எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேமின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானோதா னாயிடுக
ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை
எல்லோரும் போந்தாரோ? போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை மற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலே ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
இனிமையான இளங்கிளியே இன்னும் உறக்கமா?
சத்தமிட வேண்டாம் இதோ வந்துவிடுகிறேன்!
உன்சமர்த்துப் பேச்சை அறிவோம் சீக்கிரம்வா
சரிசரி உங்களைப்போல் நான் திறமைசாலி இல்லைதான்!
உனக்காகக் காத்திருக்கோமே வேறென்ன வேண்டும்?
எல்லோருமா வந்துவிட்டனர்?
ஆம் நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள்!
கொடும் அரக்கர்களைக் கொன்றவனும் - தீய
எண்ணங்களை அழிக்க வல்லவனுமான
மாயக்கண்ணனின் புகழ்பாட எழுந்துவா தோழியே!
பொருள்:
இதுவரை ஆண்டாள் பாடியப் பாடல்களில் இருந்து இந்தப் பாடல் சிறிது வேறுபட்டிருக்கிறது, இது ஆண்டாளுக்கும், ஆண்டாள் எழுப்ப முயற்சிக்கும் தோழிக்கும் இடையேயான ஒரு உரையாடல் போல் இருக்கிறது. இதுவும் தோழியை எழுப்ப பாடுகிற பாடல் தான். ஆண்டாள் ஒன்று சொல்ல தோழி அதற்கு பதில் சொல்கிறாள், தோழி ஒன்று கேட்க அதற்கு ஆண்டால் பதில் அளிக்கிறாள்,
இந்தத் தோழி இனிமையாகப் பாடக் கூடியவள். ஆண்டாளும் மற்றத் தோழிகளும் இவளை எழுப்பிட வருகையில், அவள் வீட்டிலிருந்து மெலிதான பாட்டுச்சத்தம் கேட்கிறது. அது மிகவும் இனிமையாய் இருக்கிறது. ஆண்டாளுக்குத் தெரியும் இது அவள் தோழியின் குரல் தான் என்று. அதனால் தான், இனிமையாய் பாடுகின்ற இளங்கிளியே, இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் என்ன உறக்கம்? என்று கேட்கிறாள்.
இந்தத் தோழிக்கு, அந்த விடிகாலை நேரத்தில், குளிருக்கு இதமாக நன்றாகப் போர்த்திக் கொண்டு, இன்னும் சற்று நேரம் படுக்கையில் படுத்துக்கிடக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் நாம் விழித்திருப்பது தோழிகளுக்குத் தெரிந்துவிட்டதே என்று சற்று நாணுகிறாள். அதனால். வீட்டு வாசலில் இருந்து சத்தமிட்டு அழைக்காதீர்கள், நான் இதோ வந்துக்கொண்டு இருக்கிறேன் என்று சற்று கோபமாகப் பதில் சொல்கிறாள். நாம் ஏதாவது தவறு செய்து, அதை மற்றவர்கள் கண்டுபிடித்து விட்டால், உடனே நாம் கோபம் கொண்டு, இல்லை இல்லை என்று சொல்வோம் அல்லவா, அது போல தான் இந்த தோழியும் சற்று கோபத்துடன் பதில் கூறுகிறாள்.
ஆனால் ஆண்டாளுக்கும் மற்றத் தோழிகளுக்கும் இவளைப் பற்றி நன்றாகத் தெரியும். சென்ற பாடலில் பார்த்த தோழி போல் இவளும் வாய்சொல்லில் வீராங்கனை, ஆனால் சொன்னதை செய்ய மறந்துவிடுவாள். அதனால் தான், நீ இன்னும் எழுந்து வராமல் பதில் கூறிக் கொண்டே இருக்கின்றாயே. உன் பேச்செல்லாம் எப்படிப் பட்டது என்று எங்களுக்கும் நன்றாகவே தெரியும். சீக்கிரம் வா என்று கூறுகிறார்கள்.
இதனால் மேலும் கோபம் கொள்ளும் அவள், சரி சரி, நீங்கள் எல்லோரும் என்னை விட மிகவும் திறமைசாலிகள். நான் தான் ஒரு ஏமாந்தவள், நான் இப்படியே இருந்துவிடுகிறேன் என்று கூறுகிறாள். உடனே ஆண்டாள், ஏன் கோபித்துக் கொள்கிறாய்? உனக்காகத் தானே, உன்னையும் அழைத்துச் செல்லத் தானே, நாங்கள் எல்லோரும் இப்படி பனியில் காத்துக்கொண்டு இருக்கிறோம். எல்லோரும் வந்து விட்டார்கள், உனக்கு வேறு என்ன தான் வேண்டும்? என கேட்கிறாள்.
அவள் மறுபடியும் எழுந்து வராமல், நான் மட்டும் எழவில்லை என்று சொல்கிறீர்களே, எல்லோருமா அதற்குள் வந்துவிட்டார்கள் என்று மீண்டும் உள்ளிருந்து கேட்கிறாள். அதற்கு வெளியில் நிற்கும் தோழிகள், ஆமாம், வேண்டுமென்றால் அதை நீயே வெளியே வந்து எண்ணிப் பார்த்துக்கொள் என்று சிடுசிடுக்கிறார்கள்.
அடுத்து, கிருஷ்ணரைக் கொல்ல கம்சன் அனுப்பிய இன்னொரு அரக்கனைக் கொன்ற கதையைக் கூறுகிறாள் ஆண்டாள். வலிமை மிக்க யானையாய் வந்த குவலயாபீடம் என்கின்ற அரக்கனைக் கொன்றவன் என்பதை 'வல்லானைக் கொன்றானை' என்று கூறுகிறாள். அதே போல், கெடுதலான தீய எண்ணங்களுடையவர்களை அழிக்காமல், அவர்களின் தீய எண்ணங்களை நலெண்ணங்களாக மாற்றி விடும் வல்லமைப் பொருந்தியவன் என்பதை 'மற்றாரை மாற்றழிக்க வல்லானை' என்ற வரியில் கூறுகிறாள். கண்ணன் எப்பொழுதும் முதலில் பகைவர்களை அழிக்கமாட்டான், பகைமையை தான் அழித்து அவர்களை நல்லவர்களாக மாற்ற முயற்சிப்பான். அதை தான் இந்த வரியில் பாடுகிறாள் ஆண்டாள். இதுபோல் பல மாயங்கள் புரிகின்ற அந்தக் கண்ணனின் புகழைப் பாடி வணங்க வேண்டாமா? சீக்கிரம் எழுந்து வா தோழியே என்று மீண்டும் அழைக்கிறாள்.
தன் மீது மிகுந்த பிரியம் வைத்துள்ள ஆண்டாளையும் மற்றத் தோழிகளையும் இனியும் காக்கவைப்பது நல்லதல்ல என்று எண்ணியத் தோழி உடனே எழுந்து வருகிறாள். அவர்கள் அனைவரும் பாவை நோன்பிருக்கச் செல்கின்றனர். இந்தப் பாடலுடன் தோழிகளை எழுப்புகின்ற படலம் முடிந்துவிட்டது.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்