கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருசெய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமா ரெல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
பசுக்கூட்டம் பலகொண்டு பால் கறந்தும்
பகைவர்கள் இடத்துக்கேச் சென்றுப் போர்புரியும்
குற்றமில்லா கோகுலத் தலைவனின் பொன்மகளே
பாம்பைப்போல் இடைசிறுத்த பெண்மயிலே போகலாம் வா,
உறவினர் தோழிகள் எனஅனைவரும் உன்வீட்டின்
முற்றத்தில் வந்து கார்வண்ணனின் புகழ்பாடுகிறோம்
அசையாமல் பேசாமல் இருக்கின்றாயே செல்வப்பெண்ணே
இப்படிஉறங்கக் காரணமென்ன எழுந்திரு தோழியே!
பொருள்:
இன்றையப் பாடலில், ஆண்டாள் எழுப்பப் போகும் பெண், பேரழகு கொண்டவள். அது மட்டுமல்ல, செல்வச்செழிப்பு உள்ள, ஆயர்குல தலைவனின் மகளாவாள். பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, கோகுலமே பெருமைக் கொள்ளும் அளவு அழகுடையவள். அவளுக்கும் கண்ணன் மேல் மிகுந்த பக்தி உண்டு.
இது வரைப் பாடியப் பாடல்களில், கண்ணனின் பெருமைகளைப் பாடித் தோழிகளை எழுப்பிய ஆண்டாள். இந்தப் பாடலில், தோழியை எழுப்புவதற்காக, அவளுடையத் தந்தையின் பெருமைகளைப் பாடுகிறாள். அதோடு அவளுடைய அழகையும் போற்றுகிறாள். பொதுவாக ஒரு பெண் அழகாக இருந்தால், அந்தப் பெண் மீது மற்றப் பெண்கள் பொறாமை கொள்வார்கள். ஆனால் ஆண்டாள் அவள் அழகைப் புகழ்ந்துப் பாடுகிறாள். அது தான் ஆண்டாளின் அற்புதக் குணம்.
இந்தப் பெண்ணின் தந்தை, அந்த கோகுலத்திற்கே தலைவன். அவர்கள் வீட்டில் எண்ண முடியாத அளவிற்கு பசுக்களும் கன்றுகளும் உள்ளன. கன்றுகள் குடித்தப் பால், அவர்கள் குடும்பத்திற்குத் தேவையான பால் போக மீதம் உள்ளப் பாலால், அந்தப் பசுக்களுக்கு பால் கட்டி மடியில், வலி வந்துவிடக் கூடாது என்பதற்காக, அலுப்பு பார்க்காமல், எல்லா பசுக்களிடமிருந்தும் பாலைக் கறக்கும் அன்பு கொண்டவர். ''கற்றுக் கறவை' என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள், கற்று என்றால் கன்று, கன்னுக்குட்டி, கறவை என்றால் பசுமாடு, கற்றுக் கறவை என்றால், கன்றை ஈன்ற பசு என்று பொருள். மற்றப் பசு மாடுகளை விட கன்றை ஈன்ற பசுமாடுகள் அதிகமாகப் பால் சுரக்கும். அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுவதற்காகத் தான், கற்றுக் கறவை என்ற ழகாகப் பாடலைத் தொடங்குகிறாள்.
இப்படி மாடுகளால் செலவச் செழிப்புள்ள இவர்கள் மேல் பொறாமைக் கொண்டு கேடு விளைவிக்க நினைக்கும் பகைவர்களின் இடத்திற்கேச் சென்று அவர்களைப் போரிட்டு வெல்லும் திறன் படைத்தவர் இவளின் தந்தை. பகைவர்களிடம் போர் செய்வதைத் தவிர வேறு எந்தக் குறையும் குற்றமும் சொல்லமுடியாதவரின் பொற்கொடி போன்று பேரழகுடையப் பெண்ணே, புற்றிலிருந்து படம் எடுத்து ஆடும் பாம்பைப் போன்ற சிறுத்த மெலிடைக் கொண்டவளே, காடுகளில் சுதந்திரமாகச் சுற்றுகையில் ஆனந்தமாகத் தோகைவிரித்தாடும் மயிலைப் போன்றக் கூந்தலையுடைய அழகியே, எழுந்திரு நோன்பிருக்கப் போகலாம் என்று அவள் அழகைப் புகழ்ந்துப் பாடி அழைக்கிறாள் ஆண்டாள்.
அப்படியும் அவள் எழுந்திருக்க வில்லை. உறக்கத்திலிருந்து விழித்தாலும், தூங்குவது போல நடிக்கிறாளோ என்று எண்ணி, பார், உன் சுற்றத்தார்களும், நம் தோழிகள் என் அனைவரும், உன் வீட்டு முற்றத்திற்கே வந்து, கருத்த மேகம் போல் நிறம் கொண்ட கார்வண்ணனின் புகழைப் பாடி நிற்கிறோம். ஆனால் நீ கொஞ்சம் கூட அசையாமல், ஏதும் பேசாமல் உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே இது அழகா? எனக் கேட்கிறாள் ஆண்டாள். இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இது வரை கதவை திறக்கச் சொல்லிப் பாடிய அண்டாள், இந்தப் பாடலில், 'முற்றம் புகுந்து' என்று பாடுகிறாள், ஏன் தெரியுமா? பொழுது புலர்ந்து விட்டது, உன் வீட்டின் கதவுகள் எல்லாம் திறந்து, மாடுகளிடம் பால் கறக்கக் கூட சென்றுவிட்டார்கள், அதனால் எங்களால் முற்றம் வரை வர முடிந்தது என்று கூறாமல் கூறுகிறாள்.
இங்கு 'பெண்டாட்டி நீ' என்று ஆண்டாள் அந்தப் பெண்ணைக் குறிப்பிடுகிறார். பெண்டாட்டி என்றால் நாம் நினைப்பது போல் மனைவி என்று பொருளில் அல்ல. ஆட்டி என்றால் தலைவி என்று பொருள். செல்வச் செழிப்புள்ள வீட்டுப் பெண்களை சீமாட்டி என்று அழைப்பதை கேட்டிருப்பீர்கள். அது போல் தான், இங்கு பெண் + ஆட்டி = பெண்டாட்டி, பெண்களின் தலைவியே என்றப் பொருளில் பெண்டாட்டி என்று கூறுகிறாள் ஆண்டாள்.
செல்வச் செழிப்புக்கொண்ட, பெண்களை எல்லாம் அழகால் ஆளும் அரசியே, என்ன காரணத்திற்கு இப்படி இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறாய்? கண்ணனைப் பாடி அவன் அருளைப் பெற வேண்டாமா? இப்படி உறங்கிக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்?, உன்னுடைய இந்த உறக்கத்திற்கு என்ன பொருள் என்று கேட்டு, சீக்கிரம் எழுந்திரு, நாம் எல்லோரும் நீராடி நோன்பிருந்து கண்ணனை வணங்கலாம் என்று மீண்டும் அழைக்கிறாள்,
ஒருவழியாக இந்தப் பெண்ணும் எழுந்து விடுகிறாள். எல்லோரும் சேர்ந்து அடுத்தத் தோழியை எழுப்பப் போகிறார்கள்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்
பாசுரம் 10 - நோற்றுச் சுவர்க்கம் பாசுரம் 12 - கணைத்திளங் கற்றெருமை