கணைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனதுக் கினியானைப் பாடவும்நீ வாய்த்திறவாய்
இனிதா னெழுந்திரா யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
கன்றுஈன்ற எருமைப் பால்கொடுக்க நினைத்ததும்
யாரும் கறக்காமலே பால்சுரந்து வழிந்து
நிலமெல்லாம் சேறாகும் வளமுடையவன் தங்கையே
பனிவிழும் காலையில் உன்வாசல்வெளியே நிற்கிறோம்
சீதையைக் கவர்ந்த இராவணனைக் கொன்ற
மனங்கவர் இராமனைப் பாடாது இருக்கின்றாயே
இன்னும் எழாமல் அப்படியென்ன ஓருறக்கம்?
எல்லோரும் எழுந்துவிட்டனரே, எழுந்திரு தோழியே!
பொருள்:
பதினோறாவது பாசுரத்தில், தன் தோழியானச் செல்வச் செழிப்புள்ள ஆயர்க்கூட்டத் தலைவனின் பேரழகுகொண்ட மகளை, அவளது தந்தையின் பெருமையைப் புகழந்துப் பாடி எழுப்பிய ஆண்டாள், இந்தப் பாடலில், அவ்வூரில் உள்ள இன்னொரு செல்வச்செழிப்புள்ள, கண்ணன் மேல் பக்திக்கொண்ட ஒருவனின் தங்கையை எழுப்ப, அவளின் அண்ணன் வீட்டு வளங்களைப் பாடி எழுப்புகிறாள்.
அவர்கள் வீட்டில் எருமை மாடுகள் நிறைய இருக்கின்றன, அதிலும் கன்றை ஈன்ற இளம் எருமைகள் நிறைய உள்ளன. அவையெல்லாம் தம் கன்றுகளுக்கு பால்கொடுக்க கனைத்து அழைக்கின்றன. பசும்புற்களை தின்று கொழுத்த அவ்வெருமைகள், பால்கொடுக்க நினைத்த மாத்திரத்திலேயே, கறக்க ஆட்கள் இன்றி தானாகப் பாலைச் சொரிகின்றன. இப்படி தானாகப் பால் சொரிவதால், அவர்கள் வீட்டின் வாசல் முதற்கொண்டு எல்லாம் இடங்களிலும் பால் வழிந்து ஓடுகிறது, அதனால் அவை மண்ணோடு கலந்து அவ்விடமே சேறு போல் ஆகிவிட்டன என்று ஆண்டாள் பாடுகிறாள். இது ஆண்டாளின் கற்பனைப் போலத் தெரியவில்லை. ஆயர்பாடியில் எல்லோருடைய வீட்டிலும் மாடுகளும் எருமைகளும் உள்ளன, பசுமையான ஊர் என்பதால், மாடுகளெல்லாம் நன்றாக உண்டு நிறையப் பால் கறக்கின்றன, அதை தான் உயர்வு நவிற்சியில் பாடுகிறாள் ஆண்டாள். தற்போது, பாலாறும் தேனாறும் ஓடும் என சில அரசியல்வாதிகள் சொல்வதைக் கேட்டிருப்போம், ஆனால் அன்று உண்மையிலேயே பால் ஆறாக ஓடியுள்ளது என்பது ஆண்டாள் பாடலில் இருந்து தெரிகிறது.
ஆனால் மற்றவர்கள் வீட்டை விட இந்த வீட்டில் இன்னும் அதிக வளம் இருப்பதால், இவன் கண்டிப்பாகக் கண்ணனின் அருளைப் பெற்றவனாகத் தான் இருப்பான் என்று எண்ணிய ஆண்டாள் அவனை 'நற்செல்வன்' என்று புகழ்கிறாள். இப்படிப் பட்டவனின் தங்கையே, இந்தச் செல்வச்செழிப்பால் எழுந்திருக்காமல் சுகமாக உறங்கிக்கொண்டு இருக்கின்றாயா? என கேட்கிறாள் ஆண்டாள்.
தரையெல்லாம் பால் வழிந்து சேறாக இருக்கின்றது, அதனால் எங்களால் வீட்டு வாசல் வழியே நுழைய முடியவில்லை, அதனால் வாசற்படியிலேயே நின்றுக்கொண்டு இருக்கின்றோம். அது மட்டும் அல்லாமல் அதிகாலைப் பனி வேறு விழுந்து குளிராக இருக்கின்றது. ஆனால் நீ எங்களைப் பற்றி கவலைப்படாமல் இப்படி உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே? இது நியாயமா? என வருத்தப்படுகிறாள் ஆண்டாள்.
அப்படியும் தோழி எழாததால். நாங்கள் எல்லோரும், இராமபிரானின் புகழைப் பாடிக்கொண்டு இருக்கின்றோம். சீதையை கவர்ந்ததால், சினம் கொண்டு, இலங்கை மீது படையெடுத்து இராவனைக் கொன்று சீதையை மீட்டு வந்த, நம் அனைவரின் மனம் கவர்ந்த இராமனின் பெருமைகளைப் பாடுகிறோம், ஆனால் நீ இறைவனின் புகழைக் கூடப் பாடாமல் உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே.
விடிந்து விட்டது, இனிமேலும் என்ன அப்படி ஒரு நீண்ட உறக்கம்? எழுந்திரு. பார், ஊரில் உள்ள எல்லா வீட்டிலும் அனைவரும் எழுந்துவிட்டனர். நாங்கள் உன் வீட்டு வாசலில் நின்று உன்னை எழுப்புவதைப் பார்த்துவிட்டார்கள் என்றால், நீ இன்னும் உறங்கிக்கொண்டு இருப்பது அவர்களுக்குத் தெரிந்து விடும். அப்படித் தெரிந்து விட்டால் உன்னைப் பற்றி கேலி பேசமாட்டார்களா? சோம்பேறி என்று சொல்வார்களே, சீக்கிரம் எழுந்திரு என்று அவசரப்படுத்துகிறாள் ஆண்டாள். மற்றவர்கள் கேலிசெய்வார்களே என்பதை அறிந்ததும், உடனே எழுந்துவிடுகிறாள் அத்தோழி. பிறகு எல்லோரும் சேர்ந்து மற்றத் தோழிகளை எழுப்ப்ச் செல்கிறார்கள்.
உட்பொருள்:
இந்தப் பாடலில் மேலோட்டமாகப் பார்த்தால், தன் தோழியை ஆண்டாள் எழுப்பவதாகத் தான் தெரிகிறது. ஆனால் இதன் உள்ளே நமக்கு இன்னொரு பொருள் மறைந்து இருக்கிறது. நிறையப் பால் சுரந்து தரையெல்லாம் சேறுபோல் ஆகிவிட்டது. அதனால் பாதங்கள் எல்லாம் ஈரத்தில் நனைந்து குளிர்கின்றது. இது மார்கழி மாதம் வேறு, காலையில் பனி பெய்யும். அதனால், வீட்டு வெளியில் நிறகும் அவர்கள் மேல் பனியும் விழுந்து மேலும் குளிர் நடுக்குகிறது. இப்படி மேலேயும், கீழேயும் குளிர் வாட்டி நடுக்கினாலும், இறைவனை வணங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து அவர்கள் விலகவில்லை.
அதுபோல், நாமும் இன்னல்கள் பல வந்தாலும், இறைவனை மறந்துவிடக் கூடாது. இன்னலை தந்து சோதிப்பவன் தான் நாளை இன்பமும் தருவான். அதனால் வரும் துன்பம் கண்டு துவண்டுவிடாமல் இறைவனை வணங்கி நம் கடமையை மறக்காமல் செய்யவேண்டும் என்பதை இப்பாடல் மூலம் உணர்த்துகிறாள் ஆண்டாள்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்
பாசுரம் 11 - கற்றுக் கறவை பாசுரம் 13 - புள்ளின்வாய் கீண்டானை