உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
உன்வீட்டுக் கொல்லைப்புறத் தோட்டத் தடாகத்தில்
செங்கழுநீர் மலர்ந்து ஆம்பல் கவிழ்ந்துள்ளன பார்
காவிநிற ஆடையணிந்தத் தூயத் துறவியர்
சங்கொலி இசைக்கக் கோவிலுக்குச் செல்கின்றனர் - அதி
காலையில் எங்களை எழுப்புவேன் என்றவளே
சொன்னதை மறந்து நாணமின்றி உறங்குவதா?
சங்கும் சக்கரமும் ஏந்திய திருக்கையுடைய நம்
தாமரைக்கண்ணன் புகழ்பாடிட எழுந்திரு தோழியே!
பொருள்:
ஆண்டாள் அடுத்து எழுப்பிவிடப் போகும் தோழி, அனைவரையும் கவரும் வண்ணம், இனிக்க இனிக்க பேசக்கூடியவள் என்று தெரிகிறது. ஆனால் என்னென்ன சொன்னாளோ, அதன்படி நடந்துகொள்ள மறந்துவிட்டவள் என்பதை இந்தப் பாடலில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.
ஒவ்வொருத் தோழிகளாக எழுப்பி விட்டு வர வர பொழுதும் விடிந்துக்கொண்டே இருக்கிறது. இந்த தோழியின் வீட்டின் பின்புறம் மிகப்பெரிய ஒரு தோட்டம் இருக்கிறது. அத்தோட்டத்தின் நடுவினில் அழகிய ஒரு குளமும் இருக்கிறது. அந்த குளத்தில் அந்தக் காலை வேளையில் செங்கழுநீர் மலர்கள் அழகாகப் பூத்துச் சிரிக்கின்றன. அதே போல் இரவெல்லாம் மலர்ந்திருந்த அழகிய ஆம்பல் மலர்களும், குவியத் தொடங்குகின்றன. இந்த நிகழ்வுகளைக் கண்ட ஆண்டாள், அவற்றைக் குறிப்பிட்டு, பொழுதுவிடிந்து விட்டது பார், இந்த இயற்கை அழகை எல்லாம் கண்டு இரசிக்காமல் இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறாயே எழுந்திரு என்று எழுப்புகிறாள்.
ஆனால் அந்தத் தோழி எழவில்லை. அதனால் அடுத்ததாக, அந்தக் காலை வேளையில் எழுந்துக் குளித்து, பக்தியுடன் கோவிலுக்குச் செல்கின்றவர்களைப் பற்றி சொல்கிறாள். காவி உடையணிந்து, கருணை உருவான துறவியர்கள், தங்கள் வெண் நிறப் பற்கள் ஒளிவீச, தெய்வீக சங்கை இசைத்துக்கொண்டு கோவிலுக்குச் செல்கின்றனர் பார். அந்த சத்தம் கூட உனக்குக் கேட்கவில்லையா? எழுந்திரு நாமும் கோவிலுக்குச் செல்லலாம் என்று எழுப்புகிறாள். எல்லோருக்கும் பற்கள் வெள்ளையாகத் தானே இருக்கிறது, ஆண்டாள் ஏன் 'வெண்பல் தவத்தவர்' என்று கூறுகிறாள்? ஏனென்றால் இவர்கள் எல்லோரும் தவம் புரியும் துறவிகள். இவர்கள் உண்ணும் உணவானது மிகவும் சாத்வீகமான, இயற்கையான உணவு. நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்து, பற்களின் நிறம் மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவர்கள் உட்கொள்ளும் எளிமையான உணவினால் அவர்களுடையப் பற்களின் நிறம் சற்றுக்கூட மாறாமல் பளீச்சென்று மின்னுவதாக ஆண்டாள் வியந்துப் பாடுகிறாள்.
நாம் கோவிலுக்குச் செல்வது எதற்காக? தன் வலிமையான கைகளில் சங்கும் சக்கரமும் கொண்டிருப்பவனும், அப்பொழுது தான் மலர்ந்த தாமரைப் பூப் போன்ற அழகிய கண்களை உடையவனுமான அந்தத் தாமரைக் கண்ணனின் புகழைப் பாடி மகிழ அல்லவா செல்கிறோம். அதனால் சீக்கிரம் எழுந்து வா, அந்தப் பெருமாளை வணங்கி அவன் அருளைப் பெறலாம் என்று அழைக்கிறாள். ஆனாலும் தோழி எழுந்த பாடு இல்லை.
அப்பொழுது தான் ஆண்டாளுக்கு அந்த தோழி நேற்று சொன்னது நினைவுக்கு வருகிறது. முந்தைய நாள், ஆண்டாளும் தோழிகளும் மாலை நெடு நேரம் விளையாடி மகிழ்ந்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆண்டாள், அடடா இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே, நாம் இன்னும் உறங்கச் செல்லாமல் இப்படிச் சிரித்துப் பேசி நேரத்தைப் போக்கிக் கொண்டு இருக்கின்றோமே, நாளை மார்கழி ஒன்று, அதிகாலையில் எழுந்து நாராயணப் பெருமாளை தரிசிக்கச் செல்லவேண்டுமே, அதனால் எல்லோரும் சீக்கிரம் உறங்கச் செல்லலாம் வாருங்கள் என்று கூறுகிறாள். உடனே இத்தோழி, அதைப் பற்றிய கவலை உனக்குச் சிறிதும் வேண்டாம். நான் அதிகாலையில் முதல் ஆளாய் எழுந்து, உங்கள் அனைவரையும் வந்து எழுப்பி விடுகிறேன். என்னை நம்புங்கள் என்று உறுதி அளிக்கிறாள். ஆனால் இப்படி வாக்குக் கொடுத்துவிட்டு, அதைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல், கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இப்படி உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே, இது உனக்கே அழகாக இருக்கிறதா? என்று கேட்கிறாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோமே என்று சிறிது கூட வெட்கப்படாமல், அதைக் குறித்து எந்தவொரு உணர்வும் இல்லாமல் உறங்கிக்கொண்டு இருக்கிறாயே எழுந்திரு என்று கோபம் கொள்கிறாள், உனக்கு இனிக்க இனிக்கப் பேச மட்டும் தான் தெரியுமா? அந்தப் பேச்சின் படி நடந்துக்கொள்ளத் தெரியாதா? என்று 'நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்' என்ற வரியினில் சாடுகிறாள். (இந்தத் தோழி மட்டும் இன்று இருந்தால், தமிழகத்தில் பெரிய அரசியல்வாதியாக ஆகியிருப்பார்)
தன்னை ஆண்டாள், சொன்ன வாக்கை காப்பாற்றாதவள் என்றும், வெட்கம் இல்லாதவள் என்றும் சொன்னதால், ரோஷம் வந்து விட்டவள் போல் உடனே எழுந்து விடுகிறாள். பிறகு எல்லோரும் அடுத்தத் தோழியை எழுப்பிடப் போகிறார்கள்.
உட்பொருள்:
கொடுத்த வாக்கை காக்க மறப்பது தவறு என்பதை ஆண்டாள் இப்பாடலில் சுட்டிக்காட்டுகிறாள், சிலர் இனிக்க இனிக்கப் பேசி, அன்பொழுக வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு, தங்கள் காரியம் நிறைவேறிய பின், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை சுத்தமாக மறந்துவிடுவார்கள், அல்லது அதை செயல்படுத்த விரும்ப மாட்டார்கள். அப்படி உள்ளவர்கள் மிகமிக சுயநலம் கொண்டவர்கள். கொடுத்த வாக்கை மறப்பது வெட்கப்பட வேண்டிய செயல் என்று ஆண்டாள் கூறுகிறாள். அப்படிப்பட்டவர்களிடம் அவர்கள் கொடுத்த வாக்கை நினைவூட்ட வேண்டும், அதை மறந்ததற்காக அவர்களை வெட்கப்பட வைக்கவேண்டும். வாக்கைக் காப்பாற்ற முடியாதவர்கள், வாக்கு கொடுக்கக் கூடாது என்று மறைமுகமாகக் கூறுகிறாள். சொல்லிலும் செயலிலும் நாணயம் வேண்டும் என்பது தான் இப்பாடலின் உட்கருத்து.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்
பாசுரம் 13 - புள்ளின்வாய் கீண்டானை பாசுரம் 15 - எல்லே இளங்கிளியே