அங்கண்மா ஞாலத் தரச ரபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ?
திங்களு மாதித் தியனு மெழுந்தாற்போல்
அங்க ணிரண்டுங் கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேற் சாப மிழிந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
அழகிய இவ்வுலகை ஆளும் அரசர்கள்
அகந்தை அழிந்துன் காலடியின் கீழே
சரணடைந்து போலவே நாங்களும் வந்திருக்கோம்!
செந்தாமரை மலர்வதைப் போல் மெல்லவுன்
சிவந்த விழிகளைத் திறந்தெம்மைப் பார்ப்பாயா?
சந்திரனும் சூரியனும் உதித்ததைப் போன்றவுன்
அழகிய இருவிழிகளால் எங்களைப் பார்த்தால்
பெற்ற சாபங்கள் நீங்கிடுமே எழுவாயாக!
பொருள்:
சென்றப் பாசுரத்தில், பகைவர்கள் எல்லாம் கண்ணன் மேலுள்ள அச்சத்தினால் அவன் வீட்டு வாசலில் வந்து காத்திருப்பதைப் போல் நாங்களும் வந்து காத்திருக்கோமே, எழுந்து எங்களைப் பார்க்கமாட்டாயோ என்று ஏக்கத்துடன் கேட்ட ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், இவ்வுலகை ஆளும் அரசர்கள் எல்லாம் ஸ்ரீகிருஷ்ணரின் பெருமையறிந்து அவன் அருள் வேண்டி வந்து நிற்பதைப் பற்றி பாடுகிறாள்.
அழகான இந்த உலகைப் பல அரசர்கள் ஆளுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தாங்கள் தான் மிகப்பெரியவர்கள் என்ற கர்வம் இருக்கிறது. தங்களை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற இறுமாப்போடு இருந்தவர்கள், கிருஷ்ணவதாரத்திற்குப் பின், உனது லீலைகளை கண்டு நடுங்கி, தங்கள் அகந்தையெல்லாம் தொலைத்து நீ பள்ளிக்கொண்டிருக்கும் இடத்திற்கு, பெரும் மாநாட்டுக்கு வந்துள்ளவர்கள் போலக் கூட்டமாக வந்து காத்திருக்கிறார்கள் பார். அவர்களைப் போலவே ஆயர்பாடிச் சிறுமிகளான நாங்களும் வந்து காத்திருக்கிறோம் பார் கண்ணா என்று ஆண்டாள் கூறுகிறாள். இவ்விடத்தில் 'அபிமானம் பங்கமாய்' என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அபிமானம் என்றால் மதிப்பு, பற்று என்று பொருள். அந்த அபிமானம் அடுத்தவர் மேல் வைத்தால் அது பிரியம், அன்பு என்று பொருள் கொள்ளலாம். அதே அபிமானத்தை நம் மீதே வைத்தால், அது கர்வம், அகம்பாவம் என பொருள்படும். அதை தான் இங்கு அந்த அரசர்களைப் பற்றி ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அந்த 'அபிமான பங்கம்' இறைவனிடம் ஏற்படும் போது, அவனிடம் முழு சரணாகதி அடைந்து விடுகிறோம்.
எப்படி சென்ற பாசுரத்தில், பகைவர்கள் எல்லாம் பயந்து உன் காலடியில் வந்து காத்திருந்தார்கள் ஆனால் நாங்கள் அனைவரும், பயத்தினால் அல்ல பக்தியினால் வந்து காத்திருக்கிறோம் என்று கூறிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், மன்னாதி மன்னர்கள் எல்லாம், தங்கள் கர்வத்தினால், தாங்கள் தான் உன்னைவிட சிறந்தவர்கள் என்ற எண்ணத்தில் இருந்து, பின் அதைத் தொலைத்துவிட்டு உன்னைச் சரணடைய வந்திருக்கிறார்கள். ஆனால் நாங்களோ என்றுமே உன்மேல் அன்பு வைத்து உன்னைக் காண வந்திருக்கிறோம். இது தெரியாமல் இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கலாமா? என கேட்கிறாள்.
அப்படியும் கண்ணன் எழுந்து பார்க்காததால், நீ கண்களை முழுவதுமாகத் திறந்து எங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, இனிய ஓசை தரும் கிண்கிணி மணிகளின் வாய்த் திறந்து இருப்பதைப் போல சிறிது உன் இமைகளைத் திறந்து பார்த்தால் என்ன? அழகான செந்தாமரை மலர் போன்ற உன் சிவந்த விழிகளை, அதிகாலையில் மலரும் அந்த செந்தாமரை மலர் போல மெல்லத் திறந்து எங்களைப் பார் கண்ணா என்று வேண்டுகிறாள் ஆண்டாள். கண்களைத் திறந்துவுடன் வேறு யாரையும் பார்க்காமல் எங்களைத் தான் பார்க்கவேண்டும் என்று உரிமையோடு, ஆணையிடுவது போல் கேட்டுக்கொள்கிறாள்.
'மார்கழித் திங்கள்' என்ற முதல் பாசுரத்தில், 'செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே' என புகழ்ந்த ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், கிருஷ்ணரின் இருவிழிகளை, ஒன்று சந்திரன் போலவும், மற்றொன்று சூரியன் போலவும் இருப்பதாகப் பாடுகிறாள் ஆண்டாள். அரக்கர்களுக்கு சூரியப் பார்வையும், அன்பர்களுக்கு சந்திரப் பார்வைப் போன்ற கடாட்சத்தை தருபவம் அல்லவா நீ. சூரியனும் சந்திரனும் மெதுவாக உதிப்பது போல், நீயும் சூரிய சந்திரனைப் போன்ற உனது அழகானக் கண்களை மெதுவாகத் திறந்து எங்களை பார். நீ அப்படி எங்களைப் பார்த்தால், நாங்கள் பெற்ற சாபங்களும், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும், முற்றிலும் அழிந்து எங்களை விட்டு நீங்கிவிடும். அதனால் கிருஷ்ண பகவானே சீக்கிரம் எழுந்து எங்களைப் பார். என்று மீண்டும் வேண்டுகிறாள்.
'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருப்பார். காதலியரின் கடைக்கண் பார்வைக்கே அவ்வளவு சக்தியிருந்தால், கடவுளின் அவதாரமான அந்த கண்ணனின் கடைக்கண் பார்வைக்கும் எவ்வளவு சக்தி இருக்கும். அவன் கடைகண் பார்வைப் பட்டால் என்னென்ன அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம், அதனால் தான் ஆண்டாளும், நீ எங்களை முழுவதுமாகப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, உனது கடைக்கண் பார்வையாவது எங்கள் மேல் படட்டும் என்று பாடுகிறாள்.
அடுத்தப் பாசுரத்திலாவது கண்ணை எழுந்திருக்கிறானா எனறுப் பார்க்கலாம்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்