முப்பத்து மூவ ரமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்சென்று
வருகின்ற துயர்த்தீர்க்கும் கலியுகக்கண்ணனே எழுந்திரு!
நீதிதவறாத நேர்மையும் வலிமையும் உடையவனே
பகைவர்களுக்கு அச்சம்கொடுக்கும் தூயவனே எழுந்திரு!
செவ்விதழும் இளகியமனமும் சிறுத்த இடையுமுடைய
நப்பின்னை பிராட்டியே; திருமகளே; எழுந்திரு!
விசிறியும் கண்ணாடியும் தந்துன் மனம்கவர்ந்தவனின்
அருள்மழையில் எங்களை நனையவை எம்தோழியே!
பொருள்:
சென்ற பாசுரத்தில், பஞ்ச சயனத்தில் சுகமாய் உறங்கும் கிருஷ்ணனே, நாங்கள் அழைப்பது உனக்கு கேட்கவில்லையா? உனக்காக காத்திருக்கும் எங்களுடன் ஒரு வார்த்தைக்கூட பேசமாட்டாயா? என்று கேட்டு கண்ணன் எழுந்திருக்காததால், ஒரு வேளை நப்பின்னை தான் கிருஷ்ணனை எழுப்பவிடாமள் இருக்கிறாளோ என எண்ணி, ஒரு நொடி கூட உன்னால் கண்ணனை பிரிய முடியவில்லை என்பதால் தான் எழுப்பாமல் இருக்கிறாயா? இது உனக்கு அழகா? என்றேல்லாம் கோபித்துக்கொண்ட ஆண்டாள், இந்த பாசுரத்தில் மறுபடியும் இருவரையும் எழுப்புவதற்காக, அவர்கள் மனம் குளிரும்படி, மீண்டும், கண்ணனின் நற்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணித்துப் பாடுகிறாள்,
முப்பது முக்கோடி தேவர்களுக்கும் ஒரு துன்பம் என்றால், அவர்கள் உன்னை நினைத்த மாத்திரத்தில், அவர்கள் முன்னாடி சென்று அவர்களின் துயர்களைப் போக்கும் , இந்த கலியுகத்தில் பிறந்த கண்ண பெருமானே, நாங்கள் உன் வீட்டில் வந்து உனக்காக காத்திருந்து உன்னை எழுப்பி விட பாடுகிறோமே, எங்கள் குரல் உனக்கு கேட்கவில்லையா? ஒரு வேளை தேவர்களுக்கு மட்டும் தான், கேட்ட உடனேயே உதவி செய்ய ஓடோடி செல்வாயா? எங்களைப் போன்று, எப்போதும் உன்னையே நினைந்துருகும் அபலைப் பெண்களின் துயர் துடைக்க மாட்டாயா? என்று கேட்டு கண்ணனை உறக்கத்திலிருந்து எழுப்ப முயல்கிறாள்.
நேர்மையும் நீதியும் தவறாதவன் அல்லவா நீ. உனது ஆற்றலையும், வலிமையையும் கண்டு உன் எதிரிகளுக்கெல்லாம் அச்சத்தில் காய்ச்சலே வந்துவிடும் அல்லவா? பரிசுத்தமான உள்ளம் கொண்ட தூயவனே இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறாயே எழுந்திரு என மீண்டும் எழுப்புகிறாள் ஆண்டாள். அப்படியும் கண்ணன் எழாது இருப்பதால், மறுபடியும் நப்பின்னையின் துணையை நாடி வருகிறாள் ஆண்டாள். மீண்டும் நப்பின்னையைப் புகழ்ந்து, கண்ணனின் அருள் கிடைக்க வேண்டுகிறாள்.
சிவந்த இதழ்களும், சிறுத்த மெல்லிய இடையையும் உடையவளே, பெண்மைக்கு இலக்கணமாகத் திகழும் பேரெழில் பெற்றவளே, நப்பின்னைப் பிராட்டியே. அந்தத் திருமகளாகவே உன்னை எண்ணுகிறோம். உன் கருணை எங்களுக்கு வேண்டும். நீ மனது வைத்தால் தான் கண்ணனின் பரிபூரண அருள் எங்களுக்குக் கிடைக்கும். அதனால் சீக்கிரம் உறக்கத்திலிருந்து எழுந்திரு. நாங்கள் பாவை நோன்பிருக்க, விசிறியும், முகம் பார்க்கும் கண்ணாடியும் தந்து, உன் மனம் கவர்ந்த கண்ணனை உறக்கத்திலிருந்து எழுப்பி, அவன் அருள் மழையில் எங்களை எல்லாம் நனைய வை, தோழியே என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
விசிறியும் கண்ணாடியும் எதற்கு?
விரதத்திற்கு ஆண்டாள் ஏன் விசிறியும், முகம் பார்க்கும் கண்ணாடியும் கேட்கிறாள்? விசிறியும், கண்ணாடியும் மங்கலப் பொருட்கள் மட்டுமல்ல, அதில் நாம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒரு நுட்பமான காரணமும் இருக்கிறது.
விசிறியால், நாம் விசிறுகின்றப் பொழுது, நமக்கு மட்டும காற்று வருவதில்லை, அருகில் இருப்பவர்களுக்கும் அந்த காற்றுக் கிடைக்கிறது. அதுபோல், நமது செயல்களால், எல்லோருக்கும் பயன் கிடைக்க வேண்டும். சுய நலமாக இருக்கக் கூடாது என்பதை உணர்த்தவே விசிறியை கேட்கிறாள் ஆண்டாள்.
ஆண்டாள் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கேட்டதிலும் ஒரு அருமையான பொருள் பதிந்து இருக்கிறது. கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது, முகத்தில் உள்ள அழகை மட்டுமல்ல அழுக்கையும் சேர்த்துக் காட்டிடும் கண்ணாடி. ஆனால் அந்த அழகையோ அழுக்கையோ கண்ணாடி தன்னிடமே வைத்துக்கொள்வதில்லை. அது போல தான், நாமும் நம் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சிக்கி உழன்றுக்கொண்டு இருக்கக் கூடாது. கண்ணாடி போல் ஒட்டுதலும் பற்றுதலும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
'உக்கமும் தட்டொளியும்' என்ற இரண்டு சொற்களில் இரு பெரிய தத்துவங்களை ஆண்டாள் அழகாக மறைத்து வைத்து இருக்கிறாள். இப்படி ஆண்டாளின் பாடல்களில் நிறைய மறைபொருள் இருக்கிறது. அதை உணர்ந்துகொள்ளும் ஞானத்தை, ஆண்டாள் தான் நமக்கு அருள வேண்டும்.
கப்பம் தவிர்த்த கதை
'முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! ' என்ற இந்த வரிக்கு இன்னொரு கதையும் உண்டு. தேவலோகத்தில் இருக்கும் பாரிஜாத மரத்தைக் கண்ணன் எடுத்து வந்த கதை இது.
கலகத்துக்குப் பெயர் போனவர் நாரதர். அந்த நாரதர் ஒரு முறை தேவலோகத்தில் இருக்கும் ஒரு அதிசய பாரிஜாத மரத்திலிருந்து அழகான பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்து கிருஷ்ணனிடம் கொடுக்கிறார். கிருஷ்ணர் அந்த மலர்களை அருகில் இருக்கும் ருக்மணி தேவிக்குக் கொடுத்துவிடுகிறார். ருக்மணிக்கு அந்த மலர்கள் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. பின் நாரதர், சத்யபாமா இருக்கும் இடத்திற்குச் சென்று, 'தேவி, நான் இந்திரலோகத்தில் இருந்து அற்புதமான பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்தேன், அதை கிருஷ்ணரிடம் தந்தேன். அவரோ அவற்றை ருக்மணியிடம் கொடுத்து விட்டார். உங்கள் மீது அவ்வளவு தான் பிரியம் போலிருக்கிறது" என்று கலகம் மூட்டிவிட்டு சென்று விடுகிறார்.
சற்று நேரம் கழித்து, கிருஷ்ணன் சத்யபாமவிடம் வருகிறார். உடனே சத்யபாமா, எனக்கு தேவலோகத்தில் இருக்கும் அந்த பாரிஜாத மரம் வேண்டும் என்று கேட்டு வற்புறுத்துகிறாள். இது தானே நாரதர் எதிர்பார்த்தது. கிருஷ்ணன் சத்யபாமாவிடம் வரும் முன்னரே, இந்திரனிடம் சென்ற நாரதர், கிருஷ்ணர் பாரிஜாத மரத்திற்காக வரப்போகும் சேதியை செல்லிவிட்டு போய்விடுகிறார், இந்திரன் கிருஷ்ணருக்கு அந்த அதிசய பாரிஜாத மரத்தை தரமாட்டான், அதனால் அவர்களுக்குள் சண்டை வரும் என்று எண்ணினார் நாரதர்.
ஆனால் கிருஷ்ணன் தேவலோகத்திற்கு வந்ததும், இந்திரன் அவரை பணிந்து வணங்கி, அவர் கேட்காமலேயே அந்த பாரிஜாத மலரைக் கப்பமாகக் கொடுத்துவிடுகிறார். கிருஷ்ணர், கப்பமாக தேவலோகத்துப் பாரிஜாத மரத்தைப் பெற்று, தேவலோகத்தில் பாரிஜாத மரம் இருப்பதை தவிர்த்துவிட்டார் என்பது தான் 'கப்பம் தவிர்த்த' இக்கதை.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்