புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிபோய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பின்காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாநீ நன்னாளால்
கள்ளந் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
பகாசுரனைக் கொன்றுப் பொல்லா இராவணனின்
தலைகளைக் கிள்ளிவென்ற இராமனின் புகழ்பாடி
தோழிகள் பலர் நோன்பிருக்கச் சென்று விட்டனர்
வெள்ளி எழுந்து வியாழனும் மறைந்துவிட்டது
இரைதேடி பறவைகளும் பறந்தனபார் மலர்விழிகொண்ட
அழகியே, குளிர்ந்தநீரில் நீந்திநீராடாமல் இன்னும்
எழுந்திடாமல் படுக்கையில் கிடக்கின்றாயே இந்நன்னாளில்
சோம்பலைக் களைந்து எழுந்துவா என்தோழியே!
பொருள்:
ஆண்டாளின் தோழிகள் அனைவருமே அழகில் சிறந்தவர்கள் தான். ஆண்டாள் அடுத்து எழுப்பிட போகும் தோழியும் மிகவும் அழகானவள், அவள் கண்கள் தாமரைப் பூ போல் விரிந்து அழகாக இருக்குமாம். கண்ணனையே மயக்கும் கண்ணழகு உடையவள் என ஆண்டாள் புகழ்கிறாள்.
இந்த தோழியும் அழைத்தவுடன் எழுந்திருக்காமல் உறங்கிக்கொண்டு இருப்பதால், ஆண்டாள் அவளுக்கு கிருஷ்ண அவதாரத்தில் ஒரு நிகழ்வையும், இராம அவாதாரத்திலிருந்து ஒரு நிகழ்வையும் எடுத்துக் கூறி எழுப்பப் பார்க்கிறாள். கிருஷ்ணன் குழந்தையாக இருக்கும் பொழுது, பூதகி, சகடன், கேசி போன்ற அரக்கர்களை அனுப்பி, கிருஷ்ணனைக் கொல்லப் பார்த்தான் கம்சன். அவர்களால் முடியவில்லை. மனம் தளராத கம்சன் இம்முறை, பகாசுரன் என்னும் அரக்கனை அனுப்புகிறான். பகாசுரன் கொக்கு வடிவில் சென்று குழந்தைக் கிருஷ்ணனைக் கொல்லப் பார்க்கிறான், அரக்கன் என அறிந்தக் கிருஷ்ணன், அந்தப் பறவையின் அலகைப் பிளந்து கொன்று விடுகிறான். இக்கதையைத் தான் 'புள்ளின்வாய் கீண்டானை' என ஆண்டாள் பாடுகிறாள்.
அடுத்து, 'பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை' என்ற வரியில் இராமனின் கதையைக் கூறுகிறாள். அரக்கனான இராவணன் இன்னொருவனின் மனைவியை கவர்ந்து சென்றதால், அவனை பொல்லா அரக்கன என்று கூறிய ஆண்டாள், அவனுக்குப் பத்து தலைகள் உண்டு என்பதைக் குறிக்கும் விதமாக, தலையைக் 'கிள்ளி' கொன்றுவிட்டான் இராமன் எனப் பாடுகிறாள். இப்படிப் பட்ட பெருமையுடைய நாராயணனின் புகழைப் பாடிக்கொண்டு பல தோழிகள் நோன்பிருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். ஆனால் நீ இன்னும் எழுந்திருக்காமல் இருக்கின்றாயே, உன்னை விட்டுச் செல்ல எங்களுக்கு மனமில்லை, அதனால் சீக்கிரம் எழுந்து வா என்று அழைக்கிறாள்.
அப்படியும் அவள் தோழி எழுந்திருக்க வில்லை, உடனே ஆண்டாள் அன்று நிகழ்ந்த ஒரு சுவையான இயற்கை நிகழ்வைக் கூறுகிறாள். அதாவது 'வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று' என்று பாடுகிறாள். இதற்கு மூன்று விதமான விளக்கங்கள் கூறலாம். அதில் ஒன்று விஞ்ஞானப் பூர்வமான விளக்கம்.
முதல் விளக்கம், மார்கழி ஒன்றான அன்று வெள்ளிக் கிழமை, அதனால் வியாழக் கிழமை முடிந்து வெள்ளிக்கிழமைத் தொடங்கி விட்டது, ஆனால் நீ இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறாயே என்பது ஒரு பொருள்.
இரண்டாவது, தேவர்களின் குருவானவர் வியாழன், அதனால் அவர் தேவகுரு என் அழைக்கப்பட்டார். அசுரர்களின் குருவானவர் சுக்கிரன் எனும் வெள்ளி. சுக்ராச்சாரியார் என்றும் அசுரகுரு என்று அழைக்கப்பட்டார். மார்கழி மாதம் கிருஷ்ணருக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும், அதனால் இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று தேவகுருவான வியாழன் உறங்கச் சென்றுவிட்டாராம். ஆனால் அசுர குருவான வெள்ளி எழுந்துக்கொண்டாராம். எனவே தோழியே நீ இப்போது எழுந்து எங்களுடன் நீராடி விரதம் இருக்க வரவில்லையென்றால், அசுரகுரு வந்து உன்னையும் அசுர சீடர்களில் ஒருவராக ஆக்கிவிடுவார் என்று பயமுறுத்தி எழுப்பிவிடப் பார்க்கிறாள்.
மூன்றாவது, விஞ்ஞானப் பூர்வமான காரணம். வானில் இருக்கும் கோள்களில், சூரியன் சந்திரனுக்கு அடுத்தபடியாக ஒளிப் பொருந்திய கோள்கள் வியாழனும் (Jupiter) வெள்ளியும் (Venus). சூரியன் சந்திரனுக்கு அடுத்து மூன்றாவதாக பிரகாசமாக இருக்கும் கோள் வெள்ளி அதற்கடுத்து வியாழன். இவை சூரியனை சுற்றி வருகையில், குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில், இரண்டு கோள்களும் அருகருகே வரும். அவற்றை பூமியில் இருந்து நம் வெறும் கண்களாலேயே காண முடியுமாம். இருட்டில் நன்றாகத் தெரியும் அந்தக் கோள்கள், வெளிச்சம் வர வர, வியாழனின் ஒளி மங்கிவிடும், வெள்ளி இன்னும் சற்று நேரத்திற்குத் தெரியும்.
விடிந்து வெளிச்சம் வந்துவிட்டது என்பதைக் குறிப்பதற்காகத் தான் ஆண்டாள், வியாழன் மறைந்திவிட்டது, வெள்ளித் தெரிகிறது, அதாவது சூரிய வெளிச்சம் வரத் தொடங்கி விட்டது, ஆனால் நீ இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே என்று ஒரு விஞ்ஞான பூர்வ நிகழ்வைக் கூறி தன் தோழியை எழுப்புகிறாள். எந்த ஒரு விஞ்ஞான அறிவியலோ, நவீன கருவிகளோ இல்லாத அந்தக் காலத்திலேயே ஆண்டாள், கோள்கள் அருகே வரும் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறாள் என்றால், நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவுடையவர்கள், எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள் என்பது நன்கு புலப்படும். ஒரு சிற்றூரில் பிறந்த ஆண்டாளுக்கு விண்வெளியில் நடக்கும் ஒரு அபூர்வ நிகழ்வைப் பற்றியப் புரிதல் இருக்கின்றதென்றால் எவ்வளவு வியப்பாக இருக்கிறது. ஆனால் இது எதைப் பற்றியும் அறியாமல் புரியாமல் சிந்திக்காமல் நமது பழமையான புராதன சனாதன தர்மத்தை கேலி செய்கிறார்கள் சில அறிவிலிகள். இந்நிகழ்வை ஆங்கிலத்தில் 'Conjunction of Venus and Jupiter' என்று குறிப்பிடுவார்கள். (மேலும் அறிய https://www.moas.org/Conjunction-of-Venus-and-Jupiter-1-5548.html என்ற பக்கத்தைப் பார்க்கவும்),
இவ்வளவு சொல்லியும், பயமுறுத்தியும் தோழி இன்னும் எழுந்திருக்கவில்லையே ஏன் என்று குழம்புகிறாள் ஆண்டாள். ஒருவேளை அவள் கண்ணனை நினைத்து மயக்கத்தில் தனிமையில் இருக்கின்றாளோ என எண்ணுகிறாள். தாமரை மலர் போன்ற விழிகள் உடைய அழகியப் பெண்ணே, பார் பறவைகள் எல்லாம் எழுந்து இசையெழுப்பி இரைதேடவே சென்று விட்டன, ஆனால் நீ, குளிர்ந்த நீரில் நீந்தி நீராடி மகிழ வராமல், பாற்கடலில் பள்ளிக்கொண்ட பெருமாள் போல் படுக்கையிலேயே படுத்துக்கிடக்கின்றாயோ? ஒருவேளை, கண்ணன் அருளை நீ மட்டும் தனியாக பெற வேண்டும் என்று எண்ணுகிறாயோ? உனக்காக நாங்கள் எல்லோரும் இங்கு வந்து காத்திருக்க, நீ மட்டும் தனியாக அவன் அருளைப் பெற எண்ணுவது கள்ளத் தனம் அல்லவா? அந்த கள்ளத்தனத்தை விட்டுவிட்டு சீக்கிரம் எழுந்து வா. எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வேண்டுவது தான் கண்ணனுக்குப் பிடிக்கும், சீக்கிரம் வந்து எங்கள் எல்லோரோடும் கலந்துவிடு என்று எழுப்புகிறாள்.
இனிமேலும் எழாமல் இருந்தால், ஆண்டாள் நம்மை இன்னும் கேலி செய்வாள் என்று எண்ணியத் தோழி உடனே எழுந்து விடுகிறாள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அடுத்த தோழியை எழுப்பப் போகிறார்கள்.
ஆண்டாள் வாழ்ந்த காலம்
ஆண்டாள் வாழ்ந்தது 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட படி, வியாழனும் வெள்ளியும் அருகருகே வரும், இந்த நிகழ்வை இன்னும் சற்று விரிவாக ஆராய்ந்தால், ஆண்டாள் வாழ்ந்த காலத்தை மிகச் சரியாகச் சொல்லிவிடலாம், மார்கழி ஒன்று வெள்ளிக்கிழமை என்பதை ஆண்டாள் பாட்டில் குறிப்பிடுகிறாள். அதேபோல் வியாழனும் வெள்ளியும் அருகருகே வரும், வெளிக்கிழமை மார்கழி ஒன்று வரும் நாட்களை கணக்கிட்டால், ஆண்டாள் திருப்பவைப் பாடிய சரியான நாளைச் சொல்லிவிடலாம்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்
பாசுரம் 12 - கணைத்திளங் கற்றெருமை பாசுரம் 14 - உங்கள் புழைக்கடை