Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 10 - நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதோர்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனனும்
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

விரதமிருந்து சொர்க்கம் செல்ல நினைப்பவளே
    கதவைத்தான் திறக்கவில்லை பேசவும் கூடாதோ?
போற்றி வணங்கினால் புண்ணியம் தரும் - நறு
    மணத்துளசியைத் தலையில்சூடிய பெருமாளிடம் அன்று
தோற்று உயிரழந்த கும்பகர்ணன் தன்பெரும்
    தூக்கத்தை உனக்கு தந்து விட்டானோ?
தன்னைமறந்து உறங்கும் அரியப் பொக்கிஷமே
    மனம்தெளிந்து எழுந்துவா நோன்பிருக்க தோழியே!

 

பொருள்:

ஒன்பதாவது பாசுரத்தில் தன் மாமன் மகளை கேலி செய்து எழுப்பி விட்ட ஆண்டாள், இந்தப் பாடலில் இன்னொரு தோழியையும் அதே போல் எழுப்பிவிட முனைகிறாள். கேலிசெய்தால் அல்லது சினம்வரும் படி ஏதாவது சொன்னால், உடனே எழுந்துவிடுகிறார்கள் என்ற உத்தியை அறிந்துக்கொண்ட ஆண்டாள், இந்தப் பெண்ணிடமும் அதே உத்தியைப் பயன்படுத்தி வெற்றிக்கொள்கிறாள்.

விரதங்கள் இருந்து சொர்க்க சுகபோகங்களை அடைய வேண்டும் என்று நேற்று சொன்ன தலைவியே, எங்களை எல்லாம் அழைத்துக் கொண்டுச் செல்வேன் என்று சொல்லிவிட்டு, இப்படி இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே? கதவைத் திறக்காவிட்டால் கூட பராவாயில்லை, நாங்கள் அழைப்பது உன் காதுகளில் விழவில்லையா? ஒரு பதிலும் பேசாமல் இருக்கின்றாயே, இது சரியா?

நாம் போற்றிப் பாடி வணங்கினால், நமக்கு கேட்ட வரங்களைத் தரும், தன் தலையில் வாசம் வீசும் துளசியை அணிந்துள்ள, அந்த நாராயணன் எனும் புண்ணிய மூர்த்தி, அன்று இராமபிரனாக, இலங்கை அரசனின் தம்பியும், பெரும் வீரனான, தூங்கும் வரம் வாங்கி வந்த கும்பகர்ணனனை (உண்மையில் தூங்கும் வரம் கேட்கவில்லை, அதை பின்னால் பார்க்கலாம்) போரிலே வென்று அவனை அழித்தாரே, அந்தப் பெருமாளை வணங்க வேண்டாமா? 'நாற்றத் துழாய்முடி' என்று ஆண்டாள் கூறுகிறாள், நாற்றம் என்றால் நறுமணம் என்று பொருள், ஆனால் நாம் அதை நல்ல வாசனைக்கு எதிர்பதமாக பொருள் கொண்டு பயன்படுத்தி வருகிறோம். நாற்றம் - நல்ல மணம், துர்நாற்றம் - கெட்ட மணம். ஒவ்வொரு பாடலிலும் மாயக் கண்ணனின் ஒரு கதையை சொல்லும் ஆண்டாள், இந்தப் பாடலில் இராமயணத்தின் ஒரு காட்சியை விளக்குகிறாள்.

அப்படி இராமனிடம் தோற்றுப்போன கும்பகர்ணன், இறக்கும் முன், அவனுடைய அந்தப் பெருந்தூக்கத்தை உன்னிடம் கொடுத்துவிட்டானா? இப்படியா உறங்கிக்கொண்டு இருப்பது? அழகியப் பல அணிகலன்களை அணிந்து, தன்னை மறந்து, ஆனந்த உறக்கத்தில் இருப்பவளே சீக்கிரம் எழுந்திரு. மனம் தெளிந்து வா, எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் வந்து, கதவைத்திற. நாம் எல்லோரும் நோன்பிருக்கச் செல்லலாம் என்று பாடி அழைக்கிறாள் இந்தப் பாசுரத்தில்.

இப்படி தன்னை ஒரு அரக்கனோடு ஒப்பிட்டு விட்டாளே ஆண்டாள், என்று வெட்கப்பட்டு உடனே எழுந்துவிட்டாள் அந்த தோழி. அவளையும் அழைத்துக்கொண்டு அடுத்தத் தோழியை எழுப்பச் செல்கிறார்கள் அனைவரும்.

உட்பொருள்:

சொர்க்கபோக வாழ்வு வேண்டும் பெண்ணே, இப்படி உறக்கம் சுகம் தருகிறது என்று காலத்தைக் கழித்தால் அந்த சொர்க்கத்தை எப்படி அடைவாய் என்று தன் தோழியிடம் கேட்பதைப் போல், நம்மை நோக்கி கேட்கிறாள் ஆண்டாள். நிலையற்ற சின்ன சின்ன சுகங்கள் இன்பங்களில் திளைத்து, நித்தியப் பேரின்பமாகிய அந்த இறைவனின் திருவடியை அடைய மறந்துவிடக் கூடாது என்று நம்மீது அன்புக்கொண்டு வலியுறுத்துகிறாள் ஆண்டாள்.

கும்பகர்ணன் வாங்கிய வரம் என்ன?

நாம் எல்லோரும், கும்பகர்ணன், தூங்கும் வரம் வாங்கி வந்ததாக எண்ணிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் அது உண்மையல்ல. இராவணன், விபீடணன் மற்றும் கும்பகர்ணன் ஆகிய மூவரும் பெரிய சிவபக்தர்கள். நற்குணம் உடையவர்கள், இருந்தாலும், அரக்கக் குலத்தில் பிறந்ததால், இராவணனிடம் மட்டும் அந்த அரக்கக் குணம், பக்தியையும் தாண்டி இருந்தது, அதனால் தான் சீதையை கவர்ந்து சென்றான். ஆனால் கும்பகர்ணன், நல்லவன். ஒரு முறை அவன், பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் செய்தான். அவன் தவத்தில் மகிழ்ந்து அவன் கேட்கும் வரத்தை கொடுக்க முன்வந்தார் பிரம்மா. ஆனால் தேவர்களோ பிரம்மனிடம் சென்று, அவன் எப்போதும் அழியாமல் இருக்க வரம் கேட்பதற்காகத் தான் தவம் செய்கிறான். என்ன இருந்தாலும் அவன் அரக்கக் குலத்தை சார்ந்தவன். அவன் கேட்பதைப் போல், நீங்கள் வரம் கொடுத்துவிட்டீர்கள் என்றால், அதனால் தேவர்களுக்கு ஆபத்து உண்டாகும். அதனால் அந்த வரத்தை மட்டும் கொடுத்து விடாதீர்கள் என்று வேண்டிக்கொண்டார்கள். பிரம்மனும் இதை சரஸ்வதி தேவியுடன் ஆலோசித்து, தேவியின் உதவியைக் கேட்கிறார். தேவியும், அவன் வரம் கேட்கும்பொழுது, அவன் நாவில் அமர்ந்து பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறாள். அதன் பின் பிரம்மன் கும்பகர்ணனிடம், உன் தவத்தால் மகிழ்ந்தேன், என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்கிறார். அவனும் தேவர்கள் எண்ணியபடியே, என்றும் அழிவில்லாமல் இருக்கும் ' நித்தியத்துவம்' வேண்டும் என்று கேட்க நினைத்தான். ஆனால் அவன் நாவில் சரஸ்வதி குடிகொண்டு, 'நித்தியத்துவம்' என்பதற்குப் பதிலாக 'நித்திரைத்துவம்' என்று மாற்றி சொல்ல வைத்துவிட்டாள். அதனால் தான் அவன் நீண்ட உறக்கம் கொள்ளும் படி ஆகிவிட்டது. ஆறு மாதம் உறக்கமும், ஆறு மாதம் விழிப்பும் என்று வாழும்படி ஆனது.

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 9 - தூமணி மாடத்து                                                                                                                                         பாசுரம் 11 - கற்றுக் கறவை

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net