உந்து மதகளிற்ற னோடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தங் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்தெங்குங் கோழி யழைத்தனகாண் மாதவி
பந்தல்மேல் பல்கால் குயிலனங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
மதம்பிடித்த யானைகண்டு ஓடாத வலிமைக்கொண்ட
நந்தகோபனின் மருமகளான நப்பின்னையே
நறுமணம் வீசும் கூந்தலையுடையவளே கதவைத்திற!
நாலாபுறமும் கோழிகள் போடுகின்ற சத்தம் கேட்கவில்லையா?
குருக்கத்திக்கொடி மீதமர்ந்து குயில்கள் கூவுவதும் கேட்கவில்லையா?
பூப்பந்து போல்விரல்கள் உடையவளே உன்கணவனின் புகழ்பாட
தாமரைப்போன்ற வுன்கைகளில் அணிந்த அழகான வளையல்கள்
இசையெழுப்பிட கதவுகளை வந்து திறந்துவிடு எம்தோழியே!
பொருள்:
சென்ற பாசுரத்தில் கிருஷ்ணனை எழுப்ப அவன் மாளிகைக்குள், மாளிகைக் காப்பாளனிடம் அனுமதி பெற்று நுழைந்து, நந்தகோபன் மற்றும் யசோதையை எழுப்பிய பின், ஆண்டாளும் அவள் தோழிகளும், கிருஷ்ணனையும் பலராமனையும் எழுப்பிட எவ்வளவு முயன்றும் அவர்களால் முடியவில்லை. அதனால் கிருஷ்ணனின் மனைவியான நப்பின்னையை எழுப்பி, அவளைக்கொண்டு கிருஷ்ணனை எழுப்பலாம் என்று எண்ணிய ஆண்டாள், நப்பின்னையை எழுப்பிட அவள் புகழைப் பாடுகிறாள்.
பொதுவாக, தாயார் சகிதம் காட்சி தரும் கோவில்களுக்குச் சென்றால், முதலில் தாயாரை தரிசித்து வணங்கிவிட்டு தான் பெருமாளிடம் செல்லவேண்டும். பெருமாளிடம் நேரடியாக கேட்பதைவிட, தாயாரிடம் சொல்லி கேட்கச்சொன்னால், பெருமாள் தட்டாமல் உடனே செய்துவிடுவார். நாம் நம் வீட்டில், அப்பாவிடம் ஏதாவது கேட்டால், அவர் சம்மதிக்க மாட்டார் என்பதால், அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொல்வோம் அல்லவா? அது போல தான், இங்கும், கிருஷ்ணனை எழுப்பப் பார்த்தும் முடியாமல் போனதால், நப்பின்னை பிராட்டியிடம் சொல்லி, அவள் மூலம் கிருஷ்ணனை எழுப்பிவிட முயல்கிறாள் ஆண்டாள். கடவுளாக இருந்தால் கூட மனைவி சொல்லைத் தட்ட முடியாது என்று மறைமுகமாக உணர்த்துகிறாளோ ஆண்டாள்?
நப்பின்னை, கிருஷ்ணனின் மாமா மகள், அதாவது யசோதையின் சகோதரனான கும்பகன் என்பவரின் மகள். அதனால் அவளை,
குடும்பத்தலைவனான நந்தகோபனின் மருமகளே என்று விளிக்கிறாள் ஆண்டாள். அதுவும் எப்படி? நெற்றியிலிருந்து மத நீர் வழியும் மதம்பிடித்த யானைகளைக் கண்டு அஞ்சி ஓடாத வீரம்கொண்ட நந்தகோபனின் மருமகள் என்று நந்தகோபனின் வீரத்தை மீண்டும் ஒரு முறை புகழ்கிறாள் ஆண்டாள். மதம் கொண்ட யானைபோல் வலிமையான தோள்களை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம், அப்படி பட்ட வீரனின் மருமகளான நப்பின்னையே என்று அவளைப் புகழ்கிறாள். நந்தகோபன் மாளிகை என்று முந்தையப் பாடலில் குறிப்பிட்டதைப் பார்த்தோம், நந்தகோபன் தான் கிருஷ்ணனைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார், அதனால் தான் கிருஷ்ணனின் மனைவி என்று சொல்லாமல், நந்தகோபனின் மருமகளே என்று அழைக்கிறாள், அது தான் நப்பின்னைக்கு பெருமைச் சேர்க்கும் என்று எண்ணி அப்படி அழைக்கிறாள் ஆண்டாள்,
அந்த நப்பின்னை பிராட்டி எப்படி பட்டவள் என்பதையும் அவள் அழகினையும் அடுத்த வரிகளில் பாடுகிறாள் ஆண்டாள். நப்பின்னையின் கூந்தலில் இருந்து எழுகின்ற நறுமணம் அந்த அறை முழுவதும் கமழ்கிறதாம். ஏற்கனவே ஏழாம் பாசுரத்தில் 'வாச நறுங்குழ லாய்ச்சியர்' என்ற வரியில் பெண்களின் கூந்தலில் நறுமணம் வீசுகிறது என்று ஆண்டாள் பாடியதைப் பார்த்தோம். ஆயர் குலப் பெண்களின் கூந்தலிலேயே நறுமணம் வீசுகிறது என்றால், அந்த கண்ணனின் மனம் கொண்ட நப்பின்னையின் கூந்தலில் எவ்வளவு இனிய நறுமணம் வீசும்? அப்படி நறுமணங் கமழும் கூந்தலையுடைய நப்பின்னையே, வந்து கதவுகளைத் திறந்து விடு என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
அப்பொழுது வெளியில் கேட்கும் சில ஓசைகளை எடுத்துக் கூறி, எப்படி தம் தோழிகளை எழுப்பினாளோ அப்படி நப்பின்னையையும்
எழுப்புகிறாள் ஆண்டாள். பொழுது விடிந்துவிட்டதால், சூரியனைக் கண்டு நாலா புறமும் கோழிகள் ஓடியாடி சத்தம் போடுகின்றனவே, அந்த ஓசைகள் கேட்கவில்லையா உனக்கு? என்று கேட்கிறாள். அதுமட்டுமன்றி, மாதவி பந்தல் என்று ஆண்டாள் கூறும் குருக்கத்திக் கொடிகள் மீது குயிலினங்கள் அமர்ந்து பல முறை கூவுகின்றனவே, அந்த இனிய இசையும் கூடவா உனக்கு கேட்கவில்லை? என்று கேட்கிறாள் ஆண்டாள். மாதவி மலர் என்பது மல்லிகைப்பூ போலவே வெண்மையாக உள்ள ஒரு மலர்கொடி. அந்த மலர் கொடி பந்தலிலி, பூத்துள்ள மலர்கள் மெத்தைப் போல இருக்கிறதாம், அதனால் அதில் இந்து குயில்கள் சுகமாக அமர்ந்து கூவிக்கொண்டு இருக்கின்றன என ஆண்டாள் அந்த இயற்கைக் காட்சிகளை அழகாக வர்ணிக்கிறாள்.
மீண்டும் ஒருமுறை நப்பின்னையைப் புகழ்ந்துப் பாடுகிறாள் ஆண்டாள். மலர் பந்துகளைப் போல மிக மென்மையான விரல்களை உடையவளான நப்பின்னையே, உன் கணவனின் புகழினைப் பாட வந்துள்ளோம். அவனை எழுப்ப வேண்டும். அதற்காக, உன் செந்தாமரைப் போன்ற சிவந்த அழகான கைகளில் அணிந்து உள்ள சீரான வண்ண வளையல்கள் இனிமையான ஒலி எழுப்பிட, அந்த தாமரைக் கைகளால் வந்து கதவுகளைத் திறந்துவிடு. நாங்கள் மனம் மகிழ்ந்து கண்ணனை எழுப்பி விடுகிறோம் என்று பாடி வேண்டுகிறாள் ஆண்டாள். (இந்த இடத்தில் மைத்துனன் என ஆண்டாள் சொல்வது கணவன் என்ற பொருளில்)
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்