்லுக்குப் பாய்ச்சுகின்ற நீர் எப்படி வாய்கால் வழியாக வழிந்து புல்லுக்கும் மற்றச் செடிகளுக்கும் சென்று அவற்றையும் வாழவைக்கிறதோ, அதைப் போலவே, பழமையான இந்தப் பெரிய உலகத்தில் நல்லவர் என்று ஒருவர் இருந்தாலும், அவருக்காக, அவரைச் சிறப்பிக்க, அவரைக் காப்பதற்காக, அவர் வாழும் இடத்தில், அவரைச் சுற்றியுள்ள அனைவரும் பயன்பெறும் வண்ணம் மழை பொழியும் என்று அடித்துக் கூறுகிறார் ஔவைப் பாட்டி.
திருவள்ளுவர் கூட மேலே சொல்லியக் கருத்துகளை திருக்குறளில் பாடிவைத்துள்ளார்.
'கொடுங்கோன்மை' என்ற அதிகாரத்தில்:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல் (குறள் 559)
அரசன் அறத்துடன் செயல்படாமல், முறைதவறி ஆட்சி செய்தால், அந்த நாட்டில் மழை பெய்யாமல் பொய்த்துவிடும் என்று கூறுகிறார் வள்ளுவர்.
அதே போல் 'வாழ்க்கைத் துணைநலம்' என்ற அதிகாரத்தில்:
'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)
பிற தெய்வங்களை தொழாமல் தன் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழுகின்ற கற்புடைய மனைவி ஒருத்தி, பெய் என்றால் உடனே பெய்யுமாம் மழை.
இப்போது நமக்குப் புரியும் ஏன் இன்னும் அவ்வப்போது மழை பெய்கிறது என்று.
வருடம் மூன்று மழை
மாதம் மூன்று மழை என்பது பற்றி மேலே பார்த்தோம். அதே விவேக சிந்தாமணியில், மாதம் மூன்று மழைப் பெய்யாமல் பொய்த்து, வருடம் மூன்று மழை பெய்யக் காரணத்தையும் கூறுகிறது அடுத்தப் பாடல்.
அரிசி விற்றிடு மந்தணர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை
புருட னைக்கொன்ற பூவையர்க் கோர்மழை
வருட மூன்று மழையெனத் தூறுமே
முறைதவறிய அந்தணன், நீதிநெறி தவறிய மன்னவன் மற்றும் கணவனையே கொல்லத் துணியும் காரிகை போன்றவர்கள் ஒரு நாட்டில் இருந்தால், அந்த நாட்டில் ஆண்டுக்கு மூன்று மழையே பெய்யும் என்கிறது இப்பாடல்.
ஏன் அரிசி விற்றிடும் அந்தணர் என்று புலவர் கூறியிருக்கிறார்? அக்காலத்தில் வேதம் ஓதும் அந்தணர்களுக்குத் தனியாக வருமானம் கிடையாது. மற்றவர்கள் தானமாகக் கொடுப்பதை வைத்துதான் அவர்கள் உண்பார்கள். பெரும்பாலும் அரிசி தான் கொடுப்பார்கள். அப்படி அவர்களுக்குத் தந்த அரிசியை விற்பது தவறாகும், முறையாகாது என்பதற்காக அப்படி கூறியிருக்கலாம். ஆனால் பொதுவான பொருள் என்னவென்றால், அவர்கள், 'படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்' என்பது மாதிரி. வேதம் கற்பித்துவிட்டு, அதற்கு எதிர்மறையாகச் செயல்படக் கூடாது என்பது தான். அப்படி குலவொழுக்கம் குன்றிய அந்தணனனை, கணவனைக் கொன்ற பெண்ணோடு ஒப்பிடுகிறார் இப்புலவர்.
இதே கருத்தை திருவள்ளுவரும், 'ஒழுக்கமுடைமை' என்ற அதிகாரத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (குறள் 134)
வேதத்தை ஓதவேண்டிய அந்தணர்கள், அதை மறந்துவிட்டால் கூட மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் தம் குலவொழுக்கத்தைக் கைவிட்டால் அதை மீட்க முடியாது என்று கூறியுள்ளார் வள்ளுவர்.
இப்படி பட்டவர்கள் இருக்கும் நாட்டில், மாதத்திற்கு மூன்று மழை அல்ல, வருடத்திற்கே மூன்று மழை தான் தூறும் என்று கூறுகிறார். பெய்யும் என்று கூட சொல்லவில்லை, தூறுமே என்கிறார் புலவர். ஏனென்றால் மனிதன் செய்யும் தவற்றிற்காக, மற்ற ஜீவராசிகள் துன்பபடக் கூடாது என்பதற்காக அந்த மழையும் தூறுகிறதாம். இல்லையென்றால் அது கூட இல்லாமல் போய்விடும்.
அது ஏன் மூன்று மழை மட்டும்?
ஒருநாள் மழை பெய்து, அத்தண்ணீர் பூமியில் ஒன்பது நாள் ஊற வேண்டும். அவ்வாறு மழை பொழிந்தால், பயிர்களும் செடிகொடி மரங்களும் நன்றாகத் தழைத்து வளரும். அப்படி இருக்கும் நாட்டில் வறட்சி பஞ்சம் போன்ற எந்தத் தீமையும் ஏற்படாது.
மழையை நம்பி வாழ்கின்ற மக்களுக்குத்தான் மழையின் அருமையும் பெருமையும் தெரியும். மழையை மட்டும் நம்பி பயிர் செய்து வாழும் மக்களுக்கு மாதம் மும்மாரி மழை பெய்தால் யோகம்தான். இதை தான்
"மாதம் மும்மாரி பெய்தால் முப்போகம் விளையும்" என்ற பழமொழி கூறுகிறது.
சாதாரணத் தாவரங்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு மித மழை பெய்தால் போதும் எந்த நீர் நிலைகளில் இருந்தும் நீர் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்காது. இந்த உண்மையைத் தான் மாதம் மும்மாரி என்ற தொடர் விளக்குகிறது.
நம் முன்னோர்களுக்கு, தற்கால விஞ்ஞான ஆற்றல் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அனுபவ அறிவினால் பலவற்றைக் கண்டு உணர்ந்து நமக்காகச் சொல்லிவைத்துள்ளார்கள். ஆனால் நாம் அவற்றையெல்லாம் உணராமல், வெளி நாட்டவர்கள் சொல்வதை தான் வேத வாக்காக ஏற்றுக்கொள்கிறோம்.
மாதம் பெய்கின்ற மூன்று மழை நீரைச் சேமித்து வைக்க, அக்காலத்தில் வாழ்ந்த மக்களும் மன்னர்களும், ஏரி, குளம் குட்டைகள் என பலவகையான நீர்நிலைகளை உருவாக்கி வைத்தார்கள். ஆனால் இக்காலத்தில் நாம் என்ன செய்தோம்? நீர்நிலைகள் அனைத்தையும் நம் சுயநலத்திற்காக, தூற்று அவ்விடங்களில் பெரியப் பெரியக் கட்டிடங்களாக கட்டிவிட்டு, வெள்ளம் வந்தால் நீர் செல்லவும் சேமித்துவைக்கவும் வழியின்றி புலம்பிக்கொண்டு இருக்கின்றோம். நீர்நிலையை ஆக்ரமித்து அழித்து. அவ்விடத்தில், நீரைப் பாதுகாக்க 'நீர் மேலாணமை அலுவலகம்' அமைப்பதால் எப்படி நீரைப் பாதுகாக்க முடியும்? சிந்திக்கவேண்டும். நம் முன்னோர்கள் இயற்கையை முழுவதும் நமக்காக வைத்துவிட்டுப் போனதைப் போல, வருங்கால சந்ததிகளுக்கும் இயற்கையை சேதாரம் இல்லாமல், மிக முக்கியமாக நீர் நிலைகளை விட்டுசெல்வது நம் தலையாயக் கடமையாகும்.
தமிழர்களின் நீர் நிலைகள் பற்றி அறிந்துக்கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்.
மும்மாரி பற்றி குறிப்பிடும் இலக்கியங்கள்
மணிமேகலை
முரசுகடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி
வான மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோ னாகுக
(விழாவறை காதை - 1: 31-34)
செல்வத் திருமகள் விரும்பி உறைகின்ற மூதூரான இப்புகார் நகரம் வாழ்க என்று வாழ்த்துகிறான். அடுத்து மாதந்தோறும் மூன்று முறை தவறாது மழை பொழியவேண்டும் என்கிறான். ஞாயிறு, திங்கள் முதலிய கோள்கள் தம் நிலையில் இருந்து மாறுபடா வண்ணம் மன்னவனின் ஆட்சியும் அற நெறி தவறாமல் நடக்கவேண்டும் என்று செங்கோலைப் புகழ்ந்து, அரசனை வாழ்த்தி முரசறைந்து தெரிவிக்கிறான்.
திருப்பாவை
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய் (3)
இப்பாடலுக்கு விளக்கம் இங்கே காணலாம்.
சீவக சிந்தாமணி
திங்கள் மும்மாரி பெய்க திருவறம் வளர்க செங்கோ
னன்கினி தரசணாள்க நாடெலாம் விளைக மற்று
மெங்குள வறத்தி னேரு மினிதூழி வாழ்க வெங்கள்
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே!
வெண்மேகக் கூட்டங்கள் விண்வெளியில் உலாவர - அவை
தாகத்தால் சமுத்திரத்தின் நீருண்டு உடல் கருக
மோகத்தால் மதியங்கி அவை மோதி ஒலி ஒளிக்க
மாதம் மும்மாரி பெய்யும் ஏமாங்க நாட்டினிலே!
திருமுறை
திங்கள் மும்மாரி பெய்க புரவலர் செங்கோல் ஓங்க
மங்கையர் கற்புநீட மாநிலஞ் செழித்து வாழ்க
புங்கவர் கருணைகூர்க பூசுரர் சுருதி பொங்க
சங்கரன் திருவெண்ணீறும் சைவமும் தழைக்கமாதோ!
வேறு இலக்கியங்களிலும் மும்மாரி பற்றிக் குறிப்பிருந்தால், இங்கு சேர்த்துக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்தப் பாடல்களைக் கருத்துப் பகுதியில் தெரிவிக்கவும்.
இப்படி பட்ட மழையின் சிறப்பை தான் திருவள்ளுவர் "நீரின்றி அமையாது உலகு" என்றார். அந்த நீரைத் தரும் வள்ளல் பெருமான் மழையல்லவா? மாதம் மும்மாரி பொழிய நம்மால் ஆன நற்செயல்களை எல்லாம் தவறாமல் செய்வோம்.
மகிழ்ந்துப் பெய்யட்டும் மழை.
மாறட்டும் இப்புவியின் நிலை!
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.