Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 29 - சிற்றஞ் சிறுகாலே

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணுங் குலத்திற் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன்றன்னோ
டுற்றோமே யாவோ முனக்கேநா மாட்செய்வோம்
மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

அதிகாலை வேளையில் வந்துன்னை வணங்கி - உன்
    தாமரை அடிபோற்றும் காரணம் ஏன் தெரியுமா?
பசுக்களை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்தவனே
    எங்களின் சிறுசேவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்
இப்போது சொல்கிறேன் நாங்கள் வேண்டுபவை
    எப்போதும்; ஏழேழுப் பிறவிக்கு அப்பாலும்
உன்னோடு இருந்துனக்குத் தொண்டுகள் செய்வதன்றி
    வேறுஏதும் ஆசைகள் தோன்றாமல் அருளவேண்டும்!

 

பொருள்:

மானிடப் பெண்ணாகப் பிறந்த, பூமா தேவியின் அம்சமான ஆண்டாள், கண்ணனுக்கு சேவை செய்வதையே இலட்சியமாகக் கொண்டுள்ளவள். அந்தக் கண்ணனிடமே சென்று ஐக்கியமாகிவிடவேண்டும் என்பதற்காகத் தான் மார்கழி மாதத்தில் நோன்பிருக்கின்றாள். அந்த இன்பம் தனக்கு மட்டும் கிடைக்ககூடாது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தன் தோழிகளையும் எழுப்பிக் கூட்டிச்செல்கிறாள். மார்கழி நோன்பிருந்து கிருஷ்ணனை வழிபட, அந்த கிருஷ்ணனனையே, அவன் வீட்டிற்குச் சென்று அழைத்து வருகிறாள். நோன்பிற்கு வேண்டிய பொருட்கள் மற்றும் ஆடை ஆபரணங்கள் எல்லாம் வேண்டிப் பெற்றுக்கொண்டாள்.

ஆனால் இந்த வெற்றுப் பொருட்களா ஆண்டாளின் நோக்கம்? இல்லையே, அதனால் தான் சென்றப் பாசுரத்தில் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து நாங்கள் விரும்பும் பறையை, அதாவது பரிசைத் தரவேண்டும் என வேண்டுகிறாள். ஆனால் கண்ணன் உடனே கொடுத்துவிடுவானா? ஆண்டாளிடம் மீண்டும், 'அது தான் நீங்கள் சொன்னதெல்லாம் செய்துவிட்டேனே, கேட்டதெல்லாம் கொடுத்துவிட்டேனே. இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு? என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்க, ஆண்டாள் தங்களுக்கு உண்மையில் என்ன வேண்டும் என்பதைச் சொல்லத் தொடங்குகிறாள். நாம் ஏற்கனவே சொன்னது போல், கண்ணனுக்கு, கேட்கக் கேட்க திகட்டாத தீந்தமிழ்ப் பாடல்களை, ஆண்டாள் பாடப்பாடக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசையால் தான், மீண்டும் என்ன வேண்டும் என்று கேட்கிறான்.

இந்த அதிகாலை நேரத்தில் உன்னை எழுப்பி, வழிபட்டு, உன் பொன் போன்ற தாமரைப் பாதங்களைப் போற்றிப் பாடியது, இந்த ஆடை ஆபரணங்களுக்காக அல்ல. எங்கள் விரதத்தின் நோக்கம் என்ன தெரியுமா? சொல்கிறேன் கேள். பசுமாடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்று, அவை வயிறு நிறைய உண்டபின் தான் நாங்கள் உண்ணத் தொடங்குவோம். அப்படிப்பட்ட ஆயர்குலத்தில் பிறந்தவர்கள் நாங்கள். கோவிந்தா, நீயும் ஆயர்குலத்தில் பிறந்தவன் தானே, நாங்கள் செய்கின்ற சின்ன விரதத்தை ஏற்றுக்கொண்டு எங்களை உனக்கு சேவைகள் புரிகின்ற வாய்ப்பைக் கொடு. எங்களுக்கு நாங்கள் விரும்பும் உண்மையான பரிசைத் தர வேண்டும் என்று கூறுகிறாள்.

நாங்கள் உண்மையாக வேண்டும் வரம் என்னவென்றால், இந்தப் பிறவியல்ல, ஏழேழுப் பிறவியல்ல, எத்தனைப் பிறவிகள் என்றாலும், எப்பொழுதும் உன் உடன் இருக்கும் வரம் வேண்டும். உன் காலடியில் இருந்து உனக்குப் பணிவிடைகள் செய்யும் பாக்கியம் வேண்டும். உனக்கு சிறுத்தொண்டினைப் புரிகின்ற பெரும்பேறை எங்களுக்குத் அருளவேண்டும். இது தான் எங்கள் விருப்பம் என வேண்டிக்கொள்கிறாள். இறைவனிடமே இருக்க வேண்டும் என்றால், வேறு பிறவிகளே இல்லை என்று தானே பொருள், அந்தப் பிறவா வரம் தான் ஆண்டாள் வேண்டுவது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

என்றார் திருவள்ளுவர். வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல்பிறவி எனும் பெருங்கடலை நீந்தி, இறைவனடி சேரவேண்டும் என்பது தான் ஆண்டாளுடைய படைப்பின் நோக்கமும்.

அதுமட்டும் அல்ல, உன்னையே நினைத்திருந்து உனக்கு சேவை செய்வதைத் தவிர வேறெந்த எண்ணமும் எங்களுக்கு எழாதபடிப் பார்த்துக்கொள்ள வேண்டும். 'மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்' என்கிறாள் ஆண்டாள். வேறு எந்த வித ஆசைகளும் தோன்றாதபடி நாங்கள் இருக்க வேண்டும், அப்படியே எங்களை மீறி தோன்றினாலும், உடனேயே அதிலிருந்து எங்களை மீட்டு, மீண்டும் உன்னிடமே இருக்கும்படி செய்திட வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொள்கிறாள்.

ஆண்டாள் இப்படி மனமுருகி இனிக்கும் தமிழில் பாடியபின், மெய்மறந்து மயங்கிக் கேட்டக் கிருஷ்ணரால் மறுக்க தான் முடியுமா?

உட்பொருள்:

மகாபாரதத்தில், யுத்தம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஒரு நாள், அர்ஜுனனும், துரியோதனனும் ஸ்ரீகிருஷ்ணரிடம் உதவி கேட்க செல்கிறார்கள். துரியோதனன், கிருஷ்ணரிடம், உனது படைககளை எல்லாம் எனக்குக் கொடுத்துவிடு என்று கேட்கிறான். ஆனால் அர்ஜுனனோ, கிருஷ்ணா, நீ எங்களோடு வந்துவிடு என்று வேண்டுவான். முடிவு என்ன என்பது நமக்குத் தெரியும். அதுபோல தான் ஆண்டாளும், அந்த கிருஷ்ணனையே கேட்கிறாள். ஆண்டவனிடம், இதை தா, அதை தா என்று கேட்பதற்குப் பதில், அந்த ஆண்டவனையே கேட்கவேண்டும். அதற்குப் பிறகு நமக்கு வேறு எதுவும் தேவையில்லை.

திருப்பாவையின் மற்றப் பாசுரங்களைப் பாடாதவர்கள், தெரியாதவர்கள் கூட இந்த ஒரு பாசுரத்தைப் பாடினால் போதும். ஏனென்றால் இந்தப் பாசுரத்தில் தான் இது வரைப் பாடிய மற்றப் பாசுரங்களுக்கான பலனை, தன் பாவை நோன்பிற்கான உண்மையான வரத்தைக் கேட்கிறாள் ஆண்டாள்.

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 28 - கறவைகள் பின்சென்று                                                                                                              பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net