கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போ மதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
விரும்பாதவரையும் விரும்பவைக்கும் கோவிந்தனே
உன்புகழைப் பாடிநாங்கள் பெறப்போகும் வெகுமதி
நாட்டுமக்கள் பாராட்டும் வண்ணம் இருக்குமே;
கைவளையல் தோள்வளையம் பலவகை தோடுகள்
கொலுசுகள் இன்னும்பல வகை அணிகலன்களும்
பட்டாடையும் அணிந்து அதன்பின்னே முழங்கை
வரையில் நெய்வடிய அக்கார அடிசில்தனை
ஒன்றுகூடி அனைவரும் உண்டுமகிழ அருளவேண்டும்!
பொருள்:
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப, ஆண்டாள் கிருஷ்ணரைத் தொடர்ந்து எழுப்ப முயன்று அதில் வெற்றியும் கண்டு விட்டாள். அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சிம்மாசனத்திலும் வந்து அமர்ந்துவிட்டான். என்ன வேண்டும் என கண்ணன் கேட்க, நோன்பிருக்க வேண்டிய பொருட்களை எல்லாம் ஆண்டாள் பட்டியலிட்டதை சென்ற பாசுரத்தில் பார்த்தோம்,
இந்தப் பாசுரத்தில், கிருஷ்ணர், நோன்பிருக்கும் பொருட்களை எல்லாம் தருகிறேன், வேறு என்ன வேண்டும் உங்களுக்கு என கேட்கிறான். அப்பொழுது தான் ஆண்டாளுக்கு, தாங்கள் கண்ணனைக் காண இதுவரை இருந்து வரும் கடும் விரதம் நினைவிற்கு வருகிறது. 'வையத்து வாழ்வீர்காள்' எனும் இரண்டாவது பாசுரத்தில் பாடினாளே. 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம்', 'மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்' என, அவை எல்லாம் நினைவிற்கு வந்ததும், இவ்வுலகில் வாழும் மற்ற சராசரி பெண்ணாக மாறி தங்களுக்கு வேண்டியது என்னென்ன என்று கூற தொடங்குகிறாள். ஆடை ஆபரணங்களுக்கு மயங்காத பெண்களே கிடையாது என்று கட்டியம் கூறுவது போல் இருக்கிறது ஆண்டாள் கேட்பவை. ஆண்டாளே இப்படி என்றால் மற்றப் பெண்களைப் அற்றி சொல்லவும் வேண்டுமா?
கூடாரை என்றால் பொதுவாகப் பகைவர்கள் என்று பொருள். ஆனால் இவிடத்தில் அது பகைவர்களைக் குறிக்கவில்லை. சிலர் பல நல்ல குணங்களைப் பெற்றிருப்பார்கள், ஆனால் சில தீயக் குணங்களும் இருக்கும். செய்யக் கூடாதவற்றைச் செய்பவர்கள், அல்லது சொல்லக் கூடாதவற்றைச் சொல்பவர்கள் என பல கூடாதவற்றை உடையவர்கள். அப்படி கண்ணன் மீது வெறுப்பு உள்ளவர்களைக் கூட வென்று அவர்களின் மனதை மாற்றக் கூடியவன் கண்ணன். அதனால் தான், கூடாரைக் கொல்லும் என்று சொல்லாமல், கூடாரை வெல்லும் என்று பாடுகிறாள் ஆண்டாள்.
உன்னை விரும்பாதவர்களைக் கூட உன்னை விரும்ப வைக்கும் வல்லமைக் கொண்ட கோபாலனே, உன்னிடமிருந்து நாங்கள் பெறப்போகும் சனமானம் என்ன என்பதை அறிந்தால், இந்த நாடே எங்களைப் பாராட்டப் போகிறது. உன்னைக் காண்பதற்காக, இதுவரை எங்களை ஒப்பனை செய்துக்கொள்ளாமல், பால், நெய் போன்றவற்றை உண்ணாமல், விரதமிருந்து வந்தோம். இப்போது உன்னைக் கண்டதால் எங்கள் விரதம் நிறைவு பெறுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் எங்களை நாங்கள் ஒப்பனை செய்துக்கொள்ளப் போகிறோம். செல்வம் உள்ளவரை தானே நாட்டுமக்கள் புகழ்வார்கள். அதனால், எங்களுக்கு, கைகளில் அணிந்திட வளையல்கள், தோளுக்கு அணியும் வளையம், செவிகளின் அடிப்பாகத்தில் அணியும் தோடுகள், மேற்பாகத்தில் அணியும் தோடுகள், கால்களுக்கு அணியும் கொலுசுகள், மேலும் நாங்கள் சொல்லமறந்து விட்டுப்போன மற்ற பல அணிகலன்களும் தரவேண்டும். அதுமட்டும் அல்ல, நாங்கள் உடுத்திக்கொள்ள அழகியப் பட்டாடைகளும் வேண்டும், என்று கேட்கிறாள் ஆண்டாள்.
இவற்றைக் கேட்டது மட்டுமல்லாமல், இவற்றையெல்லாம் நீயும் நப்பின்னையும் தான் எங்களுக்கு அணிவிக்க வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகிறாள். இவற்றையெல்லாம் அணிந்தபின், நாம் அனைவரும் ஒன்றாக கூடி, நெய்யில் மிதக்கின்ற பால் சோறு உண்டு மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள். அதுவும் எப்படி, அக்கார அடிசில் (சர்க்கரைப் பொங்கல்) எனப்படும் அந்த பால் சோறை உண்ணுகையில், வடிகின்ற நெய், உள்ளங்கையிலிருந்து முழங்கை வரை வழிய வழிய சுவைத்து உண்ணவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாள். ஆயர்பாடியில் பாலுக்கும், நெய்யிற்கும் தான் பஞ்சம் கிடையாதே. விரதம் முடித்தால் விருந்து தானே, அதுவும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உண்ணும் பொழுது அதன் சுவை இன்னும் கூடும் அல்லவா? அதை தான் ஆண்டாளும் குறிப்பிடுகிறாள்.
உட்பொருள்:
இறைவன் மகிழுமாறு நடந்துகொண்டுவிட்டால், நாம் கேட்கின்ற அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் இறைவன் தந்துவிடுவான். இங்கே ஆண்டாள் பல வகை ஆபரணங்களை கேட்பதன் காரணம், என்ன கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் கொடுப்பான் என்பதை உணர்த்த தான். இறைவனிடம் போய், வெறும் ஆடை ஆபரணங்களைக் கேட்கும் சாதாரண பெண்ணா ஆண்டாள்? அழிந்துப் போகின்ற நிலையற்ற பொருட்களை கேட்காமல், நிலையான இனபம் தரும் ஒன்றை கேட்கவேண்டும் என சொல்லாமல் சொல்கிறாள் ஆண்டாள். அதனால் நாம் கேட்கவேண்டியது இது போன்ற பொருட்களை அல்ல, ஆண்டாள் கேட்கும் சன்மானம், அந்த ஆண்டவன் தான், அதனால் நாமும், ஆண்டாள் போல் அவனையே அல்லவா கேட்கவேண்டும்.
ஆபரணப் பெயர்கள்
எனக்கு தங்க நகைகள் பற்றி அதிகம் தெரியாது. இப்பாசுரத்தில் ஆண்டாள் கேட்கும் சில பொருட்களின் பெயர்கள், இது வரை நான் கேள்விப்படாத சொற்களாக உள்ளன, உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்:
சூடகம் - கைகளில் அணியும் வளையல்கள்
தோள்வளை - தோளில் அணியும் அணிவகை
செவிப்பூ - காதின் மேற்புறத்தில் அணியும் தோடுகள். (கர்ணப்பூ)
பாடகம் - மகளிர் காலணி (கொலுசு)
கூடாரவல்லி
திருப்பவையில், இந்தப் பாசுரம் மிகவும் விஷேசமானது. 27 நாட்கள் விரதமிருந்து முடித்த பின், தாங்கள் கேட்கின்ற அனைத்தையும் கிருஷ்ணன் தரப்போகிறான் என்பதை உணர்த்தும் பாசுரம். இதுவரை கைகூடாத நற்காரியங்கள் எல்லாம் கைகூடி வரும் என்பதை கூறுவதால், அனைவரும் இதைப்பாடி இறைவனிடம் தங்களுக்கு இது வரை தடைபட்டு வருகின்ற, அல்லது கூடிவராத நற்காரியங்களை நடத்திவைக்குமாறு வேண்டிக்கொள்ளலாம். 'கூடாரை வெல்லும்' என்பதால், மனக்கசப்பினால் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேர வாய்ப்புண்டு. வேறுபாட்டை வேரறுக்கும் பாசுரம் இது. பெருமாள் கோவில்களில், இன்றைய நாளை 'கூடாரவல்லி' என்ற திருவிழாவாகக் கொண்டுடாடுவார்கள்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்