Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 25 - ஒருத்தி மகனாய்

ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளரத்
தரிக்கிலா நாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமிஞ் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

தேவகி மகனாய்ப் பிறந்து அவ்விரவில்
    யசோதை மகனாய் மறைந்து வளர்ந்ததை
பொறுத்துக் கொள்ள முடியாமல் வஞ்சத்தோடு
    தீங்குநினைத்த கம்சன் வயிற்றில் நெருப்பென
அச்சம்பிறக்க நின்ற திருமாலே உன்னை
    வணங்கிட வந்தோமுன் அருளை வேண்டி
திருமகள் விரும்பும் செல்வமே நின்கருணையைப்
    பாடி மகிழ்வோம் கவலைத்தீர்ந்திட அருள்வாயாக!

 

பொருள்:

சிம்மாசனத்தில் வந்து அமர்ந்த கிருஷ்ணனின் வீரச் செயல்களை, சென்ற பாசுரத்தில் போற்றிப் பாடிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தக் கதையைக் கூறி, உன்னை எழுப்பி வணங்க வந்த எங்களுக்கு, எங்கள் கவலைத் தீர, நாங்கள் விரும்புவதை தர வேண்டும் என்று வேண்டுகிறாள்.

தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அறிந்த கம்சன், தேவகியையும் வாசுதேவரையும் சிறை வைத்துக் கொடுமைப்படுத்துகிறான். எட்டாவது குழந்தையால் தான் ஆபத்து என்று தெரிந்தாலும், தனக்கு வேறு எந்த விதத்திலும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பிறந்தவுடனேயே எழு குழந்தைகளையும் கொன்று விட்டான் கயவன் கம்சன். அதனால் தேவகியைவிட எட்டாவது குழந்தை எப்போது பிறக்கும் என்று அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது கம்சன் தான். அதனால் தேவகி மிகுந்த கவலையிலும் அச்சத்திலும் இருந்தாள். ஆனால் பிறக்கப் போவது கிருஷ்ணர் என்று அவர்களுக்குத் தெரியாது.

எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணர், கம்சனின் கைக்கு எட்டாதவர் அல்லவா? அதனால் அவர் பிறந்ததும் வசுதேவருக்கு அசரீரி குரலொன்று கேட்கிறது, அதன் படி, பிறந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆயர்பாடிக்கு வந்து யசோதையிடம் ஒப்படைத்து விடுகிறார் வசுதேவர். அதனால் ஒருத்தி மகனாகப் பிறந்து இன்னொருத்தி மகனாக வளர்கிறார் கிருஷ்ணர் என்று பாடுகிறாள் ஆண்டாள். சில நாட்களுக்குப் பிறகு தான். எட்டாவதாகப் பிறந்த குழந்தை, வேறு இடத்தில் வளர்வது கம்சனுக்குத் தெரியவருகிறது.

வேறு இடத்தில் கிருஷ்ணன் வளர்வதை, கம்சனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், கிருஷ்ணனைக் கொல்வதறகாக, பூதகி, சகடன் என வரிசையாக பல அரக்கர்களை ஏவினான். ஆனால் அவர்களை எல்லாம் கிருஷ்ணன் அழித்துவிடவே, கிருஷ்ணனை நினைத்து, கம்சன் வயிற்றில் பயம் பற்றிக்கொள்கிறது. அப்படி கம்சன் வயிற்றில் நெருப்பாக எரியுமாறு நின்ற திருமாலே என்று கிருஷ்ணன் பிறந்த வரலாற்றை கூறி போற்றிப் பாடுகிறாள் ஆண்டாள்.

செல்வத்தின் அதிபதியான அந்த திருமகளே விரும்பும் செல்வமான நாராயணனே, பக்தர்களுக்கு அருளும் உன் கருணையைப் புகழந்துப் பாடி, எங்களுக்கு வேண்டிய ஒன்றைப் பெற்றுக்கொள்ளவே வந்திருக்கிறோம் என ஆண்டாள் பாடுகிறாள்,

 

உட்பொருள்:

பல பாசுரங்களில் பறை வேண்டும் என்று பாடுகிறாளே ஆண்டாள், அந்தப் பறை என்றால் என்ன? பறைக்குப் பல பொருள் இருந்தாலும், ஆண்டாள் குறிப்பிடும் பறை என்பது 'விரும்பிய பொருள்' ஆகும். அப்படி ஆண்டாள் விரும்பும் பொருள் எது?

சிறையில் பிறந்து விடுதலைப் பெற்றக் கண்ணனின் கதையைக் கூறி, எங்களையும் இந்த பிறவி எனும் மாயச் சிறையில் இருந்து விடுவிக்கும்படி வேண்டிக்கொள்கிறாள். பிறவி எனும் பெருங்கடலில் சிக்கிக்கொள்ளாமல், உன்னருகிலேயே இருக்க இடமும் ஆசியும் கொடு என்று வேண்டிக்கொள்கிறாள் ஆண்டாள். அது தான் ஆண்டாள் வேண்டுகின்ற பறை. ஆனால் ஆண்டாள் என்ன அவளுக்காகவா வேண்டுகிறாள்?

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 24 - அன்று இவ்வுலகம்                                                                                                                              பாசுரம் 26 - மாலே மணிவண்ணா

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net