மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன் கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி நிலையா யருளேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
திருமாலே மணிவண்ணனே எங்கள் முன்னோர்போல்
மார்கழி நோன்பிருக்க உதவிட வேண்டுகிறோம்
அகிலமே நடுங்கும் வண்ணம் முழங்குகின்ற
பால்போல் வெணமையான உனது வலம்புரி
சங்கைப் போன்ற சங்குகளும்; இசைத்திட
பெரும்முரசுளும் உன்புகழை உரக்கப் பாடுவோரும்
ஒளிவீசும் விளக்கும் கொடியும் குடையும்
தந்தருள வேண்டும் ஆலிலைக் கண்ணா!
பொருள்:
இதற்கு முன் சில பாசுரங்கள் (15, 16) உரையாடல் போல இருந்தன அல்லவா? இந்தப் பாசுரம், கிருஷ்ணரோடு ஆண்டாள் உரையாடுவதாக அமைந்துள்ளது.
சென்றப் பாசுரத்தில், தன் வரலாற்றை ஆண்டாள் பாடியதைக் கேட்டு உளம் மகிழந்த ஸ்ரீகிருஷ்ணர், புன்சிரிப்போடு ஆண்டாளிடம், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். நமக்கு என்ன வேண்டும் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியாதா என்ன? நாம் எண்ணுவதை அவனாகவே கொடுக்கின்ற பொழுது கொடுக்கட்டும் என்று நினைத்த ஆண்டாள், மார்கழி நோன்பிருக்க வேண்டிய பொருட்களை கண்ணனிடம் கேட்கிறாள்.
'மார்கழி நோன்பா?' அப்படி என்றால் என்ன என்று, ஒன்றும் தெரியாதவன் போல கிருஷ்ணன் கேட்க, 'திருமாலே, நீல மணிவண்ணனே, உனக்கு தெரியாத ஒன்றென்று ஒன்று உண்டா? நாங்கள் வேதங்கள் எல்லாம் முழுமையாக அறிந்ததில்லை, ஆனால் எங்கள் முன்னோர்கள் கடைபிடித்த நற்காரியங்களை, விரதங்களை நாங்களும் தொடர்ந்து செய்ய விரும்புகிறோம்' என்று பதில் கூறுகிறாள்.
ஆண்டாளின் பதிலால் மகிழ்ந்த கிருஷ்ணன், சரி என்னப் பொருட்கள் வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அண்டாள், என்றென்றும் உன் புகழைப் பாடி மகிழ்ந்திருக்க வேண்டும், உன் புகழை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும், உன்னை வீதி உலா அழைத்துச் செல்லவேண்டும்.
அதனால், அகில உலகத்தையும் தன் ஓசையால் நடுங்க செய்கின்ற, உன் பாஞ்சசன்னியம் எனும் வலம்புரி சங்கைப் போன்ற வெண்மையான சங்குகள் எங்களுக்கு வேண்டும். அச்சங்கொலி கேட்டால், தீமை செய்ய எண்ணுபவர்கள் கூட, கண்ணன் இருக்கிறான் என்பதை அறிந்து தவறு செய்யாமல் இருப்பார்கள்.
நீ வருகிறாய் என்பதை அனைவருக்கும் முரசுகொட்டி அறிவிப்பதற்காக, இனிமையாய் இசைக்கும் பேரிகைகள் வேண்டும். உனது கோவிலில் பல்லாண்டு பாடுபவர்கள், போல் எங்களுக்கும் உன புகழைப் பாடிமகிழ்விக்கப் பல்லாண்டு பாடுபவர்கள் வேண்டும். அதிகாலை வேளையில் இருட்டாக இருக்கும் என்பதால், வெளிச்சம் தர மங்கல விளக்குகளையும், தூரத்திலிருப்பவரும் நீ வருவதை அறிந்துக் கொள்வதற்காக பட்டொளி வீசும் கொடியும், அதிகாலை நேர பனியிலும் மழையிலும் நனையாத வண்ணம் குடையும் வேண்டும் என்று தங்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் பட்டியலிடுகிறாள் ஆண்டாள்.
பிரளய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், ஒரு சிறு ஆல இலையில் படுத்துக்கொண்டு வர முடிந்த உன்னால் இவற்றையெல்லாம் தர இயலாதா என்ன? என்று கேட்கிறாள் கெட்டிக்காரியான ஆண்டாள். ஒருவேளை, கண்ணன், என்னால் இவற்றையெல்லாம தர முடியாதே என்று மறுக்க நினைத்தாலும் முடியாது அல்லவா?
ஆண்டாள் இப்பொருட்களை கேட்க என்ன காரணம்?
ஆண்டாள் கேட்பது எல்லாமே நமக்காகத் தானே.
வெண்மையான சங்கு - பால் போல தூய மனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது
முரசு - தான் அடிபட்டாலும் அதை தாங்கிக்கொண்டு முரசு இனிய ஓசையைத் தருவதைப் போல், நமக்கு துன்பம் நேர்ந்தாலும், பிறருக்கு தீங்கு செய்யாமல் நன்மை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது (திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் அல்லவா -
இன்னாசெய தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் - 314)
பல்லாண்டு பாடுபவர் - எப்பொழுது இறைவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதற்காக
விளக்கு - அறியாமை இருள் விலகி ஞான ஒளி பெற வேண்டும் என்பதால்
கொடி - கம்பத்தில் கட்டப்பட்டு காற்றில் ஆடுகின்ற கொடி போல், நாங்கள் இந்தப் பிறவியில் கட்டுண்டு கிடக்கிறோம், ஆசைகள் எங்களை ஆட்டி வைக்கிறது என்பதை குறிக்கிறது. அதிலிருந்து விடபட அவன் அருள் வேண்டும் அல்லவா?
குடை - பனியோ, வெயிலோ, மழையோ எதுவென்றாலும் அவற்றிலிருந்து நம்மைக் காப்பபது போல், நமக்கு மேல் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்த்துவதற்காக. அவனிடம் முழுமையாக சரணடைந்து விட்டால், எந்த ஆபத்து வந்தாலும் அவன் காப்பான் என்ற நம்பிக்கை ஊட்டுவதற்காக.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்