Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை யணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவா ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

பாற்கடலைக் கடைய உதவிய மாதவனை
    அணிகலன் அணிந்த மதிமுகச் சிறுமியர்
வேண்டிப் பரிசுப்பெற்ற கதையினை ஸ்ரீவில்லிப்புத்தூர்
    பெரியாழ்வார் மகளான பூங்கோதை சொன்ன
முப்பது பாசுரத்தை தவறாமல் சேர்ந்துப்
    பாடுபவர்கள்; திருமகளை மனதில் கொண்டு
திடந்தோள் உடைய திருமால் அருளால்
    என்றும் இன்புற்றிருக்கும் வரம்பெற்று மகிழ்வாரே!

 

பொருள்:

இது வரை ஆண்டாள் பாடியப் பாசுரங்களுக்கு ஒரு முத்தாய்ப்பாக இருக்கும் பாசுரம் இது. மார்கழி மாதத்தில் நோன்பிருந்து இப்பாசுரங்களைப் பாடுவதால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை இப்பாசுரம் கூறுகிறது. திருப்பாவையை ஏன் பாட வேண்டும் என்பதை அந்த சிறுப் பாவை அழகாக கூறுகிறாள்.

அமிர்தம் வேண்டி பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது, பாற்கடலைக் கடைய மத்தாக உதவியவர், கூர்ம அவதாரம் கொண்ட கிருஷ்ண பகவான். அவர் மந்தாரமலையைத் தாங்கும் கூர்மமாக அவதரித்தார். அமிர்தம் வருமுன் தோன்றிய மகாலக்ஷ்மியை தன் மனதில் வைத்துக்கொண்டார் நாராயணன், அதானல் அவர் மாது+அவன் = மாதவன் என அழைக்கப்பட்டார். இக்கதையை தான், முதல் வரியில் 'வங்கக்கடல் கடைந்த மாதவனை' என்று குறிப்பிடுச் சிறப்பிக்கிறாள் ஆண்டாள். அந்த மாதவனை, கேசி எனும் அரக்கனைக்கொன்று கேசவன் என்று போற்றப்பட்ட கேசவனை தொழுது வேண்டுகிறார்கள் சிலர். யார் அவர்கள்?

அவர்கள், முழு நிலவு போல பிரகாசமான முகம் கொண்ட, அழகிய ஆபரணங்களை அணிந்துள்ள ஆயர்பாடியைச் சேர்ந்த சிறுமியர்கள். அவர்கள் அந்த கேசவனை, வணங்கித் தொழுது, தங்களுக்கு வேண்டியப் பரிசுகளை எப்படிப் பெற்றனர்.அவர்கள் இப்படி பாடிப் பரிசு பெற்ற நிகழ்வை யார் நமக்கு விவரித்துக் கூறியது?

அவர் வேறு யாருமல்ல. ஊருக்கே அழகு சேர்க்கும் அணிகலன் போல் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் (புதுவை எனப்து ஸ்ரீவில்லிப்புத்தூரைக் குறிக்கிறது) உள்ள பெரியாழ்வார் என அழைக்கப் படும் பட்டர்பிரானின் மகளான, துளசி வனத்தில் பூமாதேவியின் அவதாரமாகக் கண்டெடுக்கப்பட்ட, குளிர்ச்சியான அழகிய தாமரை மலர்களால் செய்த மாலையை அணிந்துள்ள கோதைப் பாடிய பாடல் ஆகும். சூடிக்கொடுத்த சுடர்கொடியான கோதை, ஆணடவனை தன் அன்பினால் அடைந்த பிறகு கிடைத்தப் பெயர் தான் ஆண்டாள். பெரியாழ்வார் சூட்டியப் பெயர் கோதை. அவள் தன்னைக் குறிப்பிடும் பொழுது கோதை என்று கூறாமல் பட்டர்பிரான் கோதை என்று தன் தந்தைக்கு மரியாதை அளித்துக் கூறுகிறாள். தன் தந்தை தான் தமக்கு ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி அறிய வைத்தவர். அவர் மூலம் தான் கிருஷ்ணனின் பெருமைகளைத் தெரிந்துக்கொண்டாள், அவனை சேர வேண்டும் என்றும் நினைத்தாள். தன் தந்தை தான் தனக்கு ஆசிரியர் என்று பெருமைப்படுத்துவதற்காக 'பட்டர்பிரான் கோதை சொன்ன' என்று பாடுகிறாள். 'மார்கழித் திங்கள்' என்ற முதல் பாசுரத்தில் கூட, கண்ணனைப் பற்றி சொல்லும் பொழுது, நேரடியாக கண்ணன், கிருஷ்ணன் என்று சொல்லவில்லை. 'நந்தகோபன் குமரன், யசோதை இளஞ்சிங்கம்' என்று பாடினாள். இதிலிருந்து பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தகுந்த மரியாதை அளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்பதை ஆண்டாள் எடுத்துரைக்கிறாள்.

பெருமாளுக்கு தொடுக்கப்பட்ட மாலையைத் தான் சூடி பிறகு பெருமாளுக்கு அளித்ததால், சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப்பட்டாள் ஆண்டாள். அந்தப் பெருமாளுக்கு நாசி மணக்கும் மலர் மாலை தொடுத்துக் கொடுத்தாள், நமக்கு நா மணக்கும் செந்தமிழால் செய்யப்பட்ட அழகியத் தமிழ்மாலையைத் தொடுத்துக் கொடுத்துள்ளாள். அப்படி ஆண்டாள் பாடிய அந்த முப்பது பாசுரத்தையும், எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரு பாசுரம் விடாமல் எல்லாப் பாசுரத்தை தப்பாமல் பாடினால், அப்படிப் பாடுபவர்களுக்கு மிக உயர்ந்தப் பரிசு கிடைக்கும் என்று கூறுகிறாள். அது என்ன பரிசு? அதை யார் தருவார்?

நான்கு திடமான தோள்களும், சிவந்த விழிகளும், அழகிய முகத்தையும் உடையவனும், செல்வத்துக்கு அதிபதியான திருமகளை தன் நெஞ்சில் இருத்தியவனுமான, அந்த திருமால், திருப்பாவை பாடியதைக் கேட்டு மனம் மகிழ்ந்து, அவர்களுக்கெல்லாம், இன்று மட்டுமல்ல, என்றும் எந்தவொரு துன்பமும் வராமல் இன்புற்று இருக்கும் வண்ணம் அருள் தருவான் என்று உறுதிபடக் கூறுகிறாள் ஆண்டாள். ஆண்டாளின் வாக்கு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால் அவளே அதைப் பாடி தான் அந்த ஆண்டவனின் அருளைப் பெற்றாள். அந்த இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகத் தானே அவள் திருப்பாவையே பாடினாள்.

'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றார் திருமூலர். அதை தான் ஆண்டாளும் செய்து காட்டினாள்.

நமக்காகப் பாடிய அந்த ஆண்டாளுக்கு நன்றி கூறி, அனைவரும் திருப்பாவையை பாடி மகிழ்வோம், இறைவன் அருள் பெற்று இன்புற்று வாழ்வோம்.

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 29 - சிற்றஞ் சிறுகாலே

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற

Aandaal

பாசுரம் 29 - சிற்றஞ் சிறுகாலே

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net