ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்!
ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்ற மாய்நின்ற சுடரே! துயிலெழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றி யாம்வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
எத்தனைக் குடங்கள் கொண்டு வந்தாலும்
நிரம்பி வழியவழியப் பால்சுரக்கும் நற்பசுக்கள்
பலகொண்ட நந்தகோபனின் மகனே எழுந்திரு;
பேரறிவாளனே பெரும்நாயகனே இவ்வுலகிற்கு
ஒளிக்காட்டி வழிகாட்டும் பேரொளியே எழுந்திரு;
பகைவர்கள் எல்லாம் வலிமையிழந்து உன்வாசலில்
திருவடித்தொழக் காத்திருப்பது போல் நாங்களும்
உனைப் போற்றிப்பாடக் காத்திருக்கோம் எழுவாயாக!
பொருள்:
நப்பின்னையையும் கிருஷ்ணனையும் மாறி மாறிப் புகழ்ந்துப் பாடி எழுப்பியும் அவர்கள் எழுந்தபாடில்லை. அதனால் இந்தப் பாசுரத்தில், மீண்டும் கிருஷ்ணரின் தந்தையான நந்தகோபனின் பெருமையையும் கிருஷ்ணனின் பெருமையயும் கூறி எழுப்பி விட முயல்கிறாள் ஆண்டாள்.
நந்தகோபனின் பெருமைகளை ஏற்கனவே சில பாசுரங்களில் பாடியிருக்கிறாள் ஆண்டாள். 'அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்' என்று பதினேழாம் பாசுரத்தில் பாடினாள். 'உந்து மதகளிற்ற னோடாத தோள்வலியன் நந்தகோ பாலன்' என்று பதினெட்டாம் பாசுரத்திலும் பாடினாள். இந்தப்பாசுரத்தில், நந்தகோபன் வீட்டில் இருக்கும் பசுக்களின் வள்ளல் தன்மையைப் பற்றிப் போற்றி பாடுகிறாள். ஏற்கனவே தன் தோழி ஒருத்தி வீட்டில் உள்ளப் பசுக்களைப் பற்றி பாடும் பொழுது 'பால் சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் ' என்று கூறி, அத்தோழி வீட்டில் உள்ளப் பசுக்கள் நினைத்த மாத்திரத்திலேயே பால்சுரந்து, அந்த இடமே சுரந்தப் பாலினால் சேறாகக் காட்சியளிக்கும் என்று பாடியுள்ளாள் ஆண்டாள்.
தோழியின் வீட்டுப் பசுக்களே அப்படியென்றால், ஆயர்பாடித் தலைவனான நந்தகோபன் வீட்டுப் பசுக்கள் எப்படி இருக்கும்? அவர் வீட்டில் இருக்கும் பசுக்கள் எல்லாம் வள்ளல்களைப் போன்றவையாம். இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள் வள்ளல் எனப்படுவர். அது போன்ற, நந்தகோபன் வீட்டுப் பசுக்களும், நன்றாகப் பசும்புற்களும் நல்ல தீவனங்களும் உண்டு கொழுத்து, எப்போதும் பால் சுரக்கும் வண்ணம் மடி நிறைந்திருக்குமாம். கொண்டு வரும் பாத்திரங்கள் நிரம்பி வழியும் அளவு தானாகவே பால்சுரக்கும் பாக்கியம் பெற்றப் பசுக்கள் அவை. அடுத்த பாத்திரத்தை மாற்றும் இடைவெளியில் கூட நிறைய பால் நிலத்தில் வழிந்து ஓடுமாம். அப்படிப்பட்டப் பசுக்கள் நந்தகோபனிடம் ஒன்றிரண்டு அல்ல எராளம் உள்ளன. கணக்கில்லாத அளவு வள்ளல் பசுக்கள் கொண்ட நந்தகோபனின் மகனான கிருஷ்ணனே எழுந்திரு. உன் வீட்டுப் பசுக்களுக்கு இருக்கும் அந்த வள்ளல் தன்மை உன்னிடம் இல்லையா? இப்படி கண்டும் காணாமல் இருக்கின்றாயே? எங்களுக்கு அருள் மாட்டாயா? என கேட்கிறாள் ஆண்டாள்.
அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தவன் அல்லவா கிருஷ்ண பகவான். அவன் வேதங்களின் ஊற்றானவன், அதனால் அவனை, பேரறிவு உடையவனே, உயர்ந்தவனே, இவ்வுலகினில் இருளை விலக்கும் பேரொளியாக விளங்கும் பெருஞ்சுடரே, உறக்கம் போதும், விழித்திடு என எழுப்புகிறாள் ஆண்டாள். அப்படியும் கிருஷ்ணன் எழுந்திருக்க வில்லை.
உன் பகைவர்கள் எல்லாம், உன்னிடம் தோற்று, தங்கள் வலிமையையெல்லாம் இழந்தபின், உன் வீட்டு வாசல் வந்து உன் அடி தொழக் காத்திருப்பார்கள். அவர்களைப் போல் தான் நாங்களும் உனக்காகக் காத்திருக்கிறோம். அவர்கள் எல்லாம் உன் மேல் பகை கொண்டு, உன்னிடம் தோற்று, உன் மீதுள்ள பயத்தால் வந்து காத்திருக்கிறார்கள், அவர்கள் தவறு செய்து திருந்தியவர்கள். ஆனால் நாங்கள் அனைவரும் உன் மேல் கொண்ட பக்தியால் அல்லவா வந்துக் காத்து இருக்கிறோம். உள்ளன்போடு உன்னைப் போற்றிப் புகழ்ந்துப் பாட வந்திருக்கிறோம். ஆனால் நீ எழாமல் இப்படி எங்களை ஏமாற்றலாமா? சீக்கிரம் எழுந்து எங்களுக்கு அருளவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள் ஆண்டாள்.
உட்பொருள்:
கடந்த நான்கு பாசுரங்களாக கண்ணனை எழுப்பிட ஆண்டாள் போற்றிப் பாடியும் கண்ணன் எழாமல் இருக்கிறான் என்றால், கண்ணன் என்ன எழுந்திருக்க முடியாத அப்படியொரு பெரும் உறக்கத்திலா இருக்கின்றான்? கிடையாது. இறைவன் எப்படி உறங்குவான்? இறைவன் உறங்கினால் இந்த உலகம் தான் இயங்குமா?
இப்பாடல்கள் மூலம், ஆண்டாள் ஸ்ரீகிருஷ்ணரை மட்டும் எழுப்பவில்லை, கிருஷ்ணரை எழுப்பவது போல், இவ்வுலக மாயையில் கட்டுண்டு, சிக்குண்டு கிடக்கின்ற நம் எல்லோரையும் எழுப்பு முயற்சிக்கிறாள். ஒவ்வொரு தோழியாக எழுப்பியதும், பலவித குணநலன்கள் கொண்ட நம்மைத் தான். அதே போல் இந்த கிருஷ்ணனை எழுப்புவதும் நமக்காகத் தான். நாம் அனைவருமே ஏதோ ஒரு மயக்கத்தில் இருக்கின்றோம். ஆழந்த உறக்கத்திலும் தெளியா கிறக்கத்திலும் இருக்கின்றோம். அந்த மாயக்கண்ணன் தூங்குவது போல் நடிக்கின்றான், ஆனால் நாமோ, மயக்கத்தில் இருப்பது தெரியாமலேயே இருக்கின்றோம். அதிலிருந்து விடுபட்டு இறைவனை அடையவேண்டும் என்பதற்காகத் தான் ஆண்டாள் இவ்வளவு மெனக்கெடுகிறாள். தான் மட்டும் இறைவனை அடையாமல், அனைவரும் அவன் அருளைப் பெறவேண்டும் என பெரு முயற்சி செய்கிறாள்.
ஸ்ரீகிருஷ்ணன எழாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஆண்டாள் பாடும் இந்த இனியப் பாசுரங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது அவன் ஆசை. எழுந்துவிட்டால், ஆண்டாள், இது போன்ற இனியப் பாடல்களைப் பாடாமல் இருந்துவிடுவாளே என்பதற்காகத்தான் அவன் வேண்டுமென்றே உறங்குவதுபோல் நடிக்கின்றானாம். உண்மைதானே!
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்