Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 24 - அன்று இவ்வுலகம்

அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்த் திறல்போற்றி
பொன்றச் சகட முதைத்தாய்ப் புகழ்போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

மூவுலகை அளந்தவனே உன்திருவடி போற்றி
    சீதையை மீட்டுவந்த வீரத் திருமகனே போற்றி
சகடாசுரனை அழித்தவனே நின்புகழ் போற்றி
    கன்றாய்வந்த வத்சாசுரனை அழித்தவனே உன்னடிபோற்றி
மலையைக் குடையாக்கிக் காத்தவுன் கருணைப் போற்றி
    பக்தரைக் காக்க பகைவரை அழிக்கும் உன்வீரம் போற்றி
என்றென்றும் உன்புகழ்பாடி சேவையாற்ற வந்த
    எங்களுக்கு மனமிரங்கி அருள மாட்டாயோ கண்ணா?

 

பொருள்:

ஆண்டாளையும் அவள் தோழிகளையும் இதுவரை காக்கவைத்தது போதும் என்று கண் விழித்த ஸ்ரீகிருஷ்ணர், சிங்கம் போல நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து குறைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஆண்டாளின் வேண்டுகோளை ஏற்று, கம்பீரமாக நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்கிறார் கிருஷ்ணர்,

தம் வேண்டுகோளுக்கு செவிசாய்த்துக் கம்பீரமாக நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்த கண்ணனின் அழகை இரசித்து மகிழ்ந்த ஆண்டாள், எப்படி பரிசு பெற வந்த புலவர்கள் அரசர்களைப் புகழந்து பாடுவார்களோ அது போல் கண்ணனின் அருளைப் பெற வந்த ஆண்டாளும், கிருஷ்ணரின் வீரத்தையும், கருணையையும் இப்பாசுரத்தில் போற்றிப் பாடுகிறாள். போற்றிப் பாடினால் தான் ஆண்டவன் அருள்வானா என்ன? புகழ்ச்சிக்கு மயங்க அவன் நம்மைப் போன்ற சாதாரண மனிதன் இல்லையே. பின் எதற்காக ஆண்டாள் போற்றிப் பாடவேண்டும். இறைவனைப் புகழ்ந்து பாடுவது, இறைவனை மகிழ்விக்க அல்ல, நம் மகிழ்ச்சியைத் தெரிவிக்க, இறைவா உன்னைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம், உன் கருணையும் அன்பும் எங்களுக்குத் தெரியும். பகைவர்கள அழித்து உன் பக்தர்களுக்கு அருளியது போல், எங்களுக்கு அருள வேண்டும் என்பதால் தான்.

இப்பாசுரத்தில், நாராயண மூர்த்தியின் பல அவதாரங்களைப் பற்றிக்கூறி அவன் புகழ் பாடுகிறாள் ஆண்டாள். முதலில் முவுலகளந்த கதையைக் கூறி அவன் அடிகளைப் போற்றுகிறாள். ஏற்கனவே மூன்றாம் பாசுரத்தில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி" என்றும், 'அம்பரமே தண்ணீரே' என்ற பதினேழாம் பாசுரத்தில் 'அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே' என்றும் இப்பெருமையைப் பாடி இருக்கிறாள் ஆண்டாள். மகாபலி சக்ரவர்த்தி, இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கு வள்ளல். அந்த வள்ளல் குணமே அவனுக்கு கர்வத்தையும் தந்துவிட்டது. ஒரு முறை யாகம் செய்து, தேவர்களை வெல்ல நினைத்தான். தேவர்கள் பகவான் நாராயணனிடம் உதவி கேட்க, நாராயணனும் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்கிறான். குள்ளமான உருவில் வந்தது பகவான் என தெரியாமல், மூன்று அடி தானே எடுத்துக்கொள் என்று பரிகாசம் செய்து இறுமாப்போடு கூறுகிறான். உடனே பகவான் ஓங்கி உயர்ந்து விஸ்வரூபம் எடுத்து, முதல் அடியில், மண்ணுலகத்தையும், அடுத்த அடியில் விண்ணுலகத்தையும் அளந்து, அடுத்த அடி வைக்க எங்கே இடம் என்று கேட்க, வேறு வழியில்லாம்ல், தன் தலையைக் காட்டுகிறான் மகாபலி. அசுரனாக இருந்தாலும், உதவிக் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவுகின்ற நல்ல குணங்கள் அவனிடம் இருந்ததால், இறைவனின் திருவடியைத் தலையில் வைக்கும் பாக்கியம் கிடைத்தது அவனுக்கு. இந்நிகழ்வை நினவுகூர்ந்து, அப்படி மூன்று உலகை அளந்த அந்தத் திருவடியை போற்றி வணங்குகிறோம் என்கிறாள் ஆண்டாள்.

அடுத்த வரியில், நாம் அனைவரும் அறிந்த இராமாயண நிகழ்வைக்கூறி, இலங்கைக்குச் சென்று இராவணன வீழ்த்தி சீதையை மீட்டு வந்த உன் திறனையும் வீரத்தையும் போற்றுகிறோம் என்று பாடுகிறாள் ஆண்டாள். மூன்றாவதாக, சக்கர வடிவில் வந்து குழந்தை கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன் அனுப்பிய சகடாசுரன் என்ற அசுரனை உதைத்துக் கொன்றதைப் போற்றிப் பாடுகிறாள். சிறு குழந்தையாய் இருக்கும் பொழுது புரிந்த இந்த லீலையை, ஏற்கனவே, 'புள்ளும் சிலம்பின' என்ற ஆறாம் பாசுரத்தில், 'கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி' என்று பாடிப் புகழ்ந்திருக்கிறாள் ஆண்டாள். அடுத்து, மீண்டும் சிறு வயதில், கிருஷ்ணனைக் கொல்ல வந்த மற்றொரு அரக்கனை அழித்த கதையைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். கிருஷ்ணனைக் கொல்வதற்காக, கன்று வடிவில் வத்சாசுரன் என்ற அரக்கன் வருகிறான். கன்று அல்ல அரக்கன் என்பதை அறிந்த அந்த சின்னக் கண்ணன், கன்று வடிவில் இருந்த அந்த அசுரனை, மரத்தில் உள்ளக் கனியைப் பறிக்க, கவண் போல் எறிந்து அழித்த, வீரக்கழகள் அணிந்த திருவடியைப் போற்றுகிறாள்.

அசுரர்களைக் கொன்றதையேப் பாடினால் போதாது, பக்தர்களைக் காப்பதையும் பாடவேண்டும் என்று எண்ணிய ஆண்டாள். அடுத்த வரியில், ஆயர்பாடி மக்களைக் காத்தக் கதையைக் கூறுகிறாள். ஒரு முறை கிருஷ்ணர் சின்னப் பையனாக கோகுலத்தில் வசித்து வந்த போது, அந்த மக்கள் தன்னை வணங்காமல், கோவர்த்த மலையை வணங்குவது கண்டு சினம் கொண்ட இந்திரன், கோகுலத்தின் மீது இடி மின்னலோடு கடும் மழை பொழிய வைத்து அவர்களுக்குத் துன்பம் கொடுத்தான். அப்போது சிறுவனாக இருந்த ஸ்ரீகிருஷ்ணன், அந்த கோவர்த்தன மலையை தூக்கி ஒரு குடையாக்கி, கோகுலத்து மக்களை எல்லாம் அதனடியில் இருக்க செய்து காத்த கருணையைப் போற்றிப் பாடுகிறாள் ஆண்டாள்.

இப்படி பகைவர்களை அழித்தும், பக்தர்களை ஆபத்திலிருந்து காத்தும் அருள்பொழிகின்றவனே, எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக, உன் கையில் வைத்திருக்கும் வேலையும், போற்றி வணங்குகிறோம். என்றென்றும் உனக்கு சேவைசெய்து, உன் அருளைப் பெறுவதற்காகத் தான் நாங்கள் வந்திருக்கோம். எங்கள் மீது மனமிரங்கி எங்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்து எங்களை அருள வேண்டும் என்று பாடி மகிழ்கிறாள் ஆண்டாள்,

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 23 - மாரி மலைமுழைஞ்சில்                                                                                                                           பாசுரம் 25 - ஒருத்தி மகனாய்      

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net