Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதா யறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

ஆடைநீர் உணவெனக் கேட்டது கொடுக்கும்
    எம்பெருமான் நந்த கோபாலரே எழுக!
மெல்லிடைப் பெண்டிர்களின் குலவிளக்கான
    பெண்ணரசி யசோதையே இன்னும் உறக்கமா?
வானைக் கிழித்து மூன்றுல களந்த
    தேவர் தேவனான பெருமாளே எழுக!
செம்பொன் சிலம்புகள் அணிந்த பலராமனே
    நீயும் உன்தம்பி கிருஷ்ணனும் எழுந்திருங்கள்!

 

பொருள்:

சென்ற பாசுரத்தில், ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் நந்தகோபனின் மாளிகை காவலர்களிடம் அனுமதி கேட்டு மாளிகைக்குள் நுழைந்த ஆண்டாளும் தோழிகளும், அம்மாளிகையில் உறங்கிக்கொண்டிருக்கும் கிருஷ்ணரின் தந்தை நந்தகோபன், தாய் யசோதை, அண்ணான் பலரமன் மற்றும் கிருஷ்ணன் என ஒவ்வொருவராக எழுப்புகிறார்கள். அந்த மாளிகை, நான்கு அடுக்குகள் அல்லது அறைகள் கொண்ட மாளிகை, முதல் அடுக்கில், நந்தகோபன் உறங்கிக்கொண்டு இருக்கிறார். அடுத்த அறையில் கிருஷ்ணரின் தாய் யசோதையும், அடுத்த இரண்டு அடுக்குகளில் ஒன்றில் கிருஷ்ணனும், மற்றொன்றில் பலராமனும் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்,

முதல் அறையில் நுழையும் ஆண்டாள், அங்கு உறங்கிக் கொண்டு இருக்கும் நந்தகோபனை எழுப்பிட, அவரின் அறம் மிகுந்த செயலகளை புகழ்ந்து கூறுகிறாள். ஆடை, தண்ணீர், உணவு என கேட்டதை எல்லாம் இல்லை என்று சொல்லாது வாரி வழங்குபவரே எழுந்திருங்கள். நாங்கள் கிருஷ்ணரை எழுப்ப வந்திருக்கிறோம் என்று கூறுகிறாள், கிருஷ்ணரை எப்பொழுதும் கண்ணைக் காக்கும் இமை போல் பாதுகாப்பதால், பெருமானின் தந்தையை எம்பெருமான் என்று உரிமையாய் அழைக்கிறாள் ஆண்டாள்.

அடுத்து, அடுத்த அறையில் உறங்கிக்கொண்டு இருக்கும் யசோதையை எழுப்பச் செல்கிறார்கள். மலர் கொடியைப் போல மெல்லிய இடையுடைய வஞ்சிக்கொடி போன்ற பெண்களின் குல விளக்காகத் திகழ்கின்ற யசோதை அவர்களே, பெண்களின் அரசியாக விளங்கும் எங்கள் பெருமாட்டியே, நீங்களே இப்படி உறங்கிக்கொண்டு இருக்கலாமா? நீங்கள் எழுந்தால் தானே, நாங்கள் சென்று கிருஷ்ணனை எழுப்ப முடியும், எழுந்திருங்கள் என்று பாடி எழுப்புகிறார்கள்,

அதற்கு அடுத்த இரு அறைகளில் ஒன்றில் கிருஷ்ணரும், அடுத்த அறையில் பலராமனும் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அண்ணனான பலராமனை எழுப்பிவிட்டு கிருஷ்ணரை எழுப்ப நினைத்தவர்கள், கிருஷ்ணனைக் கண்டதும் மனம் மயங்கி முதலில் அவனையே எழுப்ப முயல்கிறார்கள். வாமன அவதாரம் எடுத்து, வானத்தை கிழித்து மூன்று உலகங்களையும் ஓங்கி அளந்து கடந்த விஸ்வரூப தரிசனம் தந்த கண்ணனின் பெருமைகளைக் கூறி, தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனான பெருமாளே. இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறீர்களே, எழுந்திருங்கள் என்று எழுப்புகிறாள் ஆண்டாள். ஆனால் கிருஷ்ணர் படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் இருக்க, கண்ணன் தன் அண்ணன் பலராமனை எப்போதும் பிரியமாட்டான் என்பதால், அடுத்த அறையில் இருக்கும் பலராமனையும் எழுப்புகிறார்கள்.

பலராமன் தன் கால்களில் செம்பொன்னால் ஆன சிலம்புகள் அணிந்திருக்கிறான். அதைக் குறிப்பிட்டு வீரக்கழல்களை காலில் அணிந்த பலராமனே, எழுந்திரு, நீ சொன்னால் தான் கண்ணன் எழுந்திருப்பான். நீயும் உன் தம்பியும் இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கலாமா? இருவரும் எழுந்து எங்களுக்கு தரிசனம் கொடுங்கள் என்று எழுப்புகிறாள் ஆண்டாள்.

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற                                                                                                                                      பாசுரம் 18 - உந்து மதகளிற்று

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net