Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற

நாய கனாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக் கறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால்முன் னமுன்னம் மாற்றாதே யம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

நாயகன் நந்தகோபன் மாளிகையைக் காக்கின்ற
    கடமைச் செய்பவனே! கொடியும் தோரணமும் கட்டிய
வாசல் கதவைக் காப்பவனே; கதவினைத் திறந்திடுங்கள்!
    ஆயர்குலச் சிறுமிகளான எங்களுக்கெல்லாம் பறைதர
மாயக்கண்ணனான மணிவண்ணன் நேற்றே உறுதியளித்துள்ளான்
    அதிகாலை நீராடித் தூய்மையான மனதுடன்
அவனை எழுப்பிட வந்துள்ளோம்
    முதன் முதலில் உங்களிடம் தான் கோரிக்கை வைக்கிறோம்
முடியாதென்று சொல்லாமல் அன்போடு திறந்துவிடுங்கள்!

 

பொருள்:

இது வரையில் பாடிய பதினைந்து பாசுரங்களிலும், ஆண்டாள் மார்கழி பாவை நோன்பிருக்க, தம் தோழிகள் அனைவரையும் ஒவ்வொருவராக எழுப்ப, பள்ளியெழுச்சிப் போல் பாசுரங்கள் பாடி எழுப்பிவிட்டாள். இனி அவர்கள் எல்லோரும் மார்கழி நீராடி, நோன்பிருந்து அந்தக் கண்ணனைத் தரிசித்து வணங்க வேண்டும். அதற்காக அனைவரும் கிருஷ்ணனை எழுப்ப அவன் மாளிகைக்குச் செல்கிறார்கள். சென்ற பாசுரம் போல், இந்தப் பாசுரமும் உரையாடலாக இருக்கிறது. ஆனால், இதில் கேள்விகள் இல்லை, பதில் மட்டும் தான் இருக்கிறது. அந்த பதில்களில் இருந்து நாம் கேட்கப்பட்ட கேள்விகளை அறிந்துக்கொள்ள முடியும்.

கிருஷ்ணர் பரமாத்மாவாக இருந்தாலும், இப்பூமியில் கிருஷ்ணர் அவதாரமாக, நந்தகோபன் மகனாகப் பிறந்து வளர்ந்ததால், கிருஷ்ணன் வசிக்கும் அந்த மாளிகையை, நந்தகோபன் மாளிகை என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அந்த அழகான மாளிகையில், கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன். வாசல் கதவுகளில் பல வண்ண மணிகள் பதிக்கப்பட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மாளிகை வாசலிலும், மாளிகைக்குள் நுழையும் கதவுகள் அருகேயும் காவலர்கள் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த காவலர்கள், மாளிகை உள்ளே நுழைய முயலும் ஆண்டாளையும் அவள் தோழிகளையும் தடுத்து நிறுத்தி, நீங்கள் யார், எதற்காக மாளிகைக்குள் நுழையப் பார்க்கிறீர்கள் என்று கேட்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்து ஆண்டாள், கிருஷ்ணன் வசிக்கும் மாளிகையை காவல் காப்பவர்களே, நாங்கள் எல்லோரும் ஆயர் சிறுமிகள், ஸ்ரீகிருஷ்ணரைக் காண வந்துள்ளோம். தயவு செய்து, மணிகள் பதித்துள்ள இந்த அழகிய கதவை திறந்துவிடுங்கள் என்று பதில் கூறுகிறாள் ஆண்டாள்.

அவர்கள் கூறியதை நம்ப மறுக்கும் காவலர்கள், உங்களை எப்படி நாங்கள் நம்புவது? கிருஷ்ணரைக் கொல்ல, கம்சன் பல அரக்கர்களை பல மாறுவேடங்களில் அனுப்பியிருக்கிறான், நீங்களும் அது போன்றவர்கள் இல்லை என்பதை நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்கிறார்கள். அதற்கு ஆண்டாள், எங்களைப் பார்த்தால், அரக்கிகள் போலவா தெரிகிறது. நாங்கள் எல்லோரும் ஆயர் குலச் சிறுமிகள். கிருஷ்ணன் மேல் அதிக பக்திக் கொண்டுள்ளவர்கள். மாயங்கள் பல புரிகின்ற அந்த மணிவண்ணன் எங்கள் பக்தி கண்டு மகிழ்ந்து, எங்கள் எல்லோரையும் இன்று காலை வருமாறு, நேற்றே சொல்லிவிட்டான், எங்களுக்கு இசைப்பதற்கு பறையும் பரிசுகளும் தருவதாகவும் உறுதி அளித்துள்ளான், அதைப் பெறுவதற்காகத் தான் வந்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.

அப்படியும் நம்ப மறுக்கும் காவலர்களிடம், அந்த கிருஷ்ணனைப் பாட்டுப் பாடி எழுப்புவதற்காக தான் மார்கழி நீராடி, தூய உள்ளத்தோடு வந்துள்ளோம். மார்கழித் திங்கள் நன்னாளில், நாங்கள் முதன் முதலில் உங்களிடம் தான் எங்கள் கோரிக்கையை வைத்துள்ளோம், தயவு செய்து முதலிலேயே அதை மறுத்துவிடாதீர்கள், மாற்றி மாற்றி ஏதாவது சொல்லிவிடாதீர்கள் என்று கெஞ்சுகிறாள் ஆண்டாள். எங்கள் மேல் அன்புகொண்டு, கண்ணனைக் காண தடையாக இருக்கும் அந்த அழகான மணிக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளே விடுங்கள், நாங்கள் கண்ணனைப் பாட்டுப் பாடி துயில் எழுப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள்.

இவர்கள் பொய் சொல்வதைப் போல் தெரியவில்லை, இவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் என்பதை அறிந்த அந்தக் காவலர்கள், கதவைத் திறந்து மாளிகைக்குள் அவர்கள் அனைவரையும் அனுமதிக்கிறார்கள்.

உட்பொருள்:

நல்ல காரியம் செய்ய நினைப்பவர்கள் உதவி கேட்டால், என்ன ஏது என்று அறிந்தும், புரிந்தும் கொள்ளாமல், சட்டென்று முகத்தில் அடிப்பது போல் மறுத்துவிடக் கூடாது. அவர்கள் கேட்பது உங்களுக்கு சம்மதமில்லாமல் அல்லது பிடிக்காமல் இருந்தாலும், அல்லது அவர்கள் செய்யப்போகின்ற செயல் வெற்றிப்பெறாது என அறிந்தாலும், அதை அவர்கள் மனம் கோணும்படி நேரடியாகச் சொல்லாமல், அவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் நிதானமாக எடுத்துரைக்க வேண்டும். எதையும் அபசகுணமாக முதலிலேயே சொல்லக்கூடாது என்பதை தான் 'வாயால்முன் னமுன்னம் மாற்றாதே' என்று ஆண்டாள் கூறுகிறாள்.

இன்னொரு பொருள், இறைவனைத் தரிசிக்கக் கோவிலுக்குச் செல்லும் எவரையும், யாரும் தடுக்கக் கூடாது என்பதாகும்.

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 15 - எல்லே இளங்கிளியே                                                                                                                பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net