Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 19 - குத்து விளக்கெரிய

குத்து விளக்கெரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்க்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயும் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

குத்து விளக்கெரிய யானை தந்தத்தால் ஆன
    மெத்தென் றிருக்கும் கட்டிலின் மேல்
கூந்தலில் மலர்கள் சூடிய நப்பினை மீது
    சாய்ந்து உறங்கும் மலர்மாலை அணிந்த கண்ணனே
ஒருவார்த்தை பேசமாட்டாயோ?
    மைத்தீட்டிய அழகியவிழிகளை உடைய நப்பின்னையே
எத்தனை நேரமானாலும் உன்மனம் கவர்ந்தவனை
    துயில் எழுப்ப மாட்டாயோ?
ஒரு நொடிகூட கண்ணனைப் பிரிய மனமின்றி
    எங்களை காக்கவைப்பது உனக்கு தகுமா?

 

பொருள்:

சென்ற பாசுரத்தில் நப்பின்னை மூலம் கிருஷ்ணனை எழுப்பிவிட முயன்றார்கள் ஆண்டாளும் அவள் தோழிகளும். ஆண்டாளின் பாடல் கேட்டு கண் விழித்த கண்ணன், நப்பின்னை உறங்கட்டும் நாம் எழுந்து கதவைத் திறக்கலாம் என எண்ணுகிறான். ஆனால் நப்பின்னையும் ஆண்டாள் பாடல் கேட்டு உறக்கம் கலைந்து விட்டாள். அதனால் கண்ணன் உறங்கட்டும் நாம் சென்று கதவைத் திறக்கலாம் என்று எழ முற்படுகிறாள். இதனால் அறைக்குள் சத்தம் கேட்கிறது.

திறந்திருக்கும் ஜன்னல் வழியே பார்க்கும் ஆண்டாளுக்கு, அந்த அறையும், கட்டிலும் தெரிகிறது. அந்த அறையில் குத்து விளக்குகள் மெலிதாக எரிந்துக்கொண்டு இருக்கிறது. யானை தந்ததால் செய்த கால்களையுடைய கட்டிலில், மெத்து மெத்து என்றிருக்கும் மென்மையான பஞ்சணையில், கொத்து கொத்தாக வண்ண மலர்களைத் தன் அழகிய நீண்ட கூந்தலில் சூடியிருக்கும் நப்பின்னையின் மார்பின் மீது சாய்ந்து உறங்கிக்கொண்டு இருக்கிறான் கிருஷ்ணன். தோளில் சூடியுள்ள மலர் மாலை, அவன் மார்பில் படர்ந்து இருக்கின்றது.

கோடு என்பது யானை தந்தம் அல்லது விலங்குகளின் கொம்பினைக் குறிக்கும், கோட்டுகால் என ஆண்டாள் குறிப்பிடுவது இங்கு யானை தந்தத்தைக் குறிக்கிறது. இதற்கு முன் 15 ஆவது பாசுரத்தில். 'வல்லானைக் கொன்றானை' என்ற வரியில், கம்சனால் அனுப்பப்பட்ட "குவலயாபீடம்" என்ற யானையைக் கொன்ற கதையைப் பார்த்தோம். அந்த யானையின் தந்தத்தினால் செய்யப்பட்ட கட்டில் இது என்பதால் தான் ஆண்டாள் அதை இங்கு குறிப்பிடுகிறாள். அப்படி தந்தத்தாலான கட்டிலில் 'பஞ்ச சயனத்தின் மேலேறி' என ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அது என்ன பஞ்ச சயனம்? அந்த கட்டிலில் போடப்பட்டுள்ள மெத்தை, வெறும் இலவம் பஞ்சினால் மாட்டும் செய்யப்பட்டது அல்ல. இலவம் பஞ்சுடன், அன்னத்தின் இறகு, மெல்லிய மலர்கள், கோரைப்புல் மற்றும் மயிலிறகு என ஐந்து பொருட்களால் செய்யப்பட்ட மெத்தை என்பதால் பஞ்சசயனம் என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அழகு, வெண்மை, மென்மை, நறுமணம், குளிர்ச்சி ஆகிய ஐந்து சிறப்புகளை உடைய படுக்கை என்றும் கூறுவதுண்டு.

அப்படிப் பட்ட மெத்தையில், கொத்துக் கொத்தாக நறுமணம் வீசும் மலர்களைத் தன் அழகிய நீண்டக் கூந்தலில் சூடியுள்ள நப்பின்னையின் மார்பில் சாய்ந்து கண்ணன் உறங்கிக்கொண்டு இருக்கின்றான் என ஆண்டாள் பாடுகிறாள். அவன் தோளில் அணிந்துள்ள மலர்மலை அவன் மார்பில் புரண்டுக்கொண்டு இருக்கின்றன. அவன் நப்பின்னை மீது சாய்ந்து உறங்கிக்கொண்டு இருப்பதால் தான் எழ நினைத்தும் எழாது இருக்கின்றானோ என எண்ணிய ஆண்டாள், கிருஷ்ணனைப் பார்த்து, 'நீ எழுந்திருக்க வில்லையென்றாலும், உனைப் பார்க்க அதிகாலையில் எழுந்து வந்துள்ள எங்களுக்காக, கனிவோடு ஒரு சில வார்த்தைகள் கூட பேசாமல் இருக்கலாமா? என்று ஆதங்கத்துடன் கேட்கிறாள் ஆண்டாள்.

ஆனால் உடனேயே அவளுக்கு வேறு ஒரு எண்ணம் வருகிறது. 'ஒருவேளை கண்ணன், எழ நினைத்தும், நப்பின்னை தான் அவனை எழ விடாமல் இருக்கிறாளோ?' என நினைத்து நப்பின்னையை நோக்கி, அவள் அழகைப் புக்ழந்தவாறே தன் சந்தேகத்தைக் கேட்கிறாள் ஆண்டாள். மைத்தீட்டிய கருமையான அழகான விழிகளை உடைய நப்பின்னையே, நீ தான் உன் மனம் கவர்ந்த மணாளனை எழுப்ப விடாமல் இருக்கின்றாயோ? கண்ணன் எழுந்தால், அவன் உன்னை விட்டுப் பிரிய நேரிடும் என்று நினைத்து தான், எவ்வளவு நேரமானாலும், அவனை எழுப்பவிடாமல் இருக்கின்றாயோ? கண்ணனே உன் மீது சாய்ந்து படுத்துக்கிடக்கும் பாக்கியம் பெற்றவளான நீயே, கணம் நேரம் கூட அவனை விட்டுப் பிரியக் கூடாது என்று நினைப்பது சரியா? இது உன் இயல்புக்கும் குணத்துக்கும் தகுமா? இது உனக்கு அழகில்லையே என்று கூறி நப்பின்னையிடம் கிருஷ்ணனை எழுப்ப வேண்டுகிறாள்.

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 18 - உந்து மதகளிற்று                                                                                                                                            பாசுரம் 20 - முப்பத்து மூவர்

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 16 - நாயகனாய் நின்ற

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net