Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 28 - கறவைகள் பின்சென்று

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத் துன்றனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா வுன்றன்னோ
டுறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது
அறியாத பிள்ளைகளோ மன்பினா லுன்றனைச்
சிறுபே ரழைத்னவுஞ் சீறி யருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

காடுவெளிகளில் பசுக்களை மேய்த்து வாழும்
    கல்வியறிவில்லாத நாங்களும் உன்னைப் போல்
ஆயர்குலத்தில் பிறந்தது எங்கள் புண்ணியமே!
    குறைகளே இல்லாத கோவிந்தனே உன்னோடு
எமக்கிருக்கும் உறவினையென்றும் அழிக்க முடியாது
    அறியாச் சிறுமிகள் நாங்கள் அன்பினால் உன்னை
ஒருமையில் அழைத்தது கண்டு சினம்கொள்ளாதே
    இறைவா எங்களை மன்னித்து அருள்வாயாக!

 

பொருள்:

'கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா' என சென்றப் பாசுரத்தில் அழைத்த ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் 'குறை வொன்றும் இல்லாத கோவிந்தா' என போற்றிப் பாடுகிறாள். நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறாள்.

ஆபரணங்களும், பட்டாடைகளும் பெற்று, நெய் வழிய வழியப் பால் சோறும் உண்டு மகிழ்ந்தனர் ஆண்டாளும் தோழிகளும். கண்ணனைக் காணும் பாக்கியம் கிடைத்தது எண்ணி மகிழ்ந்து மன நிறைவோடு கண்ணனிடம் தங்களின் அறியாமையைப் பற்றிக் கூறுகிறாள்.

நாங்கள் பசுக்களை, புல்வெளிகளிலும், காடுகளிலும் மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்று, அங்கேயே அனைவருடன் சேர்ந்து உணவருந்தி வாழும் ஆயர்குலத்து அறியாச் சிறுமிகள். நாங்கள் வேதங்களோ வேறு கல்வியறிவோ இல்லாதவர்கள். ஆனால் இப்படி பட்ட நாங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள். ஏன் தெரியுமா? நீ பிறந்த அதே ஆயர்குலத்தில் தான் நாங்களும் பிறந்துள்ளோம். அது நாங்கள் செய்த புண்ணியம் தானே? எனக் கேட்கிறாள் ஆண்டாள். அது மட்டுமா உன்னைக் காணும் பாக்கியமும் கிடைத்ததே, நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் தானே என்று கூறும் ஆண்டாள், தனக்கு ஒன்றும் தெரியாது என்று பணிவுடன் சொல்கிறாள், முழுமையாய் இறைவனிடம் சரணடைகிறாள். திருப்பாவைப் பாடிய ஆண்டாள், தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறாள், ஆனால் நம்மில் பலர், எல்லாம் எங்களுக்கு(எனக்கு)த் தெரியும் என்று கர்வத்தோடு திரிகிறோம். ஆண்டாளிடமிருந்து நாம அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியப் பாடம்.

பக்தர்களின் குறைகளை எல்லாம் போக்குகிறவன் நீ. உன்னிடம் ஒரு குறை கூட இல்லை, ஆனால் எங்களிடம் பல குறைகள் உள்ளன, ஆனால் எங்கள் குறைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு எங்களுக்கு அருளுகின்ற நீ, குறை ஏதும் சொல்ல முடியாத தூய்மையானவன். அப்படிபட்ட உன்னோடு எங்களுக்கும் இருக்கும் இந்த உறவு என்பது யாராலும் பிரிக்க முடியாது. உன்னிடம் நாங்கள் பல பரிசுகள் பெற்றோம், ஆனால் எங்கள் மீது நீ வைத்துள்ள இந்த அன்பு தான் தான் நாங்கள் பெற்ற மிகப்பெரியப் பரிசு என உணர்ச்சிப் பொங்கக் கூறுகிறாள் ஆண்டாள்.

உனது மேலுள்ளப் பக்தியாலும், மிகுந்த அன்பினாலும் நாங்கள் உன்னிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டோம். அந்த உரிமையால் உன் வீட்டிற்கே வந்து உன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டோம். அன்பின் மிகுதியால் ஒருமையில் உன்னைப் பல பெயர்கள் சொல்லி அழைத்தோம். அதனால் எங்கள் மீது சினம் கொள்ள வேண்டாம். எங்களை மன்னித்து நாங்கள் விரும்பும் உண்மையானப் பரிசை தந்து அருளவும் என வேண்டிக்கொள்கிறாள் ஆண்டாள்.

உட்பொருள்:

'கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு' என்பது ஔவைப் பாட்டியின் வாக்கு. அது போல் தான் ஆண்டாள் சொல்கிறாள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று. உன் மீது வைத்துள்ள அன்பைத் தவிர வேறு ஏதும் எங்களுக்குத் தெரியாது என்கிறாள். எவ்வளவு கற்றவர்கள் என்றாலும் பணிவு வேண்டும் என்பது தான் இப்பாசுரத்தின் பொருள். இறைவனை அடைய, நமது அறிவு, நான் என்ற அகங்காரம் ஆகியவற்றை எல்லாம் முதலில் விடவேண்டும். அன்பு ஒன்றால் தான் இறைவனைக் காண முடியும் அடைய முடியும். ஆண்டாளின் அன்பு தான் கண்ணனைக் கண் முன் வர வைத்தது. இதை தான் திருமூலரும் 'அன்பே சிவம்' என்றார்.

குறைவொன்று மில்லாத கோவிந்தா

நாம் அனைவரும் கேட்டு மகிழ்ந்த ஒரு பாடல், ஆண்டாள் பாடிய இந்த ஒரு வரியைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என்று ஆண்டாள் பாடிய வரிகளைக் கொண்டு, எழுதப்பட்ட அந்தப் பாடல் 'குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' என்றப் பாடல். ஆண்டாள் 'கண்ணனுக்கு குறை ஏதும் இல்லை' என்றுப் பாடினாள், இந்தப் பாடல், கண்ணனால் எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்று சொல்கிறது. இப்பாடலைப் பாடியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா என்று நமக்குத் தெரியும். அவர்களின் இனியக் குரலில் இப்பாடலைக் கேட்டால், ஆண்டாள் பாடலைக் கேட்டுக் கண்ணன் மயங்கியது போல் நாமும் மயங்கி இருப்போம். ஆனால் இந்தப் பாடலை எழுதியது யார் என்று தெரியுமா? இப்பாடலை எழுதியவர் 'இராஜாஜி' என்றும் அன்புடன் அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள்.

(விக்கிப்பீடியாவிலிருந்து) சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் இதுவாகும். தமிழறிஞர் மீ.ப. சோமசுந்தரம் அவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967-இல் ‘கல்கி’ பத்திரிகையில் வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியால் 1979/80 -இல் முதலில் பாடப்பட்ட இப்பாடல், பிறகு இசையுலகில் மிகப் பிரபலமானது.

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 27 - கூடாரை வெல்லும்                                                                                                                                  பாசுரம் 29 - சிற்றஞ் சிறுகாலே

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net