மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்க மறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மோரி நிமிர்ந்து முழுங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாவுன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரிய மாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
மழைக் காலத்தில் மலைக்குகையில் உறங்கும்
சீற்றம்கொண்ட சிங்கம் நெருப்புவிழி திறந்து
பிடறிமுடி சிலிர்க்க நாற்புறமும் நடமாடி
சோம்பல் முறித்து கர்ஜித்துப் புறப்பட்டு
வருவதைப் போலக் காயாம்பூ நிறக்கண்ணா
கோவிலில் இருந்து நடந்துவந்து உன்அழகான
உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள்
வந்த காரியத்தை ஆராய்ந்து அருளவேண்டும்!
பொருள்:
இதுவரை கிருஷ்ணனரை எழுப்ப ஆண்டாள், அவனது பெருமைகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி , உறக்கத்திலிருந்து விழித்து எழ வேண்டும் என்று இனிமையாகப் பாடி எழுப்ப முயற்சித்தாள். ஆனால் கண்ணன் எழுந்தபாடில்லை. சென்ற பாசுரத்தில், உன் தாமரைக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்த்தால், எங்கள் சாபமெல்லாம் தீருமே கண்ணா, நீ இப்படி உறங்கிக்கொண்டே இருக்கலாமா? எங்கள் சாபம் தீரக் கூடாது என என்ணுகிறாயா? என்று ஆண்டாள் கேட்டதும், கிருஷ்ணரின், மனம் இளகிவிட்டது. இனியும் இவர்களை காக்கவைக்கக் கூடாது என நினைத்த கிருஷ்ணர், ஆண்டாள் கேட்டது போல், பூ மலர்வதைப் போல் கண்களை மெதுவாக திறக்கிறார்.
கண்ணன் விழித்துவிட்டான் என அறிந்து ஆண்டாளும் தோழிகளும் மிகுந்த மகிழ்ச்சிக்கொள்கிறார்கள். உடனே ஆண்டாள் கிருஷ்ணரை நோக்கி, உறக்கத்திலிருந்து, சட்டென எழுந்து வந்து விடவேண்டாம், நீ எப்படி எழுந்து வர வேண்டும் என்று நான் கூறுகிறேன், அது போல எழுந்து வா என உரிமையோடு கட்டளை இடுகிறாள். ஏனென்றால், கண்ணன் நடந்து வரும் அழகைப் பருக வேண்டும் என்பது ஆண்டாளின் ஆசை.
மழைக்காலங்களில், சிங்கமானது, மழைபெய்வதாலும், காடெல்லாம் தண்ணீர் தேங்கி இருப்பதாலும், வேட்டையாடு முடியாது என்பதால், மலையில் உள்ள குகைகளில் தன் பெண் சிங்கத்துடன் தங்கிவிடும். அப்படி குகைகளில் உறங்கி எழுகின்ற சிங்கம் எப்படி எழும் தெரியுமா? என்று அருகில் இருந்து பார்த்தது போல் விவரிக்கிறாள் ஆண்டாள். மலைக்குகையில் உறங்கிய சிங்கம், மழை நின்றபின், உறக்கத்திலிருந்து விழித்தவுடன், சீற்றத்துடன், விழிகள் சிவந்து நெருப்புக் கங்கு போல் ஜொலிக்க, தேன் நிறத்தில் இருக்கும் தன் பிடறி முடிகள் சிலிர்க்க, ஒரு சிலுப்பு சிலுப்பி எழுந்திடுமாம். அப்படி பிடறி முடிகளை சிலுப்பி உதறி விட்டு, உறங்கிக்கிடந்ததால், கால்களுக்கு இரத்த ஓட்டம் வருவதற்காக, மெதுவாக நாலா புறங்களில் நடந்து, அதற்கு பின் உடம்பை அசைத்து சோம்பல் முறித்துவிட்டு, காடே நடுங்குமளவு ஒரு பெரிய கர்ஜனை செய்யுமாம்.
இப்படி அந்தச் சிங்கம் போல், காயாம்பூ வண்ணத்தில் உள்ள கண்ணனே, நீயும் உன் கோவிலிலிருந்து, சிங்க நடை போட்டு உனது அழகான சீரிய சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து, நாங்கள் வந்த காரியம் என்னவென்று ஆராய்ந்து அருள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாள் ஆண்டாள். என்ன வேண்டுமென்று நாங்கள் சொல்லமாட்டோம், எங்களுக்கு என்ன வேண்டும் என்பது உனக்கே தெரியும், அதனால் அது என்னவென்று அறிந்து அருளுக என கேட்டுக் கொள்கிறாள்.
ஆண்டாள் ஏன் கிருஷ்ணரை சிங்கம் போல் நடந்து வர வேண்டும் என்கிறாள். இதற்கு நாம் நரசிம்ம அவதார கதைக்குப் போக வேண்டும். நாராயணன் மேல் அதீத பக்தி வைத்திருந்த பக்த பிரகலாதன், பார்க்கின்ற எல்லா பொருட்களிலும் நாராயணனைத் தான் கண்டான். அதனால் கோபம் கொண்ட இரணியகசிபு, எங்கும் இருக்கும் அந்த நாராயணன் இந்தத் தூணில் இருப்பானா இல்லை அந்த தூணில் இருப்பானா? என்று கேட்டு ஒரு தூணைப் பிளக்க, அந்த தூணிற்குள் இருந்து, பிரகலாதன் சொன்னது போல் நாராயணன் வந்து இரணியனை வதம் செய்கிறார். அப்படி நரசிம்ம அவதாரத்தில், கிருஷ்ணர் சிங்கமுகத்துடன் வந்து இரணியனை வதம் செய்த அவதாரத்தை நம்மால் பார்க்கமுடியவில்லையே, அதனால் அந்த சிங்கம் போல் நடந்து வருவதையாவது பார்க்கவேண்டும் என்ற ஆவலால் தான் சிங்கம் போல நடந்து வரவேண்டும் என்று ஆண்டாள் கேட்பதைப் போலிருக்கிறது. எப்படி பிரகலாதனுக்கு காணும் இடமெல்லாம் நாராயணனாய்த் தெரிந்ததோ அதே போல், எங்களுக்கும் காணும் பொருளில் எல்லாம் நீ தான் தெரிகிறாய், அதனால் சிங்கம் போல நடந்து வந்து எங்ககளுக்கு காட்சித் தர வேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம்.
எழுந்தவுடன் குறைகளைக் கேட்காமல், சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து கேட்க வேண்டும் என்று ஆண்டாள் பாடுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அப்போது தான், கிருஷ்ணரின் அந்த சிங்க நடையழகை வெகு நேரம் ஆசை தீர இரசிக்கலாம், அதே போல் அவன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தையும் நீண்ட நேரம் தர்சிக்கலாம் அல்லவா? அரிமா நடந்துவரும் அழகே அப்படி என்றால், அந்த அரியே, அரிமா போல கம்பீரமாய் நடந்து வந்தால் எப்படி இருக்கும்? கண்கொள்ளாக் காட்சியல்லவா? அது தான் ஆண்டாளின் விருப்பம்.
இப்பொழுது தான் கண்விழித்த கிருஷ்ணன், ஆண்டாள் சிங்கம் போல நடந்து வரச்சொன்னவுடன் எழுந்து நடந்து வந்துவிட்டானா? இல்லையா? அடுத்தப் பாசுரத்தில் பார்க்கலாம்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்